Archive | September 2016

யானையும் கயிறும்

the-elephant-and-the-rope-picture-1

நீதி –  நம்பிக்கை / உண்மை

உபநீதி – ஆத்ம சக்தி மற்றும் ஆற்றலை உணர்ந்து கொள்ளுதல் / சுதந்திரம்

ஒருவன் சில யானைகளைக் கடந்து சென்ற போது,  அவற்றின் முன் கால்கள் கையிற்றால் கட்டி இருப்பதைப் பார்த்துக் குழப்பத்தில் அங்கேயே சில நிமிடங்கள் நின்றான். அவற்றை அடக்குவதற்கு சங்கிலியோ, கூண்டோ இல்லை. எந்த நிமிடமும் அந்த யானைகள் கட்டுகளை அறுத்துக் கொண்டு ஓடலாம்; ஆனால் அவை அப்படிச் செய்யாமல் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தன.

அருகில் இருந்த யானைப் பாகனிடம் சென்று, இதைப் பற்றி அவன் விசாரித்தான். பாகன், “இந்த யானைகள் சிறியதாக இருந்த போது, இதே கயிற்றால் கட்டப் பட்டிருந்தன. இந்தக் கயிறு அப்போது போதுமானதாக இருந்தது. அவை வளர்ந்த பிறகு, அந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு செல்லவே முடியாது என்ற எண்ணத்துடனேயே வளர்ந்ததனால், இன்றும் அதே கயிறு போதுமானதாக உள்ளது” என்றான். கேள்வி கேட்டவன் வியந்து போனான். சிறிய கயிற்றை விடப் பல மடங்கு பலம் கொண்ட யானைகள், அக்கயிற்றை அறுக்க முடியாது என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தபடியால், இருந்த இடத்திலேயே இருந்தன.

நீதி:

இந்த யானைகளைப் போலவே, நம்முள் எத்தனை பேர் ஒரு செயலில் ஒரு சமயம் தோற்றுப் போனதால் அச்செயலில் வெற்றி பெறவே முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்கிறோம்?

இக்கதை போலவே, நாமும் நம் வாழ்க்கையில் எப்போதாவது தோற்றுப் போயிருப்போம். நாளடைவில் அச்செயலை நம்மால் செய்யவே முடியாது என்பதை உறுதியாகவே நம்ப ஆரம்பித்து, நம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டு விடுவோம். இந்தத் தோல்விகளை வெற்றியின் ஏணிப் படிகளாக நாம் நினைத்து, அவற்றை நல்ல கண்ணோட்டத்துடன் அணுகி, அதை அடைய வேண்டும் என்று உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

ஒரு சிறிய உலகத்திற்குள் நம்மை நாமே சுருக்கிக் கொள்ள வேண்டாம். நமது மனத்தடைகளை உடைத்து, சிறகுகளை விரித்து பறப்போம்! நம்பிக்கை இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரண்யா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நம் மனதின் பிரதிபலிப்பு தான் சொர்க்கம்

paradise-on-earth-picture-1

நீதி – உண்மை

உபநீதி – விழிப்புணர்வு

ஒரு பாதுகாப்புத் துறை அதிகாரி, புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கத்தில் வல்லுனராக இருக்கும் ஹாக்வின் என்றவரிடம்    ஒரு கேள்வி கேட்டார்,

சொர்க்கம் எங்கு இருக்கிறது? நரகம் எங்கு இருக்கிறது? அங்கு செல்வதற்கு வழி எங்கே?

அந்த பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு 2 விஷயங்கள் தான் தெரிந்திருந்தன: வாழ்க்கை மற்றும் மரணம். பெரிதாகத் தத்துவம் ஒன்றும் தெரியவில்லை; எப்படியாவது நரகத்திலிருந்து தப்பித்து சொர்க்கத்திற்குப் போகும் வழி மட்டும் தெரிய ஆவலாக இருந்தது. உடனே ஹாக்வின், அதிகாரிக்கு புரியும்படி பதிலளித்தார்.

“நீ யார்?” என்று ஹாக்வின் கேட்டார்.

நான் தான் பாதுகாப்புத் துறையின் அதிகாரி என்று பதிலளித்து விட்டுப் பேரரசர் என்னைப் புகழ்ந்து பேசுவார் என்றும் கூறினார்.

ஹாக்வின் சிரித்துக் கொண்டு, “நம்பவே முடியவில்லை. பார்ப்பதற்கு பிச்சைகாரன் போல இருக்கிறாயே” என்று சொன்னார்.

உடனே, மனவேதனையுடன் கர்வத்தில் தன் வாளை எடுத்து ஹாக்வினை கொலை செய்ய முயற்சித்தார். ஹாக்வின் உரக்கச் சிரித்தவாறு பேசத் தொடங்கினார். இது தான் நரகத்திற்கு வழி. கோபத்துடன் கையில் வாளை வைத்திருக்கிறாய். உனக்கு இருக்கும் அகங்காரம்,  நரகத்தின் வாயிற் கதவை இப்போது திறக்கும் என்றார்.

உடனே, பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு ஞானோதயம் வந்தது. வாளைத் தெரியாதபடி மறைத்தார். அதற்கு ஹாக்வின், “இப்போது சொர்க்கத்தின் வாயிற் கதவு திறக்கப் படும்” என்றார்.

நீதி:

சொர்க்கமும், நரகமும் நம்முள் இருக்கிறது. இது தான் உண்மை. வாயிற் கதவும் நம்முள் இருக்கிறது. அந்த விழிப்புணர்வு இல்லாவிட்டால், நரகத்தின் கதவு திறக்கும். நாம் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால், சொர்க்கத்தின் கதவு திறக்கும். மனிதர்கள் சொர்க்கமும், நரகமும் எங்கேயோ வெளியில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். நம் வாழ்க்கைக்குப் பிறகு அல்ல; நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே, நம் செயல்களுக்குத் தகுந்தாற் போல கதவுகள் திறக்கப் படும். நாம் எடுக்கும் ஒரு முடிவு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனால், எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அதிசயம்

நீதி – நன் நடத்தை / அன்பு

உப நீதி – கடமை உணர்ச்சி /விடா முயற்சி

ஒரு எட்டு வயதுச் சிறுமிக்கு, தன் பெற்றோர்கள் தம்பியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அவளுக்குத் தெரிந்தவரை, தம்பியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சிகிச்சை செய்ய அவர்களிடம் தேவையான பணத் தொகை இல்லாததனால், ஒரு சிறு வீட்டிற்கு குடி போகத் தீர்மானித்துக் கொண்டிருந்தார்கள். டாக்டருக்குப் பணம் கொடுப்பதோடு, குடும்பத்தையும் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை. அதிகத் தொகை தேவையான அறுவை சிகிச்சை செய்தால் தான், அவளுடைய தம்பி உயிர் பிழைக்க முடியும்; ஆனால் கடன் கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை.

miracle1“ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் தான், மகனின் உயிரைக் காப்பாற்ற முடியும்” என மெல்லிய குரலில் அவள் தந்தை, கண்ணீருடன் இருந்த தாயிடம் சொல்லிக் கொண்டிருந்ததை இச்சிறுமி கேட்டாள். தன் அறைக்கு ஓடிச் சென்று, தன் சேமிப்புப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த காசுகளை எண்ண ஆரம்பித்தாள். 100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள் அதில் இருந்தன.

சிறுமி சேமிப்புப் பெட்டியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு அருகிலிருந்த மருந்துக் கடைக்கு ஓடிச் சென்றாள். பெட்டியைப் பணmiracle2ம் செலுத்துமிடத்தில் வைத்ததும், கடைக்காரர் அச் சிறுமியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அச்சிறுமி, “என் தம்பியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனக்கு ஒரு அதிசயம் வாங்க வேண்டும்” எனக் கூறினாள். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

“என் தம்பியின் பெயர் ஆகாஷ்; அவன் தலைக்குள் ஏதோ வளர்வதால், அதிசயம் நடந்தால் தான் அவனைக் காப்பாற்ற முடியும்” என என் தந்தை சொல்வதைக் கேட்டேன். அதிசயத்தின் விலை என்ன? எனக் கேட்டாள். “நாங்கள் அதிசயம் எதுவும் விற்பதில்லை” எனக் கடைக்காரர் வருத்தத்துடன் தெரிவித்தார். தன்னிடம் பணம் இருப்பதாகவும், வேண்டுமென்றால் இன்னும் சேமித்துக் கொடுப்பதாகவும், அதிசயத்தின் விலையை மறுபடியும் அச்சிறுமி விசாரித்தாள்.

miracle3ஒழுக்கமான உடை அணிந்த ஒரு வாடிக்கையாளர் அப்போது கடைக்கு வந்திருந்தார். அவர் குனிந்து, அச்சிறுமியிடம் எந்த விதமான அதிசயம் அவள் தம்பிக்குத் தேவை என விசாரித்தார். கண்ணீருடன் அச்சிறுமி, தனக்கு விவரமாக ஒன்றும் தெரியாது; ஆனால், தம்பிக்கு அறுவை சிகிச்சை தேவை எனத் தன் தாயார் கூறுவதாகவும், அதற்கு வேண்டிய பணம் தன் தந்தையிடம் இல்லை; ஆதலால் தான் தன் சிறு சேமிப்பைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினாள். அவளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என அம்மனிதர் கேட்டதும், தன்னிடம் 100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள் இருப்பதாகவும் கூறி, மேலும் தேவைப்பட்டால் சேகரித்துத் தருவதாகவும் கூறினாள். “ஆஹா! தற்செயலாக, அதிசயத்தின் சரியான விலை அவ்வளவு தான்” என அம்மனிதன் கூறினார். அவர், சிறுமியின் பணத்தை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, அவள் இருக்கும் வீட்டிற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டார். தான், அவள் தம்பியையும் பெற்றோர்களையும் சந்திக்க விரும்புவதாகவும், அவள் தம்பிக்கு தேவையான அதிசயம் தன்னிடம் இருக்கிறதா எனப் பார்ப்பதாகவும் கூறினார். அவர்களைச் சந்தித்த பிறகு, அவள் தம்பியின் அறுவைச் சிகிச்சையை இலவசமாகச் செய்தார். சில வாரங்களுக்குப் பிறகு, சிறுவன் ஆகாஷ் உடல் நிலை தேறி, வீடு திரும்பி வந்தான்.

ஒரு நாள் மதிய நேரத்தில், சிறுமியும் அவள் தாயாரும் பேசிக் கொண்டிருக்கும் போது, தாயார், “அறுவைச் சிகிச்சை நடந்தது பெரிய அதிசயம்; எவ்வளவு பணம் செலவு ஆகியிருக்கும் எனத் தெரியவில்லை” எனக் கூறினார். அதற்கு அச்சிறுமி புன்சிரிப்புடன், “100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள்” என பதிலுரைத்தாள். அத்துடன், ஒரு சிறுமியின் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் பல அதிசயங்கள் நிகழலாம்.

நீதி

இக்கதை ஒரு சகோதரிக்கு, அவள் சகோதரன் மேல் இருந்த பாசத்தை வெளிப்படுத்துகின்றது. அவளது நம்பிக்கையும், விடாமுயற்சியும் அவள் தம்பியைக் காப்பாற்றியது. அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால், வெற்றிகரமாகத் திகழலாம். எல்லோரிடமும் அன்பாக இருப்போம். பல அதிசயங்களை அனுபவிப்போம்.

miracle-5

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நல்ல ஆசிரியர்

நீதி நன் நடத்தை

உபநீதி கடமை

EPSON scanner imageமூன்று பள்ளிகளிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ஒரு மாணவன் புதிதாக ஒரு பள்ளியில் சேர்ந்தான். வகுப்பிற்கு வந்த முதல் ஆசிரியர், புதிய மாணவனைப் பார்த்து “எங்கிருந்து தான் இவர்கள் எல்லாம் வருகிறார்களோ?” என்று மனதில் எண்ணியவாறு மாணவனை பார்த்தார்.

அடுத்து வந்த ஆசிரியர், புதிய மாணவனைப் பார்த்து கோபத்துடன், “உங்களுக்கெல்லாம் குறைச்சலே இல்லை” என்று பொறுமினார்.

மூன்றாவது ஆசிரியரோ வகுப்பில் புதிய மாணவனைப் பற்றி அறிந்தவுடன் “புதிய மாணவன் வந்துள்ளானா?” என்று துள்ளிக் குதித்தார். அந்த மாணவனிடம் சென்று கை குலுக்கி, அவன் கண்ணைப் பார்த்து “காலை வணக்கம்! உனக்காகத் தான் காத்திருந்தேன்” என்றார்.

நீதி

A good teacher picture 2

ஒரு நல்ல ஆசிரியர் எழுச்சியூட்டி ஊக்கமளிக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆசிரியர் தான் நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும். ஒரு மாணவனின் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கு பெரிது. அருமையான ஆசிரியரை மாணவன் தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிறுத்தி மதிப்பான்.

சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்கு:

ஒரு சமுதாயம் மேம்பட வேண்டும் என்றால், எல்லா மனிதர்களும் நற்பண்புகளை பெற்றிருக்க வேண்டும். எனவே பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் கல்வியுடன் நல் ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். கல்வியைப் பாதியில் விடுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மொட்டாக இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நிறைவான கல்வி செல்வத்தைக் கொடுத்து மணம் வீசும் மலராகத் திகழச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மொழிப்பற்று,  இனப்பற்று,  சமுதாயப் பற்று இருக்க வேண்டியது அவசியம்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

என்ற குறளுக்கு ஏற்ப பகுத்தறிவையும், அறிவு சிந்தனையையும் சமூகத்திற்கு உருவாக்கிட ஆசிரியர் பணி மிகப் பெரிய பங்கை வகுக்கின்றது.

மொழி பெயர்ப்பு:

சரண்யா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நம்பிக்கையின் சக்தி

நீதி –  தன்னம்பிக்கை

உபநீதி – எல்லாம் நன்மைக்கே என்ற கொள்கை

POWER OF BELIEF - PICTURE 1

ஒரு முறை, வியாபாரி ஒருவருக்குக் கடன் அதிகமாகி, அதிலிருந்து வெளியே வரத் தெரியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள் அவரிடமிருந்து பணத்தை வாங்கத் துரத்தினர்; பொருட்கள் வழங்கியவர்களும் பணம் கேட்க ஆரம்பித்தனர். ஆதலால், பூந்தோட்டத்தில் தலையைச் சாய்த்தபடி அதிகக் கவலையுடன், என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு பெஞ்சு மீது அமர்ந்திருந்தார். தன் நிறுவனத்தைக் கடன் தொல்லையிலிருந்து மூழ்குவதை எவ்வாறு காப்பாற்றுவது என அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

POWER OF BELIEF - PICTURE 2

திடீரென, ஒரு வயதானவர், அவரிடம் வந்து, ”நீங்கள் ஏதோ கஷ்டத்தில் இருப்பது போல தோன்றுகிறது” எனக் கூறினார். வியாபாரியின் துயரங்களைக் கேட்டவுடன், தன்னால் அவருக்கு உதவ முடியும் என அவர் சொன்னார்.

வியாபாரியின் பெயரைக் கேட்டு விட்டு, ஒரு காசோலையில் அவர் பெயரை எழுதிக் கையில் கொடுத்து, “இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, இதே நாளில் நாம் சந்திப்போம். அப்பொழுது பணத்தைத் திருப்பித் தாருங்கள்” என்று அவர் சொன்னார். பிறகு வந்த வேகத்திலேயே அந்த வயதானவர் திரும்பிச் சென்று மாயமாக மறைந்தார்.”

வியாபாரி தன் கையில் 5 லட்ச டாலர் மதிப்புள்ள பணக் காசோலையைக் கண்டார். அதில், திரு. ஜான் ராக்பெல்லர் என்பவரின் கையொப்பம் இருந்தது. அம்மனிதர் மிகப் பெரிய செல்வந்தர்.

தான் பணக் கஷ்டத்திலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கை வியாபாரிக்கு வந்தது. ஆனால், அவர் மனதில் வேறு எண்ணம் இருந்தது. காசோலையை வங்கியில் கொடுத்து பணத்தை எடுக்காமல், அவர் தன் அலமாரியில் பத்திரமாக வைத்தார். பணம் இருக்கும் தைரியம், பணிகளை ஒழுங்குமுறையாகச் செயல்படுத்த பலம் கொடுத்தது.

இந்தத் திடநம்பிக்கையுடன், அவர் வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கையாண்டார்.  பல வியாபார ஒப்பந்தங்களைப் பேசி முடித்தார். சில மாதங்களுக்குள், கடன் தீர்ந்து, மறுபடியும் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

சரியாக ஒரு வருடம் கழித்து, அதே பூந்தோட்டத்துக்கு காசோலையை எடுத்துக் கொண்டு வியாபாரி சென்றார். சரியான சமயத்தில் அந்த வயதானவரும் அங்கு வந்தார். காசோலையைத் திருப்பி கொடுத்து விட்டு, தான் வெற்றி பெற்ற கதையை வயதானவரிடம் விவரமாகச் சொன்னார். அப்போது ஒரு தாதி ஓடி வந்து வயதானவரை பிடித்துக் கொண்டாள்.

“இவரைக் கடைசியில் பிடிக்க முடிந்தது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று அழுத அவள், “உங்களுக்கு எந்தச் சிரமமும் கொடுக்க வில்லையே; தான் ஜான் ராக்பெல்லர் என்று எல்லோரிடமும் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.” என்றபடி வயதானவரின் கையைப் பிடித்து, வழி நடத்திச் சென்றாள்.

வியாபாரி வியப்புடன் திகைத்து நின்றார். இவ்வளவு நாட்களும், கையில் பணம் இருக்கிறது என்ற தைரியத்தில் வியாபாரத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்கி பிறகு விற்று கொண்டிருந்தார். திடீரென அவர் உணர்ந்தார் – நிஜமோ, கற்பனையோ, பணம் அவர் வாழ்க்கையை மாற்றவில்லை. அவருள் இருந்த தன்னம்பிக்கையே, அவருக்குச் சாதனைகளைப் புரிய தைரியம் கொடுத்தது.

நீதி:

power of belief - picture 3மனிதனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். நமக்கே நம் திறமை மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், மற்றவர்கள் நமக்கு எப்படி உதவுவார்கள்?

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com