Archive | November 2013

நாம் பார்க்கும் கண்ணோட்டம்

 

Windows through which we look

நீதிநேர்மை

உபநீதிஆத்ம விசாரணை

ஒரு இளம் தம்பதி, அழகான ஒரு வீட்டில் குடியிருக்க வந்தனர். மறு நாள் காலை, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண் அடுத்த வீட்டைப் பார்த்தாள். பக்கத்து வீட்டு பெண்மணி துணிகளை துவைத்து, வெளியில் கம்பியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். அவள் “அந்த துணிகள் சுத்தமாக இல்லை. அவளுக்கு துவைக்க சரியான முறை தெரியவில்லை” என்றாள்.

அவளுடைய கணவர், எல்லாவற்றையும் கவனித்து கொண்டு மெளனமாக இருந்தார். தினமும் அவர் மனைவி, அடுத்த வீட்டுப் பெண் செய்யும் வேலையில் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்.

இப்படியே ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் காலை, வெளியில் துணிகள் சுத்தமாக துவைத்து உலர்த்தியதைப் பார்த்த இளம் பெண் ஆச்சரியப்பட்டாள். தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அடுத்த வீட்டுப் பெண் துணிகளை துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாள் போல் தோன்றுகிறது. யார் அவளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்?” எனக் கேட்டாள்.  அதற்கு கணவர், “நான் இன்று காலை எழுந்தவுடன், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து வைத்தேன்” என்று கூறினார்.

வாழ்க்கையும் இத்தகையது தான். நாம் பிறரை பார்க்கும் கண்ணோட்டம், நாம் அணியும் கண்ணாடியை சார்ந்து இருக்கின்றது.

நீதி

  1. பிறரை ஒரு பொழுதும் எடை போடாதே. தூய்மையான மனதுடன், சரியான மனப்பான்மையுடன் வாழ்க்கையில் விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
  2. நம் பார்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை சார்ந்துள்ளது. மனதில் நினைப்பதுதான் வார்த்தைகளாக வெளியிலே வரும்.
  3. பிறரை எடைப் போட்டு குறை கூறும் முன், நம்மைப் பற்றி நாமே நினைக்க வேண்டும். நம் குறைகளை நாம் முதலில் உணர வேண்டும்.

Source: http://saibalsanskaar.wordpress.com

கதையை கேட்க:

https://www.buzzsprout.com/1498462/episodes/7570339-tamil-story

கதையை பார்க்க:

மன்னிப்பது நல்லது, மறப்பது அதைவிடச் சிறந்தது

isaac Newton

நீதி அன்பு

உபநீதி கருணை / மன்னிப்பு

தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் அவர்கள், தினமும் பல மணி நேரம் வேலை செய்தார். இருபது வருடங்களாக, அறிவு பூர்வமான ஆராய்ச்சிகளை செய்த இவர், விளைவுகளை எழுதிக் கொண்டே வந்தார். ஒரு நாள், அவர் உலாவச் செல்லும் பொழுது, ஆராய்ச்சி ஏடுகளை மேஜை மேல் வைத்து விட்டுச் சென்றார். அவருடைய செல்ல நாய் “டைமண்ட் அறையில் படுத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அது விளையாட்டுத்தனமாக மேஜை மேல் குதித்தது. இதனால், ஆராய்ச்சி ஏடுகள் மேல் மெழுகுவர்த்தி விழுந்து, அவையெல்லாம் தீப்பற்றி எரிந்தன. இருபது வருடங்களாக கஷ்டப்பட்டு எழுதின ஏடுகள், நிமிடங்களில் சாம்பலாகி விட்டன. நியூட்டன் திரும்பி வந்தவுடன் அதிர்ச்சியுற்றார். விலை மதிப்புள்ள ஏடுகள் சாம்பலாகி கிடந்தன. யாராக இருந்தாலும், மிகுந்த கோபத்துடன் நாயை அடித்திருப்பார்கள். ஆனால், நியூட்டன் நாயைத் தடவிக் கொடுத்து, பரிதாபத்துடன் பார்த்து, “டைமண்ட், நீ என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கே தெரியாது” என்று சொன்னார்.

சற்று கூட சலிப்பே இல்லாமல், மறுபடியும் அவர் எழுத ஆரம்பித்தார். நாயின் மேல் எவ்வளவு கருணை!! அவருடைய பரந்த மனப்பான்மை, அவரின் அறிவைப் போலவே சிறந்து விளங்கியது.

நீதி

உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னிப்பது மிக கடுமையானது; ஆனால், மன உறுதி இருந்தால், அதுவும் சாத்தியமாகும். எல்லாவற்றையும் மறந்து நடப்பதற்கு பெருந்தன்மையும், முயற்சியும் வேண்டும். நாம் மன்னிப்பதற்கும், மறப்பதற்கும் கற்றுக் கொண்டால், எதிரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகத் தெரிந்து கொள்வோம்.

Sourcehttp://saibalsanskaar.wordpress.com

கதையைக் கேட்க:

https://www.buzzsprout.com/1498462/9265231-tamil-story

கதையைப் பார்க்க:

அன்பை வளர்க்கவும், பகைமையை ஒழிக்கவும்

 நீதி – அன்பு 

உபநீதி – மன்னிக்கும் மனப்பான்மை

Develop loveபள்ளி ஆசிரியர் ஒருவர், தன் வகுப்பறையில் உள்ள குழந்தைகளுடன் ஒரு விளையாட்டை விளையாட தீர்மானித்தார்.

ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையையும், ஒரு பிளாஸ்டிக் பையில், சில உருளைக் கிழங்குகளை அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வரும்படி கூறினார். கிழங்குகள் அனைத்திற்கும் பிடிக்காத ஒருவரின் பெயரை இரகசியமாக சூட்டும்படி கூறப்பட்டது. ஆதலால், ஒவ்வொரு குழந்தையின் பையிலும் அவன் / அவள் வெறுத்த நபர்களுக்கு தகுந்தாற் போல கிழங்குகள் இருந்தன. ஆவலுடன் விளையாட நினைத்த எல்லாக் குழந்தைகளும், தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயர்களை கிழங்குகளுக்கு சூட்டி, பைகளில் எடுத்து வந்தனர். சிலரின் பைகளில் இரண்டு கிழங்குகளும், சிலரின் பைகளில் மூன்றும், மற்றும் சிலரின் பைகளில் ஐந்து கிழங்குகளும் கூட இருந்தன. ஒரு வாரத்திற்கு எங்கு சென்றாலும்,  (கழிவறைக்கும் கூட) அந்தப்  பையை தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்று ஆசிரியர் கூறினார். விளையாட்டு தொடங்கியது.

சில நாட்கள் சென்றதும், அனைத்து குழந்தைகளும் அந்த அழுகிய கிழங்குகளின் துர்நாற்றம் தாங்காமல், புகார் கூற ஆரம்பித்தனர். அதிகக் கிழங்குகளை வைத்திருந்த குழந்தைகளின் பைகள் கனமாக இருந்தன. ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட்டு முடிந்ததைக் குறித்து குழந்தைகள் பெருமூச்சு விட்டனர். அதிசயமான கிழங்கு விளையாட்டின் விளைவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், குழந்தைகள் ஆசிரியரை சூழ்ந்து கொண்டனர்.

ஆசிரியர், “கிழங்குகளை சுமந்த இந்த ஒரு வாரம் உங்களுக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டார். அனைத்துக் குழந்தைகளும் ஒரு வாரமாக எங்கு சென்றாலும் கனமான, நாற்றமான பைகளை சுமந்ததை குறித்து, வெறுப்பு உணர்வை வெளிகாட்டி புகார் செய்தனர்.

ஆசிரியர் பொறுமையாக அவர்களின் புகார்களைக் கேட்டு, விளையாட்டின் குறிக்கோளை நிதானமாக எடுத்துச் சொன்னார்.

ஆசிரியர் கூறியது –  மனதில் ஒருத்தரை வெறுத்தால், இது மாதிரியான சூழ்நிலை தான் ஏற்படுகின்றது. நீங்கள் எங்கு சென்றாலும், இந்த புழுங்கிய நாற்றம், புற்று நோய் போல் பரவுகின்றது. ஒரு வாரத்திற்கு அழுகிய கிழங்குகளின் நாற்றத்தையே தாங்க முடியவில்லையென்றால், வாழ்க்கை முழுதும் வெறுப்பை மனதில் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது???

நீதி

வெறுப்பை மனதிலிருந்து அகற்றி வாழ்ந்தால், வாழ்க்கையில் பாவங்களை சுமக்காமல் இருக்கலாம். மற்றவர்களை மன்னிப்பது சரியான மனப்பான்மை! முழுநிறைவான மனிதனை நேசிப்பதை விட, குறைகள் இருக்கும் மனிதனை முழுமையாக நேசிப்பது தான் உண்மையான அன்பு.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தஸ்துர்ஜி

  dasturji picture

நீதி – உண்மை 

உபநீதி – வாய்மை / நேர்மை 

பல ஆண்டுகளுக்கு முன்பு, தஸ்துர்ஜி என்ற பெயரில் ஒரு அதிகாரி இருந்தார். அவர் ஒரு சமயம் மும்பைக்கு ஏதோ வேலையாகச் சென்றிருந்தார். ஒரு நாள், அவர் நகரத்தின் ஒரு பகுதிக்கு பெஸ்ட் பஸ்ஸில் சென்றார். பஸ் கண்டக்டர் தவறுதலாக தஸ்துர்ஜியிடம் ஒரு ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டார். தன் இருக்கையில்  அமர்ந்ததும் தஸ்துர்ஜி, “இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? திருப்பிக் கொடுத்து விடலாம். என்னிடம் வைத்துக் கொள்வது தவறு” என்று எண்ணினார். பிறகு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? நானே வைத்துக் கொண்டால், பஸ் கம்பனிக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் ஆகி விடாது. இதைக் கடவுளின் ஒரு பரிசாக வைத்துக் கொண்டு மௌனமாக இருப்போம்” என தீர்மானித்தார்.

தஸ்துர்ஜி இறங்கும் இடம் வந்தவுடன் ஒரு வினாடி யோசித்து அந்த ரூபாவை  கண்டக்டரிடம் கொடுத்து விட்டு “நீங்கள் ஒரு ரூபாய் அதிகமாக சில்லறை கொடுத்து விட்டீர்கள்” என்று சொன்னார்.

கண்டக்டர் அவரிடம் “நீங்கள் இவ்வூருக்கு வந்திருக்கும் தஸ்துர்ஜி தானே? நான் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கு சில்லறை அதிகமாகத் தந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்க எண்ணினேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

தஸ்துர்ஜி பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு “கடவுளே, கேவலம் ஒரு ரூபாவிற்காக என் மனசாட்சியை விற்க நினைத்தேனே” என்று நினைத்து வருத்தப் பட்டார்; ஆனால் சில்லறையை திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மையை நினைத்து அவர் கடவுளுக்கு நன்றி கூறினார்.

நீதி:

தோழர்களே, கவனம்!! நம் மனம் எல்லா விதமான ஆட்டமும் காண்பிக்கும். ஜாக்கிரதை

– உங்கள் எண்ணங்களை கவனிக்கவும், அவை உங்கள் வார்த்தைகளாகும்

– உங்கள் வார்த்தைகளை கவனிக்கவும், அவை உங்கள் செய்கைகளாகும்

– உங்கள் செய்கைகளை கவனிக்கவும், அவை உங்கள் பழக்கங்களாகும்

– உங்கள் பழக்கங்களை கவனிக்கவும், அவை உங்கள் நடத்தை ஆகும்

– உங்கள் நடத்தையை கவனிக்கவும், அவை உங்கள் விதி ஆகும்.

ஆதலால், மனதை அடக்க வேண்டும். அல்லது அது வேண்டாத எண்ணங்களை நோக்கி செல்லும். தவறான செயலுக்குப் பிறகு, நம் மனசாட்சி நம்மை நிம்மதியாக வாழ விடாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தான்சேனின் இசையை விட இனியது

tansen

நீதி – அன்பு

உபநீதி – பக்தி

முன்காலத்தில், (1542-1605) அக்பர் என்ற முகலாய சக்ரவர்த்தி ஆண்டு வந்தார். அவரது தர்பாரில் தான்சேன் என்ற பாடகர் இருந்தார். தான்சேன் எப்பொழுது பாட்டு பாடினாலும், அக்பர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். தான்சேன் ஒரு சிறந்த பாடகர். அவர் “மேகமல்ஹார்” ராகம் பாடினால், ஆகாயத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து வரும். “வருணப்பிரியா” ராகம் பாடினால், மழை பொழியும், “நாகஸ்வராவளி” ராகம் பாடினால், பாம்புகள் அங்கு ஒன்று சேரும். இத்தகைய பாடகர் தன் சபையில் இருப்பதில், அக்பர் மிகவும் பெருமிதம் கொண்டார்.

ஒரு நாள் அக்பர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, வெகு தொலைவிலிருந்து  அவருக்கு ஹரிதாஸ் பாடல் கேட்டது. ஹரிதாசர் ஒரு நடமாடும் பிக்ஷு. ஒரு சாதாரணமான வாத்தியத்தில், (தம்புரா போன்றது) அவர் பாட்டு இசைப்பதை கேட்ட அக்பர் பேரானந்தம் அடைந்தார்.

அக்பர் தன தர்பாருக்கு திரும்பியதும் தான்சேனிடம் “உன் இசையை விட ஹரிதாசின் இசை என்னை ஏன் மெய் மறக்கச் செய்தது?” என்று  விசாரித்தார்.

அதற்கு தான்சேன், “ஸ்வாமி, நான் பாடும் போது உங்களின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டு பாடுகிறேன். நீங்கள் பாராட்டி எனக்கு ஏதேனும் பரிசுகள்,  நவரத்தினம் அல்லது நிலம் தருவீர்கள் என்ற எதிர் பார்ப்புடன் பாடுகிறேன். ஆனால் அந்த சாதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கடவுளை தியானித்துப் பாடுகிறார். பொன், பொருள் எதுவும் எதிர்பார்க்காமல் அவர் பாடுகிறார். அதுதான் வித்தியாசம்” என்றார்.

­நீதி

எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கடவுளை நினைத்துச் செய்யும் செயல்கள் நிறைந்த மகிழ்வை அளிக்கும். ”கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது பகவத் கீதை. அதாவது, ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்று அச்சப்படாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது தான் இதற்கு அர்த்தம்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கதையை பார்க்க:

கதையைக் கேட்க:

முன்னுரை

intro pictureஇந்த வலைப்பதிவு நற்குணங்களை மேம்படுத்துவதற்கும், பயிற்சி மூலமாகத் திறமை பெற்றுள்ள குழந்தைகளின் நற்பண்புகளை, கதைகள், அனுபவங்கள் மூலமாகவும், வெளிப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி. எனக்கு வழிகாட்டும் குரு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிற்கும், என் அருமைத் தாயார் திருமதி. ஆனந்தி பரமேஸ்வரனுக்கும், நான் சமர்ப்பிக்க விரும்பும் ஒரு அன்பு காணிக்கை. என் தாயார் பாலவிகாஸ் குருவாக எனக்கு நற்பண்புகளைப்  புகட்டி, நேர்பாதையில் செல்லக்கூடிய ஒரு வழிகாட்டியாய் திகழ்ந்தார். சுவாமியின் நற்குணங்களை பத்து வருடங்களாக சிறு குழந்தைகைளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளேன்.

சுவாமி சொல்கிறார் “ஒரு சிறிய கொடியை வடிவமைப்பது சுலபம், ஆனால் ஒரு மரத்தை அவ்வாறு செய்வது கடினம்.” குழந்தைகளை நல்ல பாதையில் வழி நடத்தி, நற்பண்புகளை மனதில் ஆழப் பதியச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பகவான் பாபாவின் வார்த்தைகளில், “நற்குணங்களை வளர்ப்பதுதான் கல்வியின் குறிக்கோள்; நற்குணங்கள் இல்லாத மனிதன் விளக்கில்லாத வீட்டிற்கு சமம்.” இதற்குச் சில வழிகள், கதைகளும் ஸ்லோகங்களும் சொல்லிக் கொடுப்பது.

ஜாதி, மத, பேதமின்றி எல்லோருக்கும் இந்த வலைப்பதிவு உதவ வேண்டும் என்பது தான் குறிக்கோள். பண்புகள் எல்லோருக்கும் பொதுவானது. எந்த ஒரு ஜாதியையோ, குருவையோ அல்லது கடவுளையோ குறிப்பாக மேம்படுத்துவது நோக்கம் அல்ல. கதைகள் வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன. அதற்கு தனி சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நற்குணங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருப்பதால், அடுத்த சந்ததிக்காக நாம் செய்யும் ஒரு நல்ல முயற்சி.

தமிழில் மொழிப் பெயர்த்த திருமதி. சரஸ்வதி விஸ்வநாதனுக்கும், திருமதி. ரஞ்சனி முரளிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கும், உலகத்தில் தமிழ் பேசுகின்ற அனைத்து குழந்தைகளுக்கும் இந்த கதைகள் போய் சேர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வியக்கத்தக்கச் செயல் திட்டத்தை வெளிப்படுத்திய அவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

திருமதி. சரஸ்வதி அவர்களின் வார்த்தைகளில்:

“நான் சரஸ்வதி. வெகு நாளாக, சுவாமி சேவை செய்ய வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன்.  அதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. சகோதரி நந்தினிக்கு மனமார்ந்த நன்றி. கடலில் ஒரு துளியாக சேவை செய்ய சுவாமி கொடுத்த இந்த வாய்ப்பை என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த பாதையில் எனக்கு சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்து, என் கணவர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார். எல்லோருக்கும் நன்றி.

 திருமதி. ரஞ்சனியின் வார்த்தைகளில்:

என்னுடைய பெரிய பாக்கியமே பகவான் ஸ்ரீ. சத்ய சாயி பாபாவை வழிபடுவது தான். அவருக்கு என் முதற்கண் நன்றி. என் கணவர் திரு. முரளி,  எனக்கு எப்பொழுதுமே ஆதரவாக இருந்திருக்கிறார். சில மாதங்களாகவே குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உறுதி இருந்தது. நான் நினைத்ததை வெளிப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்த நந்தினிக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சிறப்பு பணியில் திருமதி. கங்கா தியாகராஜன் அவர்களும் எனக்கு உதவி புரிந்துள்ளார்.

கல்வி வாழ்க்கைக்காக, வாழ்வதற்காக அல்ல என்ற நம்பிக்கையுடன் ஒரு அன்பான, அமைதியான உலகமாக நன்நெறி எண்ணங்களுடன் மக்கள் யாவரும் வாழ வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.

 

நந்தினி ரமேஷ்