Archive | January 2019

எவராலும் சாதிக்க முடியும்

நீதி – அன்பு

உபநீதி – மனிதாபிமானம், கருணை

ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி புகட்டிக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்கப் பள்ளியின் நிதி திரட்டும் பிரதான விருந்தில், ஒரு மாணவரின் தந்தை அளித்த சொற்பொழிவு மறக்க முடியாததாக இருந்தது. பள்ளியையும், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அங்கு பணி புரிந்த பணியாளர்களையும் மிக உயர்வாகப் புகழ்ந்த பிறகு, அவர் ஒரு கேள்வியைக் கேட்டார் –

“வெளிப்புறத்திலிருந்து குறுக்கீடுகள் ஒன்றுமே இல்லையென்றால், இயற்கையின் செயல்கள் யாவும் சிறப்பாக இருக்கும். அப்படியிருந்தும், என் மகனுக்கு மற்ற குழந்தைகளைப் போல கற்றுக் கொள்ளவும் முடியவில்லை; புரிந்து கொள்ளவும் இயலவில்லை. என் மகனைப் பொறுத்த வரை இயற்கை என்ன பதில் கூறும்?” இக்கேள்வியைக் கேட்ட மக்கள் திகைத்து நின்றனர்.

தொடர்ந்து தந்தை, “உடல் மற்றும் மனக் குறைகளால் பாதிக்கப்பட்ட என் மகன் ஷ்ரேய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்; மற்றவர்கள் அவனை நடத்தும் விதத்திலிருந்து, அவர்களின் இயல்பான மனித குணத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது” என்று கூறினார். பிறகு கீழ்வரும் சம்பவத்தை எடுத்துச் சொன்னார்.

ஷ்ரேய்யும் அவன் தந்தையும் சில நாட்களுக்கு முன்பு ஒரு பூங்கா வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அங்கு ஷ்ரேய்க்கு தெரிந்த சில குழந்தைகள் அடிப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஷ்ரேய், “அவர்கள் என்னை விளையாட அனுமதிப்பார்களா?” என்று தந்தையிடம் கேட்டான். ஷ்ரேய் போன்ற ஒரு குழந்தை தங்களின் குழுவில் இருப்பதை எவரும் விரும்ப மாட்டார்கள் எனத் தந்தைக்கு தெரிந்தது. ஷ்ரேய் போன்ற ஊனமுற்றோர்களுக்கு இடையூறுகள் இருந்தும், அவர்களை ஏற்றுக் கொண்டு ஒரு வாய்ப்பு அளித்தால், அவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் என அவர் எண்ணினார்.

எதிர்பார்ப்பு ஒன்றுமே இல்லாமல், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் சென்று, ஷ்ரேய்யும் அவர்களுடன் விளையாடலாமா என்று தந்தை கேட்டார். உதவி ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன், “வெல்வதற்கு இன்னும் ஆறு ரன்கள் வேண்டும். நாங்கள் இப்போது எட்டாவது ஆட்டத்தில் இருக்கிறோம். எங்கள் அணியில் அவன் இருக்கலாம். ஒன்பதாவது ஆட்டத்தில் அவனை ஆட்டக்காரராக அனுப்புவதற்கு முயற்சிக்கிறோம்” என்றான்.

அணியின் ஆட்டக்காரர்கள் அமர்ந்திருக்கும் இருப்பிடத்திற்குச் சென்று, ஷ்ரேய் புன்சிரிப்புடன் அணியின் சட்டையை அணிந்துக் கொண்டான். அவன் தந்தையின் கண்களில் நீர்த் துளிகளும், மனதில் ஒரு இதமான உணர்வும் இருந்தது. அங்கு இருந்த எல்லா மாணவர்களும் ஷ்ரேய்யை விளையாட்டில் சேர்த்துக் கொண்டதால் அவன் தந்தையின் பேரின்பத்தை கவனித்தனர். எட்டாவது ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஷ்ரேய்யின் குழுவினர் சில ரன்களை எடுத்திருந்தாலும், வெல்வதற்கு இன்னும் மூன்று ரன்கள் வேண்டியிருந்தன. ஒன்பதாவது ஆட்டத்தின் துவக்கத்தில், ஷ்ரேய் கையுறையை அணிந்து கொண்டு விளையாடினான்.

பந்தை அடிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றும் கிடைக்காவிட்டாலும், விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டு, அவ்வப்போது தந்தையின் கை அசைவை பார்த்த ஷ்ரேய் பரவசப் பட்டான். ஒன்பதாவது ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் குழு சிறு புள்ளிகளை எடுத்தனர். தற்சமயம் ஆடிய இரண்டு ஆட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு, ஷ்ரேய் அடுத்ததாக விளையாட இருந்தான்.

அந்த சமயம், ஷ்ரேய்யிடம் அடிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்து, விளையாட்டில் வெற்றி பெறாமல் இருந்தால்? வியக்கத்தக்க வகையில், ஷ்ரேய்க்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. “பேட்” ஐ பிடிக்கக் கூட அவனுக்கு தெரியவில்லை; பந்து வருவதை கவனித்து அடிப்பது மற்றொரு சவால்.

ஷ்ரேய் இருந்த அணி, வெல்வதை விட அவனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தது. அதனால், அவன் விளையாடத் தயாராக இருந்த போது, மற்றொரு அணியின் பந்து வீச்சாளர் சற்று பின் சென்று, எப்படியாவது ஷ்ரேய் பந்து வருவதை கவனித்து விளையாட வேண்டும் என்பதற்காக, பந்தை மெதுவாக வீசினான். ஷ்ரேய்யால், முதல் பந்தை சரியாக விளையாட முடியவில்லை. பந்து வீச்சாளர் மறுபடியும் சற்று பின் சென்று, பந்தை இன்னும் நிதானமாக வீசினான்; ஷ்ரேய் பந்தை மெதுவாக பந்து வீச்சாளரிடமே அடித்தான்.

பந்து வீச்சாளர் அவனிடம் வந்த பந்தை அருகில் இருந்த நபரிடம் வீசி, ஷ்ரேய்யை விளையாட்டை விட்டு சுலபமாக நீக்கியிருக்கலாம். விளையாட்டும் நிறைவு பெற்றிருக்கும்.

அதற்கு பதிலாக, பந்து வீச்சாளர் பந்தை அருகில் இருந்த நபரின் தலைக்கு மேல் வீசி, எவருமே அதை பிடிக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தினான். பார்வையாளர்கள் எல்லோரும், “ஷ்ரேய், சீக்கிரமாக ஓடு, சீக்கிரமாக ஓடு!” என்று கத்தினர். இத்தனை வருடங்களில் ஷ்ரேய்க்கு இது போல ஒரு நிகழ்வு நடந்ததில்லை; அவன் சற்று பதட்டமாக ஓடினான்.

எல்லோரும், “திரும்பி ஓடி வா, திரும்பி ஓடி வா!” என்று அலறினர். மூச்சை நிறுத்திக் கொண்டு, எப்படியாவது இந்தப் பக்கம் சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் கஷ்டப்பட்டு ஓடினான். அணியின் வலது பக்கத்தில் இருந்த சிறுவனிடம் பந்து இருந்தது. அவன் நினைத்திருந்தால், பந்தை சரியான நபரிடம் வீசியிருக்கலாம்; ஆனால், அவன் சூழ்நிலையை புரிந்து கொண்டு, பந்தை சற்று தூரம் வீசி, ஷ்ரேய் இடத்திற்கு போய் சேரும்படி விளையாடினான். அந்த அணியில் இருந்தவர்களில், அச்சிறுவன் தான் எல்லோரையும் விட இளையவனாக இருந்தான்; ஆனால், அன்றைக்கு விளையாட்டின் “ஹீரோ” என அவனைக் கூறலாம்.

“ஷ்ரேய், ஷ்ரேய் விரைவாக ஓடு” என்று எல்லோரும் அவனை உற்சாகப் படுத்தினர். எதிர் அணியில் இருக்கும் ஒரு நபர் அவன் ஓட வேண்டிய திசையை காண்பித்து, “மூன்றாவது முறையாக மறுபடியும் ஓடு” என்றான். அவன் ஓடிய பிறகு, அங்கு இருக்கும் எல்லா சிறுவர்களும் “கடைசியாக இந்த முறை ஓடி விளையாட்டை நிறைவு செய்யவும்” என்றனர். அவன் ஓடிய பிறகு, இந்த விளையாட்டில் வெற்றி பெற்று அந்த அணிக்கு பெருமையை சேர்த்து விட்டதாக ஊக்குவித்தனர்.

அந்நாள், இரண்டு அணிகளில் இருந்த அனைத்து மாணவர்களும் சாசுவதமான அன்பு மற்றும் மனிதத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். ஷ்ரேய் அதற்குப் பிறகு பல காலம் உயிர் வாழவில்லை; ஆனால் அவன் “ஹீரோ” வாகத் திகழ்ந்து, தந்தையை சந்தோஷப்படுத்தி, தாயார் அவனை அணைத்துக் கொள்ளும் தருணத்தை ஏற்படுத்தினான்.

நீதி:

அன்பும், பரிவும் கலந்த ஒரு செயல், புண்பட்ட மனதிற்கு இதமாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

இறுதி சவாரி

நீதி: அன்பு / பரிவு

உபநீதி: சமயோஜித புத்தி, மரியாதை

the last ride - latest first picture

நான் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தவுடன் ஹாரனை அழுத்தினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை ஒலி எழுப்பினேன். அப்பொழுதும் எந்த சலனமும் இல்லை. அன்றைய பொழுதின் கடைசி சவாரி என்பதனால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தேன்; ஆனால் நான் வாகனத்தை நிறுத்தி விட்டு, முகவரியில் கொடுக்கப்பட்ட விலாசத்திற்கு  சென்று கதவைத் தட்டினேன்.

“ஒரு நிமிடம்” என்ற பலவீனமான குரலில் ஒரு முதியவர் பதில் கொடுத்தார். தரையில் எதையோ இழுக்கும் சத்தம் கேட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. ஏறக்குறைய 90 வயதான ஒரு பெண்மணி என் முன் நின்றார். அழகான வடிவமைப்புள்ள உடை மற்றும் தொப்பியை அணிந்த அவர், 1940 ம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்பட நடிகையைப் போல தோற்றமளித்தார். அவரது கையில் ஒரு சிறிய நைலான் பெட்டி இருந்தது. பல ஆண்டுகளாக அந்த வீட்டில் எவரும் வசிக்காதது போல் தோன்றியது. மேஜை, நாற்காலி போன்ற அனைத்து சாமான்களும் துணியினால் மூடப்பட்டிருந்தது. சுவரில் கடிகாரம் இல்லை, அலங்கார பொருட்களோ அல்லது சமையல் அறையின் மேடையில் பாத்திரமோ பண்டங்களோ இல்லை. புகைப்படங்கள் மற்றும் கண்ணாடி பொருட்களால் நிரப்பப்பட்ட அட்டை பெட்டி ஒன்று மூலையில் இருந்தது.

அந்தப் பெண்மணி, “எனது பெட்டியை வண்டிக்கு எடுத்துச் செல்ல முடியுமா?” என்று கேட்டார். நான் பெட்டியை வண்டியில் வைத்து விட்டு, பின்னர் அந்த பெண்மணிக்கு உதவுவதற்காக திரும்பிச் சென்றேன். அவர் என் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக சாலையோரம் நடந்தார். எனது கனிவான செயலுக்கு அவர் என்னிடம் மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்தார். “நான் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. மற்றவர்கள் என் தாயாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அவ்வாறே நான் என் பயணிகளிடமும் நடந்து கொள்வேன்” என்று கூறினேன். “நீ ஒரு அருமையான பிள்ளை” என்று அவர் கூறினார். இருவரும் வண்டியில் அமர்ந்த பின் அவர் எனக்கு ஒரு முகவரியைக் காண்பித்து, “நீங்கள் நகரத்தின் வழியாக வண்டியை ஓட்டிச் செல்ல முடியுமா?” என்று கேட்டுக் கொண்டார். “நீங்கள் செல்லும் இடத்திருக்கு இது சிறந்த வழி அல்ல”, என்று நான் அவசரமாக பதிலளித்தேன். அவர் “பரவாயில்லை. எனக்கு அவசரம் ஏதும் இல்லை. நான் இப்பொழுது முதியோர் இல்லத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

நான் பின்காட்டி கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தேன். அவருடைய கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன. “எனக்கு உறவினர்கள் யாருமில்லை” என்று அவர் மெலிந்த குரலில் கூறி,  தொடர்ந்து “மருத்துவர்கள்  எனக்கு குறைவான அவகாசமே உள்ளது என்று கூறி விட்டனர்” என்றார். நான் மீட்டரை நிறுத்திவிட்டு,  “நீங்கள் எந்த வழியாக செல்ல விரும்புகிறீர்கள்” என்று கேட்டேன். அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு பல தெருக்கள் வழியாக பயணித்தோம். அவர் மின் தூக்கி இயக்குபவராக பணிபுரிந்த கட்டிடத்தை எனக்குக் காண்பித்தார். புதுமண தம்பதிகளாக அவரும் அவர் கணவனும் வசித்த இடத்திற்குச் சென்றோம். சிறுமியாக இருந்த போது அவர் நடனமாடிய பால்ரூம், தற்போது மேஜை நாற்காலி போன்ற சாமான்கள் விற்கும் இடமாக மாறியிருந்தது. சில நேரங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்டிடம் முன்பு அல்லது தெருமுனையில் என்னை மெதுவாக செல்லுமாறு கேட்டுக் கொள்வார். பின் இருளை உற்றுபார்த்தபடி மெளனமாக அமர்ந்திருப்பார்.

சூரியோதயத்தின் வெளிச்ச கீற்றுகள் அடிவானத்தை எட்டி பார்த்தது. திடீரென்று அவர், “எனக்கு சோர்வாக உள்ளது. இப்போது போகலாம்” என்றார். அவர் எனக்கு அளித்த முகவரிக்கு மெளனமாக ஓட்டிக் கொண்டு சென்றேன். அது ஒரு சிறிய மருத்துவமனை போல இருந்தது. வண்டி நின்றவுடனேயே இரண்டு ஊழியர்கள் அருகில் வந்தனர். முதிய பெண்மணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகுந்த கவனத்துடன் கனிவோடு கவனித்து கொண்டனர். இவரின் வருகையை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர் போல தெரிந்தது.

நான் வண்டியின் பின்புறத்தை திறந்து பெட்டியை எடுத்துக் கொண்டு வாயிலருகே சென்றேன். அந்த பெண் ஏற்கனவே சக்கர நாற்காலியில் உட்கார வைக்கபட்டிருந்தார்.

“நான் எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார்.

“எதுவும் வேண்டாம்”,  என்று கூறினேன்.

“உங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டியிருக்கும்” என்றார்.

“வேறு சவாரிகள் உள்ளன”, என்று நான் பதிலளித்தேன்.

தயக்கம் ஏதுமின்றி குனிந்து அவரை அணைத்தேன். அவர் என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

“நீ ஒரு வயடானவற்கு மகிழ்ச்சியான சில தருணங்களை அளித்திருக்கிறாய். நன்றி” என்று அவர் சொன்னார்.

நான் அவருடைய கையை இறுக்கமாக பிடித்தேன். பின்னர் மங்கலான காலை ஒளியில் வண்டியை நோக்கி நடந்தேன். எனக்கு பின்னால் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. வாழ்க்கையே முடிந்தது போல ஓர் உணர்வு!

அன்று வேறு எந்த சவாரியையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இலட்சியம் ஏதுமின்றி, சிந்தனையில் ஆழ்ந்தவாறு நான்  வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். நாள் முழுவதும், எனக்கு பேச தோன்றவில்லை. ஒருவேளை அந்த பெண்மணிக்கு கோபம் நிறைந்த அல்லது சவாரியை முடிக்க வேண்டும் என்ற அவசரத்துடன் பொறுமையற்ற ஓட்டுனர் அமைந்திருந்தால்? நான் சவாரி ஏற்க மறுத்திருந்தாலோ அல்லது ஒரு முறை ஹோர்ன் அடித்துவிட்டு கிளம்பியிருந்தாலோ என்ன நடந்திருக்கும்? சிந்தனை செய்ததில், என் வாழ்க்கையில் இதைவிட மிக முக்கியமான விஷயம் எதையுமே செய்ததில்லை என்று தோன்றியது..

நீதி:

சிறப்பான தருணங்களே வாழ்க்கையை வடிவமைக்கும் என்ற எண்ணங்களில் நம்மை வரையறுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை அறியாமலேயே பல சமயங்களில் மகத்துவமான தருணங்கள் அமைந்துவிடும் – பிறர் சிறிதென்று கருதும் பல விஷயங்கள் மிக அழகாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கர்வம் தலை குனிந்தது

நீதி – அஹிம்சை

உப நீதி – அமைதி

vanity learns a lesson

இந்தக் கதை, அஹிம்சைக்கு முக்கியத்துவம் கொடுத்த, உலகப் புகழ் பெற்ற நம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மஹாத்மா காந்திஜியைப் பற்றியது.

ஒரு முறை, காந்திஜி இங்கிலாந்திற்குக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன்  பயணம் செய்த ஒரு ஐரோப்பிய இளைஞன் காந்திஜியை ஏளனமாகப் பார்த்தான்;  சரியான உடைகள் அணிந்து கொள்ளாமல், வழுக்கைத் தலை மற்றும் பற்களே இல்லாத இந்தக் கிழவர் எதற்கு இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான். மேலும், அவன் காந்திஜியைப் பற்றி வேடிக்கைப் படங்களை வரைந்ததோடு  தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினான். பின்னர், அவரிடம் சென்று இந்தத் துண்டுக் காகிதங்களைக் கொடுத்து,  “இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்; படித்துப் பார்த்து விட்டு வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவன் கூறினான்.

காந்திஜி அவன் கொடுத்தக் காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து படித்து விட்டு,  மறுபடியும் அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். மேலும், வழக்கமான புன்னைகையுடன் அவனைப் பார்த்து, “ நீ கூறிய படியே செய்தேன். நீ கொடுத்ததில் எனக்கு பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்த பொருள் ஒன்றுதான்; காகிதங்களை ஒன்றாக வைத்துக் கொண்டிருந்த இந்த தாள் இணைப்பி மட்டுமே. அதனால், இதை மட்டும் நான் வைத்துக் கொண்டேன். நன்றி” என்று கூறினார்.

காந்திஜியின் இந்த இனிய சுருக்கமான பதில் அந்த இளைஞனின் மனதை நெகிழ வைத்தது. காந்திஜியின் அறிவு, பண்பு, பணிவு மற்றும் உயர்ந்த நோக்கத்தை இளைஞன் புரிந்து கொண்டான். அவன் அவமானத்தில் தலை குனிந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். இப்படி ஒரு தவறை செய்து விட்டோமே என்று தன்னுடைய முட்டாள் தனத்தையும், அகங்காரத்தையும் அவன் புரிந்து கொண்டான். அந்நாள் முதல், அந்த ஐரோப்பிய இளைஞன், ஜாதி, மதம், தோற்றம் பார்க்காமல், அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தைக் கற்றான்.

நீதி:

எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவன் அமைதியாகவும், பெருந்தன்மையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பிறருக்கு மரியாதை கொடுத்து வாழ வேண்டும். அப்பொழுது தான், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். “உரையைப் பார்த்து புத்தகத்தின் மதிப்பை அறிய முடியாது” என்கிற ஆங்கிலப் பழமொழி கூறுவது போல், ஒருவருடைய உடையையும், வெளித் தோற்றத்தையும் பார்த்து எவரையும் எடை போடக் கூடாது.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கரும்புள்ளி

நீதி: ஆக்கப் பூர்வமான நம்பிக்கை

உபநீதி: விசால எண்ணம், நற்செயல்களை பாராட்டுதல்

the black dot picture 1ஒரு நாள், பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் நுழைந்து மாணவர்களை திடீர் தேர்வுக்கு தயாராகும்படி கூறினார். மாணவர்கள் ஆர்வத்துடன் அவரவர் இடத்தில் காத்திருந்தனர். ஆசிரியர் கேள்வித் தாள்களை வழக்கம் போல அனைவருக்கும் கொடுத்தார். கேள்வித்தாளை பெற்ற அனைத்து மாணவர்களும் ஆச்சரியமடைந்தனர் – அதில் கேள்விகள் ஒன்றுமே இருக்கவில்லை; வெள்ளைக் காகிதத்தின் மையத்தில் ஒரு கருப்புப் புள்ளி மட்டுமே இருந்தது.

அனைத்து மாணவர்களின் முகத்திலும் வெளிப்பட்ட ஆச்சரியத்தை கண்ட பேராசிரியர்,  “நீங்கள் கேள்வித் தாளில் பார்க்கும் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும். இதையே நான் எதிர் பார்க்கிறேன்” என்றார். குழப்பமடைந்த மாணவர்கள் தங்களின் முயற்சியை தொடங்கினர். தேர்வின் முடிவில், பேராசிரியர் எல்லோருடைய விடைத்தாளையும் பெற்று கொண்டார். ஒவ்வொரு மாணவரின் உரையையும் உரத்த குரலில் வாசித்தார். விதிவிலக்கின்றி அனைவரும், தாளின் நடுப் பகுதியில் இருந்த கருப்பு புள்ளி மற்றும் அதன் அமைப்பைப் பற்றி மட்டுமே விவரிக்க முயற்சித்திருந்தனர்.

the black dot latest pictureஅனைத்து விளக்கங்களையும் படித்து முடிக்கும் பொழுது வகுப்பறை அமைதியாக இருந்தது. இப்போது பேராசிரியர், “இந்த பயிற்சி உங்களை சோதிப்பதற்காக அல்ல, சிந்திக்க வைப்பதற்காகவே நடத்தினேன். காகிதத்தின் வெள்ளைப் பகுதியைப் பற்றி எவருமே எழுதவில்லை. எல்லோரும் கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இதே தான் நம் வாழ்விலும் நடக்கிறது.

நம் வாழ்வில், காகிதத்தின் வெள்ளை பகுதியைப் போல, நாம் கவனிக்கவும் அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது;  ஆனால் நாம் எப்போதும் பிரச்சனைகளை மட்டுமே கவனிக்கிறோம் – சுகாதாரக் கேடு, பணப் பிரச்சனை, குடும்ப உறுப்பினரின் சிக்கல்கள், நட்பில் ஏமாற்றம் போன்றவற்றால் பாதிப்படைந்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நம் வாழ்வில் உள்ள அனைத்தையும் ஒப்பிடும் போது கரும்புள்ளிகள் மிகவும் சிறியவையாகவே இருக்கின்றன, ஆனால் அவைகளே நம் மனதை மாசுபடுத்துகின்றன. வாழ்வில் உள்ள கருப்பு புள்ளிகளிலிருந்து கவனத்தை விடுவித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக அனுபவித்து மகிழ்வதற்கே. நம் வாழ்க்கை அன்போடும் அக்கறையோடும் கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு. ஒவ்வொரு நாளும், நம்மை நாம் புதுப்பித்துக் கொள்வதும், நம்மைச் சுற்றியிருக்கும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நம் வாழ்வின் ஆதாரத்தை வழங்குதலும் நம் கடமையாகும். வாழ்வில் ஒவ்வொரு நாளையும் நமக்கு கிடைத்த பொக்கிஷமாக கொண்டாட வேண்டும்.

நீதி:

எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட வாழ்க்கையில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையே பார்க்க வேண்டும். வாழ்க்கையின் தேவையற்ற நிகழ்வுகளை சிந்தித்து நேரத்தை வீணாக்குவதால், வாழ்க்கையில் உண்மையான பல பேரின்பங்களை இழக்கிறோம். நாம் மகிழ்ச்சியாக இருந்து, அன்போடு வாழ்க்கையை வாழ்வதில் கவனம் செலுத்துவதே வாழ்வதற்கான சிறந்த வழி.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com