Archive | February 2024

இறை சக்தியின் மீது நம்பிக்கை

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, விசுவாசம்

பலத்த காற்றினால் ஏற்படும் புயல் வருவதற்கு முன்பே கழுகு அதை உணர்ந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? புயல் வரும் போது, கழுகு மிக உயர்ந்த இடத்திற்கு பறந்து, புயல் காற்று வீசும் வரை காத்திருக்கும்.

புயல் வீசும் போது, கழுகு தனது இறக்கைகளை விரித்து,பலத்த காற்றுக்கும்  அப்பாற்பட்டு தனது  இறக்கைகளை உயர்த்தும் வகையில், காத்திருக்கும்.

புயல் காற்று சற்று குறைவான விகிதத்தில் வீசும் போது, கழுகு அதில் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு மேல் உயர்ந்து பறந்து வரும்.

கழுகு புயலிலிருந்து தப்பிக்க பார்ப்பதில்லை. மாறாக, அது புயலை பயன்படுத்திக் கொண்டு மேலே பறக்கிறது. புயலைக் கொண்டு வரும் காற்றின் போக்கிலேயே அது செல்கிறது.

நமது வாழ்க்கையில் ஏற்படும் புயல்களையும் கூட,  நாம் அனைவரும் முழுமனதுடனும், தெய்வ நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு இறை நம்பிக்கையுடன் இன்னல்களை சந்திக்கும் பொழுது, நாம் அவற்றை கடக்க வேண்டி இருக்காது – இறை சக்தி, அந்த இன்னல்களையே நம்மை உயர்த்தும் கருவியாக மாற்றி அமைத்து தரும்.

நம் வாழ்வில் பிணி, சோகம், தோல்வி மற்றும் ஏமாற்றம் போன்ற துன்பங்களை கொண்டுவரும் புயல்காற்றின் மீது சவாரி செய்யும் திறனை அளிக்க, கடவுள் நமக்கு எப்போதும் அருள்வார். நாமும் புயலுக்கு மேலே உயர்ந்து செல்லலாம்.

வாழ்க்கையின் சுமைகள் நம்மை கீழே தாழ்த்துவது இல்லை; அதை கையாளும் விதம் தான் முக்கியம்.

“கடவுளை நம்புகிறவர்கள் தங்கள் பலத்தை புதுப்பிப்பார்கள், அவர்கள் கழுகுகளைப் போல உயர்ந்து செல்வார்கள்” என்று பைபிளில் உள்ளது.

நீதி:

வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கடவுள் நம்பிக்கையானது நமக்கு அளிக்கும். கடினமான காலங்களில் கூட, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதற்கு விசுவாசம் உதவுகிறது. பிரச்சனைகளை விட அவற்றை நாம் கையாளும் விதம் மிக முக்கியம். கடவுளை நம்புவது என்றால் தெய்வத்தின் நிலை, திறன், பலம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதே ஆகும். கடவுளை விட இன்னல்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆகவே, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, மேலும் எது நடந்தாலும் அது நம் நலனுக்காகவே நடக்கிறது என்று நம்மை படைத்தவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் அர்த்தம்

நீதி: உண்மை

உப நீதி: உள்நோக்கம், ஏற்புத் தன்மை  

ஒரு பெரும் பணக்கார இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதற்காக ஒரு குருவைப் பார்க்கச் சென்றான்.

குரு அவனை ஜன்னலுக்கு அழைத்துச் சென்று, “கண்ணாடி வழியாக என்ன பார்க்க முடிகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ஆண்கள் வந்து போவதையும், பார்வையற்ற ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதையும் பார்க்கிறேன்” என்றான்.

அப்போது குரு, ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி அவனிடம், “இந்தக் கண்ணாடியைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று சொல்” என்றார்.

அதற்கு அவன், “என்னால் என்னைப் பார்க்க முடிகிறது” என்றான்.

குரு, “ஆம். ஆனால், மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டும் ஒரே அடிப்படைப் பொருளான கண்ணாடியால் ஆனது என்பதைக் கவனி; ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில், கண்ணாடிக்குப் பின்னால் மெல்லிய வெள்ளி முலாம் பூசப்பட்டிருப்பதால், நீ பார்க்கக் கூடியது உன்னை மட்டுமே.

இந்த இரண்டு வகையான கண்ணாடிகளுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஏழை – நீ மற்றவர்களைப் பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்கிறாய்.

பணக்காரர் – வெள்ளி முலாம் பூசப்பட்ட நீ, உன்னை மட்டுமே பார்க்கிறாய்.

உன் கண்களை மூடும் வெள்ளித் திரையைக் கிழித்தெறியும் தைரியம் உனக்கு இருந்தால் தான், உன்னால் சக மனிதர்களை நேசிக்க முடியும். மேலும், நீயும் மதிக்கத் தக்கவனாவாய்” என்று கூறினார்.

நீதி:

நாம் ஒருபோதும் பிறரைப் பற்றித் தீர்ப்பளிக்கக் கூடாது, ஏனெனில், நாம் அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கிறோம். இவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள், வெளித்தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நல்லதைக் காண்பதையும் தடுக்கிறது. எனவே, மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றித் தீர்மானிக்கும் முன், நம்மைப் பற்றிய ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடங்க வேண்டும்; பின்னர், நம் கண்ணோட்டமும் மாறும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுய சீர்திருத்தம்

நீதி: அன்பு, பொறுமை

உப நீதி: நன்றியுணர்வு, சுய பரிசோதனை

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” என்று மைக்கேல் ஜாக்சன் பாடினார். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற வேண்டும் என்று நாமும் மிக வீரமாக அடி எடுத்து வைப்போம்.  ஒரே எண்ணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு, உண்மையை உணர மறுப்போம். நாம் உலகை மாற்றி ஒரு சாதனை செய்யப் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், இவ்வுலகம் மாற வேண்டும் என்று நினைப்பதை விட நம்முடைய எண்ணங்கள் மற்றும் நம் கண்ணோட்டத்தை மாற்றுவதே எளிது என்பதை விரைவில் புரிந்து கொள்வோம். ”உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்பது மகாத்மா  காந்தியின் பிரபலமான பொன்மொழி.

லியோ டால்ஸ்டாய் ,“எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் எவரும்  தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல.”  என்று கூறுகிறார்.

முன்னொரு காலத்தில், வளமான நாட்டை ஆண்ட ஒரு அரசன் இருந்தான். ஒரு நாள், அவர் தனது நாட்டின் சில தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அவன் தனது அரண்மனைக்குத் திரும்பியபோது, தனது கால்கள் மிகவும் வலிப்பதாகக் கூறினான், ஏனெனில் அரசன் இவ்வளவு நீண்ட பயணத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும் அவன் சென்ற பாதை, மிகவும் கரடுமுரடானதாக இருந்தது. பின்னர் அவன், நாட்டின் அனைத்து சாலைகளையும் தோலால் மூடும்படி கட்டளையிட்டான்.

நிச்சயமாக, இதற்கு ஆயிரக்கணக்கான மாடுகளின் தோல் தேவைப்படும், மேலும் பெரும் தொகையும் செலவாகும்.

அப்போது அவனுடைய புத்திசாலித்தனமான வேலைக்காரன் ஒருவன் அரசனிடம், “அந்தத் தேவையில்லாத பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? உங்கள் கால்களை மறைக்க ஒரு சிறிய தோலை மட்டும் ஏன் வெட்டக் கூடாது?” என்று தைரியமாகச் சொன்னான்.

ராஜா ஆச்சரியமடைந்தார். பிறகு அவர் தனக்கென ஒரு “காலணி” செய்யும் ஆலோசனையை ஒப்புக் கொண்டார்.

இந்தக் கதையில்,  உண்மையில் வாழ்க்கையின் மதிப்புமிக்க பாடம் உள்ளது: இந்த உலகத்தை, மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்ற, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது – அதாவது உங்கள் இதயத்தை; இந்த உலகை அல்ல.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் வெளியிலிருந்து தோன்றுபவை அல்ல; மாறாக நமக்குள்ளேயேதான் இருக்கின்றன. வெளிப்புற யதார்த்தத்தை மாற்ற, நாம் சில உள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.

“மனிதர்களாகிய நமது மகத்துவம், உலகத்தை சீர்திருத்துவதில் இல்லை – அது அணு யுகத்தின் கட்டுக்கதை – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வதில்தான் உள்ளது” என்கிறார் மகாத்மா காந்தி.

நம்மையே மாற்றிக் கொள்வதா? பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை  மாற்றி அமைப்பதை   கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பேசும் மாற்றம் என்ன? மாற்றத்தை நோக்கிய நமது பாதையில் உள்ள முக்கியத் தடைகள், கவலை, கோபம், நன்றியின்மை, இரக்கமின்மை, நேர்மையின்மை போன்றவை. அவற்றைக் கடக்க முடிந்தால், நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் ரெய்கியை கற்கச் சென்றால், முதலில் அவர்கள் பின்வரும் 5 கொள்கைகளைப் பின்பற்றச் சொல்கிறார்கள்:

இன்றைக்கு மட்டும், எனக்கு கிடைத்திருக்கிற பல நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றைக்கு மட்டும், நான் கவலைப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும் நான் கோபப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும், நான் என் வேலையை நேர்மையாக செய்வேன்.

இன்றைக்கு மட்டும், நான் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்டுவேன்.

வெளிப்படையாக, இவற்றைப் பின்பற்ற நீங்கள் ரெய்கி மாணவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைவருக்கும் பொருந்தும். இந்த எளிய உறுதிமொழிகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்மையாகப் பயிற்சி செய்தால், நாம் நம்முள் கடலளவு மாற்றத்தைக் காணலாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (1100 A.D) ஆங்கிலிகன் பிஷப்பின் கல்லறையில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“நான் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருந்த போது, எனது கற்பனைக்கு எல்லையே இல்லை, நான் உலகத்தை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன்.  நான் புத்திசாலியாக  வளர்ந்த பின், உலகம் மாறாது என்பதைக் கண்டுபிடித்தேன், அதனால் என் பார்வையை ஓரளவு சுருக்கி, என் நாட்டை மட்டும் மாற்ற முடிவு செய்தேன்.

ஆனால் அதுவும் இயலாததாகத் தோன்றியது.

நான் வயோதிக காலத்தில், இறுதி முயற்சியாக, என் குடும்பத்தை, எனக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் மாற்ற எண்ணினேன., ஆனால் அதுவும் இயலாமல் போனது.

இப்போது, நான் என் மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், நான் திடீரென்று உணர்கிறேன்: நான் முதலில் என்னை மாற்றியிருந்தால், ஒரு முன்னுதாரணமாக இருந்து, என் குடும்பத்தை மாற்றியிருப்பேன்.

அவர்களின் உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து, நான் என் நாட்டை மேம்படுத்த முடிந்திருக்கும், யாருக்குத் தெரியும், நான் உலகையே மாற்றியிருக்கலாம்.”

நீதி:

 நிலையான மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். நாம் மாறும்போது, சுற்றுச்சூழலை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் உதாரணமாகத் திகழ முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது, ‘மாற்றம் உள்ளிருந்து தான் வரவேண்டும்என்ற எண்ணத்தை விதைப்போம். அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி பூணுவோம்.

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” – மைகேல் ஜாக்சன்

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் போராட்டங்கள்

நீதி: நன்னடத்தை / உண்மை

உபநீதி – பொறுமை

ஒரு பெண், தனது மூன்று வயது சிறுமியுடன் பல்பொருள் அங்காடியில் இருப்பதை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் பிஸ்கட் இருக்கும் பிரிவை தாண்டி சென்றனர்.  அப்பொழுது அந்த பெண் குழந்தை சிணுங்கி அழத் தொடங்கினாள். அதற்கு தாய் மெதுவாக, “ப்ரியா, நாம் வேலையை சற்று நேரத்தில் முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடலாம், அமைதியாக இரு, வருத்தம் வேண்டாம்” என்று கூறினாள். 

அந்த மனிதர் தொடர்ந்து அவர்களுடன் அங்காடியில் நடந்து கொண்டே நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.  தாய் தன் சிறுமியுடன் மிட்டாய் இருக்கும் பிரிவை கடந்து சென்றார்.  அந்தக் குழந்தை தனக்கு மிட்டாய் வேண்டும் என்று மறுபடியும் அழத் தொடங்கினாள்.  அதற்கு தாய், “ப்ரியா, அங்காடியை கடந்து செல்வதற்கு இன்னும் இரண்டே பிரிவுகள் மட்டுமே உள்ளன.  நாம் சீக்கரம் சென்றுவிடலாம்” என்று கூறினாள்.  

இப்பொழுது அந்தத் தாய் சிறுமியுடன் பணம் கட்டும் பிரிவில் நின்று கொண்டிருந்தார். அங்கு வைத்துள்ள மற்ற தின் பண்டங்களைப் பார்த்து, தனக்கு எதுவும் கிடைக்காது என்பதை அறிந்து, குழந்தை அழுதாள்.  அதற்கு தாய், “ப்ரியா இப்பொழுது ஐந்து நிமிடங்களில்  பில்லிங் முடிந்து விடும், பின்பு வீட்டிற்கு சென்று உறங்கலாம்” என்று கூறினாள்.  இதையும் அந்த மனிதர் கவனித்துக் கொண்டிருந்தார்.

இவ்வனைத்தையும் கவனித்த அந்த மனிதர் தொடர்ந்து, பின் சென்று அவளிடம் , “பெண்ணே, நீங்கள் சிறுமியிடம் இவ்வளவு பொறுமையாக நடந்து கொள்வதை  கண்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது”.  உங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார். 

அதற்கு தாய், “என் மகளின் பெயர் தான்யா, நான் தான் ப்ரியா” என்றாள்.

பொறுமை ஒரு நல்லொழுக்கம் என்பார்கள். ஆனால், பிடிவாதமாக இருப்பவர்களிடமும், ப்ரியா சந்தித்தது போன்ற சில சோதனைச் சூழ்நிலைகளிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. இங்கே ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் உள்ளன . கெட்ட செய்தி என்னவென்றால், காரணத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் அவதிக்கு உள்ளாகலாம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இந்த நல்லொழுக்கத்தைப் பயன்படுத்துவது சிக்கலானது அல்ல. உண்மையில் அது மிகவும் எளிதானது.

இதை நாம்  ஆராய்ந்தால், பொறுமையின்மை, நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். நாம் எதற்காகவும் காத்திருக்கும் மனநிலையில் இல்லை. எல்லாம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம்.

நாம்  மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் சில சமயங்களில் தாமதமாக வந்து நம்மை காத்திருக்க வைக்கிறார். பொறுமையை இழக்கிறோம். மருத்துவர் “இப்போது” வர வேண்டும் என்று நினைக்கிறோம். காலையில் வேலைக்குச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொறுமையை இழக்கிறோம்.  உடனடியாக அலுவலகத்தை அடைய விரும்புகிறோம். மாலையில் வீடு திரும்பும்போதும் அதே போக்குவரத்து நெரிசல். கதை மீண்டும் தொடர்கிறது. “இப்போது” வீட்டை அடைய விரும்புகிறோம். விமானங்கள் தாமதமாக புறப்படும் – விமானம் “இப்போது” புறப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

அந்த “இப்போது” தான் நம் மனதில் அழிவை உருவாக்குகிறது. அந்த “இப்போது” என்பதை மனதில் இருந்து அழித்துவிட்டு வேறு வழியைப் பார்ப்பதே வாழ்க்கையின் ரகசியம். மனதை ஏமாற்றுவதற்கான சிறந்த வழி, சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்குவதுதான். நாம்  மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில், வீட்டில் படிக்க நேரம் கிடைக்காமல் இருந்த புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது “சுடோகு” மற்றும் குறுக்கெழுத்துக்களைத் தீர்ப்பதற்கு  நேரத்தைப் பயன்படுத்தலாம் . நாம் அனுபவிக்கும் சிறந்த நேரம் இது. அந்த ஜன நெரிசல் நகரும் வரை  சில நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் அல்லது அந்த எஃப்.எம்.மில் ஆர்.ஜே அடிக்கும் நகைச்சுவைகளை ரசிக்கலாம். இந்த ஆர்.ஜேகளுக்கு எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக்கும் உண்மையான திறமை இருக்கிறது. அந்த விமானம் புறப்படுவதற்காகக் காத்திருக்கும் போது, உங்களைச் சுற்றி இருக்கும் எண்ணற்ற மனிதர்களை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நேரத்தை செலவிடலாம் ……. வாழ்க்கை சுவாரஸ்யமானது! அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

ஜினா வெஹ்மனின் அழகான நிஜ வாழ்க்கைக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த இலையுதிர்காலத்தில் நான் என் ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒரு பறவை தீவனத்தை வைத்திருந்தேன். காட்டுப் பறவைகளைப் பற்றி எனக்கு அனுபவம் இல்லாததால், அந்தப் பறவைத் தீவனத்தை நான் வெளியே தொங்கவிட்டவுடன், பல அழகான பறவைகள் வரும் என்று கருதினேன்.  நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் சென்றன; பறவைகள் வரவில்லை. என்ன செய்வது என்று நான் பலரிடம் கேட்டேன். நான் என்ன தவறு செய்து கொண்டிருந்தேன்? “ஒன்றுமில்லை” என்று அவர்களில் பெரும்பாலோர் பதிலளித்தனர். “சற்று காத்திரு” என்றனர்.  எனவே நான் இந்த பறவைகளை ஈர்ப்பதற்காக முடிந்த அனைத்தையும் முயற்சித்து காத்திருந்தேன்.

நான் டெக்கை சுத்தம் செய்தேன், உணவை மாற்றினேன், தீவனத்தை சுத்தம் செய்தேன், பூனையையும் வெளியே அனுப்பினேன். ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை. அதனால்… நான் பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருந்தேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சனிக்கிழமை மதியம், நான் உறைந்தேன்! பறவை தீவனத்தில் என் கண்களுக்கு ஒரு அழகான காட்சி , என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக அழகான பறவை! திடீரென்று எல்லா இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் தோன்றின!

இந்த சிறிய உயிரினத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் எவ்வளவு அழகானது. “பொறுமை மற்றும் நம்பிக்கை” வாழ்க்கையில் அழகான விஷயங்களை ஈர்க்கும். நான் உண்மையில் பொறுமையாக மற்றும் நம்பிக்கையுடன் இதயத்தில் உள்ள கேள்விகளின் பதிலுக்கு காத்திருக்கிறேன் என்பதை உணரவில்லை.

வாழ்க்கையில் அவசரப்பட முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன என்பதே இங்கு வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம். காலம் கனியும் போது அவை நடக்கும். பொறுமையாக காத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் பழுத்த பழம் நம் கைகளில் விழும்போது, அது சுவையாக இருக்கிறது. அந்த உணர்வுக்கு வேறெதுவும் ஈடாகாது. பேரின்ப உணர்வு.

“வாழ்க்கையில் வேகமாக ஓடாதீர்கள். ஒவ்வொரு அடியிலும் ரசிக்க வேண்டிய பயணம் தான் வாழ்க்கை” என்றார் ஒருவர்.

நீதி:

பொறுமை என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு நற்பண்பு. நாம் ஆராய்ந்தால், பொறுமையின்மை நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். பொறுமையை வளர்ப்பதற்கான சிறந்த வழி “ஏற்றுக்கொள்ளுதல்”. நாம் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் போது, ​​அது ஒரு அமைதியான மனதை உருவாக்குகிறது. பொறுமையுடன் சூழ்நிலையை அணுகுவது நாம் வாழும் சுற்றுச் சூழலிலும் அமைதியை ஏற்படுத்தும்.

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE