Archive | September 2022

கடவுளின் கருணை மிகவும் அவசியம்

நீதி: உண்மை

உபநீதி: பணிவு, பொறுமை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நற்சிந்தனைக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கதை.

ஒரு முறை, சாது ஒருவர் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு சில மந்திர சக்திகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அவர், கடவுளை உணர்வதற்கான தனது முயற்சிகளை மறந்து, ஆன்மீகப் பாதையை விட்டு விலகினார்.

கடவுள் இதனை அவருக்குப் புரிய வைப்பதற்காக, ஒரு சாதாரண மனிதனைப் போல் அவர் முன் தோன்றினார்.

கடவுள் அந்த சாதுவிடம், அவருக்கு மந்திர சக்திகள் இருக்கின்றனவா என்று கேட்க, அவரும் மிகுந்த பெருமையுடன் “ஆம்” என்றார்.

கடவுள், அங்கு நின்றிருந்த ஒரு யானையை அந்த சாதுவிடம் காண்பித்து, “இந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?”, என்று வினவினார்.

ஆணவம் நிறைந்த புன்னகையுடன் அந்த சாது, “இது ஒரு பெரிய விஷயமே இல்லை”, என்று கூறினார். பிறகு, சிறிது மண் துகள்களை எடுத்து, ஏதோ மந்திரங்களை உச்சரித்து, அதனைக் காற்றில் வீசினார். உடனே அந்த யானை மண்ணில் விழுந்து, வலியால் துடித்து இறந்து போனது.

மனித ரூபத்தில் தோன்றிய கடவுள், “அற்புதம்”, என்று கூறி, “இப்போது இந்த யானையை உயிர்ப்பிக்க உங்களால் முடியுமா?”, என்று கேட்டார்.

மறுபடியும் அந்த சாது சில மண்துகள்களை எடுத்து, மந்திரங்களை உச்சரித்து காற்றில் வீசினார். அந்த யானைக்கு மறுபடியும் உயிர் வந்து, எழுந்து உணவைத் தேடிச் சென்றது.

பிறகு கடவுள், “உங்களுடைய இந்த சக்தி அதிசயமானது; ஆனால் நான் ஒன்று கேட்கட்டுமா? நீங்கள் அந்த யானையை முதலில் கொன்று, பிறகு உயர்ப்பித்தீர்கள். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது? இந்தச் செயல் உங்களை சிறந்தவராக மாற்றியிருக்கிறது எனக் கருதுகிறீர்களா? கடவுளை உணர்வதற்கு அது உங்களுக்கு உதவியதா?”, என்று கேட்டார்.

இதைக் கேட்டுவிட்டு கடவுள் மறைந்தார்.

“அகங்காரம்” என்பது சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதனை நமது அகராதியில் மிகவும் முக்கியமாகக் கருதினால், அது நமது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். “அகங்காரம்” என்பது நமது கண்ணில் விழுந்த தூசி போன்றது. அது நமது பார்வையை பாதித்து, தெளிவாக பார்ப்பதிலிருந்து தவிர்த்து விடும். நம் வழியில் குறுக்கிட்டு நம் சந்தோஷங்களைப் பறித்து விடும். நம்முள் அன்பு பிரகாசிக்க வேண்டுமானால், நாம் அகங்காரத்தை விட்டுவிட வேண்டும். கடவுள் இருக்கும் இடத்தில், அகங்காரம் இருக்க முடியாது.

நீதி:

அகங்காரம் என்பது, தானே எல்லாவற்றிலும் சரி என்ற ஆட்டிப்படைக்கும் எண்ணம் ஆகும். அதனால் அது சுயநலமானது. பெருமை என்பது ஒரு மனிதனைப் பற்றிய உண்மையான விஷயங்கள் மற்றும் அவனது சாதனைகளைப் பற்றி அவன் கொண்ட உணர்வுகளைச் சார்ந்தது. அதனால் அது அவ்வளவு சுயநலமானது அல்ல. வாழ்க்கை, நம்மை இங்கே ஒரு நொடி நிற்கச் சொல்லி, அகங்காரமும், தற்பெருமையும் நம்மைக் கட்டுப்படுத்தாமல், ஒரு புதிய கோணத்தில் பார்க்கச் சொல்கிறது; அதுவும், நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்காகத் தான். ஆதலால், நாம் பணிவுடன் இருந்து, நம்மை நாமே ஒரு நல்ல மேம்பட்ட மனிதராக மாற்றிக் கொள்வதற்கு முனைப்புடன் செயல்படுவோம்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மண் பானை

நீதி: உண்மை

உபநீதி: பணிவு, நன்றியுணர்வு

ஒரு குயவனிடத்தில் பல விதமான உருவங்களில் மண்பாண்டங்கள் இருக்கும் – பானை, ஜாடி, கிண்ணம், தட்டு முதலியவை; ஆனால் அனைத்துமே களி மண்ணால் செய்யப்பட்டவையே. அதே போல் தான் கடவுளும். பல காலமாக பல்வேறு பெயர்களிலும் அம்சங்களிலும் அவரை நாம் வணங்குகிறோம்ராமகிருஷ்ணர்.

குரு உபயோகிப்பதற்கு ஒரு பாத்திரத்தைத் தேடிக் கொண்டிருந்தார்;

அலமாரியில் பல வகைகள் இருந்தன. அவற்றில் அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்?

தங்கத்தால் செய்யப்பட்ட பானை –

“என்னை எடுத்துக் கொள்ளுங்கள்”

நான் மிகவும் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கிறேன்.

மிகவும் விலை உயர்ந்தவன். எல்லாவற்றையும் சரியாகச் செய்பவன்.

என் அழகும் ஒளிர்வும் மற்ற பானைகளை விட உயர்ந்தது.

உங்களைப் போன்ற ஒரு உயர்ந்தவருக்கு, தங்கம் தான் சரியானது” என்று கூறியது.

குரு எதுவும் பேசாமல் நகர்ந்தார்.

அவர் குறுகலாகவும் உயரமாகவும், வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு தாழியைக் கண்டார்.

அது “குருவே நான் உங்களுக்கு சேவை செய்வேன். நீங்கள் அருந்தும் பானத்தை நான் தருவேன்.

நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம் உங்கள் மேஜை மேல் இருப்பேன்.

எனது கோடுகள் மிகவும் அழகானவை. என் மீது செதுக்கப்பட்டவை உண்மையானவை.

எனது வெள்ளி, தங்களுக்கு எப்பொழுதும் புகழ் சேர்க்கும்” என்றது.

அதைப் புறக்கணித்துவிட்டு குரு, பித்தளை உருளியிடம் சென்றார்.

அதன் வாய் அகலமானதாகவும், ஆழம் குறைவானதாகவும் இருந்தது; ஆனால், கண்ணாடியைப் போல அது பளபளப்பாக இருந்தது.

அது அவரை அருகில் வரும்படி அழைத்தது. பிறகு, “என்னால் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். எல்லோரும் பார்க்கும் படியாக என்னை உங்கள் மேஜை மேல் வையுங்கள்” என்றது.

அடுத்து, சுத்தமான கண்ணாடியால் ஆன ஒரு கோப்பை அவரை அழைத்தது. அது “என்னைப் பாருங்கள்! என்னிடத்தில் உள்ளவற்றை தெளிவாக நீங்கள் பார்க்க முடிகிறது.

நான் எளிதில் உடையக் கூடியவன் என்றாலும், பெருமையுடன் உங்களுக்கு சேவை செய்வேன்.

உங்கள் இல்லத்தில் எல்லாவற்றையும் சந்தோஷமாக பின்பற்றுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறியது.

அடுத்ததாக குரு மரத்தாலான ஒரு பாத்திரத்திடம் வந்தார்.

அது நன்கு இழைக்கப்பட்டு, நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உறுதியாக நின்றது.

அது “நீங்கள் என்னை உபயோகப்படுத்தலாம் குருவே.

ஆனால் நீங்கள் ரொட்டிக்கு பதிலாக பழம் வைக்க என்னை உபயோகப்படுத்தலாம்” என்று கூறியது.

பிறகு குரு கீழே இருந்த ஒரு களிமண் குவளையைக் கண்டார். அது வெறுமையாகவும் உடைந்தும் பரிதாபமாகக் கீழே கிடந்தது. குரு தன்னைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தி, சரி செய்து, நிரப்பி உபயோகப்படுத்துவார் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் அது இருந்தது.

“ஆஹா! இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

இதை சரிசெய்து உபயோகப்படுத்தி என்னுடையதாக்கிக் கொள்வேன்.

எனக்கு, தற்பெருமை உடையதோ;

அலமாரியில் குறுகலாக அமர்ந்து இருப்பதோ;

அல்லது வாய் அகன்ற ஆழமில்லாததோ;

அல்லது தனது பெருமையை பறைசாற்றிக் கொள்வதோ;

அல்லது எல்லாவற்றையும் சரியாக செய்வேன் என்ற அகந்தை உடைய பாத்திரமோ தேவையில்லை.

என்னுடைய சக்தியும் வலிமையும் நிறைந்த இந்த சாதாரண மண் பாத்திரமே போதும்” என்றார்.

பிறகு அதை மெதுவாக எடுத்து சரி செய்து, சுத்தப்படுத்தி, நிரப்பி வைத்தார். அதனிடம் அன்பாக,” நீ செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது. நான் உனக்குக் கொடுத்து நிரப்புவது போல, நீயும் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்து உதவ வேண்டும்” என்றார்.

நீதி:

நாம் எப்போதும் நமக்குக் கிடைத்துள்ள பாக்கியங்களையே எண்ண வேண்டும். மேலும் அவற்றிற்காக  நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் கடவுள் நமக்கு மேலும் பல பாக்கியங்களை வழங்கத் தயாராக இருக்கிறார். நாம் அதை உணர்ந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நமது உடைமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவைகளை விட்டால்தான் அவர் அளிக்கும் பாக்கியங்களை  வாங்கிக் கொள்ள, தேவையான இடம் நமக்குள் உண்டாகும். அப்போதுதான் நாம் முழுமை அடைந்து, நிறைந்தவர்கள் ஆக முடியும்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அகங்காரத்தை வென்று விடு

நீதி: உண்மை

உப நீதி; தன்னம்பிக்கை, திடநம்பிக்கை

ஒரு சமயம், ஒரு கிராமத்தின் அருகில் இருந்த வயலில், பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. வயலில் யார் சென்றாலும் அந்தப் பாம்பு கடித்ததால், எவருக்கும் அங்கு செல்ல தைரியமில்லை.

ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு துறவி வந்தார். வயலில் பாம்பு வசித்ததால், கிராமத்தினர் துறவியிடம் அங்கு போக வேண்டாம் என்று கூறினர். ஆனால் மாற்றுப் பாதையில் சென்றால் மிகுந்த நேரம் செலவாகும் என்பதனால், என்ன ஆனாலும் அந்த வயலின் வழியாகச் செல்ல, அந்தத் துறவி முடிவெடுத்தார்.

சில நிமிடங்களில் அந்தப் பாம்பு, துறவியைக் கடிக்கும் எண்ணத்துடன் அவரை அணுகியது; ஆனால், பாம்பு அவரை நெருங்கியதும், அவரது ஆன்மீக சக்தியினால் அது அதிர்வடைந்தது.

துறவி அந்தப் பாம்பைப் பார்த்தவுடன், எவரையும் கடிக்கக் கூடாது என்ற அறிவுரையை அதனிடம் கூறியதும், அது ஒப்புக் கொண்டது.

சில மாதங்கள் கழித்து, அந்தத் துறவி அந்த வழியே திரும்பிச் சென்ற போது, பாம்பைப் பரிசோதிக்க முடிவு செய்தார். அவர் அதைக் கண்ட போது, அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாம்பின் உடல் முழுவதும் அடிபட்டு, ஏறக்குறைய இறந்து போகும் நிலையில் இருந்தது. அது கடிப்பதை நிறுத்தி விட்டதால், கிராமத்துச் சிறுவர்கள் அதைக் கல்லால் அடித்து, ஏறக்குறைய கொன்று விட்டனர்.

அந்தத் துறவி பாம்பிடம், “பார்! நான் உன்னைக் கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; ஆனால் உன்னை சீற வேண்டாம் என்று கூறவில்லையே?” என்றார்.

நமக்கான இந்தக் கதையின் நீதி என்னவென்றால், நாம் அகம்பாவம் நிறைந்த மனிதர்களால் சூழப் பட்டிருக்கிறோம்; நாம் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது; அதே சமயம், நம் நலனையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நீதி:

அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத நம்மில் பலர், அது எங்கெல்லாம் நம்மை அழைத்துச் செல்கிறதோ அதைத் தொடர்ந்து செல்கிறோம். அகம்பாவத்தை கட்டுப்படுத்துதல் என்ற திறனுக்குப் பயிற்சி தேவை. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற நுட்பங்கள் அகம்பாவத்தைக் கரைக்கும். நாம் அகம்பாவத்திலிருந்து வெளிபட்டு வளரும் போது, அதை நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல், ஒரு கருவியாக உபயோகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட அகம்பாவத்தை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காக உபயோகப் படுத்த வேண்டும். மற்றவர்களைப் புண்படுத்தாமல், நம் நலனைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் அதன் ரகசியம் அடங்கி உள்ளது.

“அகம்பாவத்தை, சர்வாதிகாரி என்ற பட்டத்திலிருந்து இறக்கி, நமது கட்டுப்பாட்டில் இருக்கும் தூதனாகவும், சேவகனாகவும், சாரணனாகவும் வைத்துக் கொள்வதில் தான் புத்திசாலித்தனம் இருக்கிறது.” – ஜோசஃப் காம்ப்பெல்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கர்வம் கொள்ளாதே

நீதி: உண்மை

உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல், பணிவு

அறிவாளிகள் சிலர் ஒன்று கூடி, கடவுள் மனிதனைப் படைக்கும் வேலையை, ஏன் கடைசி நாளான ஆறாம் நாளுக்கு தள்ளி வைத்தார் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஒருவர், “இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் முதலில் ஒழுங்கு படுத்திவிட்டால், அதன் அற்புதங்களை மனிதர்கள் அனுபவிக்கலாம் அல்லவா?”, என்று கூறினார்.

அதற்கு மற்றொருவர், “முதலில் மிருகங்களை வைத்து சோதனை செய்து விட்டால், மனிதர்களைப் படைக்கும் போது தவறுகள் நிகழாமல் இருப்பதற்காக”, என்று வாதாடினார்.

ஒரு யூத ஞானி அப்போது அங்கு வந்தார்.

அவரிடம் அவர்கள் தங்கள் கலந்துரையாடலின் கருத்தைக் கூறிவிட்டு, “உங்கள் பார்வையில் கடவுள் மனிதனை ஏன் கடைசி நாளன்று படைத்தார்” என்று கேட்டனர்.

“இது ஒரு சாதாரண விஷயம்”, என்று கூறிய அந்த ஞானி, “எப்பொழுதெல்லாம் நாம் கர்வத்தால் செயற்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் கடவுளின் அற்புதப் படைப்பில் ஒரு கொசுவுக்குக் கூட அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்வதற்காக”, என்று கூறினார்.

நீதி:

“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற அகந்தையை(கர்வத்தை) விட்டுவிட்டு, நாம் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினால், அது நம்மை பல மடங்கு உயர்ந்த நிலைமைக்கு அழைத்துச் செல்லும். அதுவே, சுயபரிசோதனை செய்து கொண்டு, எச்சரிக்கையுடன் கூடிய அடக்கத்தோடு நடந்து கொள்ள பழக்கப்படுத்தும். இதனால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பணிவுடன் அணுகத் தொடங்குவோம். இறுதியில் நாம் பண்பட்ட மனிதர்களாக மாறுவோம்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுளின் சிறந்த கருவியாகி விடு

நீதி: உண்மை, சரியான நடத்தை

உபநீதி: நேர்மறை சிந்தனை

பல வாரங்களாக, பள்ளத்தாக்கிலிருந்து சில வினோதமான சப்தங்கள் எழும்பி, மலைமேல் உள்ள கிராமத்தில் கேட்டன. அந்த சத்தம் என்னவாக இருக்கும் என்று அந்த கிராம மக்கள் வியந்தனர்; ஆனால் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கிருந்த வயதான பெரியவர்கள் கூட அந்த சப்தங்களை முன்னர் கேட்டதில்லை.

இறுதியாக, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்து, அவனை மலையைக் கடந்து சென்று என்ன நடக்கிறது, என்பதை பார்த்து வரச் செய்ய முடிவு செய்தனர்.

இரண்டு நாட்கள் நடைப் பயணத்திற்குப் பின்னர், அவன் மலை உச்சியை அடைந்தான். அங்கிருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் பார்த்த போது, அங்கே பல மனிதர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அருகே நெருங்க நெருங்க, அங்கு பலர் வரிசையாக அமர்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு பெரிய கல்லை உளி கொண்டு செதுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

முடிவில் பள்ளத்தாக்கை அடைந்து, அங்கிருந்த ஒரு இளைஞனிடம் சென்று,”நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டான்.

அவன் ஒரு முணுமுணுப்புடன், “நான் வேலை நேரம் முடியும் வரை பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

குழப்பத்துடன் அருகில் இருந்த பெண்ணிடம் சென்று அவன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டான்.

அதற்கு அவள், “என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம்

சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள்.

தலையை சொறிந்து கொண்டே அவன் மூன்றாவது நபரிடம் சென்று,”நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டான்.

அதற்கு “நான் ஒரு அழகான சிலையை வடிவமைக்கிறேன்” என்று பதில் வந்தது.

நான்காவது நபரிடமும் இதே கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவர், “நான் ஒரு கோவிலை எழுப்ப உதவி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

அந்த மலைவாசி “ஆஹா, எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது” என்றான்.

ஐந்தாவதாக இருந்த பெண்மணியிடம் சென்று, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்றான். அதற்கு அவள், “இந்தக் கோவிலை கட்டுவதற்கு உதவி செய்வதன் மூலம், நான் இந்த ஊரின் மக்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் பெரும் தொண்டு செய்து கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அவன் “அருமை!” என்று கூறிக் கொண்டே அடுத்து ஆறாவதாக இருந்த மனிதரிடமும் இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அம்மனிதர் “நான் இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு உதவி செய்வதன் மூலம், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு தொண்டு செய்து, அதன் மூலம் நானும் முக்தி அடைய முயற்சிக்கிறேன்” என்றார்.

இறுதியாக, அந்த வரிசையில் கண்களில் ஒளியுடனும், உதட்டில் நிறைவான புன்னகையுடனும் அமர்ந்திருந்த ஒரு வயதான உற்சாகமான மனிதரிடம் சென்று, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றான்.  

அவர் புன்னகையுடன், “நான் செய்கிறேனா?” என்று கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்தார். “அந்த அகம்பாவம் கடவுளிடம் கரைந்து வெகு காலமாகிவிட்டது. நான் என்று எதுவும் என்னிடத்தில் இல்லை. என்னுள் இருக்கும் இறைவன் என்னை இயங்க வைத்து, மற்றவர்களை விழிப்புணர்வு பெறச் செய்து, தன்னிடம் இழுத்துக் கொள்கிறார்” என்றார்.

நீதி:

ஒரு மாமனிதர்  நீங்கள் அடைய வேண்டிய உயரங்களை முடிவு செய்வது, உங்களுடைய மனப்பான்மை தானே தவிர உங்களுடைய தகுதி அல்ல” என்று கூறினார் . உங்களின் மனம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களுடைய மிகப் பெரிய பலமாகவும் இருக்கலாம் அல்லது மிகப் பெரிய பலவீனமாகவும் இருக்கலாம். ஒரு நேர்மறை சிந்தனை உங்களுக்கு ஆனந்தத்தை அளித்து உங்களின் வாழ்க்கையையே மாற்றலாம். பிரகாசமான பக்கத்தைப் பார்த்தால் உங்களின் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கும். அது உங்களுக்கும் நன்மை செய்து, உங்கள் சுற்றுச்சூழலையும் அதில் உள்ள மக்களையும் நல்வழிப்படுத்தும். உங்களது அணுகுமுறை திடமானதாக இருந்தால் அது அடுத்தவர்களையும் பற்றிக் கொள்ளும். அது நீங்கள் சுற்றி உள்ள அனைத்திற்கும் ஒளி கொடுப்பது போன்றதாகும். இந்த உலகையே கடவுளின் ஒரு லீலையாகக் கருதி, நம்பிக்கையுடன் அவர் உங்களுக்குள் இருந்து வழி நடத்தச் செய்தால், இந்த நேர்மறை அணுகுமுறை வளர்வதற்கு வழிவகை செய்யும்.

உங்கள் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.

உங்களை விட அவர் அதனை சிறப்பாக வழி நடத்துவார்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE