Archive | June 2014

கடவுளின் பணிவான பக்தர்

Humble devotee of Lord Guruvayurappan

நீதி – நன் நடத்தை

உபநீதி – பணிவு

மேல்பத்தூர் நாராயண பட்டாதிரி என்ற ஒரு சமஸ்கிருதப் புலவர், கேரளாவில் பதினாறாம் நூற்றாண்டில் வசித்து வந்தார். அவர் குருவாயூரப்பனின் ஆழ்ந்த பக்தர். அச்யுத பிஷரோடி என்பவரின் சிஷ்யன். குருவிற்குப் பக்கவாதம் என்ற கொடூர நோய் வந்ததனால், குரு தக்ஷிணையாக அந்த நோயை நாராயண பட்டாதிரி  தன் மேல் எடுத்துக் கொண்டார்.

குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததனால், எழுத்தச்சன் என்ற மலையாளப் புலவர் ஒருவர் குருவாயூரப்பனிடம் சரணடைவது தான் ஒரே வழி என்று அவரிடம் சொன்னார். சமஸ்கிருதப் புலவராக இருந்ததால், பட்டாதிரி குருவாயூர் கோவிலில் தங்கியிருந்து தினமும் ஒரு காண்டம் (பத்து செய்யுள்) இயற்றினார். செய்யுட்கள் அனைத்தையும் முடித்தவுடன் அவர் நோயும் குணமாகி விட்டது. அவர் இயற்றிய பாகவத புராணத்தில் பதினெட்டு ஆயிரம் செய்யுட்கள்  உள்ளன. அதை ஆயிரத்து முப்பத்தி நான்கு செய்யுட்களாகவும், நூறு காண்டங்களாகவும் பிரித்தார். இந்த அழகான நூலின் பெயர் தான் நாராயணீயம்.

பட்டாதிரி வாழ்ந்த காலத்திலே மற்றொரு புலவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் இருந்தார். அவரும் குருவாயூரப்பன் பக்தர். “ஞானப்பனா” என்ற பெயரில் ஒரு மலையாள இறைவணக்கம் இயற்றினார். பட்டாதிரி அளவுக்கு புலமை மிக்கவராக இல்லாவிட்டாலும், அவர் இயற்றிய பாடல் வரிகள் எளிமையாகவும், பக்தி உணர்ச்சி ஊட்டுவதாகவும் இருக்கும். பட்டாதிரியிடம் அவர் இயற்றியிருப்பதை மறு ஆய்வு செய்து மாற்றுதல்கள் ஏதாவது இருந்தால் செய்யுமாறு கெஞ்சினார். ஆனால் பட்டாதிரிக்கு பணிவு என்ற நற்குணம் இல்லாமல் போனதால், அவர் கேட்ட உதவியை பொருட்படுத்தாமல், சமஸ்கிருத அறிவும் அவருக்குக் குறைவு என்ற பார்வையுடன் இருந்தார். பூந்தானம், வீட்டிற்குச் சென்றவுடன் வேதனையில் குருவாயூரப்பன் முன் நின்று அழுதார்.

அன்று இரவு பட்டாதிரி கனவில், அவர் நாராயணீயம் சொல்ல இருந்த போது, ஒரு சிறிய பையன் தோன்றினான். அந்தச் சிறுவனைப் பக்கத்தில் உட்கார வைத்து நாராயணீயம் சொல்லத் தொடங்கினார். முதல் செய்யுளில் அந்தச் சிறுவன் ஒரு பிழையைக் கண்டுப் பிடித்தான். அதை ஒத்துக் கொண்டு அடுத்த செய்யுளைச் சொல்ல ஆரம்பித்தார். அதில் இரண்டு பிழைகள். மூன்றாவதில் மூன்று பிழைகள் என்று போய்க் கொண்டிருந்தது. பத்தாவது செய்யுள் ஆரம்பித்தவுடன் பட்டாதிரிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அந்தச் சிறுவன் சாக்ஷாத் குருவாயூரப்பன் தான். பட்டாதிரியின் விபக்தியை (சமஸ்கிருத அறிவு) விட பூந்தானத்தின் பக்தி தான் உயர்ந்தது. அடுத்த நாள் பூந்தானத்தின் வீட்டிற்குச் சென்று அவர் மன்னிப்புக் கேட்டார்.

“ஞானப்பனா” என்ற இறைவணக்கத்தைப் படித்த போது அதில் ஒரு தவறு கூட இல்லை. மலையாள இலக்கியத்தில் இது ஒரு பெரிய படைப்பு. செய்யுள் வடிவில் எழுதப்பட்ட, பக்தி நிறைந்த ஒரு சிறப்பு இலக்கியமாகும். கேரளாவில் பெரிய அளவில் பேசக்கூடிய ஒரு அழகான படைப்பு.

நீதி:

திடநம்பிக்கையும், பக்தியும் அறிவை விடச் சிறந்தவை. அன்பும், பணிவும் இல்லாத அறிவு பயனற்றது. பணிவு தான் பண்பின் அதிகார முத்திரை.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 

அணியல்ல மற்றுப் பிற 

அடக்கமான பண்பும், இயல்பாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு எதுவும் இருக்க முடியாது. 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

மெய் சிலிர்க்க வைக்கும் கருணை உள்ளம்

just stay old man and soldier

நீதி – அன்பு

உபநீதி – கருணை

ஒரு முறை, நோயாளிகளைப் பேணிக் காப்பவர் (தாதி) ஒருவர், அங்கு வந்த கவலையுற்ற, சோர்வுள்ள படைவீரர் ஒருவரை அங்கிருக்கும் வயதானவர் ஒருவரின் படுக்கை இடத்திற்குக் கூட்டிச் சென்றார். பிறகு தாதி, “உங்கள் மகன் வந்திருக்கிறா ன்” என்று வயதானவரிடம் கூறினார். பல முறை சொன்ன பிறகு தான், நோயாளி கண்களைத் திறந்து பார்த்தார்.

வயதானவருக்கு மார்புவலி வந்ததால், வலி தெரியாமல் இருக்க மயக்கமருந்து கொடுத்திருந்தார்கள். அந்தக் காரணத்தால், அவருக்குத் தெளிவாக ஒன்றும் தெரியவில்லை. மேலும், அவர் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்திருந்தார். மங்கலான பார்வையுடன் பணியாளரின் கையைக் கெட்டியாக அவர் பிடித்துக் கொண்டார்.  படைவீரர்உடனடியாக தன் உறுதியான விரல்களுடன் வயதானவரின் மென்மையான விரல்களை, அன்புடனும் உற்சாகப் படுத்தும் வகையிலும் பிடித்துக் கொண்டார் .

 பணியாளர் உட்கார்ந்து கொள்வதற்காக, தாதி ஒரு நாற்காலியைப் படுக்கை அருகில் போட்டார். இரவு முழுவதும் ஒளி குறைந்த அறையில் பணியாளர் வயதானவரின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் ஊக்கமூட்டும் வகையில் அன்பான வார்த்தைகளைப் பேசி வயதானவரிடம் ஆசையாக இருந்தார். ஒரு நிமிடம் கூட பணியாளர் தூங்கவில்லை.

தாதி அறைக்கு வயதானவரைப்  பார்க்க வந்த போதெல்லாம் பணியாளர் விழிப்புணர்வோடு இருந்தார். இரவில் மருத்துவமனையினில் சத்தங்கள் எல்லாம் அவர் காதில் விழுந்தது. சங்கிலி சலசலக்கும் போது உண்டாவது போன்ற ஆக்சிஜென் கலன் ஓசை, அங்கு பணிபுரியும் பணியாளர்களின் சிரிப்பும், பேச்சுச் சத்தமும், மற்ற நோயாளிகளின் முணுமுணுத்தல்களும் கூட அவர் உணர்ந்தார்.

அவ்வப்போது சில மென்மையான வார்த்தைகளைப் படைவீரர் வயதானவரிடம் சொன்னார். சாக இருக்கும் அவர் ஒன்றும் பேசவில்லை. கையைக் கெட்டியாக வயதானவர் பிடித்துக் கொண்டிருந்தார்.

விடிகாலையில் வயதானவர் இறந்து போனார். தாதியிடம் சென்று பணியாளர் விஷயத்தைக் கூறினார். மனதிற்கு ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூறிய போது, பணியாளர் “யார் அந்த வயதானவர்?” என்று வினவினார்.

தாதி ஆச்சரியத்துடன் “அவர் உங்கள் அப்பா தானே?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பணியாளர் “இல்லை, நான் அவரைப் பார்த்ததே இல்லை” என்று பதிலளித்தார்.

அதற்கு தாதி, “அவரிடம் கூட்டிச் செல்லும் போது ஏன் ஒன்றும் கூறவில்லை?” என்று பணியாளரிடம் கேட்டார்.

பணியாளர் கூறிய பதில்:

ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது என்று தெரிந்தது; ஆனால் அந்த சமயத்தில் வயதானவருக்கு அவர் மகனைப் பார்க்க வேண்டிய அந்த துடிப்பைப் புரிந்து கொண்டேன். மங்கலான பார்வையின் காரணத்தால், நான் அவர் மகனில்லை என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு நான் வேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவருடன் இருந்தேன். அவ்வளவு தான்.

நான் இங்கு “கேப்டன். மகாதேவன்” என்பவரைப் பார்க்க வந்தேன். அவருடைய மகன் இன்றைக்கு இராக்கில் கொலை செய்யப் பட்டார். அந்தச் செய்தியை சொல்லத் தான் வந்தேன்.

பணியாளர் தாதியிடம், “இறந்தவரின் பெயர் என்ன?” என்று கேட்டார்.

தாதி அழுதுக் கொண்டே “கேப்டன். மகாதேவன்” என்று சொன்னார்.

நீதி

தக்க சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் மிகவும் அவசியம். மென்மையான வார்த்தைகள், புன்சிரிப்பு, நல்ல காரியங்கள் செய்வது வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியம். நம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் செய்தால், அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கும்; நமக்கும் நன்மை பயக்கும். 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

நடப்பதெல்லாம் ஒரு காரணத்திற்காக

Blessing from above

நீதி – உண்மை

உபநீதி – பொறுமை / நம்பிக்கை / அமைதி / சமாதானம்

பொதுவாக, நாம் நினைப்பதும் நடப்பதும் ஒன்றாக இல்லாவிட்டால், என்ன நடந்தாலும் நல்லதுக்கே” என்ற கருத்து புரியாமலே போய்விடும். தெள்ளத்தெளிவாக புரிவதற்கு தான் ஒரு அழகான கதை———-

நான் (கடவுளிடம்): ஒரு கேள்வி கேட்கலாமா?

கடவுள்: கட்டாயமாக.

நான்: கோபம் வராதென்று சத்தியம் செய்ய வேண்டும்.

கடவுள்: சத்தியமாகக் கோபம் வராது.

நான் (கோபத்தைத் தூண்டுகின்ற வகையில்): இன்றைக்கு நான் வருத்தப்படும் வகையில் ஏன் இவ்வளவு விஷயங்கள் நடந்தன?

கடவுள்: என்ன சொல்கின்றாய்?

நான் (எரிச்சலுடன்): நான் கொஞ்சம் தாமதமாக காலையில் எழுந்தேன்.

கடவுள்: ஆம்

நான் (கோபமாக): காலையில் என் காரைக் கிளப்ப முடியவில்லை.

கடவுள்: சரி

நான் (முணுமுணுத்துக் கொண்டு): மத்தியானம் ஹோட்டல் சென்ற போது, உணவிற்கு தப்பான சாண்ட்விச் கொடுத்ததனால், காத்திருக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது.

கடவுள்: சரி

நான் (எரிச்சலுடன்): வீட்டிற்குச் செல்லும் வழியில், ஒரு நபர் என்னிடம் பேச இருந்த போது, என் தொலைப்பேசி அணைந்து விட்டது.

நான் (வெறுப்புடன்): இது எல்லாம் நடந்த பிறகு, மாலை வீட்டிற்குச் சென்றவுடன் கால்களைக் கொஞ்சம் வெப்ப நீரில் வைத்து ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்த போது, “மசாஜர்” வேலை செய்யவில்லை. இன்று நாள் முழுவதும் ஒன்றுமே சரியில்லை. ஏன் அப்படிச் செய்தாய்??

கடவுள்: இன்று காலை எமதூதன் உன் படுக்கையறையில் இருந்ததனால், நான் ஒரு தேவதூதரை அனுப்பி உன் உயிரை மீண்டும் பெற போராடினேன். அந்த சமயத்தில், நீ நிம்மதியாக தூங்க வழி வகுத்தேன்.

நான் (பணிவுடன்): அப்படியா??

கடவுள்: “கார்” கிளப்ப முடியாத காரணம் என்னவென்றால், “நீ செல்லும் வழியில் குடிகாரன் ஒருவன் அவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் உன் வாகனத்தை இடிக்காமல் இருப்பதற்காக நான் அப்படிச் செய்தேன்.”

நான் (அவமானத்துடன் நின்றேன்)

கடவுள்: மத்தியானம் உணவு தாமதம் ஆன காரணத்தைச் சொல்லுகின்றேன். முதலில் “சாண்ட்விச்” பண்ணிய நபருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததனால், அவனை உனக்கு “சாண்ட்விச்” பண்ணாமல் தடுத்தேன். இல்லையென்றால், நீ சுகமில்லாமல் வேலைக்குப் போகாமல் இருந்திருக்க வேண்டும்.

நான்: சரி

கடவுள்: உன் தொலைபேசியில் வேண்டாத விஷயம் பேச ஒரு நபர் காத்திருந்தான். அதைத் தடுப்பதற்காகத் தான், அது வேலை செய்யாதபடி தடுத்தேன்.

நான் (திகைப்புடன்): அப்படியா?

கடவுள்: இறுதியாக அந்த “மசாஜர்” ——– ஏதோ பிரச்சனை அதில் இருந்ததால் அதை உபயோகம் செய்திருந்தால் மின்சாரம் அணைந்திருக்கும். இரவு வெளிச்சம் இல்லாமல் தவித்திருப்பாய். அதைத் தடுக்கத் தான் அப்படிச் செய்தேன்.

நான்: என்னை மன்னிக்கவும்.

கடவுள்: நான் எது செய்தாலும் நல்லதுக்கு தான் என்பதை புரிந்துக் கொள்ளவும். மன்னிப்பு கேட்க அவசியமில்லை.

நான்: உங்களை இனிமேல் நம்புவேன்.

கடவுள்: சந்தேகப்படாமல் நான் போட்டிருக்கும் திட்டத்தை நம்பி வாழ கற்றுக் கொள். நீ நினைத்திருக்கும் திட்டத்தை விட நான் உனக்கு என்ன திட்டம் வைத்திருக்கேனோ அதை நம்பி வாழத் தெரிந்துக் கொள்.

நான்: கட்டாயமாக. நீங்கள் எனக்காக செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி.

கடவுள்: உன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். என் குழந்தைகளைப் பாதுகாப்பதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

நீதி:

நம் கையில் இல்லாத சில விஷயங்களைப்  பொறுமையாக சமாளிக்க வேண்டும். முடிந்ததை செய்து திட நம்பிக்கையுடன் செயற்பட்டு, சரியான மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ளவும். சகிப்பு தன்மையை மேம்படுத்திக் கொண்டு, என்ன நடந்தாலும் நல்லதற்கே என்பதை நம்ப வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

சுய கண்டனமும் ஆணவமே

self condemnation is ego Krishna with gopikas

நீதி – தன்னம்பிக்கை 

உபநீதி – மனப்போக்கு  

துவாரகாபுரியில் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் கடுமையான தலைவலி வந்தது போல் நாடகமாடினார். தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்ய முற்பட்டார். வெந்நீரில் நனைத்த துண்டைத் தலையில் கட்டிக் கொண்டு, படுக்கையில் உருளலானார். அவருடைய கண்கள் சிவந்து, முகம் வீங்கி விட்டது. அவருடைய மனைவியர் ருக்மிணி, சத்யபாமா மற்றும் அரசிகள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்களால் முடிந்த சிகிச்சைகளை செய்தனர். ஒன்றுமே பயன் அளிக்கவில்லை. ஆதலால் அவர்கள் நாரதமுனியிடம் முறையிட்டனர். நாரதர் தானே சென்று ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்தித்து என்ன பிரச்சனை என்றும், சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொண்டு அவரை குணப்படுத்த விரும்பினார். ஸ்ரீ கிருஷணர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா??

ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரிடம்  சிறந்த பக்தரின் பாத தூசியைக் கொண்டு வரச் சொன்னார். நாரதர் உடனடியாக பக்தர்களிடம் சென்று விளம்பரப் படுத்தினார். ஆனால் பக்தர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததால், கடவுளுக்குச் சிகிச்சையாகப் பாத தூசியைத் தரத் தயங்கினர்.

இதுவும் ஒரு வகையில் ஆணவமே. “நான் தாழ்ந்தவன், சிறியவன், உபயோகமில்லாதவன், ஏழை, பாவி”–இந்த எண்ணங்கள் யாவும் ஆணவத்தைக் குறிக்கும். தாழ்வு மனப்பான்மையோ, கர்வமுள்ள மனப்பான்மையோ – இரண்டுமே நல்லதில்லை.

எவருமே  பாத தூசியைத் தர முன் வரவில்லை. நாரத முனி இதைக் கேட்டு ஏமாற்றமடைந்து துவாரகைக்கு  திரும்பி வந்தார்.  பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் அவரிடம் பிருந்தாவனம் சென்று கோபிகைகளைக் கேட்குமாறு சொன்னார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். நாரதரும் சற்று திகைப்புடன், “அவர்களுக்கு பக்தியைப் பற்றி என்ன தெரியும்?” என்றார். இருப்பினும் கோபிகளிடம் விரைந்தார். நாரதர் சொன்னதைக் கேட்ட கோபியர், தன் பாத தூசியால் கடவுளின் நோய் குணமாகும் என்றதும் ஒரு சிறு கணம் கூட யோசிக்காமல், தன் கால்களைத் தட்டி தூசியைக் கூட்டி நாரதரின் கைகளில் கொடுத்தனர்.

நாரதர் துவாரகை வந்தடையும் சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் பூரண குணமடைந்திருந்தார். இது  ஐந்து நாட்களுக்காக நடத்திய நாடகமே. சுய கண்டனமும் ஆணவமே என்ற படிப்பினைக் கொடுத்து, கடவுளின் ஆணையை சந்தேகப் படாமல் பணிவுடன் செய்ய வேண்டும் என்பதனையும் அவர் கற்றுக் கொடுத்தார்.

நீதி:

ஒருவன் செயல்களைச் செய்யும் போது “தான்” என்ற எண்ணமே வரக்கூடாது. அது நம் தினசரி கடமை. அதன் விளைவுகள் நம் கையில் இல்லை. செய்யும் கடமைகளை நம்மால் முடிந்தவரை நாணயமாக செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்து, கடவுளுக்கு அர்ப்பணித்தால், ஆணவம் விலகி, ஆன்மீக வழியில் உயர்வோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com