Archive | April 2016

அமைதியான மனிதர்

the quiet man picture 1நீதி – அன்பு

உபநீதி – மன்னிக்கும் குணம்

ராஜ் ஒரு அமைதியான மனிதர். அவர் யாருடனும் அதிகமாகப் பேச மாட்டார்; 50 வருடங்களாக அதே சுற்றுப்புறத்தில் வாழ்ந்தாலும், எவருக்கும் அவரைப் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை. அவர் விருந்தினர்களைப் புன்சிரிப்புடன், திடமான ஒரு கைக் குலுக்கலோடு வரவேற்பார். பணியிலிருந்து ஓய்வு எடுப்பதற்கு முன், அவர் தினமும் பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரில், துப்பாக்கிக் குண்டு அடியினால் பாதிக்கப்பட்டதால், அவரால் சரியாக நடக்க முடியவில்லை. போரில் உயிர் பிழைத்த போதிலும், அவர் நடப்பதற்கு தடுமாறியதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலில் நடக்கும் தீவிரவாத செயல்கள் மற்றும் போதை மருந்து நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது, அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற பயம் இருந்தது.

the quiet man picture 2

ஒரு நாள், ராஜ் தேவாலயத்திற்குச் சென்ற போது, அங்கிருந்த அறிவிப்பை படித்தார். அமைச்சரின் பூந்தோட்டத்தில் வேலை செய்ய தொண்டூழியர்கள் தேவை என்பதை கவனித்து விட்டு, தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரது 87 வது  வயதில், நாங்கள் பல நாட்களாக பயந்த அந்த நிகழ்வு நடந்தது.

the quiet man picture 3

ஒரு நாள், அவர் அமைச்சரின் வீட்டு செடிகளுக்கு நெளிவுக்குழாய் (ஹோஸ் பைப்) வழியாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். திடீரென, மூன்று முரடர்கள் அவரை பயமுறுத்த, ராஜ் அதை பொருட்படுத்தாமல், “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டார். அவர்கள் போக்கிரித்தனமான சிரிப்புடன், “ஆம்” என்றார்கள். ஒருவனுக்கு நெளிவுக்குழாவை நீட்டியவுடன், மற்றவர்கள் அவரை கீழே தள்ளினார்கள். ஒரு பக்கம் நீர் போய் கொண்டிருந்தது; மற்றொரு பக்கம், இந்த மூன்று மனிதர்களும், அவர் கடிகாரத்தையும், பணப்பையையும் எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள், அமைச்சர் அவருக்கு உதவி புரிய ஓடி வந்தார்.

the quiet man picture 4

ஜன்னல் வழியாக அமைச்சர் இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்; ஆனால் அவர் அங்கு வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. “சரியாக இருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டதற்கு, ராஜ் அந்த பிரச்சனையை பெரிதாகப் பொருட்படுத்தாமல், “ஏதோ தெரியாமல் செய்து விட்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்” என்று மிருதுவாகக் கூறினார்.

ஒரு நிமிடத்தில் எழுந்துக் கொண்டு, நெளிவுக் குழாயையும், உடைகளையும் சரிப் படுத்திக் கொண்டு,  அவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற தயாரானார். உடனடியாக அமைச்சர், “உங்களால் முடியுமா?” என்று கேட்டதற்கு, அவர் “நான் நன்றாக இருக்கிறேன். செடிகள் காய்ந்து போய்விட்டன. இன்று கட்டாயமாக தண்ணீர் ஊற்ற வேண்டும்” என்று கூறினார்

ராஜின் விசித்திரமான மனப்பான்மையைப் பார்த்து, அமைச்சர் வியந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, மறுபடியும் அதே மூன்று முரடர்கள் வந்தனர். இந்த சமயமும், “தண்ணீர் வேண்டுமா?” என்று ராஜ் கேட்டார். அதற்கு கேலித்தனமாக நெளிவுக்குழாயை அவர் கையிலிருந்து பிடுங்கி, தலையிலிருந்து கால் வரை தண்ணீரை ஊற்றி, அவர் முழுவதும் நனையும்படி அவர்கள் செய்தனர். இந்த முறை, அவர்கள் அவரிடமிருந்து எதையும் அபரிக்கவில்லை.

அவரை அவமானப் படுத்திய பிறகு, சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அவர்கள் சென்றனர். ராஜ் இந்த அவமானத்திற்குப் பிறகும் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. சூரியனின் கதிர்கள் படும் இடத்தில் சென்று, நெளிவுக் குழாயை மறுபடியும் எடுத்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் ஆரம்பித்தார்.

the quiet man picture 5

கோடைக்காலம் முடிவடையும் சமயம். ஒரு நாள், ராஜ் பூந்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பின்புறம் யாரோ வரும் சத்தத்தைக் கேட்டு, திடுக்கிட்டு, தடுமாறி, செடிகளுக்கு நடுவில் விழுந்தார். அவர் எழுந்திருக்க முயற்சித்த போது, ஒரு உயரமான மனிதன் தன் அருகில் வருவதை கவனித்தார். அம்மனிதன் மூன்று முரடர்களில் ஒருவன். அவனது தாக்குதலுக்கு ராஜ் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அம்மனிதன், ‘கவலைப் படாதீர்கள். இம்முறை நான் உங்களை துன்புறுத்த மாட்டேன்” என்றான்.

அந்த மனிதன், கனிவாகப் பேசி, அவர் எழுந்திருக்க உதவினான். பிறகு, ஒரு கசங்கிய பணப்பையை அவரிடம் நீட்டியபடி, “இது உங்களுடையது. உங்கள் பணம் அனைத்தும் இதனுள் இருக்கிறது” என்றான். அதற்கு ராஜ், “எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீ எதற்காக எனக்கு உதவுகிறாய்” என்று கேட்டார். அதற்கு அவன் தர்ம சங்கடத்துடன், “நான் உங்களிடமிருந்து சரியான பாடம் கற்றுக் கொண்டேன். நான் அந்த கும்பலுடன் சேர்ந்து வயதானவர்களைத் துன்புறுத்தி, பணத்தையும் திருடி, அவர்களை வேதனைப் படுத்தியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும், நீங்கள் எங்களுடன் சண்டை போடாமல் பரிவுடன் நடந்து கொண்டு, தண்ணீர் கொடுத்தீர்கள். எங்கள் பகைமையை வெளிப்படுத்திய போதிலும், அன்போடு இருந்தீர்கள். நாங்கள் உங்களை வெறுத்த போதிலும், நீங்கள் எங்களை வெறுக்காமல் அன்போடு இருந்தீர்கள்” என்றான்.

ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு அவன், “உங்கள் பொருட்களை அபகரித்தப் பிறகு, என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பை நான் திருந்தியதற்கு நன்றி கூறும் ஒரு விதம்” என்று கூறி தன் வழியை நோக்கி சென்று விட்டான்.

அவன் சென்ற சில நிமிடங்களில், ராஜ் பணப்பையைத் திறந்தார். அதில் அவருடைய பணி ஓய்வுக்கு கிடைத்த கடிகாரம் இருந்தது. அதை கைகளில் அணிந்து கொண்டு, பணப்பையில் இருந்த திருமணப் படத்தை பார்த்தார்; பல வருடங்களுக்கு முன்பு இறந்த மனைவியின் புன்சிரிப்பை ஞாபகப் படுத்திக் கொண்டார்.

the quiet man picture 6

குளிர் காலத்தில், கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு  ராஜ் மரணமடைந்தார். கடைசி சடங்குகளுக்கு பல மனிதர்கள் வந்திருந்தனர். ராஜ் பராமரித்த பூந்தோட்டம், வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு பாடம் என்று அமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு ஓரத்தில் அந்த உயரமான மனிதன் உட்கார்ந்திருப்பதையும் கவனித்தார்.

அமைச்சர் கண்ணீருடன், “எல்லோரும் ராஜைப் போல பூந்தோட்டத்தை நன்றாக பராமரித்து, அவரின் நல்ல எண்ணங்களை நினைத்து வாழ வேண்டும். நாம் அவரையும், அவரின் தோட்டத்தையும் ஒரு நாளும் மறக்க முடியாது” என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு அறிக்கை – “ராஜ் அவர்களின் பூந்தோட்டத்தைப் பராமரிக்க ஆள் தேவை.”

இரண்டு நாட்களுக்கு பிறகு, அமைச்சரின் கதவை தட்டிய சத்தம் கேட்டது. கதவைத் திறந்த பொழுது, அந்த உயரமான மனிதன் நின்று கொண்டிருந்தான். முரடனாக இருந்த அந்த மனிதன், ராஜின் நடவடிக்கைகளைப் பார்த்து நல்லவராகத் திருந்தியதைப் பார்த்து அமைச்சர் மகிழ்ச்சியுற்றார்.

அமைச்சர் அவர் கையில் சாவிகளைக் கொடுத்து, “உன் நன்றி உணர்வை அவருக்கு வெளிப்படுத்தும் வகையில், அவர் பூந்தோட்டத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். கொடுத்த வாக்குக்கு ஏற்ப மிக ஆசையாக பூந்தோட்டத்தைப் அவன் பார்த்து கொண்டான்.

இம்மனிதன் வேலைக்கு சென்று, சில வருடங்களில் ராஜ் போலவே தோட்டத்தை நன்றாக பராமரித்து, காய்கறிகளையும், பழங்களையும் விளைவித்தான். அந்த சமயத்தில், அவன் கல்லூரி சென்று படித்து, திருமணம் செய்து கொண்டு, சமூகத்தில் பிரபலமான மனிதனாகத் திகழ்ந்தான். ஆனால், அமைச்சருக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், ராஜின் ஞாபகமாக அவரைப் போலவே தோட்டத்தை பராமரித்தான்.

சில வருடங்களுக்குப் பிறகு,  இம்மனிதன் புதிய அமைச்சரிடம், “இதற்கு மேல் பூந்தோட்டத்தை பார்த்து கொள்வது கடினமாக இருக்கும். என் மனைவிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது” என்று சொன்னான்.

தோட்டத்தின் சாவிகளை பெற்றுக் கொண்ட அமைச்சர்,  அவனை வாழ்த்தி குழந்தையின் பெயரைக் கேட்டார்.

அதற்கு அவன் பெருமையோடு சொன்ன பதில், “ராஜ்!”

நீதி:

மற்றவர்கள் நம் மனதை வேதனைப் படுத்தினாலும், நாம் கோபப்படாமல் சூழ்நிலையைச் சரியாக சமாளித்து நல்லவர்களாக இருந்தால், அவர்களின் மனதில் ஒரு மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை. நாம் நல்ல மனிதர்களாக வாழ்ந்து, மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி, அன்போடு இருப்பது தான் முக்கியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

 

நேரத்தை நிர்வகிப்பது

managing time effecively picture 1

நீதி – நன் நடத்தை

உபநீதி – நேரத்தை ஒழுங்காக பயன்படுத்தும் நுட்பம்

வித்யாசாகர் என்று இளைஞன் ஒருவன் இருந்தான்.  தொலைக்காட்சி பார்ப்பதில் வெறித்தனமான ஒரு ஆசை. காலை சிற்றுண்டியை ஒழுங்காக சாப்பிட மாட்டான். வேலைகளைச் செய்ய மறந்து விடுவான்; சில சமயங்களில், தொலைக்காட்சியை பார்த்து விட்டு தாமதமாகச் செய்வான்.

ஒரு நாள், தபால் பெட்டியில் மர்மமான கண்ணாடிகள் இருந்தன. ஒரு காகிதத்தில், “இந்த கண்ணாடிகளை போட்டுக் கொண்டால், உனக்கு நேரம் தெரியும்” என்று எழுதப்பட்டிருந்தது.

managing time effectively picuture 2வித்யாசாகருக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணாடியை அணிந்து  கொண்டு, தன் அண்ணாவை பார்த்தான். தலையின் மேல் பூக்கள் குவிந்திருந்தன; ஒவ்வொரு பூவாக கீழே விழுந்தது; யாரைப் பார்த்தாலும் இதே காட்சி, ஆனால் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்களின் நடவடிக்கையைப் பொருத்து, பூக்கள் அதிகமாக அல்லது குறைவாகக்  காணப் பட்டது.

மறுநாள் காலை, சிற்றுண்டியை சாப்பிடும் முன், கண்ணாடியை அணிந்தான். என்ன ஆச்சரியம் என்றால், அவனிடமிருந்து பூக்கள் தொலைக்காட்சியின் திசையில் சென்றன. அது மட்டுமல்ல; தொலைக்காட்சிக்கு ஒரு பெரிய வாயும் இருந்தது. எல்லாப் பூக்களையும் வெறித்தனமாக விழுங்கிக் கொண்டிருந்தது.

எங்கு சென்றாலும், இந்த காட்சி கண்ணுக்கு புலப்பட்டது. அன்றிலிருந்து, வீணாக தொலைக்காட்சி பார்ப்பது தவறு என்று புரிந்து கொண்டான்.

நீதி:

நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும்  இணையம்  மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதிக்கின்றது. இந்த கருவிகளை அளவாகப்  பயன்படுத்த வேண்டும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். இவை அனைத்தும் அதிகமாக இல்லாமல் அளவாக இருப்பவன் தான் சராசரி மனிதன்.  பல சமயங்களில், நேரத்தை பயனில்லாத செயற்பாடுகளில் செலவழிக்காமல், திறமைகளை மேம்படுத்தும் வகையில் உபயோகமாக செலவழித்தால், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வயதான குடிமகனுக்கு உதவிய அன்பான நபர்

a good samarian helps people picture one

நீதி – உண்மை, வாய்மை

உபநீதி – கடமை உணர்ச்சி, நற்பண்பு

ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கருணைக்கு ஜப்பானிய சமூகம் தெரிவிக்கும் நன்றி தான் இந்த நிகழ்வின் சாரம். இது ஒரு உண்மையான அனுபவம்.

சிறிது நாட்களுக்கு முன், திருமதி மகி மத்சூரா (61), மங்களூரிலுள்ள  ஹம்பங்கட்டா என்னும் இடத்தில், தன்னுடைய பணப்பையை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் தொலைத்து விட்டார். மிகவும் கவலைப்பட்ட அப் பெண்மணி நகரத்தில் தனக்குத் தெரிந்த ஹருகா இடோ என்ற ஜப்பானி பெண்மணியை  உதவிக்கு அழைத்தார். தற்காப்பு கலை தெரிந்த இப்பெண்மணி மகி மத்சூராவின் பாதுகாவலராக இருந்தார்.

திருமதி இடோவின் வார்த்தைகளில் – “அந்தச் சமயத்தில், திருமதி மத்சூராவின் கைபேசியிலிருந்து ஒரு ஆட்டோ ஓட்டுனர் பேசினார். ஆனால் அப் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த சில நபர்கள் அவர் பேசியதை மொழி பெயர்த்துச் சொன்னார்கள். திருமதி மத்சூராவின் ஜப்பானிய சிநேகிதிகள் அங்கு வந்த பொழுது, ஆட்டோ ஓட்டுனர் தன்னை அடையாளம் கண்டுபிடித்து, பணப்பையைத் திருப்பிக் கொடுத்ததாக சொன்னார். செய்த உதவிக்கு தான்  சன்மானம் தர விரும்பினாலும், ஆட்டோ ஓட்டுனர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் என்றும் கூறினார்.

பெயர் தெரியாத அம் மனிதன் செய்த உதவி போற்றத்தக்கது. நம் இந்திய நாட்டுக்கே ஒரு எடுத்துக் காட்டு. பத்திரிகைத் துறைக்கு திருமதி இடோ ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தின் சாரம் – ஒரு சிறு தவறான ஏமாற்றுச் செயல் ஒரு நகரத்தின் பெயரையே கெடுத்து விடும். அது போல, கருணையுள்ள ஒரு நற்செயல்,  நாட்டின் மதிப்பை அதிகரித்து விடும். மங்களூரில் உள்ள மனிதர்களின் நல்ல மனதும், எண்ணங்களுமே அவ்வூரின் சொத்து ஆகும்.

நன்றி – தினசரி பத்தரிகை “தி ஹிந்து”

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஸ்ரீ ராம நவமி

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள். அதன்படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத்தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்தது. ராமர் அவதரித்த நாள் ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மத்தை காக்க அவதரித்த ராமர்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக அவதரித்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, மற்றும் பரசுராம அவதாரம் முதல் ஆறு அவதாரங்கள். ஆகியவை. இந்த ராமாவதாரத்தில் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

அவதார சிறப்புகள்

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராமாவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ராம நவமி கொண்டாட்டம்

அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்;  பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராம நாமத்தின் மகிமை

சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரியாமல் போனாலும், மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் இந்த ‘ராம’ நாமத்தைப் பாராயணம் செய்தாலே போதும். அவனுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவான் என்பது உண்மை. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும்  என்பது வேதவாக்கு.

இதனை ராக மாலிகையாக ‘நாரணன்’ எழுதியது.

“இராமனை நினைவு கொள்வாய் மனமே-அந்த

கோசலை மகனை துதி செய்வாய் தினமே!

சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து

இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த”

இவ்வளவு எளிமையான, இனிமையான லகுவான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்துக் கடைப்பிடித்து வாழ்வில் வெற்றியடைவோமாக.

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பற்றி கூற வேண்டும் என்றால் பல ஆயிரம் கதைகள் கூறலாம். ஆனாலும், ஒரு சிறு கதையை மட்டும் உங்களுக்கு கூறுகிறேன்.

ஒரு ஊரிலே ஒரு வயதான ஏழை பிரம்மச்சாரி இருந்தான். அவனுக்கு கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாது என்றான்.’ ராமபிரான். கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு வரம் கேட்டான்.

‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்.’ என்று ஒரே ஒரு வரம் கேட்டான். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.

வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?

கண்களும் வந்து விட்டன.

கிழவனுக்கு ராம நாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை, இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.

பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்.

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்

Source

http://tamil.oneindia.com/art-culture/essays/2011/ramanavami-chithirai-ramayana-temple-aid0091.html

http://anjaneyar.org/ramanama_mahimai.html

 

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

tamil new year 2016 picture 1

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின ‌பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்‌ட‌வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண்திற‌ந்திட ‌வேண்டும்

காரியத்தில் உறுதிவேண்டும்

பெண்விடுதலை வேண்டும்

பெரியகடவுள் காக்கவேண்டும்!

மண்ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது.

புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்)  மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

தமிழ் மாதக் கணிப்பானது சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அவ் இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனவும்; சித்திரை மாதமே தமிழ் மக்களின் வருடத்தின் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

ஸ்நானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும். பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு

வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது. புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

அறுசுவை உணவு

அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி

tamil new year 2016 picture 2 mango pachidi

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.அறுசுவையும் கலந்து செய்யும் மாங்காய் பச்சடியைப் போல் வாழ்க்கையும் சுகமும் துக்கமும் எல்லாம் கலந்து வரும். அதுதான் பச்சடி பண்ணுவதின் முக்கியத்துவம்.

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

SOURCE:

  1. http://www.thulikal.com/சித்திரைப்-புத்தாண்டும்/
  2. Google searches

மன அமைதி

நீதி – நன் நடத்தை

உபநீதி – மன அமைதி

மன அமைதி முதல் படம்ஒரு கிராமத்தில், ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவன் வீட்டு அருகில் ஒரு வேட்டைக்காரன் வசித்து வந்தான் வேட்டைக்காரனிடம், அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று, விவசாயியின் ஆட்டுக் குட்டிகளை துரத்தி, கடித்து விடும். இதனால் கலக்கமுற்ற விவசாயி, தன் பக்கத்து வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “ஐயா, உங்கள் நாய்களை சற்று பார்த்துக் கொள்ளுங்கள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்கி காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை பெரிதாக கவனிக்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை, நாய்கள் வேலி தாண்டி வந்து, பட்டிக்குள் புகுந்து, பல ஆட்டுக்குட்டிகளை கடித்தன. இந்த முறை, விவசாயி இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்தி கடிப்பது, இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்” என்றான்.

இதைத் தொடர்ந்து, ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி,  அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

முன்பொரு முறை, பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருந்ததால், பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு இருந்தது.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள சச்சரவைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப் போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்று கேட்டார்.

பஞ்சாயத்து தலைவர் கூறிய யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

தலைவர், “சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கும்; அவனும் உன் நண்பனாக இருக்க நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?” என்று கேட்டார்.

அதற்கு விவசாயி, “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான்.

அடுத்து, பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவனிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் கூறிய விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே சந்தோஷம். இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கிலியால் கட்டிப் போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலேயே அவன் நாய்களை சங்கிலியால் கட்டிப் போட்டான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, வேட்டைக்காரன் தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை விவசாயிக்கு பரிசளித்தான்.

இவர்களுக்கு இடையே, நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மன அமைதி முக்கியமல்லவா…….???

சிந்தனை செய் மனமே……!!!

நீதி:

பிரச்சனைகள் தான் வேறு வேறு. நம்மிடம் நியாயம் அல்லது வலிமை இருக்கிறது என்பதற்காக, வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது.

மன நிம்மதி மிகவும் முக்கியம். அன்றாட வாழ்க்கையில், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மன நிம்மதியை இழந்து விடுவோம்.

மன அமைதி கிடைசி படம்

அதற்கும் மீறி பிரச்சனைகள் இருந்தால், சமூகத்தில் சுமூகமாக பிரச்சனைகளைத் தீர்க்க, மன உறுதியோடு செயல்பட வேண்டும்.

கதையைக் கேட்க:

கதையைப் பார்க்க:

கல் உடைப்பவன்

நீதி – நன் நடத்தை

உபநீதி – தன்னம்பிக்கை,  மனநிறைவு

the stone cutter picture 1ஒரு சிறிய கிராமத்தில் கல் உடைப்பவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் நாள் தோறும் அயராது உழைத்து கடினமான கற்களை வெட்டி அழகிய சிலைகளாகச் செதுக்கி விற்று வந்தான். இதனால் அவன் கைகள் எப்போதும் கரடு முரடாகவும் துணிகள் அழுக்காகவும் இருந்தன. ஒரு நாள், வழக்கம் போல, ஒரு பாறாங்கல்லைத் தேர்ந்தெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான். அன்று வெப்பமான நாள். சில மணி நேரங்கள் கடினமாக உழைத்த பின், அவன் மிகவும் களைத்துப் போய் நிழலில் சற்று நேரம் அமர்ந்து, பின் உறங்கியும் விட்டான். சிறிது நேரத்தில் சில மக்கள் அருகில் வரும் சத்தம் கேட்டு கண் விழித்தான். சிப்பாய்களும், சேவகர்களும் சூழ்ந்தபடி, பல்லக்கில் அந்நாட்டு ராஜா வந்து கொண்டிருப்பது  என்று புலப்பட்டது.

the stone cutter picture 2“நான்கு வாட்டசாட்டமான வாலிபர்கள் சுமந்த படி, பல்லக்கில் சொகுசாக அமர்ந்து கொண்டிருக்கும் இந்த ராஜா எவ்வளவு கொடுத்து வைத்தவர்!!! நானும் கல் உடைப்பவனாக இல்லாமல் ஒரு ராஜாவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று மனதிற்குள் அங்கலாய்த்தான். அவன் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு விசித்திர செயல் நிகழ ஆரம்பித்தது. அந்தக்  கல் உடைப்பவனின் அழுக்கான பழைய உடைகள் மறைந்து அழகிய பட்டு ஆடைகளாக மாறின. விலை உயர்ந்த நகைகள் அவனை அலங்கரித்தன. அவன் கைகள் மிருதுவாகி, அவனும் ஒரு அழகிய பல்லக்கில் அமர்ந்தபடி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து, வியந்து போனான். “ஆஹா! ஒரு ராஜாவாக இருப்பது எவ்வளவு சுலபமான வேலை; எனக்கு சேவை செய்ய எத்தனை பேர் உள்ளார்கள்” என்று மகிழ்ந்தான். நேரம் செல்லச் செல்ல அதிகமான வெய்யிலால் அவனுக்கு வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது; புழுக்கம் தாளவில்லை. சிறிது நேரம் ஊர்வலத்தை நிறுத்தி, ஓய்வெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் படைத்தலைவனோ, “அரசே இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நாம் கோட்டையை அடையவில்லை என்றால், என் தலையை வெட்டி விடுவதாக நீங்கள் காலையில் தான் சபதம் எடுத்தீர்கள்” என்று கவலையாக கூறினான். கல் உடைப்பவனும் அவன் மேல் பரிதாபம் கொண்டு, ஊர்வலம் தொடர அனுமதித்தான். நேரம் செல்லச் செல்ல வெப்பம் இன்னமும் அதிகமாகி அவன் மிகவும் அவதிப்பட்டான். “ராஜாவாகிய நான் பலசாலி தான். ஆனால் என்னை விட அந்த சூரியன் எவ்வளவு பலசாலி. அந்த சூரியனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று ஒரு யோசனை தோன்றியது. உடனே அவன் சூரியனாக மாறிவிட்டான்.

the stone cuttr picture 3புதிய சூரியனின் சக்தியை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் அனலாகக் கொதித்து வயல்களை எல்லாம் தன் கதிர்களால் எரித்து, பெருங்கடல்களை எல்லாம் வற்றிப் போகச் செய்து, உலகையே மறைக்கும் ஒரு பெரிய அடர்ந்த மேகமாக மாற்றிவிட்டான். அந்த மேகத்தை தாண்டி அவனால் பார்க்க முடியவில்லை. “இந்த சூரியனை விட மேகங்கள் தான் பலசாலி, நான் மேகமாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று எண்ணியவுடன் அவனும் பெரிய கருமேகமாக மாறினான். எங்கும் கடும் மழை பெய்து வயல்கள் எல்லாம் அழிந்து போகச் செய்தான். வீடுகள், மரங்கள் எல்லாம் பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் ஒரு பெரும் பாறாங்கல் மட்டும் அசையாமல் அப்படியே இருந்தது.

“மேகமான என்னை விட அந்த பாறாங்கல் தான் இன்னும் பலசாலி! அதே சமயத்தில், அந்தக் கல்லையே ஒரு கல் உடைப்பவனால் தான் செதுக்கி மாற்ற முடியும். நான் மறுபடியும் ஒரு கல் உடைப்பவனாக மாறினால், எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று எண்ணினான். உடனே முன்பு இருந்தது போலவே அழுக்கான துணிகளுடனும் கரடு முரடான கைகளுடனும் ஒரு கல்லின் மேல் அமர்ந்து இருப்பதை உணர்ந்தான். மிகவும் சந்தோஷமாகத் தனது கருவிகளை எடுத்துக் கொண்டு அக்கல்லில் வேலை செய்யத் தொடங்கினான்.

நீதி

இக்கரைக்கு அக்கரை எப்பவும் பச்சை. நீங்கள் இருக்கும் இடம் தான் சிறந்தது. நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதையே சிறப்பாகச் செய்யுங்கள். எல்லாம் நன்மைக்கே.

மொழி பெயர்ப்பு:

சரண்யா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நம்பிக்கையும், மன உறுதியும்

நீதி – அமைதி /  நன் நடத்தை 

உபநீதி – விசுவாசம் / பொறுமை / தீர்மானம் 

faith and determination picture 1ஓர் இரவு, இருண்ட மேகங்களுடன் பலத்த காற்று வீசியது. கதீஜா என்ற பெண்மணி அவளுடைய மூன்று இளங் குழந்தைகளோடு அவர்களின் அறையில் ஒரு கிழிந்த விரிப்பின் மேல் அமர்ந்திருந்தார். தன் கணவர் வீடு வந்து சேருவதற்குள் புயல் வந்து விடுமோ என்ற கவலையில், அப்பெண்மணி, குழந்தைகளின் மீது கவனம் சிதறாமல், ஜன்னலிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். கதவின் தாள் திறக்கும் ஓசை கேட்டதும், தந்தையை வரவேற்க குழந்தைகளை அனுப்பி வைத்தார்.

உண்ணுவதற்கு ஏதேனும் தந்தை வாங்கி வந்திருப்பாரோ எனக் குழந்தைகள் தாயாரைக் கேட்டனர். உடனே தாயார், “அது முக்கியமல்ல, தந்தையை எதுவும் கேட்கக் கூடாது” என கடிந்து கொண்டார். அனைவரும் தந்தை இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

புன்சிரிப்புடன் கணவனை வரவேற்று, அவர் கொண்டு வந்த ரொட்டியையும், வெண்ணையையும் தட்டில் வைத்து, தாயார் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தார். குழந்தைகளும் உற்சாகத்துடன் உணவைச் சாப்பிட்ட பிறகு, மிட்டாய், விளையாட்டு பொம்மைகள் என்ற கனவோடு உறங்கச் சென்றனர்.

கதீஜாவின் கணவர் ஹசன், மனைவியிடம், “இந்த வருடம் முடியும் தருணத்தில் உள்ளது. இன்னும் எனக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. நம் சேமிப்பை எல்லாம் செலவு செய்து, மர சாமான்களையும் விற்று விட்டோம். இனி நம் பசியைப் போக்க வழி ஒன்றுமே தெரியவில்லை” என வருத்தப் பட்டார். அதற்கு மனைவி, “நம்மிடம் திட நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளன. அவை சிறந்த குணங்கள்; மகிழ்ச்சியைத் தரக் கூடியது“ என்றார். உடனே கணவர், ”நம்பிக்கை என்ன மகிழ்ச்சியை நமக்கு கொடுத்துள்ளது? குழந்தைகள் கிழிந்த ஆடைகளை உடுத்தி, பசியுடன் இருக்கின்றனர். இந்த நம்பிக்கை தான் நமக்கு துயரங்களைக் கொடுத்து, ஏழ்மையையும் அளித்துள்ளது. இதற்கு முன் நாம் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தோம்”  என்றார்.

கதீஜா கணவரிடம், “எது ஆடம்பரம்? சூதாட்டம் குடும்பம் நடத்த உதவுமா? நம் மத குரு அல்லா சூதாடுவது தவறு எனக் கூறியுள்ளார். நாம் உண்ணும் உணவும், அணியும் ஆடைகளும் நியாயமான வழியில் சம்பாதிக்காமல், நாம் படு குழியில் தள்ளப்படுவோம் என்று தெரிந்தும் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நாம் பெற்ற லாபம், பலரைப் பசியுடனும், உடுத்துவதற்கு ஆடைகள் இல்லாமலும் இருக்க வைத்துள்ளது” என்றார்.

அதற்கு ஹசன் மனைவியிடம் “ஆம். நீ கூறுவது எல்லாம் உண்மை. இந்த காரணங்களுக்காகத் தான் நான் சூதாடுவதை நிறுத்தினேன். ஆனால், நமக்கு அதனால் ஒன்றும் கிடைக்கவில்லை. நீ எல்லா விதங்களிலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தாய்; நம்மை வழி நடத்திய அல்லாவுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இருந்தாலும் ஏழ்மை மிகவும் கொடுமையானது. நம் தேவைக்குக் கூட ஒன்றும் இல்லை என்று நினைக்கும் பொழுது அவமானமாக இருக்கிறது” என்றார்.

அவரை சமாதானப்படுத்திய கதீஜா, “இவை நிரந்தரம் இல்லை. அல்லா கூறுவது யாதெனில், “ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு நிவாரணமும் இருக்கின்றது. இனி வரும் வாழ்க்கை நன்றாக இருக்கும். நம்மிடம் நம்பிக்கை உள்ளது. எதிர் கால வாழ்க்கையை நினைத்து நற் செயல்களை செய்ய வேண்டும். நடந்ததை நினைத்து வருத்தப்படாமல், அல்லாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். துன்ப நிலையிலும் பொறுமையாக இருந்து, கடவுளின் ஆணைப்படி நடப்பவருக்கு மகிழ்ச்சி கட்டாயமாக வந்து சேரும்” என்றார்.

ஹசன் மனைவியிடம், “நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என்னுடைய பிசாசு குணம் என்னை தவறு செய்ய வைத்து விடும். பிறகு நான் எல்லாவற்றையும் இழந்து விடுவேன்” என்றார். மனைவி தன்னிடம் திருமணத்திற்குப் போட்டத் தங்க மோதிரம் உள்ளதாகக் கூறினார். “மறு நாள் அதை விற்று, சில நாட்களை கழிக்கலாம். அதற்குள் அல்லா ஒரு வழி செய்வார். நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும். தன் பக்தர்களை அல்லா ஒரு போதும் கைவிட மாட்டார். எதிர் காலம் ஒளிமயமாக இருக்கும். கடவுளை நம்பினோர் கை விடப் படார்” என்றார்.

பெருமூச்சுடன் கணவர் மனைவி சொற்படி நடந்து கொள்வதாகச் சொன்னார். குரானின் வாக்குப்படி, “நீங்கள் பயப்படும் விஷயங்கள் உங்களுக்குச் சோதனையாக  மாறிவிடும்; பொறுமைக்கு நல்ல பதிலே கிடைக்கும். இந்த கஷ்டங்களுக்கு முடிவு என்ன என்ற கணவனின் கேள்விக்கு, பரீட்சையில் (சோதனையில்) பொறுமையுடன் பிரார்த்தனை செய்து, தவறான வழியில் பொருள் சம்பாதிக்காமல் வெற்றி பெறுவதே” என மனைவி கூறினார்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் குழந்தைகளுக்குச் சிற்றுண்டி தயார் செய்து கொடுத்து விட்டு, அவர்களை அணைத்துக் கொண்டு, அல்லாவின் அருள் இருந்தால், மறு நாள் அவர்கள் கேட்ட பொருட்கள் கிடைக்கும் என்று சமாதானப் படுத்தினார். அல்லாவின் அருள் என்றால் என்ன என ஒரு குழந்தை கேட்டதும் தாய் “அல்லா தான் நமக்கு எல்லா பொருட்களும் கொடுத்து உதவுகிறார். அவர் அருள் இல்லாமல் நாம் உயிருடன் இருக்க முடியாது” என்றார். கணவர் மனைவியின் பேச்சைக் கேட்டு, அவளின் நம்பிக்கையை எண்ணி வியந்தார். கணவரும் நம்பிக்கையுடனும், தீர்மானத்துடனும் இருக்கலானார்.

மறு நாள், கதவு தட்டும் ஓசை கேட்டு, யாராக இருக்கும் என எண்ணி, கதவைத் திறந்தார். கணவர் மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தார். கணவரைக் கண்டதும், தங்கள் கஷ்டங்கள் தீர்ந்து விட்டதை மனைவி உணர்ந்தார். ஆம். வேலைக்கான உத்தரவு வந்திருந்தது. கடவுளின் தூதர் ஒருவர் தன் வியாபாரத்தில் உதவி செய்ய இவர்கள் நிலைமையையும், அனுபவங்களையும் அறிந்து, வேலை கொடுக்க முன் வந்தார். அவர் மூலமாக அல்லா, ஹசன் கதீஜா தம்பதிக்கு உதவி செய்தார்.

நீதி

faith and determination picture 2.jpgவிசுவாசமும், மன உறுதியும் எப்பொழுதும் வெற்றி பெற உதவும். நம் கடமைகளைச் செய்து, நாம் மற்றவற்றைக் கடவுளிடம் விட்டு விட வேண்டும். நமக்கு எது நன்மை என்பதை அவர் அறிவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com