Archive | October 2019

பீர்பலும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியும்

நீதி: உண்மை

உப நீதி: உண்முக நோக்குதல்

ஒரு நாள், செல்வந்தன் ஒருவன், ஹாசன் என்பவனை தண்டிக்க விரும்பினான். அவன் அக்பரிடம், தன் வீட்டிலிருந்த ஒரு அட்டிகையை ஹாசன் திருடிவிட்டதாகப் புகார் கூறினான்.

அக்பர், “ஹாசன் திருடினான் என்று நீ ஏன் நினைக்கிறாய்?” என்று வினவினார்.

அதற்கு செல்வந்தன், “அவன் திருடியதை நான் பார்த்தேன்” என்று பதிலளித்தான்.

உடனே ஹாசன், “இல்லை அரசே! நான் ஒரு அப்பாவி. அந்த அட்டிகையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான். செல்வந்தன், “அரசே! அவன் நிரபராதி என்றால் அவன் அதை நிரூபிக்க வேண்டும்.

நான் ஒரு சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வருகிறேன். அதை அவன் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், அவன் நிரபராதி என்றும் அவன் உண்மை பேசுகிறான் என்றும் நான் நம்புவேன்” என்றான்.

ஹாசன், “உண்மையைப் பேசினால் அந்தச் சூடான இரும்பு என் கையைச் சுடாதா?” என்று வினவினான்.

அதற்கு செல்வந்தன் “ஆமாம். கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்” என்றான். இப்பொழுது ஹாசனுக்குத் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹாசன் அக்பரிடம், “நான் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்க எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு வீடு சென்றான்.

பின்னர், பீர்பலைச் சந்தித்து அவரிடம் அறிவுரை பெற்றான்.

அடுத்த நாள் அரசவையில், ஹாசன், “ சரி. நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த விஷயம் அவனுக்கும் பொருந்துமல்லவா? அவன் உண்மை பேசினால், அந்தச் சூடான இரும்புக்கம்பி அவன் கையையும் சுடாதல்லவா? அதனால், அவன் அதைக் கையில் பிடித்துக் கொண்டு வரட்டும். பின்னர் நானும் என் கையில் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினான். செல்வந்தன் வாயடைத்துப் போனான். அவன் அக்பரிடம், “நான் வீட்டிலேயே எங்கேயாவது தவறுதலாக இடம் மாற்றி வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். உடனே வீடு சென்றுத் திரும்பத் தேடி பார்க்கிறேன்” என்று கூறினான். அக்பர், இதற்குத் தண்டனையாக, செல்வந்தன் அந்த அட்டிகையை ஹாசனுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

நீதி:

உண்முக நோக்குதல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் அவசரப் பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டோம்; தேவையில்லாமல் மற்றவர்களின் மேல் பழியையும் சுமத்த மாட்டோம். நாம் உண்மையாக இருந்து, வார்த்தைகளை பேசுவதற்கு முன்பும், செயல்களை செய்வதற்கு முன்பும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

புத்தி கூர்மை

நீதி – நம்பிக்கை

உபநீதி – சமயோஜித புத்தி

பேரரசர் அக்பர், தன் அரசவையினரிடம் பலவிதமான விடுகதைகளையும், புதிர்களையும் கேட்பார். அவை வினோதமான மற்றும் வேடிக்கையான கேள்விகளாக இருந்தன; அதற்கேற்ற பதில்களை அளிக்க, சமயோஜித புத்தி தேவைப்பட்டது.

ஒரு முறை அவர் ஒரு விசித்திரமான கேள்வியை அரசவையின் முன் வைத்தார். அவரது கேள்வியைக் கேட்டு சபையே அதிர்ச்சியுற்றது.

அக்பர் தனது சபையினரை பார்த்தவுடன், ஒருவர் பின் ஒருவராக தலைக்குனிந்த வண்ணம் விடைத் தேட முயற்சித்தனர்.

அச்சமயம் பீர்பல் தர்பாருக்குள் நுழைந்தார். பேரரசரின் இயல்பை அறிந்த பீர்பல், பதில் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த சபையினரின் நிலைமையை விரைவில் புரிந்து கொண்டார். அவர் மரியாதையுடன், “கேள்வி யாதென்று அறிந்து கொள்ள முடிந்தால், பதில் அளிக்க நானும் முயற்சி செய்வேன்” என்றார்.

பேரரசர், “பீர்பல், இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்று கேட்டார்.

சற்றும் தாமதமின்றி, பீர்பல் எழுந்து நின்று “பேரரசே, இந்நகரத்தில் 50,589 காக்கைகள் இருக்கின்றன” என்று விடையளித்தார்.

அக்பர், “எப்படி இவ்வளவு உறுதியாக அதைக் கூறுகிறாய்?’ என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு பீர்பல், “தங்கள் ஆட்களை அனுப்பி எண்ணி பார்க்க சொல்லுங்கள் அரசே! நான் கூறிய எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், வெளியூர்களிலிருந்து பல காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வந்திருக்கின்றன என்று அர்த்தம். இந்த எண்ணிக்கையை விடக் குறைவாக இருந்தால், இந்த நகரத்திலிருந்து காக்கைகள் விருந்தாளிகளாக வெளியூர் சென்றிருக்கின்றன என்று பொருள்” என்றார்.

பீர்பலின் அறிவு கூர்மையான பதிலால், பேரரசர் அக்பர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

நீதி:

சமயோஜித புத்தி என்ற நற்பண்பை மேம்படுத்திக் கொண்டால், வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் உதவியாக இருக்கும். நாம் செய்யும் செயல்களை விழிப்புணர்வுடன் செய்தால், இந்த மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

ஏற்றங்களும், இறக்கங்களும்

நீதி – அன்பு

உபநீதி – விசுவாசம், கருணை

ஏழு முறை வீழ்ச்சி அடைந்தாலும், எட்டு முறை எழுந்து செயற்படுவது தான் வாழ்க்கையின் ரகசியம் – பவுலோ கோய்லோ (Paul Coelho)

சில சமயம், வாழ்க்கையில் திடுக்கிடும் சம்பவங்கள் ஏற்பட்டு நம்மை கீழே தள்ளுகிறது. எல்லாமே நன்றாக முடிந்து விட்டது என்று நாம் நினைக்கும் போது, மறுபடியும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்; ஆனால், அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவு படுத்திக் கொள்ளும் போது, எப்படி அந்த பிரச்சனையை சமாளித்தோம் என்று புரிவது கடினமாக இருக்கிறது. இந்த நிமிடங்கள் மட்டுமே, அந்த உயர்ந்த சக்தி இருப்பதை நமக்கு தெளிவுப் படுத்துகின்றன.

ஓர் இரவு, ஒரு மனிதன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் அவன் கடவுளுடன் கடற்கரையோரம் நடந்து கொண்டிருக்க, வானத்தில் அவனது வாழ்க்கையின் சில காட்சிகள் மின்னல் போல வந்து சென்றன. ஒவ்வொரு காட்சியிலும், மணலில் இரண்டு ஜோடி காலடி சுவடுகளைக் கவனித்தான். ஒன்று அவனுடையது, மற்றொன்று கடவுளின் காலடிச் சுவடுகள். கனவில் பார்த்த கடைசி காட்சியின் சில நிமிடங்கள் அவன் கண் முன் தோன்றிய போது, மணலில் இருந்த கால் சுவடுகளைத் திரும்பி பார்த்தான். பல சமயங்களில், அவனது வாழ்க்கையின் பாதையில், ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் மட்டுமே இருந்தன. வாழ்க்கையில் மிகுந்த சவால்களும், மன வேதனைகளும் இருந்த சமயங்களில் அவன் ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் மட்டுமே இருந்ததைக் கவனித்தான். அவனுக்கு அது வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி கடவுளிடம் “நான் உங்களை பக்தியுடன் பின்பற்ற தீர்மானித்தால், நீங்கள் என் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என்னை கைவிடாமல் வழிநடத்தி செல்வதாக கூறினீர்கள்; ஆனால் என் வாழ்க்கையில் மிகுந்த பிரச்சனைகள் இருந்த நேரங்களில், ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகளை மட்டுமே நான் பார்த்தேன். எனக்கு உங்களின் ஆதரவு மிகவும் தேவைப்பட்ட நேரங்களில் ஏன் என்னை விட்டு விலகி இருந்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை” என்று கவலையுடன் கேட்டான். அதற்கு கடவுள், “என் விலைமதிப்பற்ற குழந்தாய்! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஒருபோதும் சோதனை அல்லது துன்பம் வரும் காலங்களில் உன்னை கைவிட்டதில்லை. நீ பார்த்த ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் உன்னுடையது அல்ல; அச்சமயங்களில், நான் உன்னை என் கைகளில் சுமந்து கொண்டு சென்றிருக்கிறேன்” என்று விளக்கினார்.

நமது வாழ்க்கையில், சமாளிக்க முடியாத பிரச்சனைகளை கடவுளிடம் அர்ப்பணித்தால், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை நாம் உணரலாம்.

ஒவ்வொரு முறையும் “நான் ஏன் கஷ்டப் பட வேண்டும்” என்ற கேள்வி வரும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் கடவுள் அதை கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவது மட்டுமே, அதற்கு அர்த்தமுள்ள பதிலாக இருக்க முடியும்.

நீதி:

நாம் கடவுளிடம் விசுவாசமும், அன்பும், பக்தியும் வைத்திருக்கும் போது, அவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார். நமது எல்லாக் கஷ்டங்களையும் அவர் நீக்க மாட்டார்; ஆனால், போதுமான ஆதரவும் வலிமையும் கொடுத்து, நிலைமையை எதிர்கொள்ள உதவி செய்வார். சோதனைகள் மூலம் அவர் நம்மை வழிநடத்தி, தேவைப்படும் போது நம்மை தாங்கிக் கொண்டும் செல்வார்.

வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, நம்முள் என்றும் மங்காமல் இருக்கும் ஒளியின் உண்மையான சக்தியை அறிந்து கொள்ளலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கிடைத்த வரப்பிரசாதங்களை பாராட்டுவோம்

நீதி – சரியான மனப்பான்மை / அன்பு

உபநீதி – தன்னம்பிக்கை / சமயோஜித புத்தி / பொறுமை  

இந்தக் கதை, போதைப் பொருட்களுக்கு அடிமையான தன் மகனால், ஒரு தந்தை அனுபவித்த கஷ்டங்களையும், குழப்பங்களையும் உணர்த்துகிறது. மகனின் இந்தப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அவரின் வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் இருப்பதை பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு தான் அவர் உணர்ந்தார்.

மகனே தன்னை காப்பாற்றிக் கொள்ள விருப்பமில்லாத சமயத்தில், தந்தை அவனைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றது என்பதை அவரின் உடல்நிலை, மனநிலை, தொழில் மற்றும் உறவுகள் அனைவற்றும் குன்றி வந்த பின் அவர் உணர்ந்தார். இது  குறித்து அவர் என்ன செய்தார்?

இச்சமயத்தில் டேவிட் கூக் (David Cooke) என்பவரை வரவேற்போம். அவரது வார்த்தைகளில்…. “திடீர் முரண்பாடாக, என் மகனின் இந்தப் பழக்கம் எனக்கு எவ்வளவு வேதனை அளித்ததோ, அந்த அளவிற்கு என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய ஒரு பரிசாகவும் அமைந்தது. ஆம். மூன்று வருடங்களுக்கு முன், நான் துணிந்து ஆரம்பித்த இந்த சாகசம் என் வாழ்க்கையை முற்றிலும் நற்திசையில் திருப்பியது. அந்த இனிய காலைப் பொழுதில், என் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்களை எதிர் கொண்டு, ஒரு புது வெற்றிப் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடனும்,  இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும் என்ற ஆவலுடனும் நான் ஒரு புது பயணத்தைத் துவக்கினேன்.

என்னுடைய மிதிவண்டியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என 1௦௦ நாட்கள் ஓட்டிச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். இது என்னை எங்கு கொண்டு விடும் என்ற விவரங்கள் எனக்கு புரியவில்லை. இருப்பினும், நான் எதிர்கொண்ட இந்த தீர்மானம், என் வாழ்க்கையில் மிகவும் தேவைப்பட்ட ஒரு மாற்றுப் பயணத்தில் என்னைக் கொண்டு சேர்த்தது.

என்னுடைய முதல் நாள் பயணத்திற்குப் பிறகு, போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்த என் மகனை சற்று தொலைவில் வைத்துப் பார்க்கும் மனப்பக்குவமும், வாழ்க்கையில் ஒரு புது உற்சாகம் மற்றும் மனோபலத்தையும்  அளித்தது. துன்பமும் வேதனையும் இன்னும் என்னை விட்டு அகலவில்லை; அகலவும் அகலாது என்றாலும், அந்தக் காலைப் பொழுது ஆழ்சிந்தனையோடு சென்ற என் சைக்கிள் பயணம் எனக்கு நிறைய நம்பிக்கையையும், தெளிவையும், என் வாழ்வின் அர்த்தத்தையும் எனக்கு விளக்கியது.

நான் என் முதல் சவாரியிலிருந்து வீடு திரும்பியதும் என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது; “நிகழ்காலம் எவ்வளவு இருளாகக் காட்சி அளித்தாலும், என் ஆர்வத்தினால் எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும், பரிசுகளையும் பாராட்டி, எதிர்காலத்தின் ஒளியை நம்பி வாழ்வேன்”  என்று தீர்மானித்தேன்..

போதைக்கு அடிமையான என் மகனைப் பற்றிய கவலையிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு, என் வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொண்டேன். போதைக்கு ஆட்பட்டு போராடிக் கொண்டிருக்கும் என் மகனைக் கண்டு வேதனை அடைந்தாலும், வேதனைகளே என் வாழ்க்கையல்ல, நான் அதற்காக இவ்வுலகிற்கு வரவில்லை என்றும், அனுபவிக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் பல உள்ளன என்பதையும் உணர்ந்தேன். இன்று நான் என் மகனின் போதை மீட்பின் நூற்றைம்பதாவது நாளைக் கொண்டாடுகிறேன். என் காலத்திற்குப் பிறகும் அவன் நன்றாக வாழ்ந்து வளர்ச்சி மற்றும் வாய்ப்பு நிறைந்த இந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதற்கிடையில், நானும் சம நிலைக்கு வந்த என் ஆயிரத்து நூறாவது நாளையும் கொண்டாடுகிறேன். அந்த நாள், என் வாழ்க்கையை மாற்றி அமைத்த அற்புதமான நாள்! எதிர்பாராத துன்பங்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையில், நான் வலிமை, தைரியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி போன்ற பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட நாள். இது போன்ற போதைப் பழக்கத்தில் சிக்கியவர்களின் பெற்றோருக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால் – நீங்கள் சம நிலைக்கு வர முதலில் முயற்சிக்கவும். உங்கள் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து, கிடைத்த வரப்பிரசாதங்களைப் பாராட்டி, மேலும், குழப்பங்களுக்கு இடையில் அமைதியைக் காணும் தன்மை – இவையாவும் உங்களுக்கு வளர்ச்சிப் பாதையில் செல்ல வலிமை மற்றும் தெளிவை அளிக்கும்.

ஒரு நாள் உங்கள் குழந்தை மீண்டும் உங்களிடம் வரும் பொழுது, அவர்களுக்காக நீங்கள் இருப்பதை நினைத்து மகிழ்வீர்கள். அவர்களுடைய போதைப் பழக்கத்தினால் நீங்கள் உங்கள் அழிவைத் தேடிச் சென்றால், அவர்கள் திருந்திய பின்னர் நீங்கள் அவர்களுக்கு தேவைப்படும் பொழுது இருக்க மாட்டீர்கள். உங்களுடைய நிபந்தனையற்ற அன்பைத் தவிர நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய சிறந்த பரிசு என்னவென்றால், அவர்களுக்காகவும், உங்களுக்காகவும் நீங்கள் வலிமையாக  இருப்பது மட்டுமே!”

நிபந்தனையற்ற அன்பின் கட்டளை:

நீங்கள் கொடுப்பதிலிருந்து மட்டுமே மற்றவர்கள் உங்களை அதிகமாக புரிந்து கொள்கின்றனர்.

நீதி:

துன்பங்களை சரியான மனப்பான்மையுடன் எதிர்கொண்டால், விளைவுகளும் நல்ல விதமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்கு கடவுள் அளித்த வரப்பிரசாதம் என்று உணர்ந்து, பாராட்ட வேண்டும். நிம்மதியை அளிக்கக் கூடிய இன்பத்தை உணர்ந்து, கிடைத்த வாய்ப்பை நல்ல விதத்தில் பயன்படுத்தி, நம்மை நல்லவர்களாக மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com