Archive | April 2018

உண்மையான மகிழ்ச்சிக்கு சமத்துவ நிலையே சரியான வழி

நீதி: நன்னடத்தை

உபநீதி: எல்லாவற்றிலும் சமநிலை

key to happiness correct picture 1

புத்தருக்கு சோனா என்ற ஒரு இளம் சிஷ்யன் இருந்தான். வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் விடாமுயற்சி, மதிநுட்பம் மற்றும் உற்சாகத்துடன் செயற்பட்டான்.

சோனா லௌகிக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தியானப் பயிற்சியில் உற்சாகம் கொண்டு, அதில் தீவிரமாக வசியமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவன் மதி மயங்கி மிகவும் துக்கத்துக்கு ஆளானான். இது அவனுக்கு ஏமாற்றத்தையும், வாக்குவாதம் செய்யும் குணத்தையும்,  துயரத்தையும் கொடுத்தது. விரைவில் அவன், உடல் மெலிந்து, எலும்புக் கூடு போல் தோற்றமளித்தான்.

ஆன்மீகத்தில் வளர்ச்சி பெறாததால், அதற்கு உண்டான வழியை அறிய அவன் புத்தரிடம் சென்றான்.

key to happiness - correct picture 2

புத்தர், “சோனா! முன்பெல்லாம் நீ தந்திக் கம்பிகள் கொண்ட இசைக் கருவியை எளிதாக வாசித்தாய் அல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு சோனா “வாசிப்பது எளிதல்ல” என்று பதிலளித்தான்.

அதற்கு புத்தர், “சோனா! உன் இசைக்கருவியின் கம்பிகளை மிகவும் இறுக்கமாகவோ,  இறுக்கமற்ற நிலையிலோ இல்லாமல், ஸ்ருதிக்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொண்டால், இனிமையான இசை வருவதுடன், வாசிப்பதும் எளிதாகும் அல்லவா?” எனக் கேட்டார்.

அதற்கு சோனா “ஆம்” என்று பதிலளித்தான்

உடனே புத்தர், “அதே போல் தான் பயிற்சி செய்யும் போது, சக்தியை அதிகம் செலுத்தினால் அது மன அழுத்தத்தையும், நிம்மதியின்மையையும் கொடுக்கும். சக்தியைக் குறைவாக செலுத்தினால், அது களைப்பில் முடியும். அதனால் உன் சக்தியை சம நிலையில் வைத்துக் கொண்டால் உன் ஆன்மீக வளர்ச்சியில் நீ முழு கவனம் செலுத்த முடியும்” என்று கூறினார்.

நீதி:

மிதமான பயிற்சி மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். உணவு முறையோ, தூக்கமோ, செய்யும் வேலையோ, எதுவானாலும் சரியான அளவில் செய்தால், நம் வாழ்க்கை சமநிலையில் அமைந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே, விளையாடுவது, சாப்பிடுவது, கற்பது போன்ற எல்லா விஷயங்களிலும் சமநிலையை பயிற்சி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவர்களை உணவின் மதிப்பறிந்து அதனை வீணடிக்காமல் இருப்பது, குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டு மற்றும் படிப்பு, இரண்டையும் சமாளித்து வெற்றி காண்பது போன்றவற்றை சாதிக்க வைக்கும்.

அதே சமயம், இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். நம் இலக்கை விட்டு நம் கவனம் விலகக் கூடாது. இலக்கை நோக்கிச் செல்லும் போது, இடையில் வரும் குறுக்கீடுகளைப் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாணவர்கள் முழு ஆளுமையோடும், சந்தோஷமாகவும் இருந்து, ஒரு முழுமை பெற்ற மனிதனாக பிற்காலத்தில் உருவெடுப்பார்கள். இந்த மிதமான பயிற்சியை சிறு வயதிலிருந்தே பழகி வந்தால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், மன நிறைவுடனும், சமநிலையிலும் அமையும். இந்நிலை அடைந்த மனிதர்களுக்கு நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும். அதன் மூலம் ஒரு செயலைத் தடையின்றி முடிக்க முடியும்.

சுவாமி சிவானந்தர் கூறியபடி

எல்லாவற்றிலும் மிதமாக இரு. அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

கர்ப்பிணி மான்

நீதி – நன் நடத்தை

உப நீதி – தெளிவான எண்ணம், சரணாகதி

the pregnant deer picture 1

ஒரு காட்டில், ஒரு கர்ப்பிணி மானுக்கு பிரசவ சமயமாக இருந்தது. ஒரு ஆற்றங்கரை அருகில் பழைமையான புல்வெளியை பாதுகாப்பான இடமாகக் கருதி மான் அங்கு சென்றது; உடனே அதற்கு வலி ஆரம்பமாயிற்று. அதே சமயத்தில், இருண்ட மேகங்களுடன், மின்னலும் சேர்ந்து காட்டுத் தீ ஆரம்பமாயிற்று.

இடது பக்கத்தில், ஒரு வேடன் அம்பைத் தன்னை நோக்கி எய்வதை மான் கவனித்தது; வலது பக்கத்தில், ஒரு சிங்கம் பசியுடன் இருந்ததால், அதுவும் தன்னை நோக்கி வருவதை மான் பார்த்தது.

அந்த கர்ப்பிணி மானால் என்ன செய்ய முடியும்? பிரசவ வலி! என்ன ஆகும்? மான் உயிர் பிழைக்குமா? ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்குமா? அந்த குட்டி மான் உயிரோடு இருக்குமா? அல்லது எல்லாமே இந்த காட்டு தீயால் அழிந்து விடுமா? வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா? அல்லது பசியால் இருக்கும் சிங்கத்திற்கு அந்த மான் உணவாகி விடுமா? ஒரு பக்கத்தில் காட்டுத் தீ, மற்றொரு பக்கத்தில் ஓடும் ஆறு, மற்றும் ஒரு பக்கத்தில் இரையைத் தேடுகின்ற வேடனும், சிங்கமும்.

the pregnant deer picture 2

மான் என்ன செய்தது? மானின் கவனம் ஒருமுகச் சிந்தனையோடு, புது உயிரைப் பெற்றெடுப்பதில் இருந்தது.

அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்:

–      மின்னலடித்த காரணத்தால், வேடனுக்குச் சரியாகக் கண் தெரியவில்லை.

–      வேடனின் அம்பு குறி தவறி, மானிற்குப் பதிலாக சிங்கத்தைத் தாக்கியது.

–      பலத்த மழையின் காரணத்தால் காட்டுத் தீ அணைந்து விட்டது.

–      மான் ஒரு ஆரோக்கியமான கன்றைப் பெற்றெடுத்தது.

நீதி:

நம் வாழ்க்கையிலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் பல நேர் மாறான எண்ணங்களும், நிகழ்வுகளும் வந்தாலும், நாம் எதை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. சில எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கக் கூடும்; அந்தச் சமயத்தில் அந்த நிகழ்வை சமாளிக்க முடியாமலும் போகலாம். அந்த சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியதை, இந்தக் கதையில் வரும் மானிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். மான் இருந்த சூழ்நிலையில், கன்றைப் பெற்றெடுப்பது தான் முக்கியம் எனத் தீர்மானித்தது. மற்றது எதுவுமே மானின் கைகளில் இருக்கவில்லை. ஒரு செயலோ அல்லது எதிர் செயலோ, மானின் ஒருமுகச் சிந்தனையைத் திசை திருப்பியிருந்தால், மரணம் அல்லது விபத்தில் முடிந்திருக்கலாம்.

நமது கவனம் எங்கே இருக்கிறது? கடினமான நிகழ்வுகளை சந்திக்கும் போது, நாம் கடவுளின் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும்.

பிறகு, தெளிவாக யோசித்து, அச்சமயத்தில் எது முக்கியமோ, அதை முதலில் செய்ய வேண்டும். நாம் சரியான முடிவை எடுத்தால், எல்லாமே நன்றாக முடியும். வாழ்க்கையில் தெளிவான மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை மதிப்பீடு செய்யக் கூடாது. இலக்குகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருமுகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்; கல்வி, தொழில், குடும்பம்  மற்றும் எதுவாக இருந்தாலும், ஒரு முறை இந்தப் பாதையை பின்பற்றினால், நாளடைவில் இது நம் இயல்பாக மாறிவிடும். பிறகு தெய்வீக இலக்குகளையும் சாதிக்க உதவியாக இருக்கும். இது ஆதி சங்கரரின் கூற்றுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தொலைந்த ஊசியைத் தேடுதல்

நீதி – உண்மை

உபநீதி – ஆழ்ந்த சிந்தனை, உள் நோக்குதல்

In search of a lost needle picture 1

அத்வைத குருவான ஆதிசங்கரர், ஒரு நாள் தனது ஆசிரமத்தின் குடிசைக்கு  வெளியே, நிலவு வெளிச்சத்தில் எதையோ தேடிக் கொடிண்டிருந்தார். அதைக் கண்ட அவரது சீடர்கள், இந்நேரத்தில் அவர் எதைத் தேடுகிறார் என ஆர்வத்துடன் கேட்டனர்.

ஆதி சங்கரர், தான் தொலைத்த ஊசியை தேடுவதாக பதிலளித்தார்.

சிறிது நேரம் தேடிய சீடர்கள் “குருவே!! தாங்கள் ஊசியை எங்கு தவற விட்டீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு ஆதி சங்கரர், குடிசைக்குள் படுக்கைக்கு அருகே  தவற விட்டதாகக் கூறினார்.

குழம்பிய சீடர்கள் தயங்கியவாறே, “உள்ளே தவற விட்டதை ஏன் வெளியே தேடுகிறீர்கள்” என்று வினவ,  குரு ஒன்றும் அறியாதது போல், “உள்ளே இருட்டாய் இருக்கிறது. விளக்கில் எண்ணையும் இல்லை. அதனால் வெளிச்சம் உள்ள இவ்விடத்தில் தேடுகிறேன்” என்றார்.

சீடர்கள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “உள்ளே தொலைத்ததை வெளியே தேடினால் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டனர். குரு மெளனமாக புன்னகைத்தார். “நம் உள்ளத்தில் உள்ள இறைவனைத் தொலைவில் உள்ள கோயில்களுக்கு ஓடிச் சென்றோ, மலைகளுக்கு நடந்து சென்றோ தேடுகிறோம் அல்லவா? அது போல் தான் இதுவும். உள்ளே தொலைத்ததை வெளியில் ஏன் தேடுகிறோம்? ஏனென்றால், நம் உள்ளம் இருட்டாக இருக்கின்றது.

நீதி:

இறைவன் நம் உள்ளேயே ஆத்மஸ்வரூபமாய் இருக்கிறார். நாம் உள்ளே தொலைத்ததைக் கண்டு பிடிக்க நம் உள்ளங்களில் விளக்கேற்ற வேண்டும்.  மனதில் இருள் சூழ்ந்துள்ளதால் இறைவனை வெளியே கோயில், மலை, காடு என பல இடங்களில் நாம் தேடுகிறோம்; நம் உள்ளங்களில் இருக்கும் இறைவனைப் பார்ப்பதில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தால், நம் உள் மனதைப் புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளார்ந்த நோக்குதல் போன்ற அறிவையும் நமக்குக் கற்பிக்கும் வகையில் கடவுள் குருவை அனுப்புகிறார். உண்மையான குருவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம்பிக்கையும், ஒழுங்கு முறையாக நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதை:

கண்ணுக் கினியன கண்டு – மனதைக்

காட்டில் அலைய விட்டு

பண்ணிடும் பூசையாலே – தோழி

பயனொன்றில்லையடி

உள்ளத்தில் உள்ளானடி – அது நீ

உணர வேண்டும் அடி

உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்

உள்ளேயும் காண்பாயடி.

கண்கள் ஓரிடத்தைப் பார்க்க மனம் வேறு விஷயத்தில் அலை பாய்கிறது. இவ்வாறு செய்யும் பூஜையால் பலன் இல்லை. கடவுள் உள்ளத்தில் இருப்பதை அறிந்தால், கோயிலுக்கு உள்ளேயும் நாம் கடவுளை உணர்ந்து அவரைக் காண முடியும்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பணப்பை

நீதி – உண்மை

உப நீதி – மாயை

ஒரு முறை, ஒரு வயதானவர், பிருந்தாவனத்திற்குத் தீர்த்த யாத்திரைக்காக ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த சமயம், அவரது சட்டைப் பையிலிருந்து பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது. மறுநாள் காலை மற்றொரு பிரயாணி அதனைக் கண்டெடுத்து, அந்த பணப்பை யாருக்குச் சொந்தமானது என்று விசாரித்துக் கொண்டிருந்தார். வயதானவர் அது தனக்குரியது என்றும், அந்தப் பணப்பைக்குள் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் படமே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.

பிறகு வயதானவர் அப்பணப்பை பற்றிய கதையைச் சொல்லத் தொடங்கினார். விரைவில், பலர் கதை கேட்பதற்காக ஆர்வத்துடன் அவரை சூழ்ந்து கொண்டார்கள். எல்லோரும் பார்க்கும் வண்ணம், பணப்பையை தூக்கிப் பிடித்தவாறு, முதியவர், “இந்தப் பணப்பையின் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறுவனாக இருந்த போது என் தந்தை எனக்கு இதனைப் பரிசாக அளித்தார். என் கைச் செலவுப் பணத்தையும், என் பெற்றோரின் புகைப்படத்தையும் இதற்குள் வைத்திருந்தேன்.

ஆண்டுகள் கடந்தன. நான் வளர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க ஆரம்பித்தேன். எல்லா இளைஞர்களையும் போல, நானும் என் தோற்றத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன். என் பெற்றோரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, என்னுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டேன்; அடிக்கடி அதைப் பார்த்து ரசிப்பேன். நானே என்னுடைய ரசிகனாகி விட்டேன்.

பிறகு திருமணம் நடந்தது. என்னை நானே ரசித்துக் கொண்டிருந்த நிலைமையிலிருந்து, பொறுப்பு மற்றும் விழிப்புணர்வு அதிகமாகி விட்டது. தற்போது எனது படத்திற்கு பதிலாக என் மனைவியின் படம் பணப்பையில் இருந்தது. தினமும் நான் பணப்பையைப் பல முறை திறந்து அந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எனது சோர்வுகள் மறைந்து, என் பணியை உற்சாகத்துடன் தொடர்ந்தேன்.

பின்னர் என் முதல் குழந்தை பிறந்தது. தந்தை ஆனதில் தான் எனக்கு எத்தனை ஆனந்தம்! அலுவலகம் முடிந்த பிறகு என் குழந்தையுடன் விளையாட ஆவலுடன் வீட்டிற்கு விரைந்து வருவேன். ஏற்கனவே, என் குழந்தையின் படம் மனைவியின் படத்திற்குப் பதிலாக மாறிவிட்டது.

தற்போது முதியவர் சற்று நேரம் மெளனமாக இருந்தார். கண்ணீர் ததும்பிய கண்களைத் துடைத்தவாறு, அவர் தன்னைச் சுற்றிப் பார்த்தபடி, சோகமான குரலில், “நண்பர்களே, என் பெற்றோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு காலமாகி விட்டனர். என் மனைவி கூட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போய் விட்டாள். என் ஒரே மகன் – இப்போது திருமணம் முடிந்து தனது வேலை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதால், என்னுடன் இருக்க அவனுக்கு நேரமில்லை. நான் இப்போது மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன். எதிர்காலத்தில் எனக்காக என்ன காத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் நேசித்த எல்லோரும், என் சொந்தம் என்று கருதிய அனைவரும், என்னை விட்டுச் சென்று விட்டனர்” என்றார்.

இப்பொழுது ஒரு கிருஷ்ணர் படம் மட்டுமே என் பணப்பையில் இருக்கிறது. அவர் என்னை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டார் என்று எனக்கு தெரியும். ஆரம்பத்தில் இருந்தே அவரது படத்தை வைத்திருக்கலாமோ என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது! ஏனெனில் அவர் மட்டுமே நிரந்தரமானவர்; மற்றவர்கள் நிழல்களைப் போல் கடந்து செல்பவர்கள்.

கற்பித்தல்:

பற்றும் பாசமும் தற்காலிகமானவை. உறவுகள் நிரந்தரமற்றவை. இன்று, சொந்தமும் சுற்றமுமே நமது சகலமாகத் தோன்றும்; ஆனால் நாளை அவர்கள் மறைந்து விடுவார்கள். நமது உண்மையான உறவு கடவுளுடன் மட்டுமே. இதுவே நிரந்தரமான உறவு. அவர் நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் கடவுளை அழையுங்கள். அவர் நம் மீது அருள் புரிவார். நமது செல்வம் பூமியில் தங்கிவிடும்; நம் கால்நடைகள் பண்ணையில் இருந்துவிடும், நம் வாழ்க்கைத் துணை வாயில் வரை மட்டுமே, சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் சுடுகாடு வரை வரக் கூடும், நமது உடல் உயிருள்ள வரை மட்டுமே உடன்வரும். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு நமது கர்மங்கள் தான் நம் துணையாகும்; ஆகையால், நற்செயல்களையே செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com