Archive | February 2023

நம்பிக்கை அல்லது பக்தி

நீதி – திட நம்பிக்கை, பற்றுறுதி

உபநீதி – விட்டு கொடுக்கும் மனப்பான்மை

நம்பிக்கை மற்றும் பக்தி, இரண்டுமே ஒரே மாதிரியான கருத்துகளை குறிக்க உபயோகப்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் “ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைப்பது” என்பதாகும்; ஆனால் ஒரு மெல்லிய கோடால் அர்த்தம் வேறுபடுகின்றது. பரந்த கண்ணோட்டத்தில், பக்தி என்பது பற்றுறுதியுடன் இருப்பது (மனிதன் அல்லது பொருளின் மேல்); நம்பிக்கை என்பது பூரண நம்பிக்கை மற்றும் தீவிர உறுதியுடன் இருப்பது. 

பக்தி ஆன்மீக ரீதியில் பயன்படுத்தப் படுகின்றது; நம்பிக்கை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப் படுகின்றது. வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் கடவுளின் மேல் பக்தியை செலுத்தி வேண்டிக் கொள்கிறோம். ஒரு நண்பனுக்கு பணமோ / பொருளோ கொடுக்கும் போது, அவர் கட்டாயமாக தக்க சமயத்தில் திருப்பிக் கொடுத்து விடுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால் பக்திக்கு ஆதாரமோ விளக்கச்சான்றோ எதுவுமில்லை; ஆனால் நம்பிக்கை, ஒருமைப்பாடு மற்றும் சக்தியை சார்ந்துள்ளது.

பல சமயங்களில், பக்திக்கு மாறாக நம்பிக்கை என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, நம்மில் பலர் “நான் கடவுளை நம்புகிறேன். அவர் பாதங்களில் சரணடைந்து விட்டேன்” என்று கூறி, தொடர்ந்து கவலைப் படுகிறோம். ஏன்? ஏனென்றால் உண்மையில் நமக்கு பக்தி இருக்கிறது; ஆனால் பிரச்சனை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இல்லை.

மலைகள் ஏறுபவரின் கதை ஒன்று இங்கு சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு முறை, மலை ஏறும் போது, அவன் துணைக்கருவி எல்லாவற்றையும் அணிந்து கொண்டு உச்சிக்கு செல்ல முற்பட்டான். அவன் ஏற ஆரம்பிக்கும் போது, செல்வதற்கான பாதையை கண்டறிய முழு நிலவு அவனுக்கு உதவியது. உச்சிக்கு அருகில் அவன் சென்ற போது, எதிர்பாராமல் பனிப் புயல் அடித்ததனால், மலைகளுக்கு நடுவில் கரு மேகங்கள் வந்தன. சில நிமிடங்களில் அடர்ந்த மேகங்களும், மூடுபனியும் அவனை சூழ்ந்தது.  

புயல் காற்று அடங்கி விடும் என்ற நம்பிக்கையில் அவன் விரைவாக கீழே வர ஆரம்பித்தான். கும்மிருட்டில், ஒரு குறுக்கு பாதை வழியாக வரும் போது, ஏதோ ஒரு செங்குத்தான பாறையின் உச்சியிலிருந்து சற்று சறுக்கியது. அவனைச் சுற்றி ஒன்றுமே அவனுக்கு தெரியவில்லை. அவன் கயிற்றில் ஆதாரமில்லாமல் தொங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தான். மன வேதனையில், “கடவுளே, எனக்கு உதவுங்கள்!” என்று அவன் அலறினான்.

திடீரென, மேலிருந்து ஒரு உறுதியான குரல் “கயிற்றை அறுத்து விடு” என்று கேட்டது.

“என்ன?!” என்றான்.

மறுபடியும் அதே குரல், “கயிற்றை அறுத்து விடு” என்று கேட்டது.

உண்மையான சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், கயிற்றில் தொங்குவதே நல்லது என நினைத்தான். அப்படி செய்த போது, ஏதாவது ஒரு பிடிப்பு கிடைத்தால், ஜாக்கிரதையாக தப்பித்து விடலாம் என்று நினைத்தான்.

அடுத்த நாள், அவனை தேட வந்த குழு அவனை குளிர் பனியில், கயிற்றில் தொங்கியவாறே மரணம் அடைந்ததை கண்டார்கள். நிலத்திலிருந்து எட்டு அடிக்கு மேல் தான் தொங்கிக் கொண்டிருந்தான்.

அந்தக் குரலை நம்பி, கயிறை வெட்டியிருந்தால், அவன் பிழைத்திருப்பான். கடவுள் மேல் பக்தி இருந்ததனால் கூப்பிட்டான்; ஆனால் குரலின் மேல் நம்பிக்கை இல்லை.

பக்தியை செயலில் காட்டுவது தான் “நம்பிக்கை”. அது பக்தியை, எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.

பக்தி “இது நடக்கலாம்” என்று சொல்கிறது. நம்பிக்கை “இது நடக்கும்” என்று கூறுகிறது.

நீதி:

இந்த விபத்தைப் பற்றிய கதையிலிருந்து, நாம் கடவுளை எப்படி நம்ப வேண்டும் எனக் கற்றுக் கொள்கிறோம். அந்தக் கயிறு நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என நம்புகிறோமா? அல்லது, நம் அறிவு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு, கடவுளை நம்ப தயாராக இருக்கிறோமா? வாழ்க்கையை கணிக்க முடியாது. செல்லும் பாதையில் ஏற்றங்களும், தாழ்வுகளும் இருக்கும். நம்மில் பலர், கடவுளை நம்ப வேண்டும் என நினைக்கிறோம். நேரம் நன்றாக இருக்கும் போது, அவரை நம்புவது சுலபமாக இருக்கலாம். கஷ்டங்கள் வரும் போது, கட்டாயமாக கடவுளை நம்ப வேண்டும். நிலையற்ற மற்றும் எதிர்பாராத நேரங்களில், கடவுளின் மாறாத குணம் நமக்கு தைரியம் மற்றும் பலத்தை அளிக்கும்.

ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்:

“நான் உன் வலது கையை பிடித்துக் கொண்டு, கவலைப் படாதே என்று அபயக்கரம் கொடுக்கும் உன் கடவுள்;  உன் தலைவன்” – இசையா 41:13.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உண்மையான அன்பு

நீதி: அன்பு, உண்மை

உபநீதி: ஒற்றுமை

ஞானமுள்ள ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம், “இரவு முடிந்து பகல் ஆரம்பமாகி விட்டது என்று எப்படி சொல்ல முடியும்” என்ற கேள்வியைக் கேட்டார்.

அதற்கு மாணவர்கள் “வெகுதூரத்தில் ஒரு மிருகத்தை பார்க்கும் போது, அது செம்மறி ஆடா அல்லது நாயா என்று சொல்ல முடியும் போதா?” என்று கேட்டனர்.

ஆசிரியர் “இல்லை” என்று பதிலளித்தார்.

மறுபடியும் மாணவர்கள், “வெகுதூரத்தில் ஒரு மரத்தை பார்க்கும் போது, அது அத்திப்பழ மரமா அல்லது பீச் மரமா என்று சொல்ல முடியும் போதா?” என்று கேட்டனர்.

“இல்லை” என்று ஆசிரியர் மறுபடியும் கூறினார்.

மாணவர்கள் உரிமையோடு “பின்னே எப்போது” என்று கேட்டனர்.

அதற்கு ஆசிரியர் “மற்றொரு முகத்தை பார்த்து விட்டு, நீங்கள் உங்கள் தம்பியாகவோ அல்லது தங்கையாகவோ நினைக்கும் போது தான். அப்படி நினைக்க முடியாவிட்டால், என்ன நேரமாக இருந்தாலும், அந்த ஞான ஒளி இன்னும் வரவில்லை என்று தான் அர்த்தம்”  என்று கூறினார்.

நீதி:

ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பை பரப்புவதன் மூலம், உலகத்தில் அமைதி மற்றும் அன்பு உருவாகும். எல்லோரிலும் நாம் நம்மையே பார்க்க முடியாவிட்டால், அந்த அன்பின் ஒளியை நாம் பரப்ப முடியாது. எல்லோரிலும் கடவுளை பாருங்கள். அன்பும், மரியாதையும் வேண்டுமென்றால், நீங்கள் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். உங்களின் உண்மையான ஸ்வரூபம் அன்பு மட்டுமே. பயம் மற்றும் கவலை எதுவும் இல்லாமல் நீங்கள் நிம்மதியாக இருக்கும் போது, அன்பு எல்லாத் திசைகளிலிருந்தும் தானாகவே வெளிவரும். உண்மையான ஸ்வரூபமே அன்பு என்பதனால் நாம் அன்பு என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், ஆத்மார்த்தமான நிம்மதியை உணரலாம். 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அசைக்க முடியாத நம்பிக்கை

நீதி: சரியான நடத்தை, நம்பிக்கை

உப நீதி: அமைதி, விசுவாசம்

பிரயாணி ஒருவர், மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஆற்றின் கரைக்கு வந்தார்.

ஆற்றைக் கடக்க எந்த பாலமும் இருக்கவில்லை. குளிர்காலமாக இருந்ததால், ஆற்றின் மேற்பரப்பு பனிக்கட்டியாக உறைந்திருந்தது.

அந்தி சாயும் நேரம் என்பதால் இருள தொடங்கி இருந்தது. பாதை தெரியும் அளவு போதுமான வெளிச்சம் இருக்கும் போதே பிரயாணி மறுகரை சென்று அடைய விரும்பினார். பனிக்கட்டி தனது எடையைத் தாங்குமா என்று அவர் கவலையுடன் ஆலோசித்தார்.

இறுதியில், மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் அவர் முழங்காலிட்டு, தகுந்த எச்சரிக்கையுடன் பனிக்கட்டியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லத் தொடங்கினார். தனது உடலின் எடையை சீராக விநியோகிப்பதன் மூலம், தன் உடற்சுமையினால் பனிக்கட்டி உடையும் வாய்ப்பு குறையும் என்று கணக்கிட்டு அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

இவ்வாறு தாமதமான மற்றும் வலி நிறைந்த பயணத்தை மேற்கொண்ட அவர், ஆற்றின் பாதியளவு கடந்திருந்த பொழுது, திடீரென்று பின்புறத்திலிருந்து பாட்டு சத்தம் கேட்டது. நான்கு வண்டி எடை பொருந்திய நிலக்கரியை சுமந்த குதிரை  வண்டியை, சற்றும் கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் ஒருவர் வழி நடத்திச் சென்றார்.

இதோ இந்த பிரயாணி மெதுவாக தன் கைகளாலும் முழங்கால்களை வைத்துக் கொண்டும் பயத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதோ, மெல்லிய காற்று வருடுவது போல, பெரிய நிலக்கரி சுமையுடன் குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியை ஒரு மனிதன், அதே பனிக்கட்டியினால் மூடிய ஆற்றின் மேல் உல்லாசமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.

இப்படித்தான் நம்மில் பலர் வாழ்கிறோம்.

சிலர் எடுக்க வேண்டிய வழியை தீர்மானிக்க முடியாமல் கரையிலேயே நிற்கிறார்கள். மற்றவர்கள் எடுத்த காரியத்தின் மறுபக்கத்தை அடைய அதாவது எதிர்படும் தடைகளை கடக்க, போதுமான தைரியத்தைத் திரட்ட முயற்சிக்கிறார்கள்.

சில நபர்கள் மெல்லிய பனிக்கு பயந்து வாழ்க்கையில் ஊர்ந்து முன்னேறி செல்கிறார்கள். அவர்களை நிலைநிறுத்தும் அளவுக்கு அவர்களிடம் வலுவான நம்பிக்கை இருப்பதில்லை.

மேலும் சிலர் எந்த சிக்கலையும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையில் வாழ்கிறார்கள். அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிறைந்திருக்கும்.

இன்னல் என்னும் நதியை நாம் எதிர்கொள்ளும் போது, நாம் பயந்து தவழ்ந்து செல்ல வேண்டியதில்லை. இறைவனை நம்புங்கள், அவருடைய உதவியால் நாம் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக மறுபக்கம் செல்லலாம்.

நீதி:

நம்பிக்கை என்பது முதல் அடியை எடுத்து வைத்து அச்சமின்றி முன்னோக்கி செல்வதாகும். எத்தகைய அற்பமான நிலையில் இருந்தாலும் கடவுளிடம் நம்மை அர்ப்பணித்து கொண்டு முன்னே செல்ல வேண்டும். நம்பிக்கையும் அச்சமின்மையும் வெற்றிக்கு முக்கியமான இரு தூண்கள் ஆகும். உண்மையான நம்பிக்கை என்பது இருளில் பயமின்றி பாய்ந்து செல்வது அல்ல; ஒளியை நோக்கி பாயும் பாய்ச்சல் ஆகும். எனவே கடவுளை நம்பி உறுதியுடன் சரியான அடியை எடுத்து வையுங்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நம்பிக்கையிருந்தால் மலையைக் கூட நகர்த்தலாம்

நீதி: உண்மை, அன்பு

உப நீதி: நம்பிக்கை, பிரார்த்தனை

பக்தர்கள் சிலர் கூடி தங்களுள் ஒருவர் அளித்த நிலத்தில், ஒரு புதிய ஆலயம் ஒன்றை எழுப்பி, இறைவனுக்கு அர்ப்பணிக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள்.

புதிய வழிபாட்டு ஆலயம் திறக்கப்படுவதற்கு பத்து நாட்கள் இருந்தன. அப்போது கண்காணிப்பு ஆய்வாளர், ஆலயத்தின் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் போதுமானதாக இல்லை என்று ஆலயத்தின் தலைமை நிர்வாகியிடம் தெரிவித்தார். ஆலய வாகன நிறுத்துமிடத்தின் அளவை இரட்டிப்பாக்கும் வரை, அவர்களால் புதிய ஆலயத்தை திறக்க முடியாது என்றும் கூறப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, ஆலயத்தின் பின்புறம் இருந்த மலையை தவிர்த்து அவர்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பயன்படுத்தி விட்டிருந்தனர். மலையை பின்புற முற்றத்தில் இருந்து நகர்த்தினால் மட்டுமே அதிக வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க முடியும் என்ற நிலைமை நிலவியது .

அடுத்து வந்த வழிபாட்டு கூட்டத்தில், மனம் தளராத அந்த தலைமை நிர்வாகி “மலையை நகர்த்தும் நம்பிக்கை” கொண்ட அனைத்து பக்தர்களையும் அன்று மாலை கூட்டு பிரார்த்தனை செய்வதற்காக அழைத்தார். அடுத்த வாரம், திட்டமிட்டபடியே, தொடங்கவிருக்கும் வழிபாட்டு சேவைக்கு முன் எப்படியாவது பின்புறத்தில் இருந்து மலையை அகற்றி, மேலும் அங்கு நடைபாதை கட்டுவதற்கும், வர்ணம் பூசுவதற்கும் போதுமான பணம் கிடைக்க வழி வகுக்குமாறு, கடவுளிடம் கேட்டு விசேஷ பிரார்த்தனையை செய்யப் போவதாக அறிவித்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் 300 பக்தர்களில் 24 பேர் மட்டுமே பிரார்த்தனைக்காக கூடினர். அவர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிரார்த்தனை செய்தனர். இறுதியில் இறைவனின் துதி பாடி வணங்கினர்.

“திட்டமிட்டபடி அடுத்த வாரம் திறப்போம், கடவுள் இதற்கு முன் ஒருபோதும் நம்மை கைவிட்டதில்லை, இந்த முறையும் அவர் நம்முடன் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று தலைமை நிர்வாகி அனைவருக்கும் உறுதியுடன் நம்பிக்கை அளித்தார்.

மறுநாள் காலை நிர்வாகி தனது வரவேற்பறையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவரது வீட்டுக் கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் “உள்ளே வரலாம்” என்று அழைத்த போது, ஒரு கடினமான தோற்றமுடைய கட்டுமானப் பணியாளர் உள்ளே நுழைந்து, தனது தொப்பியைக் கழற்றி விட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் அடுத்த ஊரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவன். நாங்கள் அங்கே ஒரு பெரிய புதிய வணிக வளாகத்தைக் கட்டுகிறோம், எங்களுக்கு கொஞ்சம் மண் தேவைபடுகிறது. தங்கள் ஆலயத்தின் பின்புறமுள்ள மலையின் ஒரு பகுதியை எங்களுக்கு விற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நாங்கள் அகற்றும் புழுதிக்கு நிகரான பணத்தை உங்களுக்குக் கொடுப்போம். புழுதியை எடுத்து அவ்விடத்தை சரியான முறையில் அமைக்கும் வரை எங்களால் வேறு எந்த கட்டுமான பணியையும் அவ்விடத்தில் தொடங்க முடியாது. ஆகையால் உங்கள் அனுமதி உடனே பெற முடிந்தால், மலையைத் தோண்டி வெளிப்படும் நிலப்பரப்பு பகுதிகள் அனைத்திலும் இலவசமாக தளவரிசை போட்டு நடைபாதை அமைத்து தருவோம்” என்று கூறினான்.

முதலில் திட்டமிட்டபடியே அந்த சிறிய ஆலயம் அடுத்த வாரமே திறக்கப்பட்டது மற்றும் முந்தைய வாரத்தை விட “மலை நகர்த்தும் நம்பிக்கை” கொண்ட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்!

விசுவாசம் என்பது கடவுளால் முடியும் என்று நினைப்பது அல்ல, அவர் செய்து முடிப்பார் என்று நம்புவது ஆகும்.

‘விசுவாசம் அற்புதங்களில் இருந்து வருகிறதா’ அல்லது ‘அற்புதங்கள் விசுவாசத்திலிருந்து வருகிறதா’?

நீதி:

விசுவாசம் என்பது கடவுளால் முடியும் என்று நினைப்பது அல்ல, அவர் செய்து முடிப்பார் என்று நம்புவது. நம்பிக்கையிருந்தால் மலைகளைக் கூட நகர்த்தலாம். நாம் மனஉறுதியுடன் பிரார்த்தனை செய்தால், இறைவனின் சித்தத்திற்கு நம்மை முற்றிலும் சமர்ப்பித்தால், அவர் நம்முடன் இருப்பதோடு மட்டும் அல்லாமல் நமக்கு அமைதி மற்றும் சமநிலையான மனம் பெற செய்து, எந்த விதமான  முடிவையும் எதிர்கொள்ளும் வலிமையும், மன உறுதியும் அளிப்பார். இறைவனிடம் சரண் அடைவோம், அவர் நம்மை வழிநடத்துவார், நமக்கு நல்லதை மட்டுமே செய்வார் என்று முழு நம்பிக்கை வைப்போம். எப்போதும் நிகழ் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்து இருப்போம். நமது பல பிரச்சனைகளுக்கு மனநிறைவு என்பதே எளிதான தீர்வாகும்.

இருட்டாக இருக்கும்போதும் விடியலின் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை – ரவீந்திரநாத் தாகூர்.

மொழி பெயர்ப்பு,

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE