Archive | March 2014

கடவுளுக்கு எல்லோருமே ஒன்று

vishnu_209_by_vishnu108-d5vmy02

நீதி – அன்பு

உபநீதி – பக்தி

குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் அங்கு செல்கின்றனர்.

பக்தர் ஒருவர், தன் கால் வலி குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நாற்பத்தி ஒன்று நாட்கள் பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். நடக்க முடியாததால், அவரை எல்லாச் சமயங்களிலும் தூக்கி செல்ல வேண்டிய நிலமை. அவர் பணக்காரராக இருந்ததால் பணத்திற்குப் பிரச்சனை ஒன்றும் இருந்ததில்லை. ஒவ்வொரு நாளும் காலையில், கோவில் குளத்தில் குளிப்பதற்கு யாராவது அவரை தூக்கிச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம். நாற்பது நாட்கள், அவருடைய மனமார்ந்த வேண்டுதல் முடிந்து விட்டது; ஆனால் வலி குறையவில்லை.

அதே சமயத்தில், வேறு ஒரு ஏழ்மையான கிருஷ்ண பக்தர், தன் பெண்ணின் கல்யாணம் முடிய வேண்டும் என்று நாற்பத்தி ஒன்று நாட்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மணமகன் கிடைத்து, ஒப்பந்தம் செய்தார்கள்; ஆனால் கல்யாணம் செய்வதற்கோ, தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கோ அவரிடம் பணம் இல்லை. இவர் கனவில் வந்து கடவுள், “நாளை கோயில் குளத்திற்குச் செல்லும் பொழுது, படியில் ஒரு சிறிய பை இருக்கும். அதை எடுத்துக் கொண்டு பின் நோக்கிப் பார்க்காமல் ஓடவும்” என்று கூறினார்.

அடுத்த நாள், இரண்டு பக்தர்களுக்குமே நாற்பத்தி ஒன்றாவது நாள். பணக்கார பக்தர் ஒரு சிறிய பையில் தங்க நாணயங்களைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்காகக் கொண்டு வந்தார். குளத்தில் இறங்குவதற்கு முன், படியில் வைத்து விட்டுச்  சென்றார். அந்த சமயம் ஏழை பக்தர் அங்கு வந்தார். பையை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதைப் பார்த்து இந்த பக்தர் தண்ணீரிலிருந்து வெளியே வந்து ஓடியும் பயனில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.

திடீரென, அவரால் நன்றாக ஓட முடிகின்றதே என்ற விஷயத்தை உணர்ந்தார். இது வரை நடக்க இயலாமல் இருந்தவர், கடவுளின் அருளால் குணமாகி விட்டார் . கடவுளிடம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஏழை பக்தனுக்குப் பணம் கிடைத்ததால் பெண்ணின் கல்யாணத்தை  நன்றாக நடத்த முடிந்தது. இரண்டு பக்தர்களுக்கும் வேண்டியதை கடவுள் நடத்திக் கொடுத்தார்.

நீதி:

இரண்டு பக்தர்களுக்கும் கடவுள் வேறுபடுத்தாமல் சமமாக பரிசை அளித்தார். பக்தி தான் முக்கியம், யாரென்பது முக்கியமில்லை. நாம் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், நல்லதே நடக்கும். கடவுள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்ற ஏற்புத் தன்மை நமக்கு நிச்சயமாக வேண்டும். 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

மிருகங்களிடம் காண்பிக்கும் அன்பு

cat in a trap

நீதி – அன்பு

உபநீதி – கருணை

நவம்பர் 14, 2012 ஆம் ஆண்டு, எங்கள் பால விகாஸ் வகுப்பை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம். எங்கிருந்தோ “மியாவ்” என்ற சத்தம் கேட்டது. சத்தம் வரும் திசையை நோக்கிச் சென்றோம். ஒரு பூனை கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டோம். எவரோ  வலைப்பொறி வைத்து, அப்பூனையை பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டறிந்தோம். எப்படியாவது அதை வெளியில் கொண்டு வர, நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். குடியிருப்புக் காவலர்கள், பூனைகளைத் தொல்லையாக நினைத்ததனால், நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை. எங்களுக்கு பூனைகளைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அதனால் கூண்டிலிருந்து விடுதலைச் செய்ய தீர்மானித்தோம். ஆனால் கூண்டைத் திறக்கத் தெரியவில்லை. அந்தச் சமயம் ஒரு நல்ல மனம் படைத்தவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அவரைக் கெஞ்சி, கூண்டைத் திறந்து பூனையை விடுவித்தோம். அதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். பூனை யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் ஒரு நல்லக் காரியம் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம்.

நீதி:

1. விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் எனத் தெரிந்துக் கொண்டோம்.

2. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டோம்.

எழுதியவர்கள்:

குணால், நந்தினி, ஆர்யன், கிமாயா

பிரேமார்பன் வகுப்பு, எட்டிலிருந்து பதினொன்று வயதுள்ள குழந்தைகள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

தந்தையும் மகனும்

நீதி – அன்பு

உபநீதி – பொறுமை, இரக்கம்

80 வயது முதியவர் வீட்டுச் சாய்வு நாற்காலியில், அதிகமாக படித்திருந்த தன் 45 வயது மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று அங்கு ஒரு காக்கை ஜன்னல் கம்பியில் வந்து உட்கார்ந்தது.

தந்தை மகனிடம், “இது என்ன?” என்று வினாவினார். அதற்கு மகன் “இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக தந்தை கேட்டப் பொழுது மகன் “இப்போது தானே காக்கையென்று  சொன்னேன்” என்று சற்று கோபமாகக் கூறினான். மூன்றாம் முறை அதே கேள்வியைக் கேட்டவுடன், மகன் எரிச்சலுடன் பதிலளித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு நான்காவது முறையாக தந்தை கேட்டப் பொழுது, “எவ்வளவு முறை அதே கேள்விக்கு பதிலளிக்கிறது?” என்று மகன் கோபப்பட்டான்.

சற்று நேரத்திற்குப் பிறகு தந்தை அறைக்குச் சென்று ஒரு கிழிந்த நாட்குறிப்பை எடுத்து வந்தார். அது, தன் மகன் பிறந்த தேதியிலிருந்து வைத்திருந்த நாட்குறிப்பு. ஒரு பக்கத்தைத் திறந்து மகனை படிக்கச் சொன்னார். அதிலிருந்த வார்த்தைகள். “இன்றைக்கு, என்னுடைய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஜன்னல் கம்பியில் இருக்கும் காக்காவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 23 முறை, அது என்னவென்று கேட்டான். அன்போடு அவனை அணைத்துக் கொண்டு நான் பதிலளித்தேன்”. தந்தைக்கு கோபம் வரவில்லை; ஆனால் களங்கமில்லாத அந்தக் குழந்தை மேல் அன்பு தான் இருந்தது.

இன்று “உன்னிடம் நான்கு முறை கேட்டதற்கு இவ்வளவு கோபம் வருகிறதே” என்று தந்தை மகனிடம் கூறினார்.

நீதி:

வயதான பெற்றோரைத் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள்!! அவர்களை சுமையாகப் பார்க்காதீர்கள்!! நீங்கள் அன்போடும் பணிவோடும் இருக்க வேண்டும். இச்சமயத்திலிருந்து எப்பொழுதுமே அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புடன் செயல் படுங்கள்!! சிறு குழந்தைகளாக நாம் இருந்த போது, மிகுந்த அக்கறையுடன் அவர்கள் நம்மை கவனித்து வந்தார்கள். அவர்கள் நம் மேல் தன்னலமற்ற அன்பை செலுத்தி இருக்கிறார்கள்.

“அவர்கள் மலைகளையும், பள்ளத் தாக்குகளையும் தாண்டி, கஷ்டம் நஷ்டம் பார்க்காமல் இருந்ததால் தான், சமுதாயத்தில் இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் நான் இருக்கிறேன்” என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

ஒரு கோப்பை காப்பி

cup of coffee

நீதி – நன் நடத்தை / உதவும் மனப்பான்மை

உபநீதி – தன்னலமற்ற உதவி / சுய மரியாதை

இத்தாலி மிக அழகான நகரம். விளக்குகளும், நீர்ப்பகுதிகளும் நிறைந்த வசீகரமான ஒரு இடம்.

அங்கு ஒரு பிரபலமான காப்பிக் கடையில் என் நண்பனும் நானும் உட்கார்ந்து கொண்டு ருசியான காப்பியை அருந்துகின்ற நேரத்தில், ஒருவர் பக்கத்து மேஜையில் வந்து அமர்ந்தார். பிறகு பணியாளரிடம், “இரண்டுக் கோப்பைக் காப்பி, ஒன்றைச் சுவரில் வைக்கவும்” என்று சொன்னார். நாங்கள் அதை உன்னிப்பாகக் கேட்டு, அடுத்தச் செயலைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. அவர் இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டார். ஆனால் ஒரு கோப்பை தான் அவர் மேஜையில் இருந்தது. மற்றொன்று சுவரில் இருந்தது. அவர் கிளம்பியவுடன் பணியாளர் சுவரின் மீது ஒரு காகிதத்தை ஒட்டினார். “ஒரு கோப்பைக் காப்பி”  என்று எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு எங்களுக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. காப்பிக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கடைக்கே வரும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் சந்தோஷமாகக் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது, கிழிந்த உடை அணிந்துக் கொண்டு ஒருவர் வந்தார். அவர் “சுவரில் இருக்கும் ஒரு கோப்பைக் காப்பி” என்று பணியாளரிடம் கேட்டார். அங்கிருந்த பணியாளர் மரியாதையுடனும், பெருந்தன்மையுடனும்  காப்பியை அவரிடம் கொடுத்தார். அதை அருந்தி விட்டுப் பணம் ஏதும் கொடுக்காமல் அம்மனிதர் சென்று விட்டார்.

இதைப் பார்த்து ஆச்சரியப் பட்டோம். பணியாளர் சுவரில் இருந்த காகிதத்தை குப்பையில் வீசினார். எங்களுக்கு எல்லாம்  புரிந்துவிட்டது.

கஷ்டப்படுபவர்களுக்கு இந்த நகரத்தில் காட்டும் மரியாதையும் அன்பையும் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். தனித்தன்மையை இழக்காமல், காப்பிக் கோப்பை வேண்டும் என்று கூறாமல், அந்தச் சுவரைப் பார்த்தவுடன் பணியாளர் மரியாதையுடன் காப்பியை அவருக்குக் கொடுத்து, இவரும் சந்தோஷமாக அருந்தி விட்டுச் சென்றார்.

எல்லா இடங்களையும் விட, எங்களுக்கு அந்த சுவர் தான் மிகவும் அழகாக தோன்றியது.

நீதி:

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், தன்னலமற்ற சேவையாக இருக்க வேண்டும். அது அம்மனிதரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சில சமயங்களில், உதவி செய்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது, கர்வமோ அஹங்காரமோ நடுவில் வராதப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக் கேட்போரின் சுய மரியாதைக்குத் தடங்கல் இல்லாமல் நாம் கவனித்து கொள்ள வேண்டும். சரியான ஒரு காரியத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

boys

நீதி – நற்குணம்

உபநீதி – ஒற்றுமை

அன்று அணியின் இரண்டாவது போட்டி நடைப்பெற இருந்தது. நாங்கள் யு. டபிள்யு. சீ (சிங்கப்பூர்) அணியில் இருந்தோம். முக்கியமான ஒரு நிகழ்வு மற்றும் ஜெயிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. எங்கள் பயிற்சியாளர், அதிக பட்சமாக விளையாடுவதற்கு வரம்பு இருந்ததால், ஒருவர் விலகிக் கொள்ள வேண்டும் என்றுச் சொன்னார். என் நண்பர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்து விட்டு நான் வெளியேறினேன். வெளியிலிருந்து கூட்டணியை உற்சாகப் படுத்தினேன்.

எங்கள் அணி ஜெயித்து விட்டது. எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். இந்த அனுபவத்திலிருந்து நான் புரிந்துக் கொண்டது என்னவென்றால், “உனக்காக மட்டும் வாழாதே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”.

எழுதியவர்:

விவேக், பதினொன்று வயது, பிரேமார்பன் வகுப்பு, இரண்டாம் பிரிவு.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

விரிசலா அல்லது முழுமையானதா

carry-water1 (1)

நீதி – உண்மை / திட நம்பிக்கை

உபநீதி – சுய மரியாதை 

இந்தியாவில் தண்ணீர் சுமப்பவர் ஒருவரிடம் இரண்டு பானைகள் இருந்தன. ஒரு கம்பின் இரு முனைகளில் கட்டி, அதைத் தன் கழுத்தில் சுமந்துக் கொண்டு, தினமும் எஜமானன் வீட்டிலிருந்து நீர் ஊற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவார்.

ஒரு பானை விரிசல் ஏதும் இல்லாமல் நன்றாக இருந்தது. மற்றொன்று, விரிசல் விட்டிருந்தது. விரிசல் விட்ட பானையில் எப்பொழுதும் பாதி அளவு தண்ணீரே நிரம்பி இருக்கும். இரண்டு வருடங்கள் இவ்வாறே தினமும் நடந்தது. அதாவது, ஒன்றரைக் குடம் தண்ணீர் மட்டுமே எஜமானருக்கு வந்துச் சேர்ந்தது.

முழுமையான பானை தன் சாதனைகளைப் பார்த்து கர்வம் அடைந்தது. பாவம்!! விரிசல் பானைக்கு அவமானமாக இருந்தது. பாதி வேலைதான் நம்மால் செய்ய முடிகின்றதே என்ற ஏக்கமும் கூட இருந்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, விரிசல் விட்ட பானை தண்ணீர் சுமப்பவரிடம், “எனக்கு மனது வேதனையாக இருக்கிறது, மன்னிப்புக் கேட்க வேண்டும்.” என்று சொல்லிற்று. ஏன் என்று கேட்ட பொழுது தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை என்றும் மேலும் முயற்சிக்குத் தகுந்த ஊதியம் சுமப்பவருக்குக் கிடைக்கவில்லை என்றும் வருத்தப்பட்டது.

தண்ணீர் சுமப்பவர் மிக அன்போடு சொன்ன வார்த்தைகள், “ஆற்றிலிருந்து வரும் வழியில், உன் பானையிலிருந்து சிந்தியத் தண்ணீரால் வளர்ந்திருக்கும் பூக்களை கவனி!!” விரிசல் இருப்பதால் அந்தப் பாதையில் பூச்செடி விதைகளை நட்டேன். தினமும் சிந்தும் தண்ணீர், அந்த விதைகளைப் பூச்செடிகளாக மாற்றியது. அந்தப் பூக்களைப் பறித்து, எஜமானரின் மேஜையை அழகுப் படுத்த உதவி செய்தது. விரிசல் இல்லாமல் இருந்திருந்தால், இந்த அன்பளிப்பு எனக்குக் கிடைத்திருக்காது என்று சொன்னார். இங்கு முக்கியமாக எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குறைகளை நிறைவுகளாக எப்படி மாற்ற வேண்டும் என்பது தான்.

நீதி:

எல்லோரிடமும் குறைகள் இருக்கின்றன. நாம் சரியான பாதையைத் தேர்வு செய்து, நம் குறைகளை நிறைவுகளாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் யாருமே பயனற்றவர்கள் என்று சொல்ல இயலாது. ஒவ்வொருவரும் தெளிவான மனநிலையை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் ஒரு மாற்றுதலை ஏற்படுத்த வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

தச்சரின் நற்செயல்

carpenter picture new

நீதி – ஒழுக்கமான நடத்தை

உபநீதி –  சகிப்புத் தன்மை / மரியாதை உணர்வு  

இரண்டு சகோதரர்கள், அடுத்தடுத்துள்ள பண்ணைகளில் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு இடையே ஒரு வாக்குவாதம் நேர்ந்தது. நாற்பது வருடப் பயிர்த் தொழிலில், இதுவே முதல் முறை. இயந்திரச் சாதனங்கள் பகிர்ந்து கொள்வதிலோ, வாணிகத் தொழிலில் வியாபாரப் பொருட்களைக் கொடுத்து வாங்குவதிலோ சிக்கல் ஏதும் இருந்ததில்லை. இவ்வளவு நாட்கள் இருந்த உடனுழைப்பில் விரிசல் ஏற்பட்டது. சிறிதாக ஆரம்பித்தக் கருத்து வேறுபாடு பெரிய அளவில் வெடித்து, கசப்பான வார்த்தைகளைப் பரிமாறியப் பிறகு, பேச்சு வார்த்தைக் கூட நின்று விட்டது.

ஒரு நாள் அதிகாலையில், ஜான் வீட்டுக் கதவை எவரோ தட்டினார்கள். ஒரு தச்சன், வேலை செய்வதற்கு வேண்டிய கருவிகளை வைத்துக் கொண்டிருந்தான். அவன் “ஏதாவது வேலை இருக்குமா? உதவி செய்ய எனக்கு விருப்பம்” என்று கூறினான். அதற்கு பெரிய சகோதரர் ஜான். “ஆம்” என்று கூறினார்.

மேலும் ஜான் “ஒரு வேலை இருக்கிறது. அதோ பண்ணையில் இருக்கும் நீரோடை தெரிகின்றதா?” என்று தச்சனிடம் கேட்டார். அங்கு வசிப்பது தன் சகோதரர் என்று கூறி “போன வாரம் எங்களிடையே இருந்த நட்பைப் போலவே அங்கு ஒரு அழகான புல்வெளி இருந்தது. தற்பொழுது அந்தப் புல்வெளியைப் பிளந்து, மனதிலிருந்த விரிசலை அவன் வெளிப்படுத்தி உள்ளான். அதுதான் அந்த நீரோடை. என் மேல் இருக்கும் வெறுப்பில் கூட பண்ணியிருக்கலாம். அதற்கு பதிலடியாக அங்கு அடுக்கி வைத்திருக்கும் மரத் துண்டுகள் தெரிகின்றதா? அதை வைத்து எட்டு அடி உயரமுள்ள வேலியைக் கட்டிக் கொடுத்தால், நான் அவனையோ அவன் இடத்தையோ பார்க்க வேண்டாம்” என்றுக் கூறினார்.

தச்சன் உடனடியாக “எனக்குச் சூழ்நிலை புரிகின்றது. ஆணிகளையும், மரக்கம்பு நடுவதற்கான இடத்தையும் காண்பித்தால், உங்களுக்குப் பிடித்தமான வேலையை செய்கிறேன்” என்று கூறினான். மூத்த சகோதரர், தச்சனிடம் கருவிகளைக் கொடுத்து விட்டு வேலை விஷயமாக நகர்புறம் சென்று விட்டார்.

தச்சன் நாள் முழுவதும், மரத் துண்டுகளை அறுத்தலும், ஆணி அடித்தலுமாக வேலை செய்தான். அந்தி நேரத்தில் ஜான் திரும்பி வந்தப் போது, தச்சன் முடித்த வேலையைப் பார்த்து வியப்புற்றார். நீரோடையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அழகானப் பாலம் ஒன்றிருந்தது. இளைய சகோதரர் அங்கு வந்து “நான் இவ்வளவு வெறுப்பு வெளிப்படுத்தியப் பிறகுக் கூட, நீ எவ்வளவு அழகாக ஒரு பாலத்தை அமைத்து இருக்கிறாய்” என்று பெருமையாகக் கூறினார்.

அந்த மூலையிலிருந்து இளைய சகோதரன் கைகளை விரித்தப்படி அண்ணனை அணைக்க வந்துக் கொண்டிருந்தான். இரண்டு சகோதரர்களும் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். தச்சனைப் பார்த்து ஜான், “உனக்கு இங்கு நிறைய பணிகள் இருக்கின்றன. இங்கேயே தங்கிக் கொண்டு உதவி செய்யவும்” என்று கூறலானார். இதற்கு  தச்சன் சொன்ன பதில் என்னவென்றால் பலப் பாலங்களைக் கட்டி மக்களை இணைக்கும் வேலை இருக்கின்றது என்பது தான். இதைச்  சொல்லிவிட்டு அவன் புறப்பட்டு விட்டான்.

நீதி:

உறவுகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது தான் மிகக் கடுமையானது. முறிப்பது மிகவும் சுலபமானது. நமக்கு கிடைக்கும் அன்பைப் பேணிக் காக்க வேண்டும். ஏற்றம் இறக்கம் இருந்தாலும், விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்து, உண்மையான உறவுகளை பொக்கிஷமாகக் கருத வேண்டும். அஹங்காரமும், வெறுப்பும் இருப்பதால் கண்மூடித்தனமாக முடிவுகளை எடுக்கின்றோம். ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து, புரிந்து கொண்டு, மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தி, நாமும் சந்தோஷமாக இருந்து வேலிக்குப் பதிலாகப் பாலங்களை அமைக்க வேண்டும்.

  • எந்த வாகனம் ஓட்டுகின்றீர்கள் என்பது முக்கியமில்லை, எவ்வளவு மக்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தீர்கள் என்பது தான் முக்கியம்.
  • வீட்டின் சதுரடி எவ்வளவு என்பது முக்கியமில்லை, எவ்வளவு மனிதர்களை ஆசையாக வரவேற்றீர்கள் என்பது தான் முக்கியம்.
  • அலமாரியில் எவ்வளவு ஆடைகள் இருக்கின்றன என்பது முக்கியமில்லை, எவ்வளவு நபர்களுக்குத் துணிகள் கொடுத்து உதவி செய்தீர்கள் என்பது தான் முக்கியம்.
  • எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, நண்பனாக யாருக்கு இருந்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
  • எங்கு வசித்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் எவ்வளவு அக்கறை காண்பித்தீர்கள் என்பது தான் முக்கியம்.
  • தோலின் நிறம் முக்கியமில்லை. பண்பும் குணமும் தான் முக்கியம்.

மொழி பெயர்ப்பு :

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com