Archive | March 2020

நேர்மறை அணுகுமுறையே ஒரு சிறந்த வாழ்க்கை முறை

நீதி: மகிழ்ச்சி / நேர்மறை சிந்தனை

உப நீதி: விடாமுயற்சி / ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை

Adopting a positive attitude as a way of lifeஒவ்வொருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். மகிழ்ச்சி என்பது அவரவர் கையில் உள்ளது என்பதை ஒருவரும் நம்புவதில்லை. மக்கள் பெரும்பாலும் உறவுகள், விதி, வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் அனுபவங்கள் போன்ற வெளி விஷயங்களையே மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாகக் கூறுவர்.

ஒரு விஷயத்தை நினைவு படுத்திக் கொள்ளவும். நீங்கள் படைப்பாக இருக்கலாம் அல்லது படைப்பாளியாக இருக்கலாம். முடிவு உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் எடுக்கும் இந்த முடிவு தான் உங்களைப் படைப்பிலிருந்து, படைப்பாளியாக உயர்த்த உதவுகிறது. நேர்மறை அணுகுமுறையை வளர்த்துக் கொண்டால், அது நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை நமக்குப் பெற்றுத் தரும். இவ்வாறு இருப்பது, நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

உண்மைதான். செய்வதை விட சொல்வது மிக எளிது; ஆனால் அதைக் கடைப்பிடிக்கக் கடின முயற்சி எடுத்தோமேயானால், சற்று முன் பாதகமாகத் தெரிந்த நிலைமை, தற்பொழுது சாதகமாகப் புலப்படும். முயற்சி திருவினையாக்கும்.

ஒரு சிறுவன் கையில் கிரிக்கெட் மட்டையையும், பந்தும் வைத்துக் கொண்டு, விளையாட்டு மைதானத்தில் நடந்து செல்கிறான். அப்பொழுது, “இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த விளையாட்டு வீரன்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டே நடக்கிறான்.

பின்னர், பந்தை வானத்தை நோக்கி சுழற்றி வீசுகிறான். தன் மட்டையால் பந்தை அடிக்க முற்படுகிறான். ஆனால் பந்து தவறி விடுகிறது.

சற்றும் தளராமல் பந்தை எடுத்து மீண்டும் வீசினான். மட்டையால் அடிக்க முற்பட்டான். இரண்டாம் முறையும் தவறியது.

இதே போல் மேலும் நான்கு முறை செய்தான். நான்கு முறையும் தவறவிட்டான்.

ஆறாவது முறை தவற விடும் பொழுது, “நான் தான் இந்த உலகத்திலேயே சிறந்த பந்து வீச்சாளர்!” என்று உரக்கக் கத்தினான்.

வாழ்க்கை சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், சில நேரங்களில் வலி தருவதாகவும் இருக்கலாம், மேலும் சில நேரங்களில் சோதனையாகவும் இருக்கலாம். ஆனால், அச்சிறுவனைப் போல், நிலைமையை நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தான் நம் திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட மனோபாவத்தைத் தான் நாம் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதி:

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை; நமக்கு ஏற்படும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளை நேர்மறை அணுகுமுறையோடு ஏற்றுக் கொண்டு முன்னேறினால், வாழ்க்கையை சிறந்ததாக மாற்றலாம்.

எல்லா நாட்களும் நல்ல நாளாக அமையாது; ஆனால், ஒவ்வொரு நாளிலும் கண்டிப்பாக ஒரு நன்மை இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

கனவை நனவாக்குதல்

நீதி – உண்மை, நம்பிக்கை

உபநீதி ஆத்ம பலத்தை அறிதல்

ஒரு செழிப்பான நிலத்தில், இரு தானியங்கள் அருகருகே கிடந்தன. அதில் முதல் தானியம், “நான் நன்கு வளர வேண்டும். என் வேர்கள் மண்ணில் நன்கு ஆழமாகப் பதிந்து, நிலத்தின் வெளியே ஒரு அழகான துளிர் முளை விட வேண்டும். என் மென்மையான மொட்டுக்கள் மலர்ந்து இளவேனிற் காலத்தின் வருகையை அறிவிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. நான் காலைக் கதிரவனின் இளம் வெயிலையும், என் மலரிதழ்களில் இருக்கும் பனித்துளிகளையும் உணர வேண்டும்” என்றது.

அந்த நெற்பயிரானது, நன்கு வளர்ந்து ஒரு அழகான மலர் ஆனது.

இரண்டாவது நெற்பயிரோ, “எனக்கு பயமாக இருக்கிறது. என் வேர்கள் மண்ணில் ஊன்றினால், அவற்றிற்கு என்ன நேருமோ என்று கவலையாக இருக்கிறது. நான் வளர்ந்த பின் என் மென்மையான தண்டுகளை காற்று அழித்து விடலாம். அந்த தண்டுப் பகுதியில் மலர்கள் இருந்தால் அவைகளும் பாதிக்கப்படும். எனவே தகுந்த பாதுகாப்பான நேரத்திற்காகக் காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்”, என்றது.

அப்படியே காத்துக் கொண்டிருந்த இரண்டாவது நெற்பயிரை, அந்த வழியே வந்த ஒரு கோழிக் குஞ்சு தன் அலகால் கொத்திச் சென்றது.

ஒரு இலக்கை அடைய நாம் எடுத்து வைக்கும் முதல் அடி கடினமாக இருக்கலாம்; ஆனால், அந்த முதல் அடியே பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். ஒரு கனவினை அடைவது நிச்சயமாக எளிதல்ல; ஆனால் முடியாததும் அல்ல. ஒருவர் தன் மேல் உறுதியான நம்பிக்கை வைத்தால் இலக்கை அடைந்து விடலாம்.

நீதி:

நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று, அதன் மூலம் நம்மிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்ந்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் திறன்களையும், நம்முள் இருக்கும் மன உறுதியையும் மனதில் வைத்துக் கொண்டு நாம் ஒரு அடி முன் வைத்தால், நாம் வெற்றி பெற முடியும்.

நான் அந்த பயத்தை ஒதுக்கி வைத்து…….. முதல் அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கனவில் கற்ற பாடம்

நீதி: உண்மை

உப நீதி: பற்றற்ற நிலை / நேர்மறை சிந்தனை / மன அமைதி

ஒரு ஊரில், ஒரு மனிதருக்கு ஒரே ஒரு செல்லக் குழந்தை இருந்தாள். அவர், மகளே தன் வாழ்க்கை என அவளுக்காகவே வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவளுக்கு உடல்நலம் குன்றியது. மிகச் சிறந்த மருத்துவர்களால் கூட அவளது நோயை குணப்படுத்த இயலவில்லை. அவளை எப்படியாவது குணப்படுத்த, தந்தைப் பித்து பிடித்தவர் போல் அலைந்தார். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. குழந்தை இறந்து விட்டாள்.

தந்தையை சமாதானப் படுத்த முடியவில்லை. அவர், தன்னை நண்பர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொண்டார். சகஜ நிலைக்குக் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு செயலிலும், அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவர் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்.

இந்நிலையில், ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், அவர் குழந்தை தேவதைகளின் ஒரு மிகப் பெரிய அணிவகுப்பைக் கண்டார். அனைவரும் ஒரு வெண் சிம்மாசனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு குழந்தை தேவதையும் வெண்ணிற ஆடை உடுத்தி, கையில் எரியும் மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரே ஒரு குழந்தையின் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றப் படாமல் இருந்ததை அவர் கவனித்தார்.

அந்த அணைந்த மெழுகுவர்த்தியை வைத்திருப்பது தன் மகள் தான் என்பதை அவர் உணர்ந்தார்.

உடனே வேகமாக, அந்த கூட்டத்திற்குள் நுழைந்து, அவர் தன் மகளைத் தூக்கி அணைத்து தழுவியபடி, “மகளே! உன்னுடைய கையில் உள்ள மெழுகுவர்த்தி மட்டும் ஏன் எரியவில்லை?” என்று கேட்டார்.

அவள், “தந்தையே! அவர்கள் மீண்டும் மீண்டும் என் மெழுகுவர்த்தியை ஏற்றுகின்றனர். ஆனால் உங்களுடைய கண்ணீர் அதை அணைத்து விடுகிறது” என்றாள்.

உடனே அவர் உறக்கம் கலைந்து எழுந்தார். இதிலிருந்து தெளிவான ஒரு பாடம் கற்றார்; உடனடியாக செயலில் இறங்கினார்.

அந்த நிமிடம் முதல், தன் பழைய நண்பர்களுடன் சகஜமாக அவர் பழகத் தொடங்கினார். அவர் தனிமையைத் தவிர்த்தார்.

இனி அவருடைய செல்ல மகளின் மெழுகுவர்த்தி, அவரது பயனற்ற கண்ணீரால் அணையாது.

நீதி:

பற்றற்ற நிலையை மேற்கொண்டால் எந்த ஒரு சூழலிலும் பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

பற்றற்ற நிலை என்பது ஈடுபாடு அற்று இருப்பது என்று பொருள் அல்ல. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்; அதே சமயம் எந்த ஒரு விஷயத்திலும் சிக்காமல் இருக்க வேண்டும் ஜக்கி வாசுதேவ்.

தேவலோகத்திலிருந்து ரகசியங்கள்

அனாமதேயக் கவிதை

உன்னை விட்டு நான் இவ்வுலகத்திலிருந்து சென்ற போது, நீ மன வேதனையுடன் இருந்ததை அறிவேன்

உன் விழிகளிலிருந்து தொடர்ந்து வழிந்த கண்ணீரை கவனித்தேன்; அது உண்மை என நான் அறிவேன்.

பல நாட்களுக்குப் பிறகும், நீ அழுதுக் கொண்டே இருந்தாய்

என்னுள் எல்லாமே நிசப்தமாக இருந்த போது, நீ பிரார்த்தனை செய்ததை கண்டேன் 

தேவலோகம் என்ற இந்த அற்புதமான இடத்திலிருந்து

என் வலி மறைந்த பிறகு, ஒரு அர்த்தமுள்ள மென்மையான தென்றல் காற்றை அனுப்புகிறேன்

என் அன்பார்ந்தவர்களே, தயவு செய்து உங்களின் பயணத்தை தொடருங்கள்

இங்கு கிடைக்கின்ற நிம்மதியை எதற்கும் ஒப்பிட முடியாது.

மழையோ, மேகமோ, கஷ்டமோ இல்லை – எல்லா திசைகளிலிருந்தும் அன்பு மட்டுமே.

உங்களுக்கு மன வேதனை வேண்டாம்

எப்போதாவது நாம் ஒன்றாக சேருவோம் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்,

அவரின் அன்பு உன்னைச் சுற்றி எப்போதும், எங்கும் இருக்கிறது!

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

இரண்டு சுண்டெலிகள்

நீதி: தன்னிறைவு

உபநீதி: அமைதி / மகிழ்ச்சி / சுதந்திரம் 

ஒரு நகர்ப்புற எலியும், ஒரு கிராமத்து எலியும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், கிராமத்து எலி  நகர்ப்புற எலியை வயல்வெளியில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்தது. நகர்ப்புற எலியும் வந்தது.  இரண்டும் மண் வாசனையோடு இருந்த சோளக்கதிர்களையும், வேர்களையும் இரவு உணவாக உண்ண அமர்ந்தன.

நகர்ப்புற எலிக்கு அந்த ருசி பிடிக்காததால், “என் அன்பு நண்பனே, நீ இங்கு எறும்புகளைப் போல உன் வாழ்க்கையை வாழ்கின்றாய். நான் எப்படி வாழ்கிறேன் என்று நீ அவசியம் பார்க்க வேண்டும். என் வீட்டில் எப்பொழுதும் தானியங்கள் நிறைந்திருக்கும்” என்று கூறி நகர்ப்புற எலி கிராமத்து எலியை தன்னுடன் அழைத்துச் சென்றது.

இரு எலிகளும் திரும்பி சென்றதும்,  நகர்ப்புற எலி மாவு, ஓட்ஸ், அத்திப்பழம், தேன், பேரிச்சம் பழம் போன்ற பொருட்கள் நிரம்பிய ஒரு உணவரங்கை கிராமத்து எலிக்கு காண்பித்தது.

கிராமத்து எலி இதுவரை இது போன்ற உணவு வகைகளை பார்க்காததால், தன் நண்பன் அளித்த சுவையான உணவுப் பண்டங்களை உண்ணுவதற்காக ஆர்வமுடன் அமர்ந்தது. அவை இரண்டும் உண்ணத் தொடங்கும் சமயத்தில் யாரோ ஒருவர் உணவரங்கின் கதவைத் திறந்து உள்ளே நுழைவதை உணர்ந்தன.

பயந்து ஓட்டம் பிடித்த இரு எலிகளும் மிகவும் குறுகிய ஒரு துளைக்குள் ஒளிந்துக் கொண்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஓசை அடங்கியதும் மீண்டும் வெளியே வந்தன.

மறுபடியும் வேறு ஒருவர் உள்ளே நுழைந்ததை கவனித்து, இரண்டு எலிகளும் மீண்டும் ஓடி ஒளிந்தன. இதே நிகழ்வு பலமுறை நடந்தது.

கிராமத்து எலிக்கு சற்றும் பொறுக்க முடியவில்லை. அது நகரத்து எலியைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன். நீ ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறாய், ஆனால் ஆபத்துகளால் சூழப்பட்டிருக்கிறாய். நான் உண்ணும் வேர்களும், சோளக்கதிர்களும் எளிமையான உணவாக இருந்தாலும் அச்சமில்லாமல் நிம்மதியாக உண்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றது.

“வாழ்க்கையில் தன்னிறைவு வேண்டும்”

நீதி:

நமக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு மனநிறைவோடு இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் பெற்ற பாக்கியத்தை நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com