Archive | May 2014

கைகளை பற்றி கொள்ளுதல்

hold my hand

நீதி – உண்மை / அன்பு

உபநீதி – நம்பிக்கை

ஒரு சிறிய பெண்ணும் அவள் தந்தையும் ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர். அவள் எங்கேனும் தவறி விழுந்து விடுவாளோ என கவலையுற்ற தந்தை அப்பெண்ணிடம், “கண்ணே, என் கைகளைப் பிடித்துக் கொள்ளவும். இல்லாவிடில், தவறித் தண்ணீரில் விழுந்து விடுவாய்” என கூறினார்.

அதற்கு அந்தப் பெண், “அப்பா, நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றுக் கூறினாள். வியப்புற்றத் தந்தை, “அதில் என்ன வித்தியாசம்” என்றுக் கேட்டார். அதற்கு அந்தப் பெண், “நான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால், கையை விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொண்டால், என்ன ஆனாலும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள்” என உறுதியாகக் கூறினாள்.

நீதி:

நாம் கடவுளை மறந்து செயல்பட்டாலும், அவர் ஒரு பொழுதும் கைவிட மாட்டார். ஒழுங்கான பாதையில் வழி நடத்திச் செல்ல அவர் உதவி கட்டாயமாக வேண்டும்.  அவர் கரங்களை அன்புடனும் பக்தியுடனும் பற்றிக் கொள்ள வேண்டும்.

யானையின் பலம் தும்பிக்கையிலே

மனிதனின் பலம் நம்பிக்கையிலே

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

ஞான தீபத்தை ஏற்றுதல்

lamp of wisdom

நீதி – நேர்மை

உபநீதி – விவேகம், ஞானம்

ஒரு முறை ஒரு சாதகர் தெய்வீகத்தைப் பற்றித் தெரிந்து, புரிந்து கொள்ள விரும்பினார்.  அவர் தன் ஞானக் கண் திறக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். ஒரு குகையில் வசிக்கும் மகானைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க அங்கு சென்றார்.

குகை இருட்டாக இருந்தது. வெகு தொலைவில் ஒரு விளக்கின் ஒளி மங்கலாகத் தென்பட்டது. சாதகர் வெளிச்சத்தை நோக்கி சென்ற போது, விளக்கு அணைந்து விட்டது.

சாதகர் அந்த மையிருட்டுக் குகையில் சிக்கிக் கொண்டார். அந்த இருளில் யாருக்குமே அச்சம் ஏற்பட்டு கடவுளை நினைக்கத் தோன்றும். சாதகரும் பயத்தில் தன்னை அறியாமல் “ஓம் நம சிவாய” என உரக்கக் கூறினார். இதைக் கேட்டவுடன் குகையிலிருந்த மகான் சாதகரைத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வந்த காரணத்தையும் கூறச் சொன்னார். சாதகர் ஒலி வந்த திசையை நோக்கி தான் மகானின் அனுகிரகத்தைப் பெற வந்ததாகப் பணிவுடன் கூறினார்.

குகையின் சுற்றுப்புறத்துக் காற்றை சுவாசித்து வாழ்ந்த மகான் வந்திருப்பவரின் தகுதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆதலால் அவர் சாதகரிடம் அணைந்த தீபத்தை ஏற்றச் சொன்னார். பிறகு அவரின் கேள்விக்குத் தான் பதிலளிப்பதாகக் கூறினார். சாதகர் தீப்பெட்டியிலிருந்த தீக்குச்சிகளை எடுத்து தீபத்தை ஏற்ற முயற்சி செய்தார். குச்சிகள் தீர்ந்தன. சாதகரால் விளக்கை ஏற்ற முடியவில்லை.

மகான் அவரை தீபத்திலிருக்கும் தண்ணீரைக் கொட்டிவிட்டு, எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றச் சொன்னார். இம்முறையும்  சாதகர் தோல்வியுற்றார். பிறகு தண்ணீரில் நினைந்திருக்கும் திரியைத் துடைத்து, காய வைத்து தீபத்தை ஏற்றச் சொன்னார். இம்முறை சாதகர் தன் முயற்சியில் வெற்றி பெற்றார்.

சாதகர் தன் ஞானக் கண்ணைத் திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். மேலும், படிப்பின் முக்கியத்துவத்தைத் தனக்கு எளிய முறையில் விவரிக்குமாறு மகானிடம் வேண்டினார். மகான் சொன்னது யாதெனில், உன் இருதயம்  என்னும் பாத்திரத்தில் ஜீவன் என்னும் திரி இருக்கிறது. இவ்வளவு காலம் திரியானது ஆசை, மோகம், பொறாமை போன்ற தண்ணீரால் நனைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஞானம் என்னும் தீபத்தை உன்னால் ஏற்ற முடியவில்லை. ஆசைகள் என்னும் தண்ணீரை இருதயம் என்னும் பாத்திரத்திலிருந்து வெளியேற்றிவிட்டு அன்பால் நனைத்துக் கொள். வாழ்க்கை என்னும் திரியை மன உறுதி என்னும் சூரிய ஒளியில் காய வைத்து, நம்பிக்கையும், பக்தியும் கலந்த எண்ணெய் விட்டு நிரப்பு. அப்பொழுது தான் உன்னால் ஞான தீபத்தை ஓளி பெறச் செய்ய முடியும்.

நீதி

lamp of wisdom 1

நம் எல்லோரிடமும் புனிதமான இருதயம் இருக்கின்றது. அதை நாம் அறிய முடியாத காரணம் என்னவென்றால் அதிகமாக எண்ணங்களும், மேலும் ஆறு விரோதிகள் இருப்பதால் தான். அவை காமம், க்ரோதம், பேராசை, ஆணவம், மோகமும் பொறாமையும் தான். அதற்கு மேல் அஹங்காரம். இவற்றையெல்லாம் நீக்கி விட்டால் பிரகாசமான ஓளி போல் நல்ல வாழ்க்கையை வாழலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://www.sathya.org.uk/resources/books/chinnakatha/getstory.php?id=131

 

 

பசுவும் பன்றியும்

Helping hands

நீதி – நன் நடத்தை / தர்மம்

உபநீதி தக்க சமயத்தில் உதவி

ஓர் ஊரில் அதிக செல்வாக்குள்ள மனிதன் ஒருவன் இருந்தான். ஆனால் அனைத்து கிராமவாசிகளுக்கும் அவன் கஞ்சனாக இருந்ததனால், அவனைப் பிடிக்காமல் போயிற்று.

அவர்களின் மனப்போக்கைக் கண்டு வேதனையுற்றான். ஒரு நாள் ஊராரிடம் “நீங்கள் எல்லோரும் என்னைக் கண்டு பொறாமைப் படுகிறீர்கள். பணத்தின் மேல் இருக்கும் பற்று உங்களுக்குப் புரியவில்லை, கடவுளுக்குத் தான் தெரியும். என்னைப் பிடிக்கவில்லை என்பது நன்றாக புரிகின்றது. நான் இறக்கும் பொழுது அனைத்துச் செல்வத்தையும் தான தர்மத்திற்கே உயிலில் எழுதி வைப்பேன். பிறகு எல்லோரும் சந்தோஷப் படுவீர்கள்.” எனக் கூறினான்

பிறகும் ஊரார் அவனை ஏளனப் படுத்தினர். வேதனையோடு பணக்காரர் சொன்ன வார்த்தைகள், “உங்களுக்கு என்ன ஆகிற்று? சில வருடங்கள் கூட பொறுமையாக இருக்க முடியாதா?” ஆனால் கிராமவாசிகள் நம்பவில்லை. அதற்குப் பணக்காரன் “நான் என்ன சாசுவதமா? எல்லோரையும் போல் எனக்கும் மரணம் ஏற்படும். பிறகு என் பணமெல்லாம் மற்றவர்க்குப் பயன்படும்” எனக் கூறினான். மக்களின் மனோபாவத்தைப் பார்த்துத் திகைப்புற்றான்.

மறுநாள் பணக்காரன் வெளியே உலாவச் சென்றான். பலத்த மழை பெய்ந்ததனால், ஒரு மரத்தடியே தஞ்சம் புகுந்தான். அங்கு ஒரு பசுவும், பன்றியும் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.

பன்றி பசுவைப் பார்த்து, “எல்லோரும் உன்னைப் பாராட்டுகின்றார்கள். ஆனால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை. நான் இறந்த பிறகு எல்லோருக்கும் இறைச்சி கொடுக்கின்றேன். என் முட்களையும், முடியினையையும் கூட உபயோகப்படுத்துகின்றனர். நான் இவ்வளவு கொடுக்கும் போது நீ வெறும் பால் மட்டுமே தருகின்றாய். பிறகு ஏன் என்னைவிட உன்னைப் புகழ்கிறார்கள்?” என்று கேட்டது.

அதற்கு பசு, “நான் உயிருடன் இருக்கும் போது பால் தருகின்றேன். ஆனால் நீ இறந்தப் பிறகு தான் எல்லாம் கொடுக்கின்றாய். மக்கள் எதிர்காலத்தை நம்புவதில்லை. நிகழ்காலத்தை பற்றித் தான் கவலைப் படுகின்றார்கள். நீ உயிரோடு இருக்கும் பொழுது கொடுத்தால் புகழ் கிடைக்கும்” என்று பதிலளித்தது. அதைக் கேட்ட பிறகு, பணக்காரன் தாராள மனப்பான்மை கொண்டு ஏழைகளுக்குத் தான தர்மம் செய்ய ஆரம்பித்தான்.

நீதி

சிறு உதவி ஆனாலும் தக்கச் சமயத்தில் செய்ய வேண்டும். அதை கட்டாயமாக அங்கீகரிப்பார்கள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

இந்த உலகத்தை விட்டுச் செல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம் – கடவுளுடன் ஒரு உரையாடல்

ant one good reason not to quit

நீதி – நன் நடத்தை

உபநீதி – நம்பிக்கை, விடா முயற்சி

ஒரு நாள் நான் விலகத் தீர்மானித்தேன் ……………….. என் வேலையிலிருந்து, உறவுகளிடமிருந்து, ஆன்மீகத்திலிருந்து – இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலக விரும்பினேன்.

ஆதலால், காட்டிற்குக் கடவுளைத் தேடிக் கடைசி முறையாக உரையாடச் சென்றேன். “கடவுளே, இந்த உலகத்தை விட்டு விலகாமல் இருப்பதற்கு ஒரு காரணம் கூற முடியுமா?” எனக் கேட்டேன். கடவுள் என்னை இயற்கை பெருவளத்தைச் சுற்றிப் பார்க்கச் சொன்னார். “சிற்றிலை படர்ச் செடியையும், மூங்கில் செடியையும் பார்த்தாயா?” என வினவினார். “ஆம்” என்றேன். பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தன. இந்த செடிகளின் விதைகளை விதைத்த போது, நான் நன்றாகவே பாதுகாத்து, தேவையான வெளிச்சம், தண்ணீர் ஆகியவை கொடுத்து வந்தேன்.சிற்றிலைச் செடி சீக்கிரமாகவே வளர்ந்து தரையெல்லாம் படர்ந்தது. ஆனால் மூங்கில் செடி வளரவே இல்லை. இரண்டாவது வருடம் ஆகிவிட்டது. மூங்கில் செடி அப்படியே இருந்தது. சிற்றிலைச் செடி அழகாக படரத் தொடங்கியது, ஆனால் நான் விலகிச் செல்லவில்லை என்று கடவுள் விளக்கம் தந்தார். ஐந்தாவது வருடம் தான் சிறிதாக மூங்கில் செடியிலிருந்து  தளிர் விட ஆரம்பித்தது. ஆனால், ஆறு மாதங்களுக்குள் மூங்கில் செடி நூறு அடி உயரம் வளர்ந்து விட்டது. தன் வேர்களை ஆழமாக ஊன்ற அதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது. என்னால் படைக்கப்பட்ட எந்த உயிரினத்துக்கும் தாங்க முடியாத சவாலை நான் கொடுப்பதில்லை எனக் கூறினார்.

“குழந்தாய்!! இத்தனை நாட்களும் நீ பட்ட சிரமம் உன் வேர்களை ஆழ ஊன்றுவதற்காகத்தான். மூங்கிலை விட்டுக் கொடுக்காததுப்  போல் உன்னையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.” உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. மூங்கிலின் தேவை வேறு, சிற்றிலைச் செடியின் தேவை வேறு. ஆனால் இரண்டுமே காட்டை அழகுப் படுத்துகின்றன. “உனக்கும் வேளை வரும். நீயும் உயர்ந்து வருவாய்” எனக் கடவுள் என்னிடம் கூறினார்.

எவ்வளவு உயரம் நான் வளர வேண்டும்?” எனக் கடவுளைக் கேட்டேன். “மூங்கில் எவ்வளவு  உயரம் வளரும்?” எனக் கடவுள் திருப்பிக் கேட்டார். “அதனால் முடிந்தவரை” என பதிலுரைத்தேன்.  “ஆம், நீயும் அதுபோல் உயரமாக வளர்ந்து எனக்குப் பெருமைத் தேடித் தா” எனக் கடவுள் கூறினார்.”

கடவுள் என்றும் என்னைக் கைவிட மாட்டார் என்ற தீர்மானத்துடன் காட்டை விட்டு வெளியே வந்தேன். ஆம், கடவுள் உங்களையும் கைவிட மாட்டார். வாழ்க்கையில் ஒரு நாளும் வருத்தம் வேண்டாம். சுகப்படும் நாட்கள் மகிழ்ச்சியைத் தரும். கஷ்டப்படும் நாட்கள் அனுபவங்களைத் தரும். இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவை.

நீதி:

மனிதன் தன் கடமைகளைச் சரியாகச் செய்து விட்டு, பலன்களைக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விட வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணம் இருக்கும். யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல், விடா முயற்சியுடன்  நம் குறிக்கோளைச் சென்று அடைய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

 

 

மந்திரம் சொல்லும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை

rama and hanuman

நீதி – நன் நடத்தை

உபநீதி – தன்னலமற்ற உதவி

உலகத்தில் அநேகமக்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், தன் கஷ்டங்களுக்கு முடிவே இல்லை என்பதுதான்; கடவுள் தன்னிடம் கருணை காண்பிப்பதில்லை எனக் குறைக் கூறி வருகிறார்கள். ராமாயணத்திலிருந்து இந்த சிறுக் குறிப்பைப் படித்து அவர்கள் தெளிவு பெறுவார்களாக.

ஹனுமானும் விபீஷணனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் விபீஷணன் ஹனுமானைப் பார்த்து, “ஹனுமானே, நீ பிறப்பில் குரங்காக இருந்தாலும், ராம நாமத்தை இடைவிடாது கூறி , ஸ்ரீ ராமனின் கருணையும் கிருபையும் உனக்கு அதிகமாகக் கிடைத்திருக்கிறது. நீ எத்தகைய பேறு பெற்றவன்.  நானும் தான் ஸ்ரீ ராமனின் நாமத்தை இடைவிடாது கூறி வருகிறேன், இருந்தாலும் ஸ்ரீ ராமனின் அருளைப் பெறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லையே” எனக் கூறினான்.

ஹனுமான் இதன் காரணத்தை விளக்கிக் கூறினான். ராம நாம ஸ்மரணம் செய்வது சரியே. ஆனால் ஸ்ரீராமனின் காரியங்கள் ஏதாவதில் பங்கெடுத்துக் கொண்டீர்களா? ஒரு நாளாவதுஅவரைப் பார்க்கச் சென்று அவர் படும் துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்தீர்களா? உங்கள் அண்ணன் ராவணனால் சிறைப்பட்ட சீதாதேவி இலங்கையில் இருந்தார். அவரைச் சென்று ஒரு முறையாவது தரிசித்தீர்களா?  வெறும் நாம ஸ்மரனைச் செய்து, சேவை எதுவும் செய்யாமல்,  ஸ்ரீ ராமனின் அருளை எங்ஙனம் பெற முடியும்?  எனக் கேட்டார்.

நீதி:

நம் பக்தியை வெளிப்படுத்த வெறும் பிரார்த்தனை மட்டுமே போதாது. அத்துடன் கடவுள் அல்லது குருவின் உபதேசங்களை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு ஒரு மார்க்கம் என்னவென்றால் தேவை இருப்பவர்களிடம் அன்பு செலுத்தி உதவி செய்ய வேண்டும். இதயத்தில் கடவுளை நினைத்து, கைகளால் செயல் படுத்த வேண்டும். அதுதான் கடவுளை அணுகும் முறை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com