Archive | January 2015

செயலால் காட்டும் அன்பு

நீதி – நன் நடத்தை

உபநீதி – பச்சாதாபம் /தக்க சமயத்தில் உதவி  

Love in action1

இரவு நேரத்தில் ஒரு மனிதன் என்னிடம் வந்து, “எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் எட்டு குழந்தைகள் இருக்கின்றன. நாள் கணக்கில் சாப்பிட ஒன்றுமில்லாமல் தவிக்கின்றார்கள்” என்று சொன்னார். உடனடியாக உணவு எடுத்துக்கொண்டு அங்கு சென்றேன். பசியோடு இருப்பதை அவர்களின் முகங்களே காட்டிக் கொடுத்தன. வருத்தமோ, துயரமோ இல்லை ஆனால் பசியின் கொடுமை தெளிவாகத் தெரிந்தது. மனதிற்கு வேதனையாக இருந்தது. வீட்டிலிருந்த அம்மாவிடம் அரிசியைக் கொடுத்தேன்.

Love in action2அதை சரி பாதியாகப் பிரித்து வெளியே சென்றாள். வந்தவுடன் தான் தெரிந்தது. அருகில் வசிப்போரும் பசியோடு இருந்ததால் அவர்களுக்கும் கொடுத்து விட்டு வந்ததாள் என்று.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏழை மக்கள்Love in action3
பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள். பக்கத்தில்  குடியிருப்பவருக்கும் பசி என்று தெரிந்தவுடன் உதவி செய்ய ஓடினாள். பொதுவாக நாம் கஷ்டப்படும் போது மற்றவர்களை மறந்து விடுகிறோம். அனைத்து கவனமும் நம் மேல் தான் இருக்கின்றது.

நீதி

உண்மையான அன்பென்பது நமக்குப் பிரச்சனை இருந்தாலும் மற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுவது தான். எல்லாம் இருக்கும் பொழுது ஒருவருக்கு உதவி செய்வது பெரிய விஷயம் இல்லை. ஒன்றும் இல்லாத பொழுது மற்றவர்களுக்குக் கை கொடுப்பது தான் புனிதமான செயல்.

 மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://topmoralstories.blogspot.sg/2007_09_01_archive.html

நிபந்தனையற்ற ஆதரவு

Selfless Love1

நீதி – அன்பு

உபநீதி – தன்னலமற்ற அன்பு

என் மனைவி என்னிடம், “எவ்வளவு நேரம் தான் இந்த செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருப்பீர்கள்? குழந்தை சாப்பிடக் கொஞ்சம் உதவி செய்யுங்கள்” எனக் கூறினாள். உடனே செய்தித்தாளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு குழந்தையிடம் சென்றேன். எங்களுக்கிருந்தது ஒன்றே ஒன்று ஆனால் போற்றத்தக்க ஒரு குழந்தை சிந்து. அவள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அவள் அருகில் ஒரு கிண்ணியில் தயிர் சாதம் இருந்தது. மிகவும் நல்ல குழந்தை, அவள் வயதிற்கு அறிவாளியும் கூட.

சிந்துவிற்கு எட்டு வயது. அவள் தயிர் சாதத்தை அறவே வெறுத்தாள். ஆனால் என் அம்மாவும், மனைவியும் சம்பிரதாய வாழ்க்கையை நம்பி வந்ததனால் தயிர் சாதம் உடம்பிற்குக் குளிர்ச்சி என்றும் அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். நான் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, “சிந்து, அப்பாவிற்காகக் கொஞ்சம் சாப்பிடு. இல்லையென்றால் அம்மாவிற்குக் கோபம் வந்துவிடும்.” என்று கூறினேன். சிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு பார்த்தாள்.

பிறகு அவள், “நான் கிண்ணத்தில் இருக்கும் தயிர் சாதத்தை முழுதாகச் சாப்பிட்டால் நான் என்ன கேட்டாலும் கொடுப்பீர்களா?” என்று கேட்டாள்.

“கட்டாயமாக” என்று பதிலளித்தேன்

“உறுதியாக?” என்று வினவினாள்

“ஆம்” என்றேன்

உடனே சிந்து அம்மாவையும் உறுதி மொழி கூறச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவளுடைய அம்மா “கட்டாயமாக” என்று அவள் கை மேல் தன் கையை வைத்தாள்.

நான் சற்று கவலையுடன், “சிந்து குட்டி, கணினி போல விலை உயர்ந்த பொருட்கள் ஒன்றும் இல்லையே? இப்பொழுது கொஞ்சம் பணக் கஷ்டம்” என்று மெதுவாகச் சொன்னேன்.

விலை உயர்ந்தது ஒன்றுமில்லை அப்பா என்று மிருதுவாக பதிலளித்தாள்.

மெதுவாகக் கஷ்டப்பட்டுத் தயிர் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தாள். மனதிற்குள் குழந்தையை இப்படி வற்புறுத்துவதை நினைத்து அம்மா மேலும் மனைவி மேலும் சற்று கோபமாக இருந்தேன். சிந்து உணவை முடித்தவுடன் எதிர்ப்பார்போடு எங்களைப் பார்த்தாள். என்ன கேட்கப் போகிறாள் என்று நினைத்து நாங்கள் எல்லோரும் அவளைப் பார்த்து கொண்டிருந்தோம்.

சிந்து அப்பாவிடம், “எனக்கு இந்த ஞாயிறன்று  மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானத்துடன் கூறினாள்.

இது என்ன அபசாரம், முடியவே முடியாது என்று அம்மா ஆத்திரத்துடன் சொன்னாள். அதிகமாகத் தொலைகாட்சி பார்ப்பதால் வந்த விளைவு என்று கூறி நம் கலாசாரத்தைச் சேதம் படுத்துகிற வகையில் உள்ளது என்று அலறினாள். இது நம் குடும்பத்தில் நடக்காது என்றாள்.

சிந்து கண்ணா, “அந்தக் கோலத்தில் உன்னைக் காண்பது ரொம்ப வருத்தமாக இருக்கும். வேறு ஏதேனும் கேள்” என்று கூறினேன்.

அதற்கு அவள் தீர்மானத்துடன், “எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்” என்று பதிலளித்தாள்

“எங்கள் மனதைப் புரிந்துக் கொள் சிந்து” என்று கெஞ்சினேன்

“நான் தயிர் சாதத்தைச் சாப்பிடுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று பார்த்தீர்கள்; என்ன கேட்டாலும் கொடுப்பதாக எனக்கு வாக்களித்து விட்டு இப்பொழுது மறுக்கிறீர்கள்” என்று கண்ணீருடன் புலம்பினாள். நீங்கள் தான் ராஜா ஹரிஷ்சந்திரனின் நீதிக் கதையில் கொடுத்த வாக்கை உயிர் போனாலும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தீர்கள்” என்று எடுத்துரைத்தாள்.

அவள் சொன்னதை நன்றாகப் புரிந்து கொண்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது சரியான உதாரணமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

சிந்து நீ ஆசைப்படுவது நடக்கும் என்று கூறினேன். மொட்டை அடித்த பிறகு, உருண்டைக் கண்களுடன் வட்டமான முகத்துடன் மிக அழகாக இருந்தாள். திங்கட் கிழமை காலை, பள்ளியில் அவளை விடும் பொழுது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. அவளுக்குக் கை காண்பித்து திரும்பி வரும் பொழுது அவள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவன் அவளைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த பொழுது ஒரு பையன் வாகனத்திலிருந்து இறங்கினான். அவனும் மொட்டையாக இருந்தான். நாகரீக மாற்றம் என்று நினைத்துக் கொண்டேன்.

Selfless Love2

ஒரு பெண்மணி அவளை அறிமுகம் படுத்திக்கொள்ளாமல் என்னிடம் வந்து, “சிந்து உங்களுக்குக் கிடைத்த வரபிரசாதம் .அங்கு போகின்ற மாணவன் ஹரிஷ். என் பையன் தான். அவன் லுகீமியா என்ற நோயால் பாதிக்க பட்டிருக்கான். போன மாதம் அவனுக்குப் பள்ளிக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை என்று சொல்லிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். வேதியல் சிகிச்சை பண்ணின  பொழுது தலை முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. மற்ற மாணவர்களுக்குப் பயந்து பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். உடனடியாக சிந்துஜா “யாரும் கேலி பண்ணாமல் இருக்க நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சொன்னாள். ஆனால் அதற்காக தன் தலை முடியை எடுப்பாள் என்று நினைக்கவே இல்லை என்று அந்த பெண் கூறலானார்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு தான் என் பெண்ணின் எதிர்பார்க்காத அன்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

நீதி:

சந்தோஷமாக இருப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய மாதிரி காரியத்தை நடத்துபவர்கள் அல்ல. மற்றவர்களின் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னையே மாற்றிக் கொள்பவர்கள் தான்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

 

Source: http://saibalsanskaar.wordpress.com

நட்பின் ஆழ உணர்வு

ship of friendship1

நீதி – நன் நடத்தை

உபநீதி – மற்றவர்களின் மேல் காட்டும் அன்பு / கடமை உணர்ச்சி 

அற்புதமான கப்பல் ஒன்று பயணம் செய்து கொண்டிருக்கும் போது சூறாவளி காற்றடித்ததனால் சேதம் அடைந்தது. சிதைவிலிருந்து தப்பித்த இரண்டு நண்பர்கள் மெதுவாக நீந்தி பாலைவனம் போல் இருந்த ஒரு தீவை சென்றடைந்தனர்.

வழி தெரியாமல் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கி, யாருடைய வழிப்பாட்டு முறை சக்தி வாய்ந்தது என்று தீர்மானிக்க நினைத்தார்கள். அந்த இடத்தை இரண்டு பாகங்களாகப் பிரிக்க ஒப்புக் கொண்டு தனித்தனியாக அவர்களின் இடத்திலிருந்து பிரார்த்தனையை ஆரம்பித்தார்கள்.

முதலில் இருவருமே உணவிற்காக வேண்டிக் கொண்டார்கள். அதிகாலையில் ஒருவனின் பாகத்தில் பழ மரம் இருந்தது. உடனடியாகப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். மற்றொரு நண்பனின் பாகத்தில் ஒன்றுமே இல்லாமல் வரண்டு இருந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு தனிமையாக இருக்கும் உணர்வு வந்ததால் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்தான். அடுத்த நாள் வேறொரு கப்பல் சிதைவடைந்து அதிலிருந்து தப்பித்த ஒரு பெண் அவன் இருக்கும் இடத்திற்கு நீந்தி வந்தாள். மற்றொருவனுக்கு இப்பொழுதும் ஒன்றுமில்லாமல் போயிற்று.

மனைவி கிடைத்தவனுக்கு வீடு, உடுத்த துணி, உணவு எல்லாமே சுலபமாகக் கேட்டவுடன் கொடுக்கப்பட்டன. மாயாஜாலம் போல் இருந்தது. கடைசியாக ஒரு கப்பல் வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான். உடனடியாக அதுவும் கொடுக்கப்பட்டது. மனைவியுடன் கப்பலில் ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் நண்பனுக்குக் கடவுள் ஒன்றுமே கொடுக்காததால் அவனுடைய பிரார்த்தனை பயனற்றது என்ற முடிவுக்கு வந்தான்.

கப்பல் புறப்படும் போது கடவுளின் குரல் ஒலித்தது. “ஏன் உன்  நண்பனை தீவிலே விட்டுவிட்டுச் செல்கிறாய்?” என்று விசாரித்தார். அதற்கு அவன் “எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் நான் வேண்டிக் கொண்டதால் தான். நண்பன் பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிடைக்காததால் அவன் தகுதியற்றவன் என்று கூறினான். அதற்கு அந்தத் தெய்வக் குரல் கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்ன வார்த்தைகள், நீ தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். உன் நண்பனுக்கு ஒரு பிரார்த்தனை தான் இருந்தது. அது என்னவென்றால் நீ வேண்டிக் கொள்வது அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பது தான். இல்லையென்றால் உனக்கு ஒன்றுமே கிடைத்திருக்காது.”

நீதி

நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் நாம் வேண்டிக் கொள்வதால் மட்டுமல்ல. மற்றவர்கள் நமக்காகச் செய்யும் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது. கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அதிக பலன் கிடைக்கும். நல்ல நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அன்பானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு கஷ்டம் என்று வந்தால் உதவி செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://www.moralstories.org/the-ship-of-friendship/

பொங்கலோ பொங்கல்

pongal picture 1
போகியின் சாரம்!

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். 
முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது.

போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது அவசியமல்லவா? எனவேதான் போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

உழவர் திருநாள்!

இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது.

சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள் வளரவேண்டும் என்றாலோ, மனிதனின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும் அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில் சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் பொருளோ, மனிதனோ வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியும் பெருகும்.

வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும்.
உணவை ஒரு பொருளாக நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது நமது உயிர், வாழ்தலுக்கான இன்றியமையாத சக்தியாகும். உணவு கிடைக்காதபோதுதான் நமக்கு இந்த உண்மை புரியும். எனவே உணவு உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும் காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து அர்ப்பணம் செய்ய விரும்புகிறோம்.

குறிப்பாக விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள் இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதால் அதை சூரியனுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது. நாம் உண்ணும் உணவு உயிருக்கு ஊட்டம் வழங்குவதால் அதற்கு காரணமான மண்ணுக்கு, உணவைக் கொடுக்கின்ற விவசாயிக்கு, அதை சமைத்து வழங்கும் தாய்மார்களுக்கு, உற்பத்திக்கு உதவியாக இருக்கின்ற கால்நடைகள் குறிப்பாக மாடுகளுக்கு, மேலும் சுற்றுச் சூழலுக்கு அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற சூரியனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பதை உணர்த்துவதுதான் பொங்கல் கொண்டாட்டம்.

வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும். போகிப் பண்டிகை பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் ஆகிய திருவிழாக்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றழைக்கப்படும் தை முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுவதால் இதைத் ‘தமிழர் திருநாள்’ என்றும் விவசாயக் குடும்பங்களில் இந்நாளை அறுவடைத் திருநாள் என்று கொண்டாடப்படுவதால் ‘உழவர் திருநாள்’ என்றும் அழைக்கிறோம்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

pongal picture 2pongal picture 3
SOURCE:

நன்மையே செய் – வினை விதைத்தவன் வினை அறுப்பான்‎

always be helpful - what goes around comes around

நீதி – நன் நடத்தை

உபநீதி – தக்க சமயத்தில் உதவி செய்தல்

மாலைப் பொழுது, மங்கலான வெளிச்சம், சாலையில் வண்டிகள் சென்று கொண்டிருந்தன. சாலை ஓரத்தில் விலை உயர்ந்த மோட்டார் வண்டியுடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்ததை வேறு ஒரு வண்டியில் சென்றவர் கவனித்தார். உடனடியாக அவளுக்கு உதவி வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. வாகனத்திலிருந்து இறங்கி அவளை நோக்கிச் சென்றார்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் புன்சிரிப்பு இருந்தாலும், சற்று கவலையாகத் தோன்றினாள். கடந்த ஒரு மணி நேரமாக யாருமே அந்த பெண்மணிக்கு உதவி செய்ய முன் வரவில்லை.

அம்மனிதனைப் பார்த்தவுடன் ஏழையாகவும், பசியுடனும் இருப்பதைக் கண்ட பெண்மணி, தனக்கு ஏதேனும் தீங்கு நினைத்து விடுவாரோ எனக் கவலைப்பட்டாள். குளிர் காலமானதால் பயம் அதிகரித்தது. அவர் பெண்மணிக்கு உதவ வந்துள்ளதாகவும், வேலை முடியும் வரை வண்டிக்குள் அமர்ந்து கொள்ள சொன்னார். தன் பெயர் ப்ரயன் ஆண்டெர்சன் (BRYAN ANDERSON) என அறிமுகம் செய்து கொண்டார்.

வண்டிச்சக்கரம் காற்றை இழந்திருந்தது. அம்மனிதரின் விரல்களில் இருந்த காயத்தை அவர் பொருட்படுத்தாமல் வேலை செய்தார். வண்டியின் கீழே படுத்துக் கொண்டு வேண்டியவற்றை செய்து முடித்தார். எல்லாத் திருகாணிகளையும் முறுக்கியதைக் கண்ட அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தாள். அவள் தான் செயின்ட் லூயிஸ் (ST.LOUIS) என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு இச்சாலை வழியாகச் செல்லும் சமயம் தனக்கு இக்கஷ்டம் ஏற்பட்டது என்று கூறி, அம்மனிதரின் உதவிக்கு நன்றி தெரிவித்தாள்.

எல்லாம் முடிந்த பிறகு அப்பெண்மணி இவருக்கு என்ன தொகை அளிக்க வேண்டும் என விசாரித்தார். என்ன கேட்பாரோ என்ற சந்தேகத்துடன் இருந்த பெண்மணியிடம் திரு. ப்ரயன் அவர்கள் தான் தேவைப்பட்டவருக்கு உதவி செய்ததாகவும், இது தன் வேலை இல்லை என்றும் கூறினார். கடவுள் இது போல் பல முறை தனக்கு உதவி செய்து இருப்பதாகவும் சொன்னார். பிறகு, அப்பெண்மணி உண்மையாகவே ஏதேனும் செய்ய விரும்பினால், இது போல யாரேனும் கஷ்டப்படும் போது உதவி செய்து, அப்பொழுது அவரை நினைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவளும் தன் வழியே சென்றாள். இவரும் தன் வீடு நோக்கிச் சென்றார்.

சற்று தூரம் சென்ற பெண்மணி ஒரு சிற்றுண்டி சாலையைக் கண்டதும், வண்டியை நிறுத்தி ஏதேனும் உண்ண உள்ளே சென்றாள். ஒளி மங்கலாக இருந்தது. சிறிய இடம். வெளியே இரு வாயு கலன்கள் இருந்தன. சற்றுப் புதுமையாக இருந்தது. அங்கு ஒரு பணிப்பெண் சிரித்த முகத்துடன் சுத்தமான துணியால் மேஜையைத் துடைத்து “என்ன வேண்டும்?” எனக் கேட்டார். இப்பெண்மணி எட்டு மாத கர்ப்பிணி. ஆனால் தன் களைப்பை சிறிதும் வெளிப்படுத்தாமல் வந்தவர்களுக்கு உபசாரம் செய்து கொண்டிருந்தாள்.

சாப்பிட்ட பிறகு, அப்பெண்மணி நூறு டாலர் நோட்டைப் பணிப் பெண்ணிடம் கொடுத்தாள். சில்லறை கொண்டு வருவதற்கு முன், இந்த பெண்மணி வெளியே சென்று விட்டாள். பணிப்பெண் வந்த பொழுது யாருமே அங்கு இல்லை. ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் போது ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி இருப்பதைக் கண்டாள்.

அங்கு எழுதியிருந்த வாசகம் – எனக்கு எதுவும் திருப்பித் தர வேண்டாம். தக்க சமயத்தில் எனக்கு ஒருவர் உதவி செய்தார். அதே மாதிரி  நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ ஏதேனும் தர விரும்பினால் சமயம் வரும் போது உதவி செய்யவும் எனக் குறிப்பிட்டு 400 டாலர்கள் காகிதத்தின் கீழே வைத்திருந்தாள். இதைக் கண்ட பணிப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

சிற்றுண்டி சாலையில் வேலைகளை உற்சாகத்துடன் செய்து விட்டு வீடு திரும்பிய பணிப்பெண் சோர்வாக இருந்ததால் படுக்கையறைக்குச் சென்றாள். அன்று நடந்த சம்பவங்களைக் கணவரிடம் கூறினாள். அடுத்த மாதம் குழந்தை பிறப்பிற்குப் பிறகு பணத்திற்கு எங்கே செல்வது என்று இருவருமே கவலையுடன் இருந்தனர். அப்பணிப்பெண் வேறு யாருமில்லை: ப்ரயனின் மனைவி தான்.

நீதி:

நாம் பிறருக்கு ப்ரதி உபகாரம் எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். தன்னலமற்ற உதவி மகிழ்ச்சியைக் கொடுக்கும். பல சமயம் நாம் செய்த உதவி நம்மையே வந்தடையும். பிறரை சந்தோஷப் படுத்துவதே பெரிய பரிசளிப்பு.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

 

 

 

திருவாதிரை இந்துப்பண்டிகை நாள்

Thirvadhiarai arudhra nakshatram 1

ஜோதிடத்தின்படியும், இந்துப் பஞ்சாங்கங்கள் படியும் ஒவ்வொரு நாளும் சந்திரன் 27 நட்சத்திரங்களுள் எந்த நட்சத்திரத்திற்கருகில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்த நாள் அந்த மாதத்தில் அந்த நட்சத்திரத்தினுடைய நாள் ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கும் சிவன்கோவில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில்தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை ஒரு 10-நாள் விழாவாகவே கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப் பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (=ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல். ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்து ஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ராதரிசனவிழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ராதரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது

பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை(சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Thirvadhiarai arudhra nakshatram 2

இது நடந்தது ஒரு மார்கழி மாதம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.

http://sampoornamvilas.blogspot.sg/2012/01/blog-post.html

http://ta.wikipedia.org/wiki/திருவாதிரை_%28நட்சத்திரம்%29

பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும்

Grandfather reading Bhagavad Gita to childbhagavad geetha

நீதி – உண்மை/வாய்மை

உபநீதி – மனநிலை மாற்றம்

ஒரு விவசாயி மலைப் பிரதேசத்தில் தன் பேரனுடன் வாழ்ந்து வந்தார். இந்த முதியவர், தினமும் அதிகாலையில் சமையலறை மேஜை அருகே உட்கார்ந்து கொண்டு, பகவத் கீதை படித்து வந்தார். பேரனும் தாத்தா செய்யும் செயல்களைப் பின்பற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தான்; முடிந்த வரை முயற்சி செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் பேரன் தாத்தாவிடம், “நான் தங்களைப் போல் பகவத் கீதை படிக்க முயற்சி செய்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிதளவு புரிந்தாலும் புத்தகத்தை மூடி வைத்தால் மறந்து விடுகிறது. பகவத் கீதை படிப்பதால் என்ன பயன்?” எனக் கேட்டான்.

தாத்தா கரி அடுப்பை மூட்டிக் கொண்டிருந்தார். அதை நிறுத்தி விட்டு பேரனிடம் ஒரு கூடையைக் கொடுத்து, பக்கத்தில் இருக்கும் நதியிலிருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருமாறு கேட்டார். சிறுவன் உடனடியாக கூடையை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆனால் அவன் வருவதற்கு முன்பே தண்ணீர் ஒழுகி வெளியே கொட்டி விட்டது.

தாத்தா சிரித்துக் கொண்டே அடுத்த முறை சற்று வேகமாக வரும்படி பேரனிடம் கூறினார். சிறுவனும் அவர் சொன்னபடி செய்தான். ஆனாலும் தண்ணீர் கூடையில் நிற்கவில்லை.

சற்று சலிப்பு அடைந்த சிறுவன், கூடைக்குப் பதிலாக ஒரு வாளியை எடுத்து வரச் சென்றான்.

உடனடியாக தாத்தா சிறுவனிடம், “எனக்கு வாளியில் தண்ணீர் வேண்டாம்; கூடையில் தான் வேண்டும். மேலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்” எனக் கூறினார். சிறுவன் மறுபடியும் முயற்சி செய்தான்.

இக்கட்டத்தில், இந்தக் காரியம் நடக்காது என சிறுவன் புரிந்து கொண்டான். எவ்வளவு நீர் நிரப்பினாலும் கூடையில் தங்காது என்று புரிந்து கொண்டு, தாத்தாவிடம் எடுத்துரைத்தான்.

அதற்கு தாத்தா, “நன்றாக கூடையை பார்” என்று சிறுவனிடம் கூறினார். அதன் தோற்றம் மாறியிருப்பதை சிறுவன் கண்டான்; அழுக்கடைந்த கூடை இப்போது சுத்தமாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

தாத்தா பேரனிடம், “பகவத் கீதை படிப்பதால் இது போன்ற மாற்றம் ஏற்படும். புரியாவிட்டாலும், ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, மனிதன் உள்ளும் புறமும் மாற்றம் அடைவான். இதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்காகக் கூறியது” எனச் சொன்னார்.

நீதி:

எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் பகவத் கீதை. சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்துக் கொள்வதுடன், பகவத் கீதை நமக்கு ஆன்மீக சக்தியையும் புரிய வைத்து நம்மை மேன்மைப் படுத்துகின்றது. கீதையில் கூறியுள்ளதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நம் வாழ்வுடன் உலகத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வும் சிறப்படையும்.

பகவத் கீதையிலுள்ள உள்ளார்ந்த போதனைகளின் சக்தி வெளிப்படுத்தப் படுகிறது; உலகளாவிய தத்துவங்கள் வெவ்வேறு விதத்தில் கூறப் பட்டுள்ளது. சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் புரிந்துக் கொள்வதுடன் ஆன்மீக சக்தியையும் புரிய வைத்து நம்மை மேன்மைப் படுத்துகின்றது. கீதையில் கூறியுள்ளதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நம் வாழ்வுடன் உலகத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வும் சிறப்படையும். சிறு வயதிலிருந்தே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அவை மனதில் நிறுத்திக் கொண்டு அச்சமயத்திலிருந்தே நற்பண்புகள் சார்ந்த வாழ்க்கையை கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முதலில் தன் மேல் நம்பிக்கையை வைத்துக் கொண்டு, பிறகு கடவுளையும் நம்ப கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வகையில் அவர்களை வளர்த்தால், வாழ்க்கையின் சவால்களை மன உறுதி மற்றும் நம்பிக்கையுடன் எதிர் கொள்வார்கள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Sourcehttp://media.radiosai.org/journals/Vol_05/01AUG07/12-Gita.htm