Archive | September 2018

ராஜா ரந்திதேவர்

நீதி: நன் நடத்தை / கருணை

உபநீதி: உதவும் மனப்பான்மை

Back to Godhead - Volume 12, Number 12 - 1977ராஜா ரந்திதேவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தராக இருந்ததோடு, அனைவரிலும் கடவுளைப் பார்த்தார். அவர் தம் நாட்டு மக்களை அன்புடன் பேணிக் காப்பதையும், அவர்களுக்கு உதவுவதையுமே பகவான் விஷ்ணுவிற்கு செய்யும் வழிபாடாகக் கருதினார்; ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வின்றி அனைவருக்கும் எந்நேரமும் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருந்தார். அவருக்குப் பேராசையே இல்லாததால், தன் அளவு கடந்த செல்வத்தை ஏழை மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அதுவே, பகவான் விஷ்ணுவின் அருளைப் பரப்பும் வழி என நினைத்தார்.

அவருடைய ராஜ்ஜியத்தில், மக்கள் மிகவும் சந்தோஷமாகவும், செழிப்பாகவும் வாழ்ந்தனர். ஒரு முறை, எதிர் பாராமல் பலத்த மழை பெய்து பயிர்களுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. அதனால், நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படத் துவங்கியது. நாட்டு மக்கள், கருணை உள்ளம் கொண்ட இந்த அரசரிடம் உதவி கேட்டு ஓடி வந்தனர். அரசர், சிறிதும் தயங்காமல் தன் செல்வங்களை ஏழை மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார். மக்களைக் காப்பாற்ற தனக்கு அதிக வலிமை அருளும்படி அவர் பகவான் விஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்.

எனினும், விளைச்சல் தொடர்ச்சியாக பாதிக்கப் பட்டதால், நிலைமை இன்னும் மோசமடைந்தது; உண்ண உணவு, பருக நீர்,  வசிக்க இருப்பிடம் கூட இல்லாமல் மக்கள் அவதியுற்றனர்.

ராஜாவின் குடும்பத்தில் சிறிதளவு உணவே இருந்தாலும், பசியோடு வந்த மக்களுக்கு அவர்கள் முதலில் உணவை அளித்தனர்.

king rantideva picture 2நாளடைவில், வறட்சி கடுமையானது. வறுமையால் அவதிப்பட்ட மக்களுக்கு அரசரால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அதனால், அரசர் மிகவும் வேதனையுற்றார்; ஆனால், பகவான் விஷ்ணுவிடம் திட நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பிரார்த்தனை செய்து வந்தார். இருப்பினும் அந்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை. பஞ்சம் கடுமையானது.

king Rantideva picture 3பல நாட்கள் பசியால் அவதிப்பட்ட  ரந்தி தேவர், எந்நேரமும் பகவான் விஷ்ணுவை தியானித்து வந்தார். உண்ண உணவின்றி மிகவும் தளர்வடைந்து, நடக்கக் கூட அரசரால் முடியவில்லை. இந்நிலையில், ஒரு நாள், எதிர்பாராத விதமாக, முன் பின் தெரியாத ஒருவர் அரசருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உணவு அளித்தார். உணவு கிடைத்த அரசருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் உணவை சாப்பிடும் சமயத்தில், ஒரு ஏழை பிராமணர் உணவு கேட்டு அங்கு வந்தார். அரசர் அவரை மரியாதையுடன் வரவேற்று, தம் உணவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவருக்குக் கொடுத்தார். அந்தப் பிராமணரும் மகிழ்ச்சியுடன் உணவை உண்டு, அரசரின் பெருந்தன்மையைப் பாராட்டிச் சென்றார். அவர் கிளம்பியவுடன் இவர்கள் அந்த உணவை உண்ண முற்படும் போது, ஒரு பிச்சைக்காரர் பசியோடு வந்தார். அரசர் அவருக்கும் தம் உணவிலிருந்து ஒரு பகுதியை அளித்தார். பிச்சைக் காரரும் உண்டு மகிழ்ச்சியோடு சென்றார். உடனேயே மற்றொருவர் தம் நாய்களுடன் உணவு தேடி அங்கு வந்தார். மீதி இருந்த உணவை அவரும் அவருடைய நாய்களும் சாப்பிட்டனர். ரந்திதேவருக்குக் குடிக்கத் தண்ணீர் மட்டுமே மீதியிருந்தது.

அரசர் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள, தண்ணீரைக் குடிக்க முற்பட்ட போது, ஒரு சண்டாளன் அங்கு விரைந்து வந்தான். அரசருக்குத் தொண்டை வறண்டு இருந்தாலும் கூட அவன் பருகத் தண்ணீர் கேட்டதும், சிறிதும் தயங்காமல் அந்த நீரைக் கொடுத்து விட்டார். செல்வம் மற்றும் பதவியைக் காட்டிலும், மற்றவர்களின் துயரத்தை உணரக் கூடிய வலிமையை தனக்கு அளிக்கும்படி, அவர் பகவானிடம் பிரார்த்தித்தார்.

அந்த நீரைக் குடித்தவுடன் அவன் கண்கள் மிளிர்ந்தன. அவன் மிகுந்த உற்சாகமடைந்தான். ஆஹா! அதோ! பகவான் விஷ்ணு தம் சேவகர்களுடன் அரசர் முன் தோன்றி, “அரசரே! உங்கள் பக்தியாலும், மக்களிடம் நீங்கள் காட்டும் அன்பாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப் போகிறது. தொடர்ந்து என்னை வணங்குங்கள். நீங்கள் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பப் பெறுவீர்!” என்றுரைத்தார். ஆனால், ரந்தி தேவரோ, “எனக்கு பொருள்சார்ந்த உலக ஆசைகள் எதுவும் இல்லை; நான் உங்களிடத்தில் முற்றிலும் அடைக்கலமாகி விட்டேன்” என்று கூறினார்.

பகவான் விஷ்ணு பக்தனுக்கு மோக்ஷமளித்து அருளினார். அரசர் சிறந்த யோகிகளில் ஒருவரானார்.

நீதி:

நம்பிக்கை, அன்பு, பக்தி இம்மூன்றும் இருந்தால் நாம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம்.

மக்கள் சேவையே மாதவன் சேவை. ஏழைகளுக்கு உதவுவதும், தேவை உள்ளவர்களுக்கு தர்மம் செய்வதும் இறைவனை மகிழ்விக்கும் செயல்களாகும். அனைவரிடமும் அன்பு காட்டவும். அனைவருக்கும் சேவை செய்யவும். அனைவரிலும் இறைவனைக் கண்டு, சேவை செய்யும் வாய்ப்பிற்கும் ஒருவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தன்னலமற்ற சேவை செய்பவர்கள் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறுவர்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தைரியமுள்ள சிறிய ஆமை

நீதி – சரியான செயல் / நன் நடத்தை

உபநீதி – தைரியம், துணிச்சல்

THE BRAVE TORTOISE - PICTURE 1ஒரு முறை, கப்பல் ஒன்றில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. ஒரு நாள், அந்த கப்பல் மூழ்கி விட்டது. பல மணி நேரம் நீந்திய ஆமை, ஒருவருமே வசிக்காத, மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழ்ந்த நிலப் பகுதி ஒன்றை வந்தடைந்தது. அந்த நிலப்பகுதியின் பக்கத்தில், செங்குத்தான கரடுமுரடான மலை ஒன்றிருந்தது.

நீண்ட நேரம் நீந்தி வந்த ஆமை சோர்வடைந்து, உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது; ஆனால், அந்த நிலப் பகுதியில் ஒன்றுமே கிடைக்கவில்லை. பசியால் மாண்டு போகாமல் இருக்க, ஆமை மலையின் உச்சியில் ஏறி, மற்றொரு பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது.

THE BRAVE TORTOISE PICTURE 2மலையின் உச்சி முழுவதும் பனி இருந்ததால், மிகவும் குளிராக இருந்தது. திடீரென, பனி மழை பொழிய ஆரம்பித்தது; ஆமை மிகுந்த பிரச்சனைகளுக்குப் பிறகு, மலையின் மற்றொரு பக்கத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாதையை அமைத்தது.

THE BRAVE TORTOISE - PICTURE 3அந்த பாதையை ஒரு பெரிய அரக்கன் பாதுகாத்து வந்ததால், பல பயங்கரமான சத்தங்கள் கேட்டன. ஆமை மிகவும் பயந்தது. தன் தலையை ஓட்டுக்குள் மறைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் அதற்கு தோன்றியது; ஆனால் பயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னைச் சுற்றிப் பார்த்தது. பல மிருகங்கள் கீழே மாண்டு கிடந்தன. தாங்க முடியாத குளிரினால், அவை மாண்டன என்பதை ஆமை புரிந்து கொண்டது. அதனால், ஆமை ஓட்டுக்குள் செல்லாமல், அந்த இடத்திலிருந்து தப்பிக்கவில்லை என்றால், தனக்கும் அதே கதி என்று பயந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மற்றொரு பக்கத்தை கடந்து செல்ல, ஆமை தன் நீண்ட பயணத்தை தொடங்கியது; அங்கிருந்த அரக்கர்களையையும் சமாளிக்க வேண்டும் என்று அது புரிந்து கொண்டது.

THE BRAVE TORTOISE PICTURE 4ஆமை மெதுவாக அந்த அரக்கர்களுக்கு அருகே சென்ற போது, அவர்கள் தங்களின் உருவங்களை மாற்றிக் கொண்டனர். திடீரென, அவை பெரிய பாறைகள் என்று புரிய வந்தது. அங்கிருந்த பாறைகள் அரக்கர்கள் போல தெரிந்தன. அங்கிருந்த ஒரு சிறிய குகை வழியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது.

THE BRAVE TORTOISE PICTURE 5ஆமை தன்னம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஒரு அழகான பள்ளத்தாக்கை வந்தடைந்தது. அங்கு பல மரங்களும், அளவில்லா உணவும் இருந்தன. அந்த பள்ளத்தாக்கில் ஆமை சந்தோஷமாக வாழ்ந்தது; அங்கு எல்லோராலும் “தைரியமுள்ள சிறிய ஆமை” என்று அறிமுகம் ஆனது.

நீதி:

ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதனால், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு சவால் வந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு சூழ்நிலையையும், தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்வது தான், பயத்தை போக்குவதற்கான ஒரே வழி. பெரும்பாலான பயங்கள் கற்பனையே. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. நம் மனதில் பயம் சூழ்ந்திருக்கும் போது, பகுத்தறிவுள்ள தீர்மானத்தை நாம் எடுக்க முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

கர்மா

நீதி – பொறுமை / நம்பிக்கை

உபநீதி – உள்ளார்ந்து நோக்குதல் / ஆத்ம ஞானம்

karma - sad man

வாழ்க்கையில் ஒரு மனிதன் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் மட்டுமே, வயதான பெற்றோர், சகோதரிகள், மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்ந்தனர். ஒரு சமயம், அவன் நோய்வாய்ப்பட்டு, ஏறக்குறைய ஒரு வாரம் வேலைக்கு செல்லாததால், வேலையிலிருந்து நீக்கப் பட்டான். அவன் குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், மனம் வருந்தி அவதிப் பட்டான். அவனைச் சுற்றி இருந்த அனைவரும் சந்தோஷமாக இருந்ததைப் பார்த்து, தனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம், என நினைத்து வருந்தினான்.

Karma - guru picture

தன் விதியை நினைத்து அவன் தவித்த போது, மகான் ஒருவர் கிராமத்திற்கு வருகை கொடுத்து, ஒரு மாதம் அங்கு தங்குவதாக ஒரு அறிவிப்பு செய்தனர். மகான் சில பிரார்த்தனைகளை நடத்தி, தெய்வீக பிரசங்கம் கொடுப்பதாக தகவல் வந்தது. இச்சமயத்தில், பணக்கார வணிகர் ஒருவர், அனைத்து கிராமத்தினருக்கும் ஒரு மாத இலவச உணவு அளிப்பதாக பொறுப்பேற்று, எல்லோரையும் வரவேற்றார்.

இம்மனிதன் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன், ஒரு மாதத்திற்கு உணவு பிரச்சனை இருக்காது; வேறு வேலையை தேட அவகாசம் கிடைக்கும் மற்றும் குருவின் பிரசங்கத்தைக் கேட்க ஒரு நல்ல வாய்ப்பும் கூட என நினைத்து சற்று நிம்மதி அடைந்தான்.

அடுத்த நாள் காலை, குருஜி கிராமத்திற்கு வந்தவுடன், இம்மனிதன் அவரை அன்பாகவும், மரியாதையுடனும் அழைத்து, மகான் கிராமத்தில் இருக்கும் வரை, தினமும் தான் அவருக்கு சேவை செய்வதாகக் கூறினான். குருஜி மகிழ்ச்சியடைந்து, அவருக்கு தேவையானவற்றை செய்யும் படி அவனிடம் கூறினார். இம்மனிதன் அன்பு கலந்த பக்தியுடனும், ஆர்வத்துடனும், குருவை கவனித்து வந்தான். மாலை வேளையில், குருவின் பிரசங்கத்தைக் கேட்பான். ஆனால், மனதளவில் எதிர் காலத்தை நினைத்து கவலைப் பட்டான். குருஜிக்கு உள்ளார்ந்த ஞானம் இருந்ததால், ஒரு மாலை கர்மாவைப் பற்றி பிரசங்கம் செய்தார். கர்மாவைப் பற்றி மிக அழகாக கீழ்கண்டவாறு விவரித்தார்.

கர்மாவை நான்கு விதங்களாகப் பிரிக்கலாம்.

karma - karma picture

    1. பிராரப்த கர்மா – முதிர்ச்சி அடைந்த கர்மா

    மரத்தின் மேல் ஒரு ஆப்பிள் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆப்பிள் நன்றாக பழுத்து விட்டது; சரியான நேரத்தில் அதை பறிக்க வேண்டும்; அல்லது தானே மரத்திலிருந்து அது விழுந்து விடும். மரத்திலேயே அது எப்பொழுதும் இருக்க முடியாது. அதே போல, பிராரப்த கர்மாவையும் முதிர்ச்சி அடைந்த கர்மா எனக் கூறலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மரத்தை நடுகிறோம்; இன்று அந்த பழம் கீழே விழுவதற்கு தயாராக இருக்கிறது. உங்களின் ஆசை மற்றும் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு, வில்லை விட்டு அம்பு எப்படி செல்கிறதோ, அதே போல அதுவும் தன் வழியை பார்த்து செல்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தை செய்தால், லோகத்தில் குறிக்கப்பட்டு, தக்க சமயத்தில் அதன் விளைவுகள் தானாகவே வந்து சேர்கின்றன. அதிலிருந்து தப்பிக்க முடியாது. தற்சமயம் நீங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பது, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பிராரப்த கர்மா. முந்தைய அல்லது பல ஜன்மங்களாக நீங்கள் விதைத்த விதை தற்சமயம் நீங்கள் செய்ததற்கு ஏற்றவாறு நல்லதாகவோ, கெட்டதாகவோ வந்து அமைகிறது. நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்று நினைத்தால், அது முந்தைய ஜன்மங்களின் விளைவாகும். நீங்கள் கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கு தற்சமயம் விளைவுகளை அனுபவிக்கக் கூடும். அதனால், நிகழ்காலத்தை மாற்ற முடியாது என நாம் சொல்ல முடியாது. முதிர்ச்சி அடைந்த கர்மாவை பிராரப்த கர்மா என்கிறோம். எதிர் காலத்தில் வளரக் கூடிய கர்மா இரண்டாவது வகையைச் சேரும்.

    1. சஞ்சித கர்மா – சேகரித்து வைத்த கர்மா

    இந்த வகையான கர்மா, நாம் முன் ஜன்மங்களிலிருந்து சேர்த்து வைத்த கர்மாவாகும். மரத்தில் இருக்கும் எல்லாப் பழங்களும் ஒரே நாளில் பழுக்காது. மரத்தில் மலரும் பூக்கள் காயாக மாறி, முதிர்ச்சி அடைந்த பிறகு வெவ்வேறு சமயத்தில் பழமாக மாறுகின்றன. இந்த நிகழ்வு தொடர்கிறது. பல வருடங்களுக்கு, அதே மரத்திலிருந்து, பொருத்தமான பருவ காலத்தில் கொத்துக் கொத்தாக பழங்கள் கிடைக்கின்றன.

    பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கை மீண்டும் மீண்டும் சுழன்று வருகின்ற வகையில் அமைந்துள்ளது. ஏன்? அழகான காட்டு பெர்ரிகளோ அல்லது முட்கள் நிறைந்த புதர்களோ – எதை விதைக்கிறோமோ, குறிப்பிட்ட பருவ காலத்தில் அவை செழிப்பாக வளர்ந்து பலனை அளிக்கின்றன. இந்த நிகழ்வு பல வருடங்களுக்கு தொடர்கிறது. ஒரே விதையிலிருந்து பெரிய செடி செழிப்பாக வளர்ந்து பல வருடங்களுக்கு பழங்களை அளிப்பதைப் போல, நமது ஒவ்வொரு நல்ல அல்லது தீமையான செயலிலிருந்து நிகழும் விளைவுகள் பல வருடங்களுக்கு தொடர்கின்றன. அதனால் தான், பிரச்சனைகளும் ஒன்றாகச் சேர்ந்து வரும், நல்ல விஷயங்களும் அப்படியே.

    சஞ்சித கர்மாவுக்கு இத்தகையான தனிப்பட்ட சிறப்பியல்பு இருக்கிறது; இது மாற்றத் தக்கது. ஆப்பிள் மரமோ, பெர்ரி புதரோ – அது வளர்வதற்கு மூல காரணமாக இருக்கும் ஒரு விதையை கவனித்து பராமரித்தால் தான், அது மரமாகவோ, புதராகவோ மாறி, பழங்களை நமக்கு பலனாக அளிக்கின்றது. அதே விதையை அழித்து விட்டால், மரமோ, புதரோ இருக்க வாய்ப்பில்லை. அந்த ஒரு விதை தான் முக்கியமானது.

    1. ஆகாமி கர்மா: (வரப் போகின்ற கர்மா)

    ஆப்பிள் தோட்டத்திற்குள் நீங்கள் நுழைந்ததாகக் கற்பனை செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் ஒரு செயலை செய்திருக்கிறீர்கள் – தூண்டுதல் ஏதுமில்லாமல் இருக்கலாம் அல்லது மற்றவர்கள் வற்புறுத்தி நீங்கள் செய்ததாகவும் இருக்கலாம். இந்த செயலை சார்ந்து நீங்கள் வேறு சில செயல்களை செய்யக் கூடும், உதாரணத்திற்கு எதிர்பார்ப்புடன் ஆப்பிள் மரங்களை பார்ப்பது, நறுமணத்தை அனுபவிப்பது, அந்த பழத் தோட்டத்திலிருந்து வெளியில் வருவது போன்ற விஷயங்கள் – இந்த காரியங்களின் விளைவுகள் நமக்கு பிற்காலத்தில் வந்து சேரும். நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகள் எதிர் காலத்தில் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்தும். ஆகாமி கர்மா என்பது கட்டாயமாக அனுபவிக்கக் கூடியதாகும். நீங்கள் பழத் தோட்டத்திற்குள் நுழைந்த பிறகு உடனடியாகவோ, சற்று நேரத்திற்குப் பிறகோ வெளியிலே வர வேண்டும். உங்களால் சஞ்சித கர்மாவில் சில மாற்றங்களை கொண்டு வர முடிந்தாலோ, தற்சமயம் கவனமாக செயற்பட்டு காரியங்களை செய்தாலோ, ஆகாமி கர்மா தானாகவே மாறக் கூடும்.

    1. வர்த்தமான கர்மா – தற்போதைய கர்மா

    இதை க்ரியமான கர்மா என்றும் கூறுவார்கள் – தற்போதைய கர்மா. இதற்கு மற்றொரு பெயரும் உண்டு – புருஷார்த்த கர்மா அதாவது தற்போதைய உழைப்பினால் சேரும் கர்மா. இதை சரியாக புரிந்து கொள்வோம். நமக்கு இனிமேல் ஆப்பிள்கள் வேண்டாம் என்று தீர்மானித்தால், ஆப்பிள் மரத்தை அடி வேரோடு பிடுங்கி விடலாம். பிறகு, கடும் உழைப்பினால் மரத்தையும், அழுகிப் போகின்ற ஆப்பிள்களையும் அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், பழங்கள் நமக்கு கிடைக்காது. நீங்கள் கோதுமையை விதைத்து, சில மாதங்களிலேயே அறுவடை செய்ய தேர்ந்தெடுக்கலாம். இதனால், உங்கள் கர்மாவை நீங்கள் அடிக்கடி அழித்து விடலாம்.

    நாம் புதிய கர்மாவை உருவாக்குகிறோமா அல்லது பழைய கர்மாவின் விளைவுகளை அனுபவிக்கிறோமா என்ற ஒரு கேள்வி நம் மனதில் தோன்றுகிறது. விடை மிகவும் எளிமையானது. நாம் விருப்பப் பட்டு செய்தால், கர்மாவை ஏற்படுத்திக் கொள்கிறோம்; நாம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் போது, பழைய கர்மாவை அனுபவிக்கிறோம். முதலாவது சூழ்நிலையில், நல்லதோ, கெட்டதோ நாம் விளைவுகளை அனுபவிக்க வேண்டும். இரண்டாவது சூழ்நிலையில், நம் கர்மாவை சமாளிக்கும் வாய்ப்பு இருக்கிறது – அதாவது சஞ்சித கர்மா. நமக்கு நன்மை அல்லது தீமையான விளைவுகள் எதுவுமே வேண்டாமென்றால், எல்லாச் செயல்களையும் கடவுளிடம் அர்ப்பணித்து, தன்னலமற்ற மனப்பான்மையோடு எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும்; பழைய செயல்களின் பலன்கள் அனைத்தையும் செலவழித்தால் தான், இது சாத்தியமாகும்.

    நீங்கள் கடந்த காலத்தில், விருப்பப் பட்டோ விருப்பப் படாமலோ தேர்ந்தெடுத்த வாழ்க்கையை இன்று அனுபவிக்கிறீர்கள்; நிகழ் காலத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை எதிர் காலத்தில் அனுபவிப்பீர்கள். அதனால் தற்சமய செயல்கள், எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையை கவனத்தில் வைத்து, ஒருமுகச் சிந்தனையோடு எதிர் காலத்தை மனதில் நிறுத்திக் கொண்டு, நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு குருஜி தன் பிரசங்கத்தை முடித்து கொண்டார். தனக்கு இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொருத்தமான பதில்கள் கிடைத்ததை நினைத்து இம்மனிதன் மகிழ்ச்சியடைந்தான்; மேலும், நல்ல எண்ணங்களோடு, நற்செயல்களையும் செய்ய ஆரம்பித்தான். குருஜி கிராமத்திலிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.  நம்பிக்கையோடு இம்மனிதன் அவருக்கு செய்த சேவையைப் பார்த்து குருஜி பேரின்பம் அடைந்து, ஆசீர்வாதம் செய்தார். இந்த ஒரு மாத நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பு ஏற்ற பணக்கார வணிகரும் இம்மனிதனின் சேவையைப் பார்த்து பூரிப்படைந்து, தன் தொழிலகத்திலேயே ஒரு நல்ல வேலையை அவனுக்கு அளித்ததால், இம்மனிதனின் எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்தன.

    இம்மனிதன் தன் கெட்ட கர்மாவினால் தான், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு அவதிப் பட்டான் என்று புரிந்து கொண்டான்; மேலும், தற்சமயம் இருந்த நல்ல கர்மாவின் விளைவினால், குருஜியை பார்த்து சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் அறிந்தான். இந்த பாடங்களை மனதில் நிறுத்திக் கொண்டு, ஒவ்வொரு செயலையும் ஒருமுகச் சிந்தனையோடு கவனித்து, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை அவன் வாழ ஆரம்பித்தான்.

    நீதி:

  1. நம் பழைய கர்மா மற்றும் வாசனாக்களை முழுதாக வெளியேற்ற நாம் பல பிறவிகளை எடுக்கிறோம். அந்த இலக்கை சரியாக புரிந்து கொள்ளாமல், நம் அறியாமையினால், நாம் பொருள் சார்ந்த விஷயங்களால் ஈர்க்கப் பட்டு, நம் மனதின் கற்பனைக்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறோம். கர்வம் மற்றும் அதை சார்ந்த ஆசைகளை விட்டு விட்டு, செயல்களை ஒழுங்குமுறையாக எடுத்துக் கொள்வது தான் சரியான தீர்வாகும்.

    சில சமயங்களில், அடிமைத்தனத்திற்கு பழகிக் கொள்கிறோம். அதைப் பற்றிய அறிவு இல்லையென்றால், நாம் அந்த சூழலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். அறிவு இருந்து, அதிலிருந்து வெளியில் வருவதற்கு மன வலிமை இல்லையென்றால், மறுபடியும் நாம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம்.

    நாம் மனதளவில் நம்பிக்கையுடன் கடவுளின் ஆசிகளை வேண்டினால், அந்த சூழலிலிருந்து தப்பிப்பதற்கான அறிவை நமக்கு அவர் அளிப்பார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஞானமும் சித்தியும்

நீதி: ஆத்ம ஞானம்

உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல்

jnana and sidha

பிரபுலிங்கா என்பவர், கர்நாடக தேசத்தில் பிரபலமாக இருந்த லிங்காயத் மதப் பிரிவை நிருவியவர் ஆவார். அவர் ஒரு முறை ஆன்மீக மனம் கொண்டவர்களின் மேன்மைக்காக, தன் தேசத்தில் யாத்திரைக்கு புறப்பட்டார். வழியில், அவர் கோகர்ணத்தில் (மேற்கு இந்தியாவின் கடற்கரையில் உள்ள இந்துக்களின் புனித ஸ்தலம்) கோரக்நாத் என்ற பிரபலமான ஒரு யோகியை சந்தித்தார். பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும் தனது அதீத சக்தியினால் மிகவும் பெருமை கொண்டாலும், கோரக்நாத் பிரபுலிங்காவை மரியாதையுடன் வரவேற்றார். தனது விருந்தாளியை ஏறக்குறைய தனக்கு சமமாகக் கருதினாலும், கோரக்நாத் அவரை சந்தித்ததில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பிரபுலிங்கா யார் என விசாரித்தார்.

அதற்கு பிரபுலிங்கா, “தன் ஆணவத்தை வேருடன் முற்றிலும் அழித்த ஒருவனே, என்னை யார் என அறிந்து கொள்ள முடியும். தன் உடலில் மோகம் கொண்ட ஒரு அற்ப மனிதனிடம் நான் என்ன கூறுவது?” என்று பதிலளித்தார்.

தன் உடலே ‘தான்’ என அடையாளம் கொண்ட கோரக்நாத், “சிவபெருமானின் அருளாலும், குளிகைகளை (மருத்துவச் செடிகளிலிருந்து தயாரிக்கப் பட்டவை) உண்டு, தன் உடலுக்கு மரணமில்லாமையை வென்ற ஒருவன் இறக்க முடியாது. ஆதலால் அத்தகைய சக்தியைப் பெறாத ஒருவர் மரணமடைவார்” என பதில் கூறினார்.

பிரபுலிங்கா அதற்கு “ஒருவரது அறிவு,  உடலுக்கு அமரத்துவம் வெல்வதைக் காட்டிலும், தன்னை அறிந்து கொள்வதில் இருக்கிறது” என்று கூறிவிட்டு, உடல் ஒருவரது ஆத்மார்த்தம் இல்லையென்பதைத் தெளிவாக விவரித்தார்.

கோரக்நாத் இதனால் சமாதானம் அடையாமல்,  தன் கூற்றே சரி என வாதாடினார். அவர் பிரபுலிங்காவிடம் ஒரு நீளமான, கூர்மையான வாளைக் கொடுத்து, தன் உடலை வெட்டும்படிக் கூறினார். கோரக்நாத்தின் உடலைத் தொட்ட வாள் கூர் மழுங்கி கீழே விழுந்தது; கோரக்நாத்திற்கு காயம் எதுவும் படவில்லை.

பிரபுலிங்கா ஆச்சரியப் படுவது போல் பாசாங்கு செய்தார். பிறகு தன் உடலை வெட்டும்படி அவர் கோரக்நாத்திடம் கூறினார். பிரபுலிங்கா இறந்து விடுவாரோ என்று நினைத்து, கோரக்நாத் முதலில் தயங்கினார். பிரபுலிங்கா வற்புறுத்தியதும், கோரக்நாத் வாளால் அவர் உடலை வெட்ட முன் வந்தார். ஆச்சரியப் படும் வகையில் வாள், பிரபுலிங்காவின் உடலில், காற்று வெளியில் செல்வதைப் போல், வெகு எளிதாக சென்று வெளிவந்தது! அவரை அது ஒன்றும் செய்யவில்லை.

இதற்குப் பிறகே சித்தரான கோரக்நாத், பிரபுலிங்காவின் ஞானத்தின் மேன்மையை புரிந்து கொண்டார். அவரது கர்வம் அழிந்தது. அவர் பிரபுலிங்காவிடம் தனக்கு உண்மையை போதிக்கும்படி வேண்டினார். பிரபுலிங்கா பிரம்ம வித்தையை இவ்வாறு கோரக்நாத்திற்கு விளக்கினார் – கோரக்நாத், உன் உடலே நீ என நினைத்துக் கொள்ளாதே. உன் உள்ளத்தில் வசிக்கும் இறைவனைத் தேடு (மனதுள் குடியிருப்பவர்). அவ்வாறு செய்தால் நீ ஜனன மரணம் என்ற ரோகத்திலிருந்து முக்தி பெறுவாய். அந்தக் குகை உன் உள்ளமே; அதனுள் வசிப்பவர் இறைவனே! நானே அந்த இறைவன் .

நீதி:

வேதங்களுக்கு இரண்டு பிரிவுகள் உள்ளன;  சமயாசாரங்கள் அல்லது கர்ம காண்டம் மற்றும் அறிவுப் பிரிவு அல்லது ஞான காண்டம். எல்லா சமயாசாரங்களும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அதுவே நாம் புரிந்து கொள்வதின் முதலும் முடிவும் என எண்ணக் கூடாது. அறிவும், புரிதலும் இல்லாத ஆசாரங்கள் வீண்.

முக்கியமான பயிற்சி மற்றும் அடுத்த நிலை பயிற்சி என வேறுபாடு உள்ளது. அடுத்த நிலை பயிற்சியான ஆசாரங்கள் கட்டுப்பாடு, நம்பிக்கை, பொறுமை, பற்றற்றத் தன்மை போன்றவை மனதைத் தூய்மைப் படுத்த முக்கியமானவை; ஆனால், மெய்யறிவே மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும். தன்னைப் பற்றி அறிந்து கொள்வதே உண்மையான அறிவு ஆகும். மலம், விக்ஷேபம், ஆவரணம் அதாவது ஆணவம், மெய்யற்றதை சூழ்ந்து வெளிப்படுத்துவதால், நாம் அவற்றால் ஈர்க்கப் படுகிறோம். அவற்றிலிருந்து வெளிப்பட்டால் தான், நாம் நம்மை அறிந்து கொள்ள முடியும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

முனிவரும், அரசரும்

நீதி: உண்மை, எளிமை

உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல்

THE SADHU AND THE KING PICTURE 1

சிறந்த மகாத்மா ஒருவர்,  ஒரு காட்டில் ஒரு மரத்தடியில் சாதுவாக வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் மூன்று கற்களை வைத்துக் கொள்வார்; உறங்கும் போது, ஒரு கல்லை தலைக்கு கீழே, மற்றொன்றை இடுப்புக்குக் கீழே, மூன்றாவதை கால்களுக்குக் கீழே வைத்துக் கொண்டு, படுக்கை விரிப்பை தன் மேல் போர்த்திக் கொள்வார். மழை பெய்த போது, அவர் உடல் கற்கள் மேல் இருக்கும்; அதனால், தண்ணீர் கீழே சென்று விடும். விரிப்புக்கு மேல் விழும் மழைத் துளிகளும் கீழே சென்று விடும். அதனால், உறங்குவதற்கு தொந்தரவு எதுவும் இருக்காது; நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார். அவர் உட்காரும் போது, அடுப்பின் அடித்தளத்தில் வைப்பது போல, அந்த மூன்று கற்களையும் ஒன்றாக வைத்து, அதன் மேல் சௌகரியமாக உட்கார்ந்து கொள்வார்.

பாம்புகளோ, மற்ற பூச்சிகளோ அவரை தொந்தரவு செய்யவில்லை; ஏனெனில் அவை கற்களுக்குக் கீழே இருக்கும் குறுகிய பிளவு வழியாக சென்று விடும். யாரோ அவருக்கு எடுத்து வரும் உணவை அவர் சாப்பிடுவார். அதனால் அவருக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் வரவில்லை.

THE SADHU AND THE KING PICTURE 2ஒரு அரசர் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு வந்தார். அவர் சாதுவைப் பார்த்து, ‘என்ன ஒரு பரிதாப நிலை! கற்கள் மேல் உறங்குவதற்கு, அவர் உடலை அதற்கு தகுந்தாற் போல சரி செய்து கொள்வது எவ்வளவு கடினம்? இதனால் அவருக்கு மிகுந்த கஷ்டம். நான் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் என்னுடன் அவரை சொகுசாக தங்க வைத்து, சற்று நிம்மதியைக் கொடுக்க வேண்டும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

அவ்வாறு யோசித்து, வீட்டுக்குச் சென்று, அரசர் இரண்டு படை வீரர்களை ஒரு பல்லக்கு மற்றும் சில உதவியாளர்களுடன் சாதுவிடம் அனுப்பி, அவரை மரியாதையுடன் அழைத்து வர சில கட்டளைகளைக் கொடுத்தார். ஏதேனும் காரணம் சொல்லி, சாதுவை அழைத்து வராவிட்டால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப் படும் என்றும் அரசர் கூறினார்.

THE SADHU AND THE KING PICTURE 3

அரசர் தன் அரண்மனைக்கு சாதுவை கூட்டி வரச் சொன்னதாக, அவரிடம் அவர்கள் விவரங்களைக் கூறினர். சாதுவுக்கு செல்வதில் அதிக ஈடுபாடு இல்லை; ஆனால், அவரைக் கூட்டிச் செல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப் படும் என்று தெரிந்தவுடன், சாது அவர்களுடன் செல்ல ஒத்துக் கொண்டார்.

சாதுவிடம் எடுத்துச் செல்வதற்கு என்ன இருந்தது? கௌபீனம் (இடுப்பு வேஷ்டி), படுக்கை விரிப்பு மற்றும் அந்த மூன்று கற்கள். சாது அந்த கௌபீனம் மற்றும் கற்களை படுக்கை விரிப்பில் வைத்து, ஒன்றாகக் கட்டினார். ‘என்ன இது? இந்த சாது ராஜாவின் அரண்மனைக்கு செல்லும் போது, சில கற்களை கொண்டு செல்கிறார்!’

அந்த படை வீரர்களுக்கு அவர் பைத்தியமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனாலும், சாது அந்த மூட்டையுடன் பல்லக்கில் ஏறி, ராஜாவிடம் வந்தார்.

ராஜா மூட்டையை பார்த்து விட்டு, சாதுவிற்கு தேவையான தனிப்பட்ட உடைமைகள் என்று நினைத்துக் கொண்டு, மரியாதையுடன் சாதுவை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு நல்ல உணவை கொடுத்து, படுப்பதற்கு பஞ்சும் பருத்தியும் கலந்த ஒரு மெத்தையையும் கொடுத்தார். சாது, அந்த மூட்டையை திறந்து, அந்த மூன்று கற்களை எடுத்து, படுக்கையின் மேல் வைத்து, எப்போதும் போல மேல் விரிப்பை போர்த்திக் கொண்டு தூங்கினார்.

THE SADHU AND THE KING - PICTURE 4

அடுத்த நாள் காலை, ராஜா மரியாதையுடன் வணங்கி, “ஸ்வாமி, இங்கு உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

ஸ்வாமி: ஆம். எனக்கு இங்கு என்ன வேண்டும்? நான் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறேன்.”

ராஜா: அது இல்லை, ஸ்வாமி. நீங்கள் காட்டில் மூன்று கற்கள் மேல் படுத்துக் கொண்டு, பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தீர்கள். இங்கு, இந்த வீடும், படுக்கையும் உங்களுக்கு மகிழ்வை கொடுத்திருக்கும். அதனால் தான், நான் கேட்டேன்.”

ஸ்வாமி: “அங்கிருந்த படுக்கை தான் இங்கே இருக்கிறது. இங்கு இருக்கும் படுக்கை தான் அங்கே இருக்கிறது. அதனால், எல்லா இடங்களிலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எச்சமயத்திலும் எனக்கு ஒன்றுமே தேவையில்லை – தூக்கமோ, சந்தோஷமோ எதுவானாலும் சரி.”

ராஜா ஆச்சரியத்துடன் படுக்கையைப் பார்த்தார். அதற்கு மேல் மூன்று கற்கள் இருந்தன. உடனே, ராஜா சாதுவின் பாதங்களில் விழுந்து, “நீங்கள் உயர்ந்த மனிதர்! உங்களின் உயர்வான மனப்பான்மையை தெரிந்து கொள்ளாமல், நான் உங்களை சந்தோஷப் படுத்துவதற்காக இங்கே அழைத்து வந்தேன். நீங்கள் எச்சமயத்திலும் சம நிலையில் இருப்பது அறியாமல், இந்த பைத்தியக்கார வேலையை செய்து விட்டேன். என்னை மன்னித்து ஆசீர்வதியுங்கள்” என்று கேட்டார்.

ராஜா தன் தவறை உணர்ந்த பிறகு, சாதுவை அவர் போக்கில் விட்டு விட்டார். இது தான் இந்த சாதுவின் கதை.

“அதனால், மகாத்மாவின் கண்களில், ஒன்றுமே இல்லாத வாழ்க்கை தான் உண்மையான பேரின்பமான வாழ்க்கையா?” என்று அந்த பக்தர் கேட்டார். அதற்கு பகவான், “வேறு என்ன? இது போல பெரிய கட்டிடங்களில் வாழ்கின்ற வாழ்க்கை சிறை வாழ்க்கை. நான் சற்று உயர்வான கைதியாக இருக்கலாம். இது போல படுக்கைகளில் உட்காரும் போது, முட்கள் நிறைந்த விரிப்பு மேல் இருக்கும் உணர்வு எனக்கு வருகிறது. நிம்மதியும், சொகுசும் எங்கே இருக்கிறது?” என்று கூறினார்.

நீதி:

உலகத்தில் எதிர்பார்ப்புகளால் ஒருவன் கஷ்டப்படுகிறான்; உலகத்தினால் அல்ல. நம் மனதில் ஆசைகளும், வெறுப்புகளும் இருக்கின்றன. நமக்கு வேண்டியது போல உலகத்தில் நடக்காத போது, ஏமாற்றமாக இருக்கிறது. நம் துக்கங்களுக்கு உலகத்தைக் காரணம் காட்டுகிறோம். புரிதல் இல்லாமல், லோகத்தை வெறுக்க ஆரம்பிக்கிறோம்; துறவு ஒரு உள்ளார்ந்த உணர்வு என்று மறந்து விடுகிறோம். உலகத்தை வெறுப்பதற்கு பதிலாக, துக்கமுள்ள மனதை நாம் வெறுக்க வேண்டும். எளிமை என்பது வெளியிலே இருக்கும் ஒரு குணம் அல்ல; நம் உள்ளே இருக்கும் ஒரு உணர்வு. உள் மனது எளிமையாக இருக்கும் போது, நாம் எங்கு சென்றாலும் சந்தோஷமாக இருப்போம். அத்தகைய மனிதன் லோகத்தை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. அவன் உலகத்தில் வாழ்ந்தாலும், பற்றற்று வாழ்கிறான்.

பல மனிதர்களுக்கு அகம்பாவம் ஒரு தடையாக இருக்கிறது; லோகத்தை வெறுத்து விட்டு சென்றாலும், உள்ளே இருக்கும் அகம்பாவம் மறைவதில்லை. உலக விஷயங்களை அதிகமாக சார்ந்திருக்கும் போது, பற்று வளர்ந்து அதை விட்டு செல்வதற்கு கடினமாக இருக்கிறது. வெளியிலே பல மாற்றங்களை செய்தாலும், உள்ளிருந்து வைராக்கியத்தை வளர்ப்பதற்கு கடினமாக இருக்கிறது. விவேகத்திலிருந்து வரும் வைராக்கியமே (உண்மை மற்றும் உண்மையற்றதை பகுத்தறியும் தன்மை) பற்றற்ற நிலை. தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்து, நம் உள் மனதை புரிந்து கொண்டால், பற்றற்ற உணர்வை வளர்த்துக் கொள்ளலாம். அதனால், உள் மனதை கட்டுப் படுத்துவது முக்கியம்; வெளி மனதை அல்ல என்று குரு கூறுகிறார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com