Archive | December 2021

நீங்கள் கடவுளின் மனைவியா?

நீதி: அன்பு

உபநீதி: இரக்கம், பரிவு 

பெயர் தெரியாத கதாசிரியர்

டிசம்பர் மாதத்தின் ஒரு குளிர்ச்சியான நாளன்று, சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுவன் கால்களில் செருப்பு கூட அணியாமல், கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டு, ஒரு காலணிக் கடையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெண்மணி அவனிடம் வந்து, “சிறுவனே, நீ அந்த ஜன்னல் வழியாக ஆவலாக என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

வேதனையுடன் இருந்த சிறுவன் சற்று தயக்கத்துடன் “ஒரு ஜோடி காலணிகள் வேண்டும் என நான் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.

அப்பெண்மணி சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குள் சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் அரை டசன் ஜோடி காலுறைகள் கேட்டார். பிறகு, ஒரு வட்டிலில் தண்ணீரும், துடைக்கத் துண்டும் கேட்டார். கடையில் இருந்தவன் உடனடியாக அவைகளை எடுத்து வந்தான்.

பெண்மணி அச்சிறுவனை கடையின் பின் பக்கத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கு அவர் தன் கையுறையை கழட்டி விட்டு, கீழே குனிந்துக் கொண்டு, சிறுவனின் கால்களை கழுவி, துண்டால் துடைத்து விட்டார். அதற்குள் கடையில் இருந்த அந்த வேலையாள் காலுறைகளை கொண்டு வந்தான்.

அப்பெண்மணி அவன் கால்களில் காலுறையை போட்டு, காலணியும் வாங்கிக் கொடுத்து, மீதி இருந்த காலுறைகளை அவன் கையில் கொடுத்தார். அவர் சிறுவனின் தலையை தடவிக் கொடுத்து, “சிறுவனே! உனக்கு இப்போது சுகமாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

சிறுவன் பிரமித்து போய், பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீருடன் அவர் முகத்தைப் பார்த்து, “நீங்கள் கடவுளின் மனைவியா?” என்று கேட்டான்.

ஒரு குழந்தை பட்டை தீட்டாத வைரக் கல் போன்றவன். மேலும், ஒளிமயமான கற்பனையுடன் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான்.

நீதி:

கடவுள் நமக்குக் கொடுத்த பாக்கியங்களை எண்ணி, நன்றி உணர்வு என்ற மனப்பான்மையுடன் நாம் இருக்க வேண்டும். எவருக்குத் தேவையோ, அவர்களுடன் பாக்கியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரை புன்சிரிப்புடன் பார்க்கும் போது, இன்பமாக இருக்கிறது. அந்த இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, அது அதிகரிக்கிறது. பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பரிவுடன் இருத்தல் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய நற்பண்புகள் என்பதனால், ஒருவருக்கு துக்கங்கள் அதிகரிக்கும் போது, இந்த நற்பண்புகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அந்த அனுபவம் நபரின் முகத்தில் புன்சிரிப்பை கொண்டு வரும்; அதற்கு நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம் என்று தெரியும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிறருள் உங்களை காணுங்கள்

நீதி: உண்மை, சரியான நடத்தை

உப நீதி: கருணை, சகிப்புத் தன்மை, இரக்கம்

குரு “நீங்கள் சகமனிதர்களை காணும் போது, அவர்களில் உங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.

அதற்கு ஒரு சீடன் “அது ஒரு மோசமான சுயநல மனப்பான்மை அல்லவா? நம்மைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தனை செய்து கொண்டிருந்தால், பிறர் நமக்கு அளிக்கக் கூடிய நல்ல விஷயங்களை நாம் ஒருபோதும் பார்க்க மாட்டோம்” என்று கூறினான்.

அதற்கு குரு “மற்றவர்களில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே நாம் எப்போதும் கவனித்தால், நீ கூறுவது சாத்தியமாகும்” என்று கூறி மேலும், “உண்மை என்னவென்றால், நாம் வேறொரு மனிதரை பார்க்கும் போது, குறைபாடுகளை மட்டுமே கண்டுபிடிக்கிறோம். அவர்கள் நம்மை விட மோசமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதால், அவர்களின் தவறுகளை தேட முயற்சிக்கிறோம்.

அவர்கள் நம்மை காயப்படுத்தும் போது நாம் அவர்களை மன்னிக்க மறுக்கிறோம், ஏனென்றால் நாம் மன்னிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நம்புவதில்லை.

உண்மையை சொல்கிறோம் என்ற போர்வையில், கடுமையான வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தி, உண்மையை நம்மிடமிருந்து மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

நமது பலவீனம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போல பாசாங்கு செய்கிறோம்.

ஆதலால், “சகமனிதர்களை மதிப்பீடு செய்யும் போதெல்லாம், நம்மை நாமே பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்” என்று விளக்கமளித்தார்.

நீதி:

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அது போலவே மற்றவர்களையும் நாம் நடத்த வேண்டும். கோபம், புண்படுத்துதல், வெறுப்பு, மனக்கசப்பு போன்ற எதிர்மறை குணங்களிலிருந்து விலகி, அவர்களை மன்னித்து விட்டு, முன்னோக்கி நகர வேண்டும். உண்மை என்னவென்றால், யாரோ ஒருவர் செய்த அல்லது சொன்னதை மன்னிப்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்தினால் நம் மனச்சுமை குறையும். இது நேர்மறை எண்ணத்தை மேம்படுத்த நமக்கு உதவும், மேலும் வாழ்க்கையில் நமது அணுகுமுறை அர்த்தமுள்ளதாக இருக்கும். மன்னிப்பு என்பது வலிமையின் அடையாளம்.

மற்றவர்களில் நம்மைக் காணும் போது, நாம் யாருக்கு தீங்கு செய்ய இயலும்?

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நேரம் ஒதுக்கியதற்கு நன்றி

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: அக்கறை, உள்ளார்ந்து நோக்குதல்      

ஒரு நிர்வாகி, தன் வேலையை எப்போதும் பரபரப்பாக செய்து கொண்டிருப்பார். இத்தகைய வாழ்க்கையில், தன் மனைவி மற்றும் மகனோடு நேரத்தை செலவிட அவரால் இயலவில்லை. அவர் தன் வருங்காலத்தி்ற்கு உழைத்து வந்ததால், எந்த சக்தியாலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அப்படி ஒரு பரபரப்பான நாளில் அவரது அம்மாவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. அம்மா “நேற்று இரவு ராமு அண்ணா இறந்து விட்டார். இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது” என்றாள்.

நிர்வாகி அமைதியாக உட்கார்ந்தவாறு, குழந்தைப் பருவ எண்ணங்ளை மனதில் ஞாபகப் படுத்திக் கொண்டார். தந்தை இறந்த பிறகு, அவரது இடத்தில் இருந்து ராமு அண்ணா தன்னை வழிநடத்தியது நினைவுக்கு வந்தது. மேலும் “வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களை எனக்குக் கற்பித்தவர். அவர் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. எனக்கு முக்கியமான பலவற்றை கற்றுக் கொடுக்க அவர் தன் நேரத்தை செலவிட்டு இருக்கிறார்” என்று நினைத்தார். அண்ணா வாழ்ந்த பழைய வீட்டை தான் மிகவும் விரும்பியதையும் நினைத்துப் பார்த்தார்.

ராமு அண்ணா பல வருடங்கள் முன்பே இறந்து விட்டதாக அவர் நினைத்திருந்தார்.

அம்மா “ரமேஷ், நான் பேசுவது காதில் விழுகிறதா?” என்று கேட்டார்.

அதற்கு ரமேஷ் “மன்னிக்கவும். நீங்கள் பேசுவது கேட்கிறது. நான் அண்ணாவைப் பற்றி நினைத்து வெகு நாளாகி விட்டது. மன்னிக்கவும்” என்றார்.

அம்மா “என்னவென்று தெரியுமா? அவர் உன்னை மறக்கவில்லை. நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் உன்னைப் பற்றி விசாரிப்பார். அந்தக் காலத்தில், அவர் வீட்டுச் சுவர் அருகில் நீ அவருடன் கழித்த நாட்களை நினைவு படுத்துவார்” என்றார்.

ரமேஷுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் அம்மா கூறிய வாக்கை நிறைவேற்றினார். அவர் தன் சொந்த ஊருக்கு அடுத்த விமானத்திலேயே புறப்பட்டார். ராமு அண்ணாவின் இறுதி சடங்கு சாதாரணமான முறையில் நடந்து முடிந்தது. அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருடைய உறவினர்கள் பலர் முன்பே காலமாகி விட்டனர்.

ரமேஷ் ஊருக்குத் திரும்பி வருவதற்கு முந்தைய இரவு, ராமு அண்ணாவின் பழைய வீட்டுக்கு முன்னால் சற்று நின்றார். தன் எண்ணங்கள் போலவே, அந்த வீடு இருப்பதை அவர் உணர்ந்தார்; அங்கேயே நின்று கொண்டு மீண்டும் பார்த்தார்.

ரமேஷ் “ஒரு பொன்னிற பெட்டி அவரது மேஜை மீது பூட்டு போட்ட நிலையிலேயே இருக்குமே. அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதில், தான் மிகவும் மதிக்கும் பொருள் ஒன்று உள்ளது என்று கூறுவார். அதை இப்போது காணவில்லையே” என்று நினைத்தார்.

அண்ணாவின் உறவினர் யாராவது அதை எடுத்திருப்பார்கள் என்று ரமேஷ் எண்ணினார்.

பிறகு ரமேஷ் “இனி என்னால் அந்த விலைமதிப்புள்ள பொருள் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

வீடு திரும்பிய சில நாட்களில் அவருக்கு தபாலில் ஒரு பார்சல் வந்தது.

அவர் அதைப் பிரித்து பார்த்தார். உள்ளே அவர் ராமு அண்ணா வீட்டில் தேடிக் கொண்டிருந்த அந்த பொன்னிற பெட்டியும் ஒரு காகித உறையும் இருந்தன.

அந்தக் கடிதம் அவருக்கு எழுதப் பட்டிருந்தது. அதில் “இந்தப் பொருள் தான் என் வாழ்வில் மிகவும் மதிப்புடையது” என்றிருந்தது. கடிதத்துடன் ஒரு சிறிய சாவி இணைக்கப்பட்டிருந்தது. நீர் ததும்பும் கண்களுடனும், பதறும் இதயத்துடனும் அந்தப் பெட்டியை கவனமாக ரமேஷ் திறந்தார். அதனுள் ஒரு அழகான பொன்னிற கடிகாரம் இருந்தது.

அந்த பெட்டியின் மேல் விரல்களை வருடியவாறு அவர் பார்த்தார். உள்ளே இருந்த வாசகம்:

“ரமேஷ், உன் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி! – ராமு அண்ணா.”

ரமேஷ் அதிர்ச்சியுடன் “அவர் மிகவும் மதித்தது… என்னுடைய….. நேரத்தை” என்ற உண்மையை உணர்ந்தார்.

அந்த கடிகாரத்தை சில நிமிடங்கள் கையில் வைத்திருந்தார். பின் தனது உதவியாளர் சூசியை அழைத்து, அடுத்த இரண்டு நாட்களில் தனக்குரிய வேலைகளைத் தள்ளிப் போடுமாறு கூறினார். உதவியாளர் “ஏன்?” என்று கேட்டதற்கு,  ரமேஷ் “நான் என் மனைவி மற்றும் மகனுடன் சிறிது நேரம் செலவிடப் போகிறேன்” என்று கூறி, “சூசி, உன்னுடைய நேரத்தை எனக்காக செலவிட்டதற்கு நன்றி” என்றார்.

நேரம் பொன் போன்றது. ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும் நாம் இழந்த ஒரு நொடியைத் திரும்பப் பெற முடியாது.

நீதி:

நாம் புன்னகையோடும், கரிசனத்தோடும் மனிதர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது அவசியமானது. பரபரப்பு நிறைந்த இந்த உலகில், வயதானவர்களுடனோ, குழந்தைகளுடனோ சிறிது நேரம் செலவிட முடிவதில்லை. காலம் கடந்து போகும் முன், அவ்வப்போது பெரியவர்களுடனும், குழந்தைகளுடனும், பயனுள்ள பொழுதை நாம் செலவிட வேண்டும். நாம் செலவிடும் சிறிது நேரம் மற்றவர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகத் தெரியலாம். அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நல்ல நண்பர்கள் உங்கள் வாழ்வை மாற்றக்கூடும்

நீதி:  அன்பு, நன்னடத்தை

உப நீதி: புரிதல்நன்றியுணர்வு

மார்க் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், அவனுக்கு முன்னால் சென்று  கொண்டிருந்த ஒரு சிறுவன் கீழே விழுந்து, அவன்  எடுத்துச் சென்று கொண்டிருந்த புத்தகங்கள், சட்டைக்கு மேலே அணியும் இரண்டு மேலங்கிகள், ஒரு பேஸ்பால் பேட், ஒரு கையுறை  மற்றும் ஒரு சிறிய ஒலி பதிவு பெட்டியையும் கீழே போட்டு விட்டான்.

மார்க் குனிந்து கீழே சிதறிக் கிடந்த பொருட்களை சேகரித்து, அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்தான். இருவரும் ஒரே வழியில் சென்று கொண்டிருந்ததால், மார்க் அவனிடமிருந்து சுமையை வாங்கிக் கொண்டு சிறுவனுக்கு உதவினான்.

இருவரும் நடந்து சென்ற போது, அந்த சிறுவனின் பெயர் பில் என்றும், அவனுக்கு வீடியோ விளையாட்டுக்கள்,  பேஸ்பால் மற்றும் வரலாறு பாடம் பிடிக்குமென்றும்,  மற்ற பாடங்கள் மிகவும் சிரமம் என்றும் அறிந்தான்.

பில்லின் வீட்டை அடைந்தவுடன், பானம் அருந்தி, அவன் தொலைக்காட்சி பார்க்க மார்க்கை அழைத்தான். அன்றைய மதிய நேரம், சிரிப்பிலும், சிறிய அரட்டையிலும் சந்தோஷமாகக் கழிந்த பின்னர், மார்க் வீட்டிற்குத் திரும்பினான்.

அதற்குப் பிறகு, பள்ளியருகே அவர்களுடைய சந்திப்பு தொடர்ந்தது; ஓரிரு முறை, ஒன்றாக உணவருந்தினர். பின்னர், இடைநிலை பள்ளிப் படிப்பை ஒன்றாக முடித்தனர்.

ஒரே உயர்நிலைப் பள்ளியில் இருவரும் படிப்பைத் தொடர்ந்ததால்,  அவர்களுடைய சந்திப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது. கடைசியில், நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த இறுதி ஆண்டும் வந்தது. பட்டமளிப்பு நாளுக்கு மூன்று வாரங்கள் முன்னதாக,  பில் ஒரு நாள் மார்க்குடன் பேச வேண்டும் என்று அழைத்தான்.

பல வருடங்களுக்கு முன் அவர்கள் இருவரும் சந்தித்த நாளை பில் நினைவு படுத்தினான்.

பில் மார்க்கிடம், “அன்றைக்கு அவ்வளவு பொருட்களை ஏன் எடுத்துக் கொண்டு போனேன் என வியப்படையவில்லையா?” என்று கேட்டான்.

மேலும் “நான் தேவையற்ற பொருட்களை வைத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு பிரச்சனை அல்லவா? ஆதலால், நான் எனது பெட்டகத்தைக் காலி செய்தேன். நான் தற்கொலை செய்து கொள்வதற்காக அம்மாவின் தூக்க மாத்திரைகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தேன்; ஆனால் நாம் பேசி சிரித்து நேரத்தை கழித்த பிறகு,  நான் தற்கொலை செய்து கொண்டிருந்தால் எவ்வளவோ விஷயங்களை இழந்திருப்பேன் என உணர்ந்தேன். அன்று நீ என்னுடைய புத்தகங்களை எடுத்துக் கொடுத்ததன் மூலம் எனக்கு நிறைய உதவி செய்து விட்டாய். என் உயிரையே காப்பாற்றி விட்டாய்” என்று மார்க்கிடம் சொன்னான்.

நீதி:

எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு நண்பருக்கும் இதயத்தில் பிரத்தியேக இடமளிக்கவும். ஏனெனில், நீங்கள் கற்களை சேகரித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு வைரத்தை தவற விட்டதை ஒரு நாள் உணரக்கூடும். இனி ஒரு நாளும் புன்னகைக்கவே வழியில்லை என்ற நிலையினை மாற்றி, உங்களை வாய்விட்டுச் சிரிக்க வைப்பவன் மட்டுமே ஒரு உண்மையான நண்பன் என்று புரிந்து கொள்ளவும். சிறந்த நண்பர்கள் வாழ்க்கையில் பரிசாகக் கிடைத்த பொக்கிஷம்.

நல்ல நண்பர்கள் வானத்தில் இருக்கும் தாரகைகள் போல. அவர்களை எல்லா சமயங்களிலும் காண முடியாவிட்டாலும், அவர்கள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்கள்.

மொழி பெயர்ப்பு:

ராஜலக்ஷ்மிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

புத்திசாலித்தனமும் கருணையும்

நீதி – உண்மை, நம்பிக்கை

உபநீதி – ஞானம்

ஒரு மனிதன் இரண்டு மூட்டை கோதுமையை தன் கழுதையின் மேல் ஏற்றி, சந்தைக்குச் சென்று கொண்டிருந்தான். சற்று நேரத்திற்குப் பிறகு, அவனுக்குக்  களைப்பாக இருந்ததால், தன் கழுதையுடன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தான்.

அவன் தூங்கி எழுந்த போது, தன்னுடைய கழுதையை அங்கு காணாமல், அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தான். வழியில் ஒரு சிறுவனைக் கண்டான். அவனிடம் “என் கழுதையைப் பார்த்தாயா” என்று கேட்டான்.

சிறுவன் “இடது கண் தெரியாமலும், வலது கால் நடக்க முடியாமலும் ஒரு மூட்டை கோதுமையை அந்தக் கழுதை சுமந்து சென்றதா?” என்று கேட்டான்.

அந்த மனிதன் மகிழ்வுற்று  “ஆமாம், அதேதான்! நீ அதை எங்கே பார்த்தாய்?” என்று கேட்டான்.

சிறுவன்  “நான் அதைப் பார்க்கவில்லை” என்று பதிலுரைத்தான்.

இது அந்த மனிதனை மிகவும் கோபமடைய வைத்தது. அந்தச் சிறுவன் பொய் சொல்கிறான் என்று மனிதன் முடிவு செய்தான். சிறுவனை தண்டிப்பதற்காக அந்த  கிராமத் தலைவரிடம் அவன் அழைத்துச் சென்றான்.

நீதிபதி சிறுவனிடம் “அன்புச் சிறுவனே! நீ அந்தக் கழுதையைப் பார்க்கவில்லை என்றால், அதைப் பற்றி எப்படி சரியாக விவரித்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு சிறுவன் “நான் அந்தக் கழுதையின் தடத்தைப் பார்த்ததில், வலது மற்றும் இடது பக்கத் தடங்களில் வேறுபாடு இருந்ததால், அந்தக் கழுதை நொண்டிக் கொண்டு சென்றதை உணர்ந்தேன். மேலும் வீதியின் இடது பக்கத்தை விட்டுவிட்டு வலது பக்கம் இருந்த புற்கள் மட்டும் உண்ணப் பட்டிருந்தன. அதனால் அந்தக் கழுதைக்கு இடது கண் தெரியாது என்று உணர்ந்து கொண்டேன். எங்கு பார்த்தாலும் கோதுமை விதைகள் சிதறிக் கிடந்ததால், அந்தக் கழுதை கோதுமை மூட்டையைச் சுமந்து சென்றதைப் புரிந்து கொண்டேன்” என்றான்.

சிறுவனின் புத்திசாலித்தனத்தை உணர்ந்த நீதிபதி, அந்த மனிதனிடம் அந்தச் சிறுவனை மன்னிக்குமாறு கூறினார்.

புத்திசாலியாக இருப்பதைவிட கருணையுடன் இருப்பது கடினமானது

புத்திசாலித்தனம் என்பது ஒரு வரம்; ஆனால் கருணை என்பது தேர்வு.

நீதி:

நம் எல்லோருக்கும் கடவுள் ஞானத்தை அளித்து ஆசீர்வதித்திருக்கிறார். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது அவரவரை பொருத்தது. ஒருவனுக்கு ஞானத்தை உபயோகிக்கின்ற திறமை இருந்து, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு நடைமுறை சார்ந்த விளக்கங்களை கொடுக்கும் போது, அதை பாராட்டி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் சுலபமாக வருவதில்லை; ஆனால் இந்த மனப்பான்மையை நடைமுறையில் பயன்படுத்தினால், நாம் அன்பாக செயற்பட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு இன்பத்தை கொடுப்போம்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE