Archive | September 2021

சவால்களை எதிர்கொள்

நீதி: நன்னம்பிக்கை

உப நீதி: தெளிவான எண்ணம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கோலோ பாகானீனி, ஒரு சிறந்த வயலின் கலைஞர் ஆவார். அவர் தம் நகைச்சுவை உணர்வால் ஒரு சிறந்த மேடைக் கலைஞராகவும் அறியப்பட்டார். அவர் அனைத்து பக்க வாத்தியங்களுடன் இத்தாலியில் நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சி தான் விசேஷமான மற்றும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் முன்னிலையில் நிக்கோலோ நிகழ்ச்சியை நடத்தினார். அவரின் கலைத்திறன் வியக்கத்தக்கதாகவும், தொனி அருமையாகவும் இருந்ததால் பார்வையாளர்கள் அவரை மிகவும் விரும்பினர்.

நிகழ்ச்சியின் முடிவில் பாகானீனி, தான் இயற்றிய அருமையான கலைப்படைப்பால் பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தி கொண்டிருந்த சமயத்தில், வயலினின் ஒரு தந்தி அறுந்து விட்டது. சில வினாடிகள் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு அவர் தலையை ஆட்டினார். பின்னர், இன்னும் அழகாக வாசிக்கலானார்.

பிறகு, அனைவரும் வியக்கும் வண்ணம் இரண்டாவது தந்தியும் அறுந்தது. சற்று நேரத்தில் மூன்றாவதும் அறுந்தது.

ஸ்ட்ராடிவாரி என்ற இத்தாலிய நாட்டை சேர்ந்தவர் தான் அந்த நவீன வயலினை உருவாக்கியவர். பாகானீனி வாசித்துக் கொண்டிருந்த அந்த வயலினிலிருந்து மூன்று தந்திகள் அறுந்து கொண்டிருந்த காட்சி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக ஆகிவிட்டது.

ஆனால், பாகானீனியோ, மேடையை விட்டு இறங்காமல், மீதி இருந்த ஒரு தந்தியை வைத்தே, அந்தக் கடினமானப் பாடலை அமைதியாக வாசித்து முடித்தார்.

நீதி:

சவால்கள் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. மேலும், அவற்றை தைரியமாக எதிர்கொள்ளும் போது, வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. ஆகையால், நாம் சவால்களை சந்திக்கும் போது, கடினமாக முயன்று அவற்றைக் கடந்து வர வேண்டும். மேலும் இலட்சியத்தை அடையும் வரை அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

வாழ்க்கையின் சவால்கள், உன்னை ஊனமாக்குவதற்கு அல்ல….

…..அவை, உன்னை நீ அறிந்து கொள்வதற்காக.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஒருமுகச் சிந்தனை

நீதி: உண்மை

உபநீதி: ஒருமுகப்படுத்துதல், தன்னடக்கம்

பெயர் தெரியாத கதாசிரியர்

பல வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற தற்புகழ்ச்சியுடைய ஒரு இளைஞன், வில்வித்தையில் நன்கு புகழ் பெற்ற ஒரு புத்த குருவிடம் சவால் விட்டான். தன்னிடம் நிரம்பியுள்ள அறிவுத்திறமையை  வெளிப்படுமாறு, தன்னுடைய முதல் முயற்சியிலேயே அவன் வில்வித்தையில் இலக்கை அடைந்தான். அதன் பிறகு அந்த வில்லை அவன் இரண்டாகப் பிளந்தான். பிறகு இளைஞன் குருவிடம் “உங்களால் இதை செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

சிறிதும் சலனமின்றி, குரு உடனே அம்பை எடுக்காமல், அவனை மலை உச்சிக்கு தன்னை பின் தொடருமாறு சைகை காண்பித்து முன்னே சென்றார். இதைக் கேட்ட இளைஞன், மிகுந்த ஆர்வத்துடன் அந்த குருவை பின் தொடர்ந்து, இருவரும் மலையின் உச்சிக்கு முன் இருந்த ஒரு ஆழமான பள்ளத்தை நோக்கிச் சென்றனர்.

அந்த ஆழமான பள்ளதின்மேல் இருந்த நிலையற்ற கட்டையின் நடுவில் நடந்து சென்று, அங்கிருந்து தொலைவில் இருந்த ஒரு மரத்தை இலக்காக வைத்துக் கொண்டு, புத்த குரு அவரின் அம்பை எய்தி, ஒரே அடியில் நேரடியாக தாக்கினார்.

பிறகு குரு “இப்போது நீ வந்து உன் திறமையைக் காண்பிக்கவும்”, என்று அந்த இளைஞனிடம் கூறிவிட்டு பின்னோக்கி நகர்ந்து, ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டார்.

அடித்தலமே கண்ணுக்கு தெரியாத அந்த படு குழியைப் பார்த்து மிரண்ட இளைஞன், மிகுந்த பயத்துடன் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், இருந்த இடத்திலேயே நின்றான்.

இளைஞனின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட குரு, “நீ வில்வித்தையில் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அம்பை விடுவிக்கும் மனதை பொருத்தவரை உன் திறமை சிறியதே” என்றார்.

மேலும் குரு, “ஒருமுகச் சிந்தனையும்,  மன வலிமையும் தான் வெற்றியின் இரண்டு விளிம்புகள்” என்று விளக்கினார்.

நீதி:

ஒருமுகச் சிந்தனை தான் வெற்றிக்கு இன்றியமையாதது. பாதையில் வரும் எல்லாவற்றையும் தன்முனைப்பு அழித்துவிடும். திறமையும், ஒருமைப்பாடும் நாணயத்தின் இரு பக்கங்கள். நாம் செய்யும் செயலில், ஒருமைப்பாடு இருந்தால் தான் வெற்றி அடைய முடியும். அதனால் நாம் செய்யும் செயலில் ஒருமைப்பாடுடன் ஈடுபட்டு நம் இலக்கை அடைவோம்! இதுவே வெற்றியின் ரகசியம்!

ஒருமுகச் சிந்தனையே வலிமையின் ரகசியம் – ரால்ஃப் வால்டோ எமர்ஸன்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி லக்ஷ்மணன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சாத்தியமற்றதை சவாலாக எதிர் கொள்ளவும்

நீதி: உண்மை, கோட்பாடு

உபநீதி: தன்னம்பிக்கை, பொறுமை

பெயர் தெரியாத கதாசிரியர்

ஒரு பத்து வயது சிறுவன், அபாயகரமான மோட்டார் வண்டி விபத்தில் தன் இடது கைகளை இழந்த போதிலும், ஜூடோ கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தான்.

ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ பயிற்சியாளரிடமிருந்து சிறுவன் பயிற்சியை தொடங்கினான். அச்சிறுவன், அக்கலையை மிகவும் சிறப்பாகக் கற்றுக் கொண்டிருந்தான். மூன்று மாத பயிற்சிக்குப் பிறகும், பயிற்சியாளர் ஒரே ஒரு அசைவை மட்டும் அவனுக்கு ஏன் சொல்லிக் கொடுத்தார் என்று அவனுக்குப் புரியவில்லை.  

இறுதியாக அச்சிறுவன், “குருவே, இன்னும் பல அசைவுகளை நான் கற்றுக் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டான்.

அதற்கு குரு, “இந்த ஒரு அசைவு மட்டுமே உனக்குத் தெரியும், இது ஒன்று மட்டுமே தெரிந்தால் உனக்கு போதுமானது” என்று பதிலளித்தார்.

அச்சிறுவனுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை; ஆனால் அவரை நம்பி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்.

பல மாதங்களுக்குப் பிறகு, குரு சிறுவனை முதல் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆச்சரியப்படும் வகையில், சிறுவன் சுலபமாக முதல் இரண்டு போட்டிகளை வென்று விட்டான். மூன்றாவது போட்டி சற்று கடினமாக இருந்தது.  அவன் எதிரில் இருந்த போட்டியாளர் பொறுமையை இழந்து சிறுவனை தாக்கினான்; ஆனால் இவன் நேர்த்தியாக தன் ஒரே அசைவை வெளிப்படுத்தி போட்டியை வென்றான். வெற்றியைக் கண்ட சிறுவன் திகைத்து போனான்; தற்சமயம் இறுதி ஆட்டத்திற்கு அவன் தேர்ச்சி பெற்றான்.

இந்த முறை, இச்சிறுவனை ஒப்பிடும் போது எதிரி வாட்டசாட்டமாக, வலிமையாக மற்றும் அதிக அனுபவம் உள்ளவனாக இருந்தான். சற்று நேரம், இச்சிறுவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. சிறுவனுக்கு அடிபட்டு விடுமோ என்ற கவலையில் நடுவர் ஒரு சிறிய இடைவேளையை அறிவித்தார். போட்டியை நிறுத்த நடுவர் முன் வந்த போது, குரு தலையிட்டார்.

குரு “இல்லை, விளையாட்டு தொடரட்டும்” என்றார்.

போட்டி துவங்கிய பின், எதிரி ஒரு பெரிய தவறை செய்தான்; தன் கவனத்தை சிதற விட்டான். உடனடியாக, அச்சிறுவன் தன் அசைவை நிகழ்த்தி, அந்த போட்டியிலும் ஜெயித்து, பந்தயத்திலும் வெற்றி பெற்றான். சிறுவன் சிறந்த ஆட்டக்காரனாக திகழ்ந்தான்.

வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, குருவும் சிறுவனும் ஒவ்வொரு போட்டியையும், அதில் ஒவ்வொரும் அசைவையும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். பிறகு சிறுவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான்.

சிறுவன், “குருவே, ஒரே ஒரு அசைவை நிகழ்த்தி எப்படி நான் இந்த போட்டியை ஜெயித்தேன்?” என்று கேட்டான்.

அதற்கு குரு “நீ இரண்டு காரணங்களினால் வெற்றி பெற்றாய்” என்று கூறி, “முதலாவதாக ஜுடோ தற்காப்பு கலையில் இருக்கும் மிகவும் கடினமான அசைவில் நீ தேர்ச்சி பெற்றிருக்கிறாய். இரண்டாவதாக நீ நிகழ்த்திய அசைவை தடுப்பதற்கு ஒரே வழி என்னவென்றால் உன் இடது கையை அவன் பற்ற வேண்டும்” என்ற ஆழ்ந்த செய்தியை சொன்னார்.

சிறுவனின் பலவீனம் அவனின் மிகப் பெரிய பலமாக மாறியது.

நீதி:

ஒவ்வொருவருக்கும் பலவீனங்கள் இருக்கின்றன; ஆனால், நம் குருவின் சொற்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும். நமக்கு காரணம் புரியாமல் இருக்கலாம்; ஆனால் அவர் என்ன செய்தாலும் நன்மைக்கே என்ற தீவிர நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். நாம் தன்னம்பிக்கையோடு, பொறுமை மற்றும் விசுவாசத்துடன் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படி செய்யும் போது, பலவீனம் பலமாக மாறுவதை நாம் புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில், வாழ்க்கைப் பிரச்சனைகள் நம் பலங்களை வெளியில் கொண்டு வர மட்டுமே, பலவீனங்களை வெளிப்படுத்துவதற்கு அல்ல.

எவராவது இயலாமை என்ற சவாலை உன் முன் வைக்கும் போது, சச்சரவுகளுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கையின் சிறந்த உந்துகை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

விரும்பியவாறு மாறி விடு

நீதி – உண்மை, உறுதி

உபநீதி: விடாமுயற்சி, நம்பிக்கை

பெயர் தெரியாத கதாசிரியர்

டென்னசி நகரத்தில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில், ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு சிறுமி பிறந்தாள். அக்குடும்பத்தின் 22 குழந்தைகளில், 20 வதாக பிறந்த அக்குழந்தை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிறந்து, பலவீனமாக இருந்தாள். அவள் உயிரோடு இருப்பதே சற்று சந்தேகமாக இருந்தது. அவளுக்கு 4 வயது இருக்கும் போது, மிகுந்த மார்சளிக் காய்ச்சலும், குடல் வழி வேதியில் நச்சேற்றமும் இருந்ததால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இடது கால் செயலாற்ற முடியாமல் இருந்தது. அவள் இரும்பு கால் பிடிப்பி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். இத்தனை சோதனைகள் இருந்தும் கூட, அவளின் தாய் அவளுக்கு எச்சமயமும் உற்சாகமளித்துக் கொண்டிருந்தாள்.   

இத்தகைய சூழ்நிலையில் இருந்த போதிலும், தாய் மகளை உற்சாகப்படுத்தி, வேண்டியதை வாழ்க்கையில் செய்யலாம் எனத் தாய் அவளுக்கு உறுதி அளித்தாள். நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் மற்றும் தளர்வுறாத மனப்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று தாய் அவளிடம் கூறினாள்.

மருத்துவர்கள் நடக்கவே முடியாது என்று கூறினர். அச்சிறுமி 9 வயதாக இருந்த போது, கால் பிடிப்பியை அகற்றி விட்டு முதல் அடி எடுத்து வைத்தாள். நான்கு வருடங்களில், மருத்துவ அற்புதமாக அவள் எல்லோரையும் போல சீராக நடந்தாள். பிறகு உலகிலேயே சிறந்த பெண் ஓட்டக்காரராக இருக்க வேண்டும் என்ற வியக்கத்தக்க எண்ணம் அவளுக்கு வந்தது. இடது கால், இந்த நிலைமையில் இருந்த போது, அவளுக்கு இப்படி ஒரு எண்ணம். 13 வயதில், அவள் ஒரு பந்தயத்தில் நுழைந்து, இறுதியாக தேர்ச்சிப் பெற்றாள். ஒவ்வொரு முறையும், அவள் உயர்நிலைப் பள்ளியில், அங்கு நடைபெற்ற அனைத்து பந்தயங்களிலும் பங்கேற்றுக் கொண்டு, கடைசி இடத்தையே பெற்றாள். பந்தயங்களில் பங்கேற்க வேண்டாம் என்று எல்லோரும் அவளை கெஞ்சினர். 

எனினும், ஒரு பந்தயத்தில் சற்று முன்னேற்றம் தெரிந்தது. ஒரு நாள், அவள் பங்கேற்றுக் கொண்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாள். அதற்குப் பிறகு வில்மா ருடோல்ஃப் ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றியாளராகத் திகழ்ந்தாள். பிறகு அவள் டென்னசி மாநில பல்கலைக்கழகத்திற்கு சென்று, எட் டெம்பில் என்ற ஒரு பயிற்சியாளரை சந்தித்தாள். அவளின் தளர்வுறாத மனப்பான்மை மற்றும் திறனையும், நம்பிக்கையையும் அவர் பார்த்தார். அவளுக்கு சிறந்த பயிற்சி கொடுத்ததால், அவள் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றாள்.

அங்கு அவள், உலகில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிறந்த ஓட்டக்காரரான ஜூட்டா ஹைனா என்ற பெண்மணிக்கு எதிராக போட்டியிட்டாள். அதுவரை  எவருமே அவளை ஜெயித்ததில்லை. 100 மீட்டர் பந்தயத்தில் வில்மா ருடோல்ப் வெற்றி பெற்றாள். பிறகு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் வில்மா அவளை தோற்கடித்தாள். தற்சமயம் வில்மா ஒலிம்பிக் போட்டியில், இரண்டு தங்க பதக்கங்களை ஜெயித்திருந்தாள்.

இறுதியாக, 400 மீட்டர் இடைமாற்று ஓட்டப்பந்தயம் நடந்தது. மீண்டும் இருவரும் எதிர் எதிராக பங்கேற்றனர். வில்மா குழுவில் இருந்த முதல் இரண்டு ஓட்டக்காரர்கள், கோலை ஒழுங்காக மாற்றிக் கொண்டனர். மூன்றாவது ஓட்டக்காரர், வில்மாவிடம் கோலை கொடுக்கும் சமயம், அவளுக்கு இருந்த உத்வேகத்தில் கோலை நழுவ விட்டாள். ஜூட்டா தன்னுடைய கோலை எடுத்துக் கொண்டு ஓடுவதை வில்மா கவனித்தாள். ஜூட்டாவை தோற்கடிப்பது அசாத்தியம் என்று எல்லோரும் நினைக்க, வில்மா அந்த சாதனையையும் செய்து முடித்தாள்.

வில்மா ருடோல்ஃப் ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்றாள்.

உலகத்தில் சிறந்த மனிதர்கள் என்று எவருமே இல்லை; சிறந்த சவால்கள் மட்டும் தான்…..

……சாதாரணமான மனிதர்கள் எழுந்து எதிர் கொள்ள.

நீதி:

நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் மற்றும் தளர்வுறாத மனப்பான்மையுடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடிந்தால், அது ஒரு உண்மையான வரப்பிரசாதம் எனக் கூறலாம். நாம் சவால்களை எதிர்கொள்ளும் போது, அவைகளை வாய்ப்புகளாக மாற்றிக் கொண்டால், நம்முள் இருக்கும் திறமைகளை மேம்படுத்தி, வெளிப்படுத்தலாம். நம்முள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு கொண்டால், நமக்கு இருக்கும் சவால்களை சரியான அணுகுமுறையுடன் எதிர்கொண்டு, நம் இலட்சியங்களை வெற்றிகரமாக சாதிக்கலாம்.

வாழ்க்கை கடுமையாக இருக்கும் போது, கடும் உறுதி இருப்போர் வெற்றி பெறுகின்றனர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE