Archive | May 2022

தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட உடை

நீதி: உண்மை, அமைதி

உப நீதி: பற்றின்மை, உறுதி

ஶ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் கூறியபடி:

“ஒரு சமயம் எனக்குத் தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட உடை அணிவது, விரலில் மோதிரம் அணிவது, மற்றும் நீண்ட குழாயால் புகைப் பிடிப்பது போன்றவற்றில் விருப்பம் இருந்தது. மாத்தூர் பாபு எனக்காக இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி வந்தார்.

நான் அந்தத் தங்க ஜரிகையினாலான உடையை அணிந்து கொண்டு எனக்குள்ளே கூறிக் கொண்டேன், ‘மனமே! இதற்குப் பெயர்தான் தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட உடை’

பிறகு நான் அதை எடுத்துத் தூக்கி எறிந்தேன். என்னால் அந்த உடையை அதற்கு மேல் அணிய முடியவில்லை.

மறுபடியும் நான் மனதுக்குள் கூறிக் கொண்டேன், ‘மனமே! இதற்குப் பெயர்தான் சால்வை, இது மோதிரம், இது புகை பிடிக்கும் நீண்ட குழாய்’ இவை அனைத்தையும் நான் முடிவு செய்து தூக்கி எறிந்தேன். இவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம், அதன் பிறகு எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை.”

நீதி:

நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல விருப்பங்கள், நாம் காணும் சமூகச் சுற்றுப்புறத்திலிருந்து உண்டாகிறது. அதனால் நம் மனம் குழம்புவது இயற்கைதான். அதுமாதிரியான தருணத்தில் நாம் மெளனமாக அமர்ந்து, ஆழமாக சுவாசித்து, அமைதியாக நாம் எடுக்கப் போகும் முடிவுகளின் விளைவுகளை சிந்திக்க வேண்டும். இயற்கையாக, நமது மனம் நம்மை சரியான பாதையில் செலுத்தி, நம்மை எதிர்மறையான மனப்பான்மையை கடைப்பிடித்து போவதையும், தேவையற்ற சொத்துக்களையும் பொருட்களையும் குவிப்பதையும் தடுக்கும்.

“மனம் என்ற வேரிலிருந்துதான் அனைத்தும் வளர்கின்றன. மனதை உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால், மற்ற அனைத்தும் அதனுள் அடங்கும். அது மரத்தின் வேர் போன்றது. மரத்தின் அனைத்துப் பழங்களும், பூக்களும், கிளைகளும், இலைகளும் அதன் வேரை சார்ந்திருக்கும். நீங்கள் வேரை வளப் படுத்தினால், மரம் பெருகும். நீங்கள்  வேரைத் துண்டித்தால், அது இறக்கும். மனதைப் புரிந்து கொள்பவர்கள், குறைந்த முயற்சியிலேயே அறிவொளியை அடைவார்கள்.” – போதிதர்மம், போதி தர்மரின் ஜென் நீதிகள்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

தனித்துவத்துடன் நிலைக்க துணிவு வேண்டும்

நீதி: சரியான நடத்தை

உபநீதி: தனித்துவம், தைரியம்

ஒரு தலைமை தச்சரும், அவருக்குக் கீழே பணி புரியும் புதுவேலையாட்களும் கட்டுமானப் பொருட்களைத் தேடி காட்டுக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மாபெரும் மரத்தைக் கண்டார்கள். ஐந்து நபர்கள் கைகோர்த்துக் கொண்டு அம்மரத்தை சூழ்ந்து நின்ற பின் கூட அதன் சுற்றளவவை உள்ளடக்க முடியவில்லை; அதன் உச்சி கிட்டத்தட்ட மேகங்களை தொட்டது; அத்தகைய பெரிய மரம்.

தலைமைத் தச்சன், “இந்த மரத்தில் நம் நேரத்தை வீணாக்க வேண்டாம். அதை வெட்டி வீழ்த்துவதற்கு மிகுந்த நேரம் எடுக்கும். வலுவுள்ள அடிமரத்திலிருந்து ஒரு கப்பலை உருவாக்க முயன்றால், அக்கப்பல் மூழ்கிவிடும். வீட்டின் கூரையை உருவாக்குவதற்கு அதைப் பயன்படுத்த முயற்சித்தால், வீட்டின் சுவர்களை சிறப்பு முறையில் வலுப்படுத்தப்பட வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

பின்னர் அக்குழு தொடர்ந்து சென்றனர். புதிய வேலையாட்களில் ஒருவர் “இவ்வளவு பெரிய மரம் ஒருவருக்குமே பயனற்றதாக இருக்கிறதே!” என்று குறிப்பிட்டார்.

அதற்கு தலைமை தச்சன் “நீங்கள் தவறான கண்ணோட்டதில் பார்க்கிறீர்கள். இது மற்ற மரங்களை போலவே இருந்திருந்தால், நாம் அதை வெட்டியிருப்போம். ஆனால் இந்த மரத்திற்கு வித்தியாசமாக இருக்கும் தைரியம் இருந்ததால், அது இன்னும் நீண்ட காலம் உயிருடன் வலுவாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

தனித்துவத்துடன் இருப்பதற்காகவும், சமூக வரைமுறைபடி நடக்காமல் இருப்பதற்காகவும், பிறர் நம்மை வெறுக்கக்கூடும்; ஆனால் ஆழ்மனதில் அவர்களும் அவ்வாறு செயற்படுவதற்கு மனதைரியம் வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

தனித்துவத்துடன் நிலைக்க, ஒருவர் வித்தியாசமாக இருக்க வேண்டும்.

நீதி:

தைரியம் என்ற நற்பண்பை, குறிப்பாக சரியான முடிவுகளை எடுக்கும் போது, ஒருவர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான குணமாகும். ‘தைரியம்’ என்ற மனப்பான்மையை, கொடுந்துயர் மற்றும் சிரமமான நேரங்களுடன் தொடர்பு படுத்தலாம்; ஆனால், உண்மையில் நம்மில் பெரும்பாலோருக்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளை கையாளவும், சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும் தைரியம் தேவை. பிறருக்கு எத்தனை அற்பமான பயம் என்று தோன்றினாலும், மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு, நம்முடைய அச்சங்களை எதிர்கொள்ள வேண்டும். தைரியம் ஒரு தசை போன்றது, அதை பலப்படுத்த நாம் தினந்தோறும் பயிற்சி செய்ய வேண்டும்.

கூட்டத்தில் ஒருவனாக நிற்பது எளிது, ஆனால் தனித்து நிற்க தைரியம் தேவை – மகாத்மா காந்தி

“தைரியம் என்பது மனித குணங்களில் முதன்மையாகக் கருதப்படுகிறது; ஏனெனில் இது மற்ற அனைத்து குணங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் தரம்”. – வின்ஸ்டன் சர்ச்சில்

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

எதை அடைய வேண்டுமோ அதில் கவனம் செலுத்த வேண்டும்

நீதி: உண்மை, வேறு விதமாக யோசித்தல்

உப நீதி: நன்னம்பிக்கை  

பெற்றோர், குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்காக பவுலோ கோய்லோவின் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது  

இந்தியாவில், ஒரு வயதான அரசர்,  ஒரு மனிதனுக்கு மரண தண்டனை அளித்தார். அரசர் தன் தீர்ப்பை படித்து முடித்த போது, தண்டிக்கப்பட்ட மனிதன் “மாட்சிமை உள்ள மன்னரே! தாங்கள் அறிவுள்ளவராகவும், குடிமக்களின் நலனை அறிந்து கொள்ள ஆர்வமுடையவராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் குருமார்கள், முனிவர்கள், பாம்பாட்டிகள் மற்றும் பக்கிரிகளை மதிக்கிறீர்கள். அருமை! நான் சிறுவனாக இருந்த போது, என் தாத்தா வெள்ளைக் குதிரையை எப்படி பறக்க வைப்பது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த ராஜ்ஜியத்தில் இதை எப்படிச் செய்வது என்று தெரிந்தவர்கள் எவரும் இல்லாததால், என்னை மரணத் தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்று கூறினான்.

அரசர் உடனடியாக ஒரு வெள்ளைக் குதிரையைக் கொண்டு வருமாறு கேட்டார்.

தண்டிக்கப்பட்ட மனிதன் “இந்த மிருகத்துடன் நான் இரண்டு வருடங்கள் செலவழிக்க வேண்டும்” என்று கூறினான்.

அரசர் “சரி! உனக்கு இரண்டு வருடங்கள் அளிக்கப்படும்” என்று சற்று சந்தேகத்துடனேயே   கூறிய பிறகு “இக்குதிரை பறக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், நீ தூக்கில் போடப் படுவாய்” என்றும் கூறினார்.

அந்த மனிதன் மிகுந்த சந்தோஷத்துடன் குதிரையுடன் புறப்பட்டான். அவன் தன் வீட்டை அடைந்த போது, குடும்பத்தினர் அனைவரையும் கண்ணீருடன் காணப் பட்டனர்.  

அனைவரும் “நீ என்ன பைத்தியமா? எப்போதிலிருந்து இந்த வீட்டில் இருப்பவர்களுக்குக் குதிரையைப் பறக்க வைக்கத் தெரியும்?” என்று அழுதுக் கொண்டே கேட்டனர்.  

அதற்கு அவன் “கவலைப் படாதீர்கள்” என்று கூறி, “முதலாவதாக குதிரைக்குப் பறக்கக் கற்றுக் கொடுப்பதற்கு எவருமே ஒரு பொழுதும் முயன்றதில்லை.  குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம். இரண்டாவதாக, ஏற்கனவே அரசருக்கு வயதாகி விட்டதால், அடுத்த இரண்டு வருடங்களில் அவர் இறந்து கூடப் போகலாம். மூன்றாவதாக, இந்தக் குதிரை இறந்து போகலாம், பிறகு புதிய குதிரைக்குக் கற்றுக் கொடுக்க எனக்கு மேலும் இரண்டு வருடங்கள் வழங்கப் படலாம்.  மேலும் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் பொது மன்னிப்புக்கான சாத்தியக் கூறுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது இருப்பதைப் போலவே சூழ்நிலைகள் இருந்தாலும், எனக்குக் கிடைத்திருக்கும் இந்த இரண்டு வருடங்களில், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும். இது உங்களுக்கெல்லாம் குறைவாகத் தெரிகிறதா?” என்று கேட்டான்.

சில விஷயங்கள் நடப்பதற்கு முன்பே, அதை மனதில் போட்டு கொள்வதற்குப் பெயர் முன் நோக்குதல் எனப்படும். சில விஷயங்கள் நடப்பதற்கு முன்பே அதன் முடிவுகள் தவறாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கவலைப் படுவதாகும்.

பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே, அதை சரி செய்ய முயற்சிப்பது தைரியமாகும்.

நீதி:

கவலைப்படுவதால் நம் இடர்பாடுகள் சரியாகப் போவதில்லை; நம் மன அமைதி மட்டுமே பாதிக்கப்படும். நாம் நம்பிக்கையுடன் இருந்து, வேறு விதமாக யோசித்து, அவநம்பிக்கை தரும் சூழ்நிலைகளை நல்ல விஷயங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்து, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொண்டு, தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும். கவலைப்படுவதனால் நாளைய துன்பங்கள் மறைந்து போகாது; மாறாக இன்றைய சந்தோஷத்தை பறித்து விடும். நாம் எதை அடைய வேண்டுமோ அதில் கவனத்தைச் செலுத்தத் துவங்க வேண்டும். எதை இழக்க வேண்டுமோ   அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பூரண சரணாகதி

நீதி: உண்மை, நம்பிக்கை

உப நீதி: விசுவாசம், சரணாகதி

ஒரு தம்பதியினர் படகில் சென்று கொண்டிருந்தனர். தீடீரென ஒரு பெரும் சூறாவளி ஏற்பட்டதனால் படகு தத்தளிக்க ஆரம்பித்தது.

மனைவி தன் கணவனிடம் “ஏதாவது செய்யுங்கள், நாம் இறந்து விடப் போகிறோம்” என்று பதட்டத்துடன் அலறினாள்.

கணவன் நிதானத்துடனும் அமைதியுடனும் காணபட்டான். சூறாவளி மேலும் சீற்றமடைந்தது. மனைவி பயத்தில் மேலும் கதற ஆரம்பித்தாள்.

கணவன் சட்டென்று கையில் ஒரு கத்தியை எடுத்து, அதை மனைவியின் கழுத்தில் வைத்தான்.

மனைவி கணவனைப் பார்த்து, “இது விளையாடும் தருணமா? இந்த சூறாவளியிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது விளையாட்டு வேண்டாம்” என்று கூறினாள்.

கணவன், “நான் உனக்கு எதிராக கத்தியை நீட்டும் போது கூட நீ என்னிடம் ‘விளையாட வேண்டாம் இது நேரம் அல்ல’ என்று சொல்கிறாய். நான் விளையாட்டாகத் தான் கத்தியை காண்பிக்கிறேன் என்று உனக்கு என்மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது, நாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து அவரது நாடகத்தில் இதுவும் ஒன்று என ஏன் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது?

உடனே மனைவி, “ஒருவேளை நாம் இறந்துவிட்டால்?” என்று கேட்டாள்.

அதற்கு கணவன், “நம்மைக் காப்பாற்றி கொள்ள அனைத்து முயற்சியையும் செய்ய முனைவோம். ஆனால் இவை அனைத்தையும் மீறி, நாம் மோட்சத்தை அடைய வேண்டும் என்று கடவுள் நினைத்தால், அதை ஏற்றுக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இறைவனிடம் உன்னை முழுமையாக சரணடைந்து விடு” என்று விளக்கம் அளித்தான்.

நம் வாழ்க்கையில் நாம் நினைக்கும் திட்டங்கள் சில நேரங்களில் தோல்வியடைகின்றன. கடவுள் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவ்வாறு நடக்கிறது. அவருடைய திட்டங்களே நமக்கு சரியானவை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கற்பித்தல்:

சரணாகதி என்பது நம்மிடம் உள்ள எல்லா எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடுவது தான். நம் அகக்கண்களுக்கு புலப்படவில்லை என்றாலும், நாம் கடவுள் மீது நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும், அதுவே நம் வேட்கையுடன் இணைக்கும் கருவியாகும். கடவுள் நமக்கு சரியானதை மட்டுமே செய்வார் என்ற நம்பிக்கைதான் பக்தியாகும்.

வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நமக்கு புரியாத போதெல்லாம், கண்களை மூடிக் கொண்டு “கடவுளே, இது உங்கள் திட்டம் என்று எனக்குத் தெரியும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள எனக்கு மனவலிமை அளித்து உதவுங்கள்” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE