Archive | November 2023

உயர்ந்து செல்

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக் கொள்ளும் மனநிலை / மனநிறைவு

ஒரு நாள் என் நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது “வாழ்க்கை ஒரு போராட்டம் இல்லையா?” என்று கேட்டார். அது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது. அனைவருக்கும் வாழ்க்கை கடினமாக அல்லாமல் இனிதாகவே அமையும் என்று நான் எப்போதும் நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததில் தவறு இருப்பது போல் தெரிகிறதே? உண்மையில், வாழ்க்கை என்பது சிக்கல்களால் ஏற்படும் கவலைகலாகும்; ஆனால் போராட்டங்கள் இருக்குமா? ஒருவேளை இந்த “போராட்டங்களின்” மூலம் வாழ்க்கை நமக்கு எதாவது முக்கிய செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதோ?

இந்த கேள்வி என் சிந்தனையை தூண்டியது. வாழ்க்கையில் சிலர் ஏன் தொடர்ந்து போராட்டங்களை சந்திக்கின்றனர்? வாழ்நாள் முழுவதும் போராடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையில் துயரங்கள் முடிவடைவதே இல்லை. சிலருக்கு ஏன் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கிறது? எதை நினைக்கிறார்களோ அதை ஒரு சிட்டிகையில் பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை மிக சுலபம். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே தங்க தட்டில் வைத்து தரப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலை சமீபத்தில் என் மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் மூலம் கிடைக்கப் பெற்றேன். கதையை மேற்கோள் காட்ட:

“ஒரு மனிதன் பட்டாம்பூச்சியின் குக்கூன் ஓடு ஒன்றை கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறிய துவாரம் தோன்றியது; அந்தச் சிறிய துவாரத்தின் வழியாக, தன் உடலை வலுக்கட்டாயமாக வெளியேற்ற, பல மணி நேரம் போராடிக் கொண்டிருந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சில நிமிடம் அது எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தது. முடிந்த அளவு பிரயத்தனம் செய்து, பின்னர் தன் முயற்சியை கைவிட்டது போல் அந்த மனிதனுக்கு தோன்றியது. அவன் அந்த பட்டாம்பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து, மீதமுள்ள குக்கூனை துண்டித்தான். சிறிது நேரத்தில் வண்ணத்துப்பூச்சி அந்த ஓடிலிருந்து எளிதாக வெளிப்பட்டது. ஆனால் அது வீங்கிய உடலுடனும், சிறிய, சுருங்கிய இறக்கைகளுடனும் இருந்தது.

எந்த நேரத்திலும், இறக்கைகள் பெரிதாக விரிவடைந்து உடலைத் தாங்கும் மற்றும் வீங்கி இருந்த உடலும் காலப்போக்கில் சுருங்கிவிடும் என்று எதிர்பார்த்து அந்த மனிதன் காத்திருந்தான்.

இரண்டுமே நடக்கவில்லை! உண்மையில், அந்த பட்டாம்பூச்சி தனது வாழ்நாள் முழுவதும் வீங்கிய உடலுடனும், சுருங்கிய இறக்கைகளுடனும் ஊர்ந்து சென்றது. அதனால் ஒருபோதும் பறக்க இயலவில்லை.

தன் அவசர புத்தியாலும் காருண்யத்தினாலும் பட்டாம்பூச்சிக்கு உதவிய அந்த மனிதனுக்கு, ஒன்று புரிபட வில்லை. பட்டாம்பூச்சியின் சிறிய வரையறுக்கப்பட்ட குக்கூன் ஓடும், அதில் ஏற்பட்ட துவாரத்தினூடாக அந்த வண்ணத்துப்பூச்சி வருவதற்குத் தேவையான போராட்டமும், அதன் உடலிலிருந்து ஒருவித திரவத்தை அதன் இறக்கைகளுக்குள் புகுத்தும். இதுவே கூட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தவுடன் அந்த வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு தயார் நிலைக்கு கொண்டுவர இயற்கையின் வழியாகும்.

சில சமயங்களில் போராட்டங்களே நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும். எந்த தடையும் இல்லாமல் நம் வாழ்க்கையை கடந்து செல்ல இயற்கை அனுமதித்தால், அது நம்மை முடமாக்கிவிடும். நாமமும் முழு வலிமையுடன் / உறுதியுடன் முயற்சிக்க மாட்டோம். மேலும் நம்மால் நம் “சிறகை விரித்து பறக்க” முடியாமலே போகக் கூடும்.

நாம் உயரமாக பறக்க விரும்பினால், நமது இலக்குகள் உயர்ந்ததாக இருந்தால், நாம் கண்டிப்பாக போராட வேண்டும். மேலும் உயர்ந்த இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கை, வாழத் தகுதியற்றது. வெள்ளித் தட்டுடன் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான சவாரியாக இருக்கலாம். ஆனால் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குப் பிறகு வெற்றியை சுவைத்தவர்களுக்கு, அதன் இனிப்பு கூடுதலாக தோன்றும். இதை அனுபவித்தவர்கள் அதனை உறுதி செய்வார்கள்.

பட்டாம்பூச்சியின் உடலில் இருக்கும் திரவம் அதனை கூட்டை விட்டு வெளியே வருவதற்கு உதவுவது போல, போராட்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கும் இயற்கை ஒரு பொறிமுறையை வழங்கியுள்ளது. அதை எப்படி, எங்கு தேடுவது என்ற சந்தேகமா? மன்னிக்கவும், “பிழையறிதலும் தீர்வுகளும்” என்ற தலைப்புடன் வாழ்க்கைக்கான வழிமுறை கையேடு எதுவும் இவ்வுலகில் இல்லை. இது இயற்கை நமக்கு இயல்பாக உள்ளமைத்த பொறிமுறையாகும். இந்த பொறிமுறையானது போராடுவதற்கான வழிமுறையாகும். நம் ஒவ்வொருவரிடமும் இந்த மனவலிமை பல்வேறு சதவிகிதங்களில் உள்ளது. சிலர் இடைவிடாமல் போராட்டங்களை எதிர்கொண்டு முயற்சிப்பதற்கும், சிலர் பாதி வழியில் கைவிடுவதற்கும் இதுவே காரணம். பல தற்கொலைகள், மனவலிமை இல்லாததால் நடக்கின்றன.

ஆம், இப்போது நான் தெளிவடைந்து விட்டேன். நான் தவறாக எண்ணியிருக்கவில்லை. வாழ்க்கை எவருக்கும் இன்னல்களை அளிப்பது இல்லை. நம் நலனை, நாம் மேலும் உயர்ந்து பறக்க வேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. இதுவும் ஒரு கருணை தான்.

நீதி:

மகத்தான மனிதர்களின் வாழ்க்கை புத்தகத்தை திருப்பி பார்த்தோமானால், ஏதோ ஒரு கட்டத்தில் – அவர்கள் உச்சத்தை எட்டுவதற்கு சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்றைப் பெறுவது எளிதல்ல. நம் முன் பளபளவென ஜொலிக்கும் ஆபரணம், அவ்வித பிரகாசத்தை இறுதியாக பெறவதற்குமுன், தீயினாலும் சுத்தியலினாலும் நிறைய பதப்பட வேண்டியிருக்கும். நம்மை வசீகரிக்கின்ற வைரம் அந்த மினுமினுப்பை பெற, பல கூரிய வெட்டுகளை சந்தித்து, பட்டைத் தீட்டப்பட்ட வேண்டியிருக்கும்.

போராட்டம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி; அதில் நாம் வெற்றி பெற்றால் – சிறப்பு; இல்லையேல் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவு முயற்சித்தோம் என்ற மனநிறைவு கொள்ளலாமே.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கெடுவான் கேடு நினைப்பான்

நீதி : உண்மை

உப நீதி : விழிப்புணர்வு, சுயபரிசோதனை

முன்பொரு காலத்தில் நேர்மையும், இரக்கமும் அற்ற ஒரு அரசர்  ஆட்சி செய்து வந்தார். அவருடைய குடிமக்கள் அவருடைய ஆட்சி பறிபோக வேண்டும் அல்லது மரணம் எய்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், ஒரு நாள் அவர் தன்னை மாற்றிக் கொண்டு புதிதாக வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவர் “இனி கொடுமையோ அல்லது அநீதியோ எனது ஆட்சியில் இருக்காது” என்று உறுதியளித்தார், மேலும் அவர், தான் அளித்த வாக்கை நிறைவேற்றும் விதமாக நல்லவராக மாறினார். அவர் ‘பண்பான மன்னர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் மாற்றமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவருடைய மந்திரிகளில் ஒருவர் போதுமான தைரியத்தை வரவழைத்து கொண்டு, அவரது மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு அரசர், “ஒருநாள் நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேட்டைநாய் நரி ஒன்றை துரத்துவதைக் கண்டேன். எப்படியோ நரி தனது துளைக்குள் தப்பித்தாலும், வேட்டைநாய், அதன் காலைக் கடித்து, வாழ்நாள் முழுவதும் அந்த நரி நொண்டியாக திரியும்படி செய்தது.

பின்னர் நான் ஒரு கிராமத்திற்குள் சவாரி செய்தேன், அங்கே அதே வேட்டை நாயைப் பார்த்தேன். அது ஒரு மனிதனை நோக்கி குரைத்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த மனிதன் ஒரு பெரிய கல்லை எடுத்து, வேட்டைநாயின் மீது எறிந்து, அதன் காலை உடைத்தான்.

அந்த மனிதன் வெகுதூரம் சென்றிருக்கவில்லை, திடீரென்று ஒரு குதிரை அவனை எட்டி உதைத்தது. அவனது முழங்கால் உடைந்து தரையில் விழுந்தான், வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவனானான். குதிரையும் ஓடத் தொடங்கியது, ஆனால் அதன் கால் ஒரு  துளைக்குள் அகப்பட்டு உடைந்தது.

நடந்த அனைத்தையும் எண்ணிப் பார்த்தபோது: ‘தீமையால் தீமையே விளைகிறது. நான் என் தீய வழிகளை தொடர்ந்தால், கண்டிப்பாக என் தீவினையாலேயே அழிவேன் என்று நினைத்தேன். எனவே, நான் மாற முடிவு செய்தேன்” என்று பதில் அளித்தார்.

அரசரை வீழ்த்தி அரியணையைக் கைப்பற்றும் காலம் கனிந்து விட்டது என்ற நம்பிக்கையோடு அந்த அமைச்சர் விடைபெற்றார். சிந்தனையில் மூழ்கிய அமைச்சர், எதிரே இருந்த படிகளை பாராமல், கால் தடுக்கி விழுந்து, கழுத்தை உடைத்துக் கொண்டான்.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான் ” என்பது பழமொழி. கர்மா என்பது செயல்களின் சுழற்சி, எப்போதும் நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதே நமக்குத் திரும்பி வருகிறது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்கும். மற்றவர்களுக்கு தீமை செய்தால் நம் முறையும் வரும்.

நீதி:

வாழ்க்கை ஒரு எதிரொலி; நாம் பிறருக்கு அளிப்பதே நமக்கு திரும்பும். வினை விதைப்பவன் வினை அறுப்பான்; மற்றவர்களிடம் நாம் எதை பார்க்கிறோமோ, அதுவே நமக்குள்ளும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு எதிரொலி என்பதை மறக்கவேண்டாம்: நமது சொல்லும் செயலும் நம்மிடமே திரும்பி வரும். எனவே நன்மையை மட்டும் கொடுத்து பழகவேண்டும். எப்போதும் பிறரின் நிலையில் நம்மை எண்ணி பார்க்க வேண்டும். நம்மை காயப்படுத்தும் ஒரு விஷயம் பிறரையும் காயப்படுத்தும் என்பதை உணர்த்தும். எனவே நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, பச்சாதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளையும், நீங்கள் அறுவடை செய்யும் அறுவடையை வைத்து அல்ல; நீங்கள் விதைக்கும் விதைகளால் மதிப்பிடுங்கள். ஏனெனில் நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள், இன்றோ நாளையோ வியக்க வைக்கும் துல்லியத்துடன் நம்மிடமே நிச்சயமாக திரும்பும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று (அதிகாரம் 208)

பொருள்:

கேடு செய்தவரை, கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உணர்வை நம்புதல்

நீதி: உண்மை

உபநீதி: நம்பிக்கை / விசுவாசம்

மிட்ச் ஆல்போம் எழுதிய “டியூஸ்டேஸ் வித் மோர்ரி” லிருந்து எடுக்கப்பட்டது.

ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு பயிற்சியை முயற்சி செய்ய சொன்னார். அவர்கள், ஒருவருக்கொருவர் முதுகுப்பக்கம் திரும்பி நின்று, பிறகு அடுத்தவர் தம்மைத் தாங்குவார் என்ற நம்பிக்கையில் பின்னால் சாய்ந்து விழ வேண்டும். பல மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுலபமாக இல்லை. சிறிதளவு சாய்ந்தபின், தானே சுதாகரித்துக் கொண்டு நின்று‌ விட்டனர். அவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு சிரித்தனர்.

இறுதியில் ஒல்லியான, அமைதியான, கருங்கூந்தல் கொண்ட ஒரு‌ பெண், கைகளை இறுகக் கட்டிக்  கொண்டு, கண்களையும் மூடிக் கொண்டு, எந்த ஒரு படபடப்பும் இல்லாமல், லிப்டன் தேநீர்  விளம்பரத்தில் நீர்த்தேக்கத்தில் விழும் பெண்ணைப் போல் அனாயாசமாகப் பின்னால் சாய்ந்தாள்.

அவள் தரையில் வந்து மோதப் போகிறாள் என்று எல்லோரும் ஒரு கணம்‌ நினைத்தார்கள். 

கடைசி நேரத்தில் அவள் பின்னால் நின்றிருந்த பெண், அவளுடைய தோள்களையும் தலையையும் அழுத்தமாக தாங்கிப் பிடித்தாள்.

“ஆஹா” என்று சிலர் குரல் கொடுக்க சிலர் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

ஆசிரியர், “இந்த நிகழ்விலிருந்து என்ன தெரிகிறது?” என கேட்டு, தொடர்ந்து அந்தப் பெண்ணிடம்  சொன்ன வார்த்தைகள் – நீ கண்களை மூடிக் கொண்டாய். மற்றவர்களுக்கும் உனக்கும் அதுதான்‌ வித்தியாசம்.  சில நேரங்களில், நீ ஒரு செயலைக் கண்களால் பார்ப்பதை விட, அதை‌ உணர்ந்தால் மட்டுமே நம்ப முடியும். அடுத்தவர்கள் உன்னை நம்ப வேண்டுமானால் நீ முதலில் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும்.  நீ இருட்டில் இருந்தாலும், கீழே விழுந்தாலும் உணர்வு பூர்வமான நம்பிக்கை இருக்க வேண்டும்.

நீதி:

நாம் சொல்வதையோ நினைப்பதையோ செயல்படுத்த என்னால் முடியும் என்று‌ சொல்லக்கூடிய ஒருவர் மீதோ அல்லது வேறு‌ ஏதாவது ஒன்றிலோ வைக்கக்கூடிய நம்பிக்கைதான் சமுதாய‌ உறவுக்கு முக்கியக் காரணம் ஆகும்.  ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கும் இதுதான் அடித்தளமாகும்.  உண்மையாக இருந்தால், ஒருவருக்கொருவரிடம் உள்ள நம்பிக்கை தானாகவே வளரும்.  எல்லா உறவுகளும் நிலைக்க நம்பிக்கை அடிப்படைத் தத்துவமாக இருப்பதால், நம்பிக்கை என்பது பிறருடன்‌ பயனுள்ள படி தொடர்பு கொள்ள  முக்கியக் காரணமாக இருக்கிறது. 

தன்னம்பிக்கை என்பது வெற்றியின் முதல் ரகசியம்.

எவரையும் நம்பாத மனிதனை ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மழைத் துளிகள் வெளிப்படுத்திய ஆழ்ந்த உண்மை

நீதி: உண்மை / அன்பு

உபநீதி: ஒற்றுமையே பலம்

“பிட்டர்  பேட்டர்  ரெயின்ட்ராப்ஸ்” என்ற பாட்டில் மழைத் துளிகள் கூரையிலிருந்து எப்படி விழுகிறதோ, பிட்டர் பேட்டரிடம் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், “ஹே பேட்டர், இது கடலை சென்றடைய  நாம் செல்லும் பயணம். நீண்ட தூர பயணம் என்பதனால், நான் தனியாக செல்லவே முடியாது. நாம் ஏன் சேர்ந்து செல்லக் கூடாது?”  

பேட்டர் சந்தோஷமாக, “பிரமாதமான ஆலோசனை. நாம் புட்டர் மற்றும் போட்டரையும் அழைத்து செல்லலாமே” என்று கூறியது.   

அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து,  நீர் தாரையாக மாறியது.

பல நீர் தாரைகள் ஒன்றாகச் சேர்ந்து ஓடையாக  மாறியன.

பல ஓடைகள் ஒன்றாகச் சேர்ந்து வலிமையான ஆறுகளாக மாறியன.

பல ஆறுகள் கடலோடு ஒன்று சேர்ந்தன.

இறுதியாக அனைத்து மழைநீர் துளிகளும் ஒன்றாகச் சேர்ந்து அதன் இலக்குகளை அடைந்தன.

தற்சமயம் உண்மை என்னவென்று கவனிப்போம்.

பல மழைநீர் துளிகளில், சில துளிகள் தான் கடலுக்குள் நேரடியாக விழுந்தன. பெரும்பாலும் மலைகளிலோ, தரையிலோ விழும். அங்கிருந்து பயணம் தொடரும்.

கடலுக்குள் விழும் மழை துளிகளைப் போல, மனிதனின் பயணம் பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடரும். இயற்கையில், மனிதனுக்கு துணை தேவையானது. மழை துளிகள் போல, மனிதன் உறவுகளை மேம்படுத்தி, சில ஞாபகங்களை சுமந்து, வாழ்க்கையின் பயணத்தில் பாடுபடுகிறான்.

தனி மனிதன் ஒருவனால் கடவுளை சென்றடைய கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இந்த பயணத்தில் கைகளை கோர்த்துக் கொண்டு, ஒன்றாகச் செல்ல முற்படும் போது, நிச்சயமாக வெற்றிகரமாகத்  திகழலாம்.  தனி மனிதனாக இருப்பதை விட, கூட்டு முயற்சிகள் வெற்றியைக் கொண்டு வரும்.

அல்ஃபிரட் டென்னிசன் எழுதிய “தி ப்ரூக்” என்ற காவியத்தில்,

நிரம்பி வழியும் ஆறை சென்றைடைய,

நீரோட்டமாக சலசலப்புடன் செல்கிறேன்,

மனிதர்கள் வருகின்றனர், போகின்றனர்,

ஆனால் நான் எப்போதுமே என் பயணத்தை தொடர்வேன்.

கடலில் நீர் துளிகள் ஒன்றாக இணைவது போல, கடவுளிடம் நாம் சேர்ந்து விட்டால், தனி மனிதன் என்ற இடத்தை தொலைத்து விட்டு, நம் உயர்ந்த சுயம் மட்டுமே தங்கும். 

நீதி:

தனி மனிதனாக நாம் ஒரு துளி தான், ஆனால் ஒன்றாகச் சேர்ந்தால் நாம் கடல். அடிப்படை உயிர்வாழ்தலுக்கு ஒருங்கிணைந்து செயற்படுவது மிக முக்கியம். குழுவின் அர்த்தமே ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவது தான். ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் ரசிக்க வேண்டுமென்றால், நாம் குழுவாகச் செயற்பட வேண்டும். அதனால், ஒற்றுமையான குடும்பம், சமூகம் எப்பொழுமே சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஒற்றுமை, பணியை சுலபமாக ஆக்கும். பெரும்பாலான சமயங்களில், நாம் தனியாக இயங்க முடியாது. மற்றவர்களின் ஆதரவு நமக்கு தேவை. அதனால், ஒவ்வொருவரின் மீதும் நம்பிக்கை வைத்து, பணிவான மனப்பான்மையுடன் முன் செல்வோம். அப்போது தான், நிம்மதியான மற்றும் இணக்கமான சமூகத்தில் நாம் வாழ முடியும்.

நீ கடலில் ஒரு துளி அல்ல,

நீ ஒரு துளியில் முழுக் கடலும் – ருமி

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE