Archive | June 2022

நீங்கள் எதை விரும்புவீர்கள் – மகிழ்ச்சியாக இருப்பதா அல்லது சரியாக இருப்பதா

நீதி: சரியான நடத்தை

உப நீதி: பணிவு / விழிப்புணர்வு

கடல் பயணம் மேற்கொள்ளும் பொழுது, ஒரு நீராவி கப்பலின் தலைவனுக்கு திடீரென எச்சரிக்கை ஒலி கேட்கிறது.

பயணிக்கும் போது, “கேப்டன், நீங்கள் தற்சமயம் பயணித்து கொண்டிருக்கும் கப்பலின் திசையை 10 டிகிரி சதவீதம் மாற்றாவிட்டால், கடுமையான மோதலில் கொண்டு விடும்” என்ற ஒரு எச்சரிக்கை ஒலி கேட்டது. 

அதற்கு கப்பலின் கேப்டன், “தகர்க்கமுடியாத வலிமையுள்ள இந்த கப்பலின் கேப்டன் பேசுகிறேன்; நான் செல்லும் பாதை உனக்கு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தால், நீ உன் பாதையை திசை திருப்பிக் கொள்; என்னால் முடியாது” என்று பதிலுரைத்தான்.

மறுபடியும், “கேப்டன்! கேப்டன்! நான் சொல்வதைக் கேட்டு, கப்பலின் திசையை 20 டிகிரி சதவீதம் மாற்றாவிட்டால், கப்பல் மோதுகின்ற அபாயம் அதிகரிக்கும்” என்ற ஒலி கேட்டது.

அதற்கு கேப்டன், “ஒரு வலுவான கப்பலை நான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். தற்சமயம் நான் பயணித்துக் கொண்டிருக்கும் போது மாற்றுவது இயலாத விஷயம்” என்றான்.

அதற்கு ஒலி, “நீ ஒரு நீராவிக்கப்பலை இயக்கிக் கொண்டிருக்கலாம்; ஆனால் நான் கலங்கரை விளக்கம் என்பதை மறந்து விடாதே” என்றது.

அந்த கப்பலுக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாது, ஆனால் இதிலிருந்து நாம் நிச்சயமாக ஒன்றை அறிந்து கொள்ள முடியும். இது கேப்டனின் அகங்காரம். இந்த அகங்காரம் அவன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கும். வேறு ஒரு கதையைப் பார்க்கலாம்.

இப்போது பஞ்சதந்திரத்தில் உள்ள ஒரு பிரபலமான கதையைப் பார்ப்போம்.

ஒரு முறை, இரண்டு வேடர்கள் சில ஆமைகளை பிடிப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இது, ஒரு வாயாடி ஆமையின் காதில் விழுந்து விட்டது. இந்த சதித் திட்டத்தை எப்படியாவது கலைப்பதற்காக, இந்த ஆமை இரண்டு கொக்குகளின் உதவியை நாடியது. அந்த இரண்டு கொக்குகளும், ஒரு நீளமான குச்சியின் இரண்டு ஓரங்களை தங்களின் அலகில் பிடித்துக் கொள்வது தான் இந்தத் திட்டம். 

கொக்குகள் பறக்கும் போது, இந்த ஆமை தன் வாயால் குச்சியை பிடித்துக் கொண்டு வெகுதூரம் சென்று விடலாம் என்று நினைத்தது. 

இந்தத் திட்டத்திற்கு கொக்குகள் ஒப்புக் கொண்டு, ஆமையிடம் குச்சியை கெட்டியாக பிடிக்குமாறு கூறின. ஆமையும் அவ்வாறே செய்தது. பறந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட மனிதர்கள், இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்து வியப்படைந்தனர்.

அவர்கள், “எவ்வளவு சாமர்த்தியமான பறவைகள்! ஆமையை தூக்கிச் செல்ல என்ன ஒரு அற்புதமான யோசனை!” என்று வியப்படைந்தனர்.

தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்த ஆமை “இது என் திட்டம் தான்” என்று கூறும் போது, மேலிருந்து கீழே விழுந்தது.

ஆமையின் வீழ்ச்சிக்கு அதன் தற்பெருமையே காரணமாகும்.

இரண்டு கதைகளும் வீழ்ச்சியைப் பற்றி பேசுகின்றன. ஆனால் இரு கதாபாத்திரங்களின் மானப்பான்மையில் உள்ள நுட்பமான வேறுபாட்டை கவனித்தீர்களா?

கப்பல் தலைவனின் விஷயத்தில், அவனது கண்மூடித்தனமான அகந்தை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. அதே சமயம், ஆமை தனது திட்டத்தைப் பற்றி உண்மையிலேயே பெருமிதம் கொண்டிருந்தது. மேலும் அதன் சாதனைகளை உலகம் அறிய வேண்டும் என்ற விருப்பம் அதற்கு இருந்தது. ஆனால் இங்கே அடிப்படையான மற்றும் முக்கியமான வேறுபாடு என்னவென்றால் ஆமைக்கு ஆணவம் இல்லை. ஆணவம் என்றால் எப்போதும் நாம் செய்வதுதான் சரி என்ற ஆவேசம் மற்றும் பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாக இருக்கும். அதே நேரத்தில் பெருமை என்பது ஒரு நபரின் சாதனைகள் மற்றும் உண்மையான அனுபவத்தின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதில் சுயநலம் குறைவு. சுருக்கமாக, ஆணவம் என்பது “தவறான-பெருமை”, இல்லாத சில பண்புகளை பற்றிப் பெருமைப்படுவது. கப்பலின் தலைவன் ஆணவத்தால் செயல்பட்டான், ஆமை தற்பெருமையுடன் செயல்பட்டது. எவ்வாறேனும் இறுதியில் இருவருமே ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருந்தது.

சரியான அர்த்தத்தில் செயற்பட்டால், பெருமை என்பது நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான உணர்வாகும். ஒருவர் தனது நாடு, தேசம், பெற்றோர், சந்ததியினர் மற்றும் குடும்பத்தை குறித்து பெருமைப்படலாம் ………… இந்த சந்தர்ப்பங்களில் அவர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று பொருள்; ஆனால் இந்த உணர்வுகள் தீவிரமாக மாறும் போது, அதாவது மற்றவை அனைத்தும் இவற்றிற்கு முன்னால் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போது, ஆணவம் ஊடுருவுகிறது. இந்த உணர்வுகளின் வீரியமே இரண்டையும் பிரிக்கும் மெல்லிய சுவர். ஒன்று ஆணவத்திற்கு உணவளித்து அதை மேலும் வளர்க்கிறது. ஆணவம் எளிதில் உடையக் கூடியது, எனவே மிக வேகமாக காயமடைகிறது. ஆனால் பெருமை மிகவும் உறுதியானது.

இரண்டிற்குமே மாற்று மருந்து தேவை என்பதும், அந்த மருந்தானது ‘அடக்கம்’ என்பதும் தெளிவாகிறது. ஆணவமும் பெருமையும் கைவிடப்பட்டு, அடக்கம் என்னும் மனோபாவத்தை தழுவும் போது, ஒரு புதிய பார்வை நம் புரிதலில் ஏற்படுகிறது. இந்த புதிய கண்ணோட்டத்தில் உண்மை புலப்படுகிறது. அடக்கம் நம்பிக்கையுடனும் சுய மரியாதையுடனும் வாழ்வில் முன்னேற வழி வகுக்கிறது.

வாழ்க்கையை அமைதியான, மகிழ்ச்சியான முறையில், வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு, நாம் ஆணவத்தையும் பெருமையையும் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது; ஒரு கணம் நிதானித்து, அடக்கத்துடன் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும்படி வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

“ஆணவம் தன்னை எப்போதும் சரி என்று நிரூபிக்க அதிக நேரம் செலவிடுகிறது. நீங்கள் பொதுவாக உடன்படாத ஒரு கருத்தை யாராவது கூறினால், அவர்களை தவறு என்று நிரூபிப்பதை தவிர்த்து, “நீங்கள் சொல்வது சரி” என்று சொல்ல முயற்சியுங்கள். ஆணவம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும். அதே வேளையில், இந்த அணுகுமுறை உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விட சரியாக இருப்பதற்கு விரும்புவீர்களா?” என்கிறார் டாக்டர் வெய்ன் டயர்.

டாக்டர் வெய்ன் டயர் ஒரு சிந்தனையை தூண்டும் கேள்வியை முன்வைத்துள்ளார். “மகிழ்ச்சியாக இருப்பதா அல்லது சரியாக இருப்பதா – எதை நீங்கள் விரும்புவீர்கள்?” ………… நாமே தீர்மானிப்போம்.

நீதி:

நமது அகம்பாவத்தையும் ஆணவத்தையும் கட்டுப்படுத்த நாம் விழிப்புணர்வுடன் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான ஒருங்கிணைந்த விழிப்புணர்வுடன், இந்த குணங்களிலிருந்து நாம் விடுபடலாம். பின்னர் பணிவு என்ற மனப்பான்மை நல்லொழுக்கமாக மலர்கிறது; இது நமக்கு மட்டுமல்ல, நாம் வாழும் உலகிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது.

மொழி பெயர்ப்பு

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நான்கு வகையான மனிதர்கள்

நீதி: உண்மை, நன் நடத்தை, சமாதானம்

உப நீதி: சுதந்திரம், உள்நோக்குதல், ஞானம்

ஶ்ரீ ராமகிருஷ்ணரின் கதைகள் மற்றும் உவமைகளிலிருந்து எடுக்கப் பட்டன.

மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

1. எப்போதும் சுதந்திரமாக இருப்பவர்கள்.

2. விடுதலையை எதிர் பார்ப்பவர்கள்.

3. விடுதலை பெற்றவர்கள்.

4. உலகின் தளைகளால் கட்டுப்படுத்தப் பட்டவர்கள்.

1. மீன்களைப் பிடிப்பதற்காக ஒரு வலையை ஏரியில் வீசுவதாக நினைத்துக் கொள்வோம். சில மீன்கள் புத்திசாலித்தனமாக வலையில் எச்சமயமும் மாட்டாது. அவை எப்போதும் சுதந்திரமாக இருப்பவர்கள்  போன்றவை. நாம் நாரதர் போன்ற முனிவர்களை, எப்போதுமே சுதந்திரமாக இருப்பவர்களில் கணக்கில் கொள்வோம். அவர்கள் இவ்வுலகில் மற்றவர்களின் நன்மைக்காகவும், ஆன்மீக உண்மைகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் வாழ்கிறார்கள்.

2. பல மீன்கள் வலையில் சிக்கிக் கொள்ளும். சில மீன்கள் அதிலிருந்து விடுபட முயற்சி செய்யும்; அவை விடுதலையை எதிர் பார்ப்பவர்களைப் போன்றவை. விடுதலையை எதிர்பார்ப்பவர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். சிலர் அதில் வெற்றி அடைகிறார்கள், சிலரால் அது முடியவில்லை.

3. சில மீன்கள் பெரிய அளவில் நீரைத் தெறிக்க விட்டபடி, வலையிலிருந்து குதித்து விடும். அதைக் கண்ட மீனவர்கள், ‘பார்! பெரிதாக ஒன்று அங்கே போகிறது’ என்று கூச்சலிடுவர். அவை விடுதலை பெற்றவர்களைப் போன்றவை. சாதுக்களையும், மஹாத்மாக்களையும் போன்ற விடுதலை பெற்ற ஆத்மாக்கள், மண், பெண் மற்றும் பொன் போன்றவைகளில் சிக்கிக் கொள்வதில்லை. அவர்களின் மனங்கள் உலக விஷயங்களிலிருந்து விடுதலை பெற்றவை. மேலும், அவர்கள் எப்போதும் இறைவனின் கமலப் பாதங்களை தியானிப்பவர்கள்.

4. வலையில் சிக்கிக் கொண்ட பல மீன்களால் தப்பிக்கவும் முடியாது; அதற்கான முயற்சியும் செய்யாது. மாறாக அவைகள் வலையை வாயில் கவ்வியபடி மண்ணுக்குள் புதைந்து, அங்கேயே அமைதியாகக் கிடந்தபடி, ‘நாம் இனி பயப்படத் தேவையில்லை; நாம் இங்கேயே பத்திரமாக இருப்போம்’ என்றவாறு நினைக்கும்; ஆனால் பாவம் மீனவர்கள் தங்களை வலையுடன் வெளியே இழுத்து விடுவார்கள் என்று அவைகளுக்குத் தெரியாது. அவை உலகின் தளைகளால் கட்டுப்படுத்தப்  பட்டவர்கள் போன்றவை. அடிமைப் பட்டிருப்பவர்கள் எல்லாம் உலகப் பற்றில் மூழ்கி, இறைவனை மறந்தவர்களாக இருக்கிறார்கள். மறந்து போய் கூட அவர்கள் இறைவனை நினைப்பதில்லை.

நீதி:

நாம் உண்மையின் பாதையில் செல்ல முழு மனதோடு முயற்சி செய்வோம். மகிழ்ச்சியைத் தேடி உலக இன்பங்களில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் விளைவுகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்; அது, நாம் சரியான பாதையில் செல்ல உதவி செய்யும். சரியான பாதையில் சென்றால், நிரந்தரமான பேரின்பம் என்ற உன்னதமான இலக்கை அடைவோம்.

“ஒரு விஷயத்திற்கான ஆசை என்பது தூண்டிலைப் போன்றது. நீங்கள் மீன் பிடிக்கும் போது உங்களுக்குக் கட்டாயமாக பொறுமை வேண்டும். நீங்கள் கொக்கியில் தூண்டிலைப் போட்டுக் காத்திருக்க வேண்டும். ஆசை என்ற தூண்டில்தான் அந்த மீன்களை இழுக்கும். இதில் அழகான பொருள் என்னவென்றால், நீங்கள் விருப்பப் பட்ட மீனை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நீங்கள் பிடிக்கும் போது – அந்த விஷயத்தின் ஒரு துகள் – அந்த மீன் மற்றுமொரு மீனைப் பிடித்து இழுத்து கொக்கியில் மாட்ட வைத்து விடும். பிறகு நீங்கள் உங்கள் வழியில் இருப்பீர்கள். விரைவில் மென்மேலும் துகள்கள் சேர்ந்து பல திசைகளில் இழுக்கப் படுவீர்கள். ஆனால் அது ஆசையுடன் ஆரம்பிக்கும்” – டேவிட் லின்ச்.

மொழி பெயர்ப்பு

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

விதியை மாற்ற முடியுமா?

நீதி: உண்மை, நன்னடத்தை

உபநீதி: நன்னம்பிக்கை

மும்பையில், என் பணிப்பெண் என்னிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினாள்.

இதை தான் அவள் விவரிக்க நினைத்தாள். ஒரு நாள் அவளது அண்டை வீட்டில் ஒரு விருந்தாளி, புற்று நோய் சிகிச்சைக்காக கிராமத்திலிருந்து வந்திருந்தாள். அதிர்ஷ்டவசமாக, அவள் நோய் முற்றிலும் குணமாகி  கிராமத்துக்குத் திரும்பினாள். அவள் வயல்வெளியில் வேலை செய்பவள். அவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்து அவள் இறந்து விட்டாள். எனது பணிப் பெண்ணின் கேள்வி என்னவென்றால், இப்படி தான் நடக்கப் போகிறது என்ற விதி அவளுக்கு இருந்திருந்தால், கடவுள் அவளை புற்று நோயிலிருந்து ஏன் காப்பாற்ற வேண்டும்? இது அவள் தலையெழுத்தா அல்லது விதியா?

அந்த கணத்தில் என்னிடம் அவளுக்குக் கூறும்படியான ஒரு சமாதானமான பதில் இல்லை. இது என்னை யோசனையில் ஆழ்த்தியது. எனக்குள்ளேயே சந்தேகம்? விதியும் தலையெழுத்தும் ஒன்றில்லையா? அல்லது அவை ஒரே பொருளுடன் வெவ்வேறு அவதாரம் எடுத்துள்ளனவோ? பதிலுக்காக அகராதியில் அர்த்தம் தேட வேண்டியிருந்தது.

விதி என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். அகராதியில் விவரிக்கப்பட்ட அர்த்தம் என்னவென்றால், “இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட, அமானுஷ்யமான, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. திருமணங்களும், தூக்கு மாட்டிக் கொள்ளுதலும் விதியே (ராபர்ட் பர்ட்டன்). இவை ஆதிசக்தியால் முன்பே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள். விதி அவற்றை ஒன்று சேர்த்தது. நடக்க வேண்டிய நிகழ்வுகள் அல்லது நடந்து விட்டவை, எல்லாமே நன்மைக்கே என்று நம்ப வேண்டும்.

தலையெழுத்து என்றால் “ஒரு பேரிழப்பு அல்லது சாதகமற்ற விளைவு – மரணம், அழிவு, அல்லது வீழ்ச்சி எனக் கூறலாம்; இதுவும் முன்பே தீர்மானிக்கப் பட்டது. அந்த விளையாட்டில் தோற்க வேண்டுமென்று தலையெழுத்து. விதி அல்லது சோகத்திற்கு உதாரணம் “மரணம்” – ஒரு கொடுமையான தலையெழுத்து அவளுக்காக காத்திருந்தது. அவளது தலையெழுத்தால் நிர்ணயிக்கப்பட்டது. அவன் எப்போது சென்றாலும் காலதாமதாமாகவே செல்லவேண்டுமென்பது அவன் தலையெழுத்து.

தலையெழுத்து மற்றும் விதி என்பதற்கான பல்வேறு அர்த்தங்களை அகராதியை வைத்து பரிசீலித்த பின்னர், அவை ஒரே விதமான பொருள் தந்தாலும் ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருப்பது புலப்பட்டது. தலையெழுத்து என்பது எப்போதும் எதிர்மறை விஷயங்களுடனேயே சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் விதி என்பது எதிர்மறையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

உண்மையில் தலையெழுத்து என்பதற்கான ஒரு அர்த்தம் சாதகமற்ற விதி என்றுள்ளது – சோகம். அதனால் தான் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்ற தெளிவைப் பெற்றேன்.

வி பாதையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது,தி என்பது, நாம் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒரு முடிவை நோக்கி நம்மை தள்ளுகிறது. நமது நம்பிக்கையை வளர்த்து இறுதியில் நாம் ஆனந்தமடையும் ஒரு முடிவிற்கு நம்மை இட்டுச் செல்கிறது. நமது பாதையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது, ஆனால் தலையெழுத்து என்பது நமது தேர்வை நிராகரிக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு நடப்பது. சிலருக்கு அது கொடுமையானது. பெரிய விஷயங்களை அடைய சிலரின் மனோதிடத்தை அதிகரித்தாலும் கூட, நமது விதியை அறிந்து கொள்வதென்பது நமது பொறுப்பே; ஆனால் தலையெழுத்து நம்மை அடைந்து விடும்.

இந்த தீர்வின்படி எனது பணிப்பெண்ணுக்கு விடையளிக்க ஒரு பதில் கிடைத்து விட்டதாக நினைத்தேன். அந்த கிராமத்துப் பெண்ணின் புற்று நோயை குணமாக்க, கிராமத்திலிருந்து அவளை அழைத்து வந்தது அவளது விதி; ஆனால் பாம்பு கடித்து அவள் மரணத்தைத் தழுவ வேண்டுமென்பது அவள் தலையெழுத்து.

விதி, சில நபர்களை 9/11 அன்றைய நிகழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது.  அந்த சோக சம்பவம் நடந்த இடத்தில் அவர்கள் அறியாமலேயே அங்கு இல்லாமல் செய்தது. ஒரு அற்ப காரணமாகக் கூட இருந்திருக்கலாம். பல நபர்களின் உயிரை எடுத்தது தலையெழுத்தே.

சில நாட்களுக்கு முன் விதி என்பது பற்றி நான் முக நூலில் ஒரு கதையை பதிவிட்டிருந்தேன். மறுபடியும் கூறுவது போல தோன்றினாலும், விதி என்பதற்கான சரியான விளக்கத்தை இங்கு விவரிக்கிறேன்.

ஒரு மறக்கவியலாத போரில் ஜப்பானிய படை தளபதி, தன்னுடைய வீரர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், தாக்க எண்ணம் கொண்டார். அவர் தாம் ஜெயிப்போம் என நம்பிக்கை கொண்டிருந்தார்; ஆனால் அவரது வீரர்களுக்கென்னவோ சந்தேகமாகத் தான் இருந்தது.

சண்டைக்கு போகும் வழியில் ஒரு மத சம்பந்தப்பட்ட புனிதமான இடத்தை அவர்கள் கண்டனர். தன்னுடைய வீரர்களுடன் பிரார்த்தனையை முடித்து விட்டு தளபதி ஒரு காசு வில்லையை எடுத்து வைத்துக் கொண்டு, “நான் இந்த காசை இப்போது சுண்டி விடுவேன். தலை விழுந்தால் நாம் வெற்றி கொள்வோம்; வால் விழுந்தால் வீழ்வோம்”.

“விதியே இதனை இப்போது தீர்மானிக்கும்.”

அவர் காசை சுண்டி விட்டார். அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க…..ஆம் தலையே விழுந்தது. மகிழ்ச்சியுற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் வேகம் கொண்டு எதிரிகளைத் தாக்கி வென்றனர்.

சண்டை முடிவுற்ற பின், ஒரு லெஃப்டினண்ட் தளபதியிடம், “விதியை யாரும் மாற்றவியலாது” என்றார்.

தளபதி “ஆம் சரி” என்று பதிலளித்து, இரு பக்கங்களிலும் தலையே கொண்ட நாணயத்தை காண்பித்தபடியே வாழ்க்கை தனக்கு ஒர் சூட்சுமத்தை உணர்த்தியதாக கூறினார். இப்போது என்னால் நிறைவாக முடிக்க முடியும் எவ்வாறெனில், விதியாகப்பட்டது ஜப்பானியர்களுக்கு வெற்றியையும், தலைவிதியானது எதிரிகளுக்குத் தோல்வியையும் தந்தது. என்ன சரிதானே நான் சொல்வது?

நீதி:

நேர்மறை எண்ணங்கள் சாதனைகளை அடைய இட்டுச்செல்வது மட்டுமன்றி, நம்பிக்கைக்கான அடித்தளமுமாகும். நம் அன்றாட வாழ்வில் சூழ்நிலைகளை நேர்மறையாக அணுகுவதன் மூலம், அந்த தன்னம்பிக்கையால் உண்மையான முன்னேற்றத்தை வெற்றியுடன் அடைவோமாக. நேர்மறை எண்ணம் என்பது உண்மையை தோற்றுவிக்கவல்லது மற்றும் வெற்றிக்கான பாதையை உருவாக்க வல்லது. எதிர்மறைத் தன்மையை நாம் அலட்சியப்படுத்தி நிகழ்காலத்தில் வாழும் போது, இந்த மௌனக்குரல் நம்முள் எதிரொலிக்கும். இந்தக் குரல் நேர்மறை எண்ணங்களையே ஒலிக்குமாக.

அதிர்ஷ்டம் நிறைந்த ஒருவனை கடலில் எறிந்தால், அவன் வாயில் கவ்விய மீனோடு வருவான் – அரேபிய பழமொழி

ஒருவன் மூழ்க வேண்டும் என விதியிருந்தால் தேக்கரண்டி அளவு தண்ணீரே போதும் – இத்திஷ் பழமொழி

மொழி பெயர்ப்பு

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

எதிர்மறையான ஆசைகள்

நீதி: உண்மை

உபநீதி: பயமின்மை, நன்னம்பிக்கை

ஒரு சிஷ்யன் தன் குருவிடம், “நான் இன்று பெரும்பாலான நேரம் நினைக்கக் கூடாததை நினைத்து, ஆசைப்படக் கூடாததற்கு விருப்பப்பட்டு, திட்டமிடக் கூடாததை திட்டமிட்டு பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன்” என்று கூறினான்.

குரு தன் வீட்டுக்கு அருகில் இருந்த வனத்தில் உலாவச் செல்வதற்கு சிஷ்யனை அழைத்தார்.

செல்லும் வழியில், குரு ஒரு செடியைக் காண்பித்து, சிஷ்யனிடம் அது என்ன செடி என்று கேட்டார்.

அதற்கு சிஷ்யன், “நச்சுத்தன்மையுடைய காளிகம். அதன் இலைகளை சாப்பிட்டால், மரணம் நிச்சயம்” என்று கூறினான்.

உடனே குரு, “அதைப் பார்ப்பதனால் மட்டும், அது உன்னைக் கொன்று விடாது. அதே போல, எதிர்மறையான ஆசைகளுக்கு நீ இடம் கொடுக்காவிட்டால், அது உனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது” என்றார்.

நீதி:

நம் எண்ணங்கள், நம்மை அமைக்கின்றன. நன்மையும், தீமையும் நம் மனதில் தான் இருக்கிறது. எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை; ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, நம் மனப்பான்மையும், அணுகுமுறையும் தான் மிகவும் முக்கியம். எதிர்மறையான விஷயங்களில் நம் கவனத்தை செலுத்தாமல், நமக்கு அளிக்கப்பட்ட நல்ல விஷயங்களிலேயே ஒருமுகச் சிந்தனையுடன் இருந்து, முன் நோக்கிச் செல்வோம். இது போல நன்னம்பிக்கையான மனப்பான்மை நம்மை சரியான பாதையில் நடத்திச் சென்று, உண்மையான மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

எதிர்மறையான விருப்பங்களுக்கு இடம் கொடுத்து மன நிம்மதியை இழக்காதீர்கள். அவை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களை ஏற்றுக் கொண்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால், நமக்கு மன நிம்மதி கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE