Archive | January 2022

பிறர் அறியாமல் உதவுதல்

நீதி: அன்பு / நன்நடத்தை

உபநீதி: பணிவு

பல வருடங்களுக்கு முன், ஒரு மனிதன் தான் சந்தித்த அனைவரிடமும் அன்பையும், மன்னிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தினான். அதனால் கடவுள் அவனிடம் பேசுவதற்கு ஒரு தேவதையை அனுப்பி வைத்தார்.

தேவதை “உன்னுடைய நல்ல செய்கைக்காக, கடவுள் உனக்குப் பரிசளிக்க விரும்புவதாகத் தெரிவித்து, என்னை உன்னிடம் அனுப்பினார்” என்று கூறி, “நீ விரும்பும் எந்தப் பரிசானாலும் உனக்கு அளிக்கப்படும். உனக்குப் பரிசாக, குணப்படுத்தும் கலையை நீ பெற விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

அதற்கு அம்மனிதன் “கண்டிப்பாக இல்லை” என்றான். மேலும் “எவரை  குணப்படுத்த வேண்டுமோ அவரை கடவுளே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பதிலளித்தான்.

பிறகு தேவதை “பாவம் செய்தவர்களை, உண்மையின் பாதையில் திருப்பி அழைத்துச் செல்லும் கலை வேண்டுமா?” என்று கேட்டார்.

உடனே அம்மனிதன் “அது உங்களைப் போல தேவதைகளின் வேலை. அனைவராலும் போற்றப்படும் ஒருவனாகவோ, அனைவருக்கும் எப்பொழுதும் ஒரு நிரந்தரமான உதாரணமாகவோ இருக்க நான் விரும்பவில்லை” என்று கூறினான்.

மீண்டும் தேவதை “இதோ பார்! உனக்கு ஒரு வரம் தராமல் நான் சொர்க்கத்திற்குத் திரும்ப முடியாது. நீ தேர்ந்தெடுக்காவிட்டால், நானே உனக்காக ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார்.

அந்த மனிதன் ஒரு நிமிடம் சிந்தித்த பிறகு, “அப்படியானால் சரி; என் மூலமாக எல்லோருக்கும் நன்மை நடக்கட்டும்; ஆனால், தற்பெருமை என்ற பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க, இந்த நற்செயல்கள் மற்றவர்கள் மட்டுமல்லாமல், நானும் அறியக் கூடாது” என்று கூறினான்.

அதனால் அந்த தேவதை, சூரிய ஒளி அந்த மனிதனின் முகத்தில் விழும் போது, அந்த மனிதனின் நிழலுக்குப் பிறரைக் குணப்படுத்தும் சக்தியை அளித்தார். இதனால்,  அவன் எங்கே சென்றாலும், நோயுற்றவர்கள் குணமானார்கள்; பூமி வளம் மிகுந்ததாக ஆனது; துன்பத்தில் இருந்தவர்கள் இன்பத்தை அனுபவித்தனர்.

அம்மனிதன், தான் நிகழ்த்தும் அதிசயங்களை அறியாமல், பல வருடங்கள் பூமியில் பயணம் செய்தான்; ஏனென்றால் சூரியனை நோக்கி அவன் இருக்கும் போது, அவன் நிழல் எப்பொழுதும் அவன் பின்னால் இருக்கும். இவ்வாறாகத் தன் புனிதத் தன்மையை அறியாமல் அவன் பல வருடங்கள் வாழ்ந்து மறைந்தான்.

நீதி:

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவுதல் தான், ஒருவர் பெறக்கூடிய மிகச் சிறந்த பண்பாகும்; மேலும் செய்யும் செயல்கள் யாவும் நாம் செய்பவை அல்ல என்று எச்சமயமும் உணர்ந்தால், நாம் தற்பெருமை என்ற பாவத்தை செய்யாமல் இருக்கலாம். இது நமக்குப் பணிவை வளர்க்க உதவும். பற்றில்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவாக இருப்பதென்பது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல மாறுதலை ஏற்படுத்தும்.

நாம் செய்த உதவிக்கு பிரதிபலன் கிடைக்காது என்று அறிந்தும் நாம் எந்த நாளன்று மற்றோருக்கு உதவி செய்கிறோமோ, அன்று நமக்கு மன நிறைவு கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நன்றி உணர்வோடு வாழ்வோம்

நீதி: உண்மை, நிபந்தனையற்ற அன்பு, தன்னலமற்ற மனப்பான்மை  

உபநீதி: நன்றி உணர்வு, இரக்கம்

ஒரு துறவி, ஒரு மனிதனை தலையில் கட்டுடன் பார்த்தார்.

துறவி அவனிடம் “எதற்காக நீங்கள் தலையில் கட்டு போட்டு கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதன் தனக்கு தலைவலி இருப்பதாக பதிலளித்தான்

அதற்கு துறவி “உங்களுக்கு எவ்வளவு வயது?” என்று  கேட்டார்.

அவன் “முப்பது” என்றான்.

துறவி “இத்தனை வருடங்களில் வலியோ, வேதனையோ அனுபவித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அவன் “இல்லை” என்று பதில் கூறினான்.

அதற்கு துறவி “நீங்கள் 30 வருடங்களாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்த போது, நன்றி உணர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள்; ஆனால், ஓர் இரவு தலை வலியால் வேதனைப்பட்டவுடன் புகார் கூறுகிறீர்களே” என்று கூறினார்.

——————————————————————————————————————————————————————-

மலைப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு அறிவார்ந்த பெண்மணி, நீரோடையில் ஒரு மதிப்புமிக்க நவரத்தினக் கல்லைக் கண்டார். ஒரே பார்வையில், அதன் மதிப்பை அறிந்து கொண்டார். மறுநாள் மற்றொரு பயணியை சந்தித்தார். அவர் பசியாக இருப்பதைக் கண்டு தன் உணவைப் பகிர்ந்தளிக்க பையைத் திறந்தார். அப்போது அந்தக் கல்லைப் பார்த்த பயணி, அதனை தருமாறு கேட்டான். எவ்வித தயக்கமுமின்றி அவர் உடனே கொடுத்து விட்டார்.

பயணி தன் நல்ல அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து சென்றான். அவன் வாழ்நாள் முழுவதும், அவனை பாதுகாக்கும் அளவிற்கு மதிப்பு வாய்ந்த கல் அன்று கிட்டியது என்று அவன் எண்ணினான். எனினும் சில நாட்கள் கழித்து திரும்பச் சென்று அந்தக் கல்லை அப்பெண்மணியிடம் திருப்பி கொடுத்து விட்டான்.

பயணி “இது விலை மதிப்புள்ள கல் என எனக்குத் தெரியும். இதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்; இருப்பினும் நான் இதை திரும்பக் கொடுப்பதின் காரணம், இதை விட மேலானதை தருவீர்கள் என்ற நம்பிக்கை தான். இந்தக் கல்லை என்னிடம் கொடுப்பதற்கு காரணமாக இருந்த நற்பண்பை எனக்கு தாருங்கள்” என்றான்.

——————————————————————————————————————————————————————

ஒரு பக்தியுள்ள மனிதர் “நான் ஒரு பாவத்திற்காக கடந்த 30 ஆண்டுகளாக மனம் வருந்திக் கொண்டு இருக்கிறேன். அது சம்பந்தமாக கடவுள் என்னை எப்படி நடத்துவார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று ஒருவரிடம் கூறினார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மனிதர் “நீங்கள் செய்த பாவம் என்ன?” என்று கேட்டார்.

அந்த நபர் “நான் பஜாரில் ஒரு கடை வைத்திருந்தேன். ஒரு நாள் எனது கடையைத் தவிர அனைத்து கடைகளும் தீ பிடித்து எரிந்து தரை மட்டமாகிவிட்டதாக கேள்விப்பட்டேன். நான் கடவுளுக்கு நன்றி கூறினேன். ஆனால் உடனடியாக என் தவறை உணர்ந்தேன். என் அண்டை வீட்டாரின் இழப்பை என்னால் உணர முடியாத போது நான் எப்படி என்னை பக்தியுள்ளவனாக கருத முடியும்? அதனால் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக என் மனதில் ஏற்பட்ட இந்த குற்ற மனப்பான்மைக்காக மனம் வருந்தி கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார்.

——————————————————————————————————————————————————————

நீதி:

உங்களுக்கு கிடைத்த பாக்கியங்களை நினைத்து, நல்ல எண்ணங்களோடும், நன்றி உணர்வுடனும் ஒவ்வொரு நாளையும் துவங்க வேண்டும்; செய்நன்றி என்ற மனப்பான்மை மிகவும் அத்தியாவசியமானது. மன நிறைவுடன் இருக்க வேண்டுமென்றால், செய்நன்றி முக்கியம். அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நம்முள் இருக்கும் அன்பு மலர்ந்து, நாம் சிறந்த மனிதர்களாக இருக்கலாம்.

செய்நன்றி, நிபந்தனையற்ற அன்பு மற்றும் மற்றவர்களின் மேல் பரிவு மட்டுமே சிறப்பாக வாழ்வதற்கான ரகசியங்கள்.

மொழி பெயர்ப்பு:

சுபாசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உன் பகைவர்களை மன்னித்துவிடு

நீதி: நன்னடத்தை

உப நீதி: அமைதி, தன்னிறைவு

ஒரு குரு, தனக்கு மிகவும் பிடித்த ஒரு சீடனிடம், அவனுடைய ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி வினவினார்.

சீடன், நாளின் ஒவ்வொரு தருணத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.

அதற்கு குரு “நீ இப்பொழுது செய்ய வேண்டியது எல்லாம் உன் பகைவர்களை மன்னிப்பது தான்” என்றார்.

சீடனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவன் “எனக்கு அது அவசியமில்லை! நான் என் பகைவர்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. அவர்களை வெறுக்கவுமில்லை” என்றான்.

அதற்கு குரு “கடவுளுக்கு உன் மீது கோபமா? அல்லது அவர் உன்னை வெறுக்கிறார் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.

அதற்கு சீடன் “கண்டிப்பாக இல்லை!” என்றான்.

அதற்கு குரு “இருப்பினும், நீ அவரிடம் மன்னிப்பு கேட்கிறாய், அல்லவா? உன் பகைவர்களிடமும் அதனையே செய். நீ அவர்களை வெறுக்கவில்லை என்றாலும், மன்னிப்பதன் மூலம், உன் ஆத்மாவை தூய்மையாகவும், புனிதமாகவும் ஆக்கிக் கொள்கிறாய். மன்னிப்பு என்பது நாம் பிறருக்காக செய்வது அல்ல; நமக்கு நாமே செய்து கொள்வது தான். அதன் மூலம் நாம் மேன்மேலும் முன்னேறலாம்” என்றார்.

மன்னிப்பு என்பது கதவை திறந்து ஒருவரை விடுவிப்பது அல்ல, அந்த கைதி நாமே என்பதை உணர்வது.

நீதி:

அன்பு காண்பிக்க சிறந்த வழி மன்னித்தல் ஆகும். ஏனெனில், அது நம்மை விடுவித்து, நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கிறது. மன்னித்தல், கடந்த காலத்தை மாற்றப் போவதில்லை. ஆனால், இன்பமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது. ஆகையால், நாம் மன்னித்தலை ஒரு வழக்கமாக்கிக் கொண்டோமேயானால், அது செயலளவில் இல்லாமல், நம் மனப்பாங்காகவே மாறிவிடும். ஒருவன் பெற்றிருக்க வேண்டிய சிறந்த பண்பு மன்னித்தல் ஆகும்.

மற்றவர்களை மன்னிப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். மன்னித்தல் தளர்வின் சின்னம் அல்ல; வலிமையின் சின்னம். இது தனி முறையில், கவனத்துடன் தேர்நெடுத்த ஒரு செயல். இதில், மற்றவர்கள் நம்மை அதிக அளவில் புண்படுத்தியிருந்தாலும், அவர்களை சான்றிருக்கும் மனக்கசப்புகள், வெறுப்பு, கோபம் போன்ற உள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை விட்டு விடுதல் தான் நமது நோக்கம். வாழ்க்கையில் முன்னேற நாம் நமக்கே செய்து கொள்ளும் ஒரு பெரிய உதவி.

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நமக்கு கிடைத்த பாக்கியங்களை அனுபவிக்க வேண்டும்

நீதி: சத்தியம்

உப நீதி: நன்றியுணர்வு, உள்ளார்ந்த நோக்கம்

பெயர் தெரியாத கதாசிரியர்

நம்மில் பலருக்கு இந்தக் கதை ஒரு நினைவூட்டுதலாகக் கூட அமையக்கூடும். எவ்வளவோ விஷயங்களை எளிமையானதென்றும், சாதாரணமானதென்றும் கருதுகிறோம். எனினும், அவை அதிசயமானவை. அவற்றை அனுபவிக்கத் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதே உண்மை.

தொடக்கக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த மாணவர்கள் உலகின் ஏழு அதிசயங்களைப் பற்றி படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடத்தின் முடிவில், எவற்றையெல்லாம் உலகின் ஏழு அதிசயங்களாகக் கருதுகிறார்களோ அவற்றை பட்டியலிடும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். முடிவில் சில கருத்து வேற்றுமைகள் இருப்பினும், கீழ்க்கண்டவைகளே அதிக வாக்குகளைப் பெற்றன.

1. எகிப்து தேசத்தின் பிரமிடுகள்

2. இந்தியாவின் தாஜ் மஹால்

3. அரிசோனா நாட்டின் சிறந்த பள்ளத்தாக்கு

4. பனாமா கால்வாய்

5. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டிடம்

6. வாடிகனின் புனித பேதுரு ஆலயம்

7. சீனப்பெருஞ்சுவர்

வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு அமைதியான மாணவி இன்னும் தன் விடைத்தாளை முடிக்காமல் இருப்பதைக் கண்டார். அவள் பட்டியலிட ஏன் கஷ்டப்படுகிறாள் என்று ஆசிரியர் கேட்டார். அந்த அமைதியான மாணவி “ஆம். சிறிது கஷ்டம் தான், நிறைய விடைகள் இருப்பதனால் என்னால் தீர்மானித்து எழுத முடியவில்லை” என்றாள். ஆசிரியர், “நன்று, உன்னிடம் உள்ளதைக் கூறு. ஒருவேளை நாங்கள் உதவக்கூடும்” என்றார்.

அந்தப் பெண் சிறிது தயங்கிவிட்டு, “உலகின் ஏழு அதிசயங்கள் யாதெனில்:

1. தொடுதல்

2. சுவைத்தல்

3. காணுதல்

4. கேட்டல் (அவள் சிறிது தயங்கி, பின்னர்….)

5. உணர்தல்

6. சிரித்தல்

7. அன்பு செலுத்துதல் என்றாள்.

வகுப்பு நிசப்தத்தில் ஆழ்ந்தது. உங்கள் பாக்கியங்களை நினைத்து  அனுபவியுங்கள்!

எளியவை, சாதாரணமானவை என நினக்கப்படுபவை எப்போதும் மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றன. உங்களுக்கான பாக்கியங்களை அனுபவியுங்கள்.

நீதி:

நன்றியுணர்வு என்பது நன்றி, மற்றும் பாராட்டும் உணர்வு கொண்டிருப்பதாகும். நாம் கேட்காமலேயே நமக்கு வழங்கப்பட்டிருக்கும் எண்ணற்ற பாக்கியங்களுக்கு நன்றியுடன் இருக்கும் இந்த அருமையான மனோபாவத்தை கையாளுவோமாக. நாம் கவனித்து புரிந்துக் கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் ஒரு அற்புதமே. நன்றியுணர்வு என்னும் மனோபாவம் நம்முடைய நேர்மறை எண்ணங்களை மேம்படுத்தும். வாழ்க்கையில் ஒரு நல்ல நோக்கத்தைக் கடைபிடிக்க உதவும். வாழ்வில், நன்றியுணர்வுதான் ஆனந்தத்தை நல்குமேயன்றி, ஆனந்தம் நன்றியுணர்வுக்குக் காரணமல்ல என்பதே நிதரிசனம்.

மொழி பெயர்ப்பு:

ராஜலக்ஷ்மி சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE