Archive | July 2018

நல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்?

நீதி: அன்பு, நம்பிக்கை

உபநீதி: பக்தி

why good people suffer picture 1

why good people suffer actual picture 2ஒரு சமயம், குர்முக் மற்றும் மன்முக் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு இடையே வலுவான நட்பு இருந்தாலும் ஒரே ஒரு வேற்றுமை இருந்தது. குருமுக் கடவுளை தீவிரமாக நம்பினான்; ஆனால், மன்முக்கிற்கு கடவுள் நம்பிக்கையே இல்லை. தினமும் குருமுக் காலையில் சீக்கிரம் எழுந்து, குளித்து மந்திரங்களை ஜபிப்பான். அப்போது மன்முக் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.

why good people suffer picture 3ஒரு நாள், இருவரும் காடு வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, மன்முக் ஒரு பை நிறைய கரியை கண்டான். அதை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். அதைப் பற்றி பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று குருமுக் “ஓ” என்று கதறினான். அவன் காலில் ஒரு முள் குத்திவிட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்த குருமுக்கை பார்த்து மற்றொருவன் சிரித்தான். அதைக் கண்டு குர்முக் ஆச்சரியம் அடைந்தான். “எதற்கு சிரிக்கிறாய் மன்முக்?” என்று கேட்டான். அதற்கு மன்முக், “ நீ தினமும் கடவுளை வணங்குகிறாய். ஆனாலும், உன் காலில் முள் குத்திவிட்டது. கடவுளையே வணங்காத எனக்கோ ஒரு பை நிறைய கரி கிடைத்து விட்டது பார்த்தாயா?” என்று பதிலளித்தான்.

why good people suffer picture 4அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வயதானவர் ஒருவர் மன்முக் கூறியதை கேட்டு சிரித்தார். மன்முக் அந்த முதியவரின் சிரிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது சிரிப்பிற்கான காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு அந்த முதியவர், “நீ அப்பாவியாக இருக்கிறாயே. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால், இன்று உனக்கு கரி அல்ல, வைரங்கள் கிடைத்திருக்கும். குருமுக், அந்த முள் குத்தி இறந்திருக்க வேண்டியவன். ஆனால், கடவுள் மேல் இருந்த நம்பிக்கை அவன் அனுபவிக்க வேண்டிய வலியை குறைந்த அளவில் மாற்றிவிட்டது.”

நீதி:

கடவுள் நம்பிக்கையும், நல்லது செய்வதும் பெரிய அற்புதங்களை கொண்டு வராமல் இருக்கலாம். ஆனால், நாம் அனுபவிக்கும் வலியையும், துன்பங்களையும் குறைக்க கண்டிப்பாக உதவும்.

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பொறுமையான துறவி

நீதி – பொறுமை / நிதானம்

உபநீதி – உள்ளார்ந்து நோக்குதல் / சிந்தித்து செயல்படுவது

the patient monk picture 1

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஒரு துறவி இருந்தார். அந்த நகரத்தில் இருக்கும் மக்கள் துறவியின் செயல்களை கவனித்து, அவரை விவேகமுடையவராகக் கருதி, அவரின் எளிமையான குணத்தை மதித்தனர்.

அந்த நகரத்தில், திருமணம் ஆகாத ஒரு இளம் பெண் கர்ப்பமானாள்; அவளுக்கு அது அவமானமாக இருந்தது. அதற்கு காரணமாக இருந்தவனை காப்பாற்றுவதற்காக, நகரத்திலுள்ள பெரியவர்கள் எல்லோரிடமும், அவள் கர்ப்பத்திற்கு அந்த துறவி தான் காரணம் என்று கூறி விட்டாள்.

துறவியைக் கேட்ட போது அவர், “அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அந்த இளம் கர்ப்பிணி பெண்ணோடு நகரத்தை விட்டு துறவியும் விரட்டப் பட்டார்.

துறவியும் அந்த பெண்ணோடு சென்றார்; ஆனால், அவள் கூறிய பொய் மற்றும் அவருக்கு ஏற்பட்ட அவமானம் பற்றிய விஷயங்களை பெரிது படுத்தாமல் மெளனமாக இருந்தார். துறவியின் நடத்தையைப் பற்றி அவள் பழி கூறிய பிறகும், அவர் அருகிலுள்ள கிராமத்தில், தனக்கு மட்டுமல்லாமல், அந்த இளம் பெண்ணிற்காகவும் பிச்சை எடுத்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த பெண்ணின் மனதில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, தவறை உணர்ந்து, உண்மையில் அவள் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தவனை காட்டிக் கொடுத்தாள். துறவியை இழிவுப் படுத்தியதற்காக, நகரத்திலுள்ள பெரியவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

விவேகமுடைய மனிதருக்கு தனிப்பட்ட உருவம் இல்லாததால், அவர் உள் மனதிலிருந்து புறச்சார்பற்றவராகத் திகழ்கிறார். அச்சமயத்தில், எல்லோரும் அவரை குழந்தையாக பார்க்கின்றனர். இத்தகைய உள் மனது சுதந்திரத்தைப் பற்றி பொதுவாக மக்கள் கேள்வி பட்டிருக்க மாட்டார்கள்.

நீதி:

விவேகமுடையவர், உள் மனதிலிருந்து பேரின்பத்துடன் இருப்பதால், அவர் எதையுமே அதட்டி கேட்க மாட்டார். அந்த முக்கியமான கோணத்திலிருந்து தான், எல்லோருமே அவரை பார்க்கின்றனர். அவர் வழியில் எது வந்தாலும், சமநிலையோடு அதை ஏற்றுக் கொள்கிறார். ஒழுக்கம், ஒழுக்கமின்மை, நிறைகள், குறைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பாதையில் அவர் செல்கிறார். நம்மிடம் கர்வம் அல்லது செயல்களை நாம் தான் செய்கிறோம் என்ற மனப்பான்மை இருந்தால் தான், மேற்கூறியவை எல்லாமே நம் கண்களுக்கு புலன்படும்.

விவேகமுடையவரின் எண்ணங்கள் ஒருமுகச் சிந்தனையோடு யோகாசனத்தில் இருப்பதால், எச்சமயமும் கடவுளை நினைத்துக் கொண்டு, அவர் உள்ளுயிர்த்தன்மையுடன் இருக்கிறார். அவர் எப்போதும் பேரின்பமாக இருக்கிறார். அவர் மனதில் இன்பத்தைத் தவிர வேறொன்றும் இல்லை; குழந்தையைப் போல, கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். கர்வம் இல்லாத மனம் யோகாசனத்தில் இருக்கிறது. கர்வம் அகம்பாவத்திற்கு வழி வகுக்குகிறது.

இதைப் படித்து புரிந்து கொள்ளும் போது, பின்பற்றுவதற்கும், கர்வம் இல்லாமல் இருப்பதற்கும் கடினமாக இருப்பது போல தோன்றும். ஆரம்பத்தில், நம் செயல்களை கூர்ந்து கவனித்து, ஒரு நிகழ்வை எப்படி சமாளிப்பது என்று புரிந்து கொள்ள வேண்டும் –  எதிர்ச்செயலா அல்லது ஏற்புத் தன்மையா என்றவாறு யோசிக்க வேண்டும்.

இந்த பிரதிபலிப்பை நாம் பின்பற்றும் போது, நிதானமாக யோசித்து, நாளுக்கு நாள் நாம் சிறந்தவர்களாக மாறுகிறோம். கர்வத்திற்கு ஈடுகொடுப்பதற்கு பதிலாக, நம் கவனத்தை நல்ல விஷயங்களில் திசை திருப்பும் போது, இந்த ஒழுக்க நிலையில் முன்னேறிச் செல்வோம். நம் எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளை கடவுளுக்கு அர்ப்பணித்தால், அவர் இந்த நற்பாதையில் நம்மை விரைவாக அழைத்துச் செல்வார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

விட்டோபாவும் நாமதேவரும்

நீதி: உண்மை

உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல்

vittobha and Namdev picture 1இறைவனைப் பற்றிய உள்ளார்ந்த உண்மையை, நாமதேவர் முழுதாக உணரவில்லை என்பதை அறிந்த விட்டோபா, அதை அவருக்கு உணர்த்த விரும்பினார்.

ஞானேஷ்வரரும், நாமதேவரும் தங்கள் புனித யாத்திரையை முடித்து விட்டு திரும்பிய போது, கோரா கும்பார் தன் இருப்பிடத்தில் அனைத்து ஞானிகளுக்கும் ஒரு விருந்து வைத்தார். அங்கு ஞானேஷ்வரரும், நாமதேவரும் இருந்தனர். விருந்தில் ஞானேஷ்வரர், கோரா
vittobha and Namdev picture 2கும்பாருடன் இணைந்து ஒரு நாடகம் நடத்த நினைத்தார். அவர் எல்லோர் முன்னினையிலும் கோராவைப் பார்த்து, “நீங்கள் ஒரு குயவர். தினமும் பானைகள் செய்து, பக்குவப் படுத்திய மற்றும் பக்குவப் படுத்தாத பானைகள் எது என்று சோதனை செய்கிறீர்கள்.

உங்கள் முன் அமர்ந்திருக்கும் ஞானிகள், நம்மைப் படைத்த பிரம்மன் உருவாக்கிய பானைகள். இவர்களை உங்கள் பாணியில் சோதனை செய்து, பக்குவம் அடைந்த ஞானிகளையும், பக்குவம் அடையாத ஞானிகளையும் கண்டு பிடித்து சொல்லவும்” என்றார்.

vittobha and Namdev picture 3

கட்டளையை மேற்கொண்ட கோரா தான் அவ்வாறே செய்வதாகக் கூறி, பானைகளின் சப்தத்தை வெளிப்படுத்தும் கோலை எடுத்துக் கொண்டார். அதை ஒவ்வொருவர் தலையிலும், பானையைப் பரிசோதிப்பது போல தட்டிப் பார்த்தார். எல்லா ஞானிகளும் கோரா செய்யும் சோதனைக்கு பணிந்து ஒத்துழைத்தனர். கோரா நாமதேவரை நெருங்கிய போது அவர் கோபத்துடன், “ஏய் குயவனே! என்னை உன் கையிலுள்ள கோலால் தட்டிப் பார்க்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்டார். கோரா ஞானேஷ்வரரிடம், “சுவாமி! மற்ற எல்லாப் பானைகளும் பக்குவம் அடைந்துள்ளன. இந்த ஒன்று மட்டும் (நாமதேவர்) பக்குவம் அடையாத நிலையில் இருக்கின்றது” என்றார். அங்கு கூடியிருந்த ஞானிகள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்து விட்டனர்.

அவமானம் தாங்காமல் நாமதேவர் தான் வணங்கும் விட்டலாவிடம் ஓடினார்; ஏனெனில் விட்டலா நாமதேவரின் நெருங்கிய நண்பர். விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற பல விஷயங்களை இருவரும் ஒன்றாகவே செய்தனர். நாமதேவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை விட்டலாவிடம் கூறினார். எல்லாம் அறிந்த விட்டலா, ஒன்றும் அறியாதது போல் நாமதேவரை பரிதாபமாகப் பார்த்து, கோரா கும்பர் வீட்டில் நடந்தவற்றை விசாரித்தார். எல்லாவற்றையும் கேட்ட விட்டலா, “எல்லோரும் கோலால் தட்டுவதற்கு சம்மதித்த போது, நீ மட்டும் ஏன் ஒத்துழைக்கவில்லை? எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் இன்னமும் எரிச்சலாகி, “நீங்களும் அவர்களுடன் சேர்ந்து என்னை பரிகாசம் செய்கிறீர்களா? எல்லோரையும் போல நானும் ஏன் பணிய வேண்டும்? நான் உங்களுடைய நெருங்கிய நண்பனல்லவா? உங்களுடைய குழந்தையல்லவா?” என்று கேட்டார். விட்டலா, “உண்மையை நீ இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னாலும் உனக்கு புரியப் போவதில்லை. ஆனால் அந்த அடர்ந்த காட்டில் உள்ள பாழடைந்த கோவிலில் உள்ள முனிவரிடம் செல். அவர் உனக்கு தெளிவு படுத்துவார்” என்றார்.

நாமதேவர் அந்தக் கோவிலுக்குள் சென்ற போது, ஒரு மூலையில், வயதான, தற்பெருமையற்ற ஒருவர் தன் கால்களை ஒரு சிவலிங்கத்தின் மேல் வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்டார். விட்டலாவின் நண்பனான தன்னை, இந்த மனிதர் தெளிவூட்டப் போகிறார் என்பதை நாமதேவரால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்த இடத்தில் வேறு ஒருவரும் இல்லாததால், அந்த மனிதரிடம் சென்று கைகளைத் தட்டினார். அவர் விழித்தெழுந்து, “விட்டல் அனுப்பிய நாமதேவர் நீங்கள் தானா? வாருங்கள்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் பேச முடியாமல் மௌனமானார். “இவர் ஒரு மகானாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும், சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது தவறான செயல் ஆகும்” என எண்ணினார். அவரிடம், “உங்களைப் பார்த்தால் சிறந்த மனிதராகத் தெரிகிறது. ஆனால் சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது முறையான செயலா?” என்று நாமதேவர் கேட்டார். அதற்கு அந்த வயதானவர், “ஆஹா, என் கால்கள் லிங்கத்தின் மீதா இருக்கிறது? அதை வேறு எங்கேயாவது திருப்பி வைத்து விடுங்கள்” என்றார்.

நாமதேவர் பெரியவரின் பாதங்களை வெவ்வேறு இடங்களில் வைத்த போது, அங்கெல்லாம் சிவலிங்கங்கள் தோன்றியன; இறுதியாக, அந்தப் பாதங்களைத் தனது மடியில் வைத்துக் கொண்ட போது, தானே சிவலிங்கமாக மாறியதை நாமதேவர் கண்டார். அப்போது தான், கடவுளைப் பற்றிய உண்மையை உணர்ந்தார். பெரியவர் நாமதேவரை திரும்பிப் போக அனுமதித்தார்.

நீதி:

vittobha and Namadev picture 4

நாம் பரிபூரண சரணாகதியடைந்து, குருவின் பாதங்களைப் பற்றினால் ஞானத்தைப் பெறலாம் என்பது இந்தக் கதையின் மூலம் புலனாகிறது. நாமதேவர் பரிபூரண ஞான வரம் பெற்ற பின், வழக்கமாக செல்லும் விட்டலாவின் கோவிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். சிறிது நாட்களுக்குப் பின் விட்டலா நாமதேவரின் வீட்டிற்குச் சென்று ஒரு கபடமும் இல்லாதவரைப் போல், இத்தனை நாள் தன்னை நாமதேவர் எவ்வாறு மறந்தார் எனவும், தன்னை ஏன் பார்க்க வரவில்லை எனவும் வினவினார். அதற்கு நாமதேவர், “என்னை இனியும் முட்டாளாக்க வேண்டாம். நீங்கள் இல்லாத இடம் எது? உங்களுடன் இருப்பதற்கு நான் கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா? நீங்கள் இல்லாமல் நான் ஏது?” என்றார். விட்டலா “இப்பொழுது நீ உண்மையை உணர்ந்திருக்கிறாய். அதற்காகத் தான் நான் உன்னை அங்கு அனுப்பினேன்” என்றார்.

புனித யாத்திரை செல்லுதல், தர்மம் செய்தல், தர்ம சாஸ்திரத்தைப் படித்தல் போன்றவை நமக்கு கட்டுப்பாடு, நம்பிக்கை, பொறுமை இவைகளை அளிக்கும். இவை எல்லாம் மனம் தூய்மை பெற மிகவும் அவசியம். ஆனால் ஞானம் பெறுவதற்கு உண்மையான பயிற்சி மிகவும் அவசியம். இதற்கு நம்மை நாமே உணர வேண்டும். தன்னை உணர்ந்தவன் மாயைக்கு ஆட்படுவதில்லை. இதை அறியாதவன், தான் எனும் அகந்தையால் சூழப்பட்டிருப்பான். தான் எனும் தன்மை மாயையான ஒன்றே தவிர, உண்மையான தன்னிலை அல்ல; அகந்தை, நம்மிலிருந்து கடவுளை வெளியேற்றிவிடும். நமது உண்மை நிலை தெரியாத போது அகந்தை வெளிப்படுகிறது. உண்மையான தன்னிலையை உணராத போது, நாம் மாயை நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

நாம் வெளியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனதில் இருள் சூழ்ந்திருந்தால், ஆசைகளிலிருந்து விடுபட முடியாது. குரு வாக்கின்படி, நாம் மாயையை அகற்றி, நம் உண்மை நிலையை அறிய பயிற்சி செய்ய வேண்டும். இதற்காக, ஓ! மூட மனமே! கோவிந்தனை நாடு.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

குருநானக்கும் கல்லு ராமும்

நீதி: உண்மை, குரு பக்தி

உப நீதி: விழிப்புணர்வு

GURU NANAK AND KALLU RAM - ACTUAL PICTURE

ஒரு முறை கல்லு ராம் என்ற ஒரு ஏழை மனிதன், குருநானக்கை தம் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தான். குருநானக்கும் அவன் அழைப்பை ஏற்றார். நிர்ணயிக்கப்பட்ட நாளன்று, குருநானக் கல்லு ராம் வீட்டிற்கு சென்றார்; ஆனால் கதவு மூடப்பட்டிருந்தது. குருநானக் கதவைத் தட்டினார்.

சிறிது நேரம் கழித்து, கதவை திறந்த ஏழை மனிதன் வெளியில் வந்து, “மதிப்பிற்குரியவரே! என்னை மன்னிக்கவும். கதவு திறக்க சற்று தாமதமாகிவிட்டது” என்றான். குருநானக், “என் அன்பு சகோதரனே,  நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று வினவினார்.  அதற்கு அந்த ஏழை, “குருவே! நான் சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன்” என்றான். உடனே குருநானக், “என்ன, சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தீர்களா? என்னைப் பின் தொடர்ந்து வரவும்” என்றழைத்தார். அதற்கு அந்த ஏழை, “தங்கள் கட்டளைப் படி நடப்பேன். உங்களை பின் தொடர்ந்து வருகிறேன்” என்று கூறினான்.

அவன் தன் உடமைகளையெல்லாம் அப்படியே விட்டு விட்டு, குருநானக்கை பின் தொடர்ந்தான். அவன் குரு வழங்கிய அனைத்து ஆன்மீகச் சாதனைகளையும் பயின்று, விரைவில் குருவின் அன்பிற்குரிய ஒரு சிஷ்யனாகி விட்டான்.

நீதி:

அன்பும் கருணையும் நிரம்பிய இந்த குருவின் குரல் நம்மை நோக்கி, “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சுவற்றில் ஆணி அடிக்கிறோமா? இன்னும் இந்த சம்சாரம் என்கிற சாகரத்தில் மூழ்கிக் கிடக்கிறோமா? வாழ்க்கையை, உணவு உண்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது, சீட்டு விளையாடுவது மற்றும் பல கேளிக்கைகளில் வீணடித்துக் கொண்டிருக்கிறோமா? வாழ்வின் குறிக்கோளையும், ஆத்மானுபவத்தையும், ஆத்மாவின் புகழையும் மறந்து விட்டோம். நமக்கு நல்வழி காட்டுமாறும், அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானமாகிய வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல, ஒரு குருவை நமக்கு அனுப்பி வைக்குமாறும் நாம் அந்த இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கேட்கிறது.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com