Archive | November 2016

திட நம்பிக்கை

நீதி – அன்பு, பாசம்

உபநீதி – நம்பிக்கை, விசுவாசம்

ஒரு குருபோதகர் வெகு நேரமாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். முதல் எச்சரிக்கையாக, விமானத்தில் சிறிய விளக்குகள் மின்ன ஆரம்பித்து, “இருக்கைப் பட்டைகளை” அணிந்து கொள்ளுமாறு அறிவிப்பு கேட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு, ஒரு மென்மையான குரலில், “பலத்த காற்றினால் கொந்தளிப்பு இருப்பதால், விமானத்தில் பானங்கள் எதுவும் கொடுக்க இயலாது; இருக்கைப் பட்டைகளை அணிந்து கொண்டு அமரவும்” என்ற மற்றொரு அறிவிப்பு கேட்டது.

அவர் விமானத்தில் இருக்கும் பயணிகளைப் பார்க்கும் பொழுது, அவர்களின் முகங்களில் ஒரு விதமான குழப்பம் தெரிந்தது. பெரும்பாலான பிரயாணிகள் அச்சம் அடைந்து குழம்பியிருந்தனர். பிறகு அறிவிப்பாளர்,  “கொந்தளிப்பு தொடர்வதால், தற்போது சாப்பாடு எதுவும் தர இயலாது” என அறிவித்தார்.

அதற்குப் பிறகு,  பலத்த இடி, மின்னலின் சத்தம், என்ஜின்களின் சத்தத்தை மீறிக் கேட்க ஆரம்பித்தன. இருண்ட வானத்தில் மின்னல் பளிச்சென்று தென்பட்டது; பிரகாசமான வெளிச்சத்தினால் தேவலோகம் போல ஒரு காட்சி; கீழே சமுத்திரம், மேலே காற்றின் வேகத்தினால், விமானத்தில் கொந்தளிப்பை உணர முடிந்தது. ஒரு நிமிடம், விமானம் உயரத்தில் பறந்தது;  மறு நிமிடம், கீழே விழுந்து நொறுங்கி விடுவதைப் போல ஒரு உணர்வு.

குருபோதகர், தானும் பயப்படுவதை ஒப்புக் கொண்டார். சுற்றி இருந்த மற்ற பயணிகளும் வேதனையில் தவித்தனர். எதிர் காலம் கேள்விக்குறியாக இருந்தது. சில பயணிகள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியுமா என்று பலர் பயந்தனர்.

இவ்வளவு குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சிறுமி மட்டும் எதுவும் நடக்காதது போல, அமைதியாக அமர்ந்திருந்தாள். தன் கால்களை இருக்கையின் மீது மடித்து வைத்துக் கொண்டு ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அச்சிறுமியின் உலகத்தில் எல்லாமே ஒழுங்காகவும் அமைதியாகவும் இருப்பது போல தெரிந்தது.  சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்; பிறகு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

கவலையோ, பயமோ எதுவும் அவள் முகத்தில் தென்படவில்லை. விமானம் நிலையற்ற ஒரு சூழ்நிலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பயங்கரமான வேளையில், மற்ற பயணிகள் பயந்தது போல அச்சிறுமி சிறிதும் கலங்கவில்லை.

எல்லோரும் வியப்புடன் அக்குழந்தையை பார்த்தனர். விமானம் இலக்கை அடைந்ததும், எல்லோரும் கீழே இறங்க அவசரப் பட்டனர். சிறுமி அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒரு பயணி அவளிடம் சென்று, பயம் ஏற்படவில்லையா எனக் கேட்டதும், அந்தச் சிறுமி சொன்ன பதில் – ஐயா, இவ்விமானத்தின் ஓட்டுனர் (பைலட்)என் தந்தை; அவர் என்னை சௌகரியமாக வீடு கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது!

நீதி:

நமக்கு தன்னம்பிக்கை இருந்தால் எதற்கும் நாம் கலங்க மாட்டோம். நம்பிக்கை நம்மை வழி நடத்திச் செல்லும். இக்கதையின் சிறுமிக்கு, தன் தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்ற பூர்ண நம்பிக்கை இருந்தது. அது போல நமது தந்தையும் குருவுமானக் கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார். அவர் மேல் நம்பிக்கை வைத்தால், அவர் நமக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து, வாழ்க்கைப் பயணத்தை இனிதாக அமைப்பார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தன் வினை தன்னைச் சுடும்

 

pound-of-butter-picture-1pound-of-butter-picture-2pound-of-butter-picture-3

நீதி – உண்மை

உபநீதி – வாய்மை

ஒரு விவசாயி, பேக்கரி தொழிலாளி ஒருவனிடம் ½ கிலோ வெண்ணை விற்று வந்தான். ஒரு நாள், விவசாயி சரியாக தான் கொடுக்கிறானா என்று தீர்மானிக்க, வெண்ணையை தராசில் நிறுத்து பார்த்தான். ஆனால், எடை சற்று குறைவாக இருந்ததால், தொழிலாளி கோபமுற்று, நீதி மன்றத்தில் விவசாயியை நிறுத்தினான். நீதியாளர் விவசாயிடம் வெண்ணையின் எடையைப் பார்க்க ஏதாவது அளவுகோல் இருக்கின்றதா என்று கேட்டார். அதற்கு விவசாயி, “முற்பட்ட காலத்தியவன் நான். சரியான அளவுகோல் இல்லையென்றாலும் ஒரு தராசு வைத்திருக்கிறேன்” என்று பதிலளித்தான். அதற்கு நீதியாளர் விவசாயியிடம், “எப்படி எடை பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு, “நான் பல நாட்களாக தொழிலாளியிடமிருந்து வெண்ணை வாங்கும் அதே எடை ரொட்டி வாங்கி கொண்டிருக்கிறேன். அதனால், ரொட்டியின் எடையைப் பார்த்து, அதே எடை வெண்ணையை கொடுக்கிறேன். என்ன தவறு இருந்தாலும், தொழிலாளியைக் கேட்கவும்” என்று விவசாயி பதிலளித்தான்.

நீதி:

pound-of-butter-4வாழ்க்கையில், மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோமோ, நமக்கும் அப்படி தான் விளைவுகள் அமைகிறது. நேர்மையும், வஞ்சகமும் ஒரு பழக்கமாக மாறுகிறது. சில மனிதர்கள், அயோக்கியத்தனமாக செயற்பட்டு, ஒரு கவலையும் இல்லாமல் பொய் பேசுவார்கள். மற்றும் சில மனிதர்கள், பொய் சொல்வதை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்வதால், உண்மை  பேசுவதற்கே  மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களையே ஏமாற்றி கொள்கிறார்கள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மன்னித்து வாழ்வதே சிறந்த வழியாகும்

நீதி: சரியான நடத்தை

உபநீதி: மன்னிப்பு

good-to-forgive-picture-1ராமன் மிகப் பெரிய, அழகான ஒரு வீட்டை வாங்கினார். அதில் அதிகமான பழ மரங்கள் உள்ள தோட்டம் ஒன்றும் இருந்தது. அவர் வீட்டு அருகில், ஒரு பழைய வீட்டில் ரவி குடி இருந்தார். ரவி பொறாமை குணத்துடன் அழகான வீட்டில் வசிக்கும் ராமனை அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அவர் குப்பைகளை ராமனின் வாயிற்கதவில் வைத்து விட்டு மேலும் சில மோசமான செயல்களைச் செய்தார்.

good-to-forgive-picture-2ஒரு நாள்  காலை,  ராமன் எழுந்து தாழ்வாரத்திற்கு வந்து பார்த்த போது குப்பை போடப்பட்ட வாளி ஒன்றைப் பார்த்தார். நல்ல மன நிலையில் இருந்தார். அவர் அந்தக் குப்பையைக் கீழே கொட்டிவிட்டு அதை நன்றாகச் சுத்தம் செய்து, அதில் பெரிய, நன்றாக பழுத்த ஆப்பிள் பழங்களை நிரப்பி ரவியின் வீட்டிற்ககுச் சென்றார். வீட்டின் கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு ரவி வந்து கதவைத் திறந்தார். ராமன் நிற்பதைக் கண்டு மனதிற்குள் ஒரு சந்தோஷம்; கடைசியாக அவரை வரவழைத்து விட்டேன் என்று எண்ணினார்.

ராமன் தன்னோடு சண்டை போடுவார் என்று எதிர் பார்த்தார்; ஆனால், அவர் வாளி நிறையப் பழங்களை அவரிடம் கொடுத்து, “என்னுடைய தோட்டத்தில் விளைந்தது. இனிப்பாக இருக்கும். சாப்பிடுங்கள்” என்றார். குற்ற உணர்ச்சியோடு இருந்த ரவி மனம்நெகிழ்ந்து “தயவு செய்து மன்னியுங்கள். இனி தவறாக நடந்து கொள்ள மாட்டேன்” என்றார்.

நீதி:

தன்னுடைய நல்ல நடத்தையை ஒருவன் எதற்காகவும் மாற்றிக் கொள்ள கூடாது. அது நம்மை உயர்ந்த மனிதனாக மாற்றும். மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் அன்பும், உறவுகளும் தானாகத் தேடிவரும். ஒருவர் நமக்கு தீங்கு நினைத்தாலும் நாம் நன்மையே செய்வோம். இதை தான் வள்ளுவர்,

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்  என்று கூறினார்.

(நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்காமல்,  பதிலுக்கு அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்ய வேண்டும்)

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

நற்பண்புகளை பயிரிடுவது

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – உதவி, சரியான மனப்பான்மை, கருணை 

plaanting-potatoesஎன் இளமைப் பருவத்தில், எங்கள் பழைய வீட்டைச் சுற்றிப் பல தோட்டங்கள் இருந்தன. அதில் பெரிய தோட்டம் ஒன்றில், உருளைக்கிழங்கு செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தோம்.  அந்த இனிமையான நாட்கள் இன்றும் ஞாபகத்திற்கு வருகின்றன. குடும்பத்தில் உள்ள அனைவரும் உதவி புரிந்தனர். என் தந்தை நிலத்தை பயிரிடுவதற்குத் தயார் செய்த பிறகு, என் தாய், சகோதரர்கள் மற்றும் நானும் உதவி செய்யச் செல்வோம். சிறிய உருளைக்கிழங்குகளை வரிசையாக மண்ணில் நடுவது என் வேலை. என் தாய் அதற்கு வேண்டிய உரத்தைத் தூவுவார். என் சகோதரர்கள் விதைத்த உருளைக்கிழங்கைப் புது மண்ணால் மூட வேண்டும்.

அதற்குப் பிறகு, நான் விளையாடும் பொழுதெல்லாம், தோட்டத்தை ஒரு பார்வையிட்டு,  நிலத்திற்கு கீழே என்ன நடக்கின்றது என்று யூகித்துக் கொண்டே இருப்பேன். அறுவடை நேரம், என் தந்தையார் பெரிய உருளைக்கிழங்குகளை நிலத்திலிருந்து எடுக்கும் பொழுது ஆச்சரியப் படுவேன். அதற்குப் பிறகு அம்மா தினந்தோறும் ருசியான, பலவிதமான உருளைக்கிழங்கு வகைகளைச் சமைப்பார்.

நீதி

என் இனிமையான இளமைப் பருவத்தை நினைக்கும் போது, நாம் வாழ்க்கையில் விதைத்த சிறு எண்ணங்கள் மற்றவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்று நினைப்பதுண்டு. ஒவ்வொரு நாளும், நாம் பேசும் அன்பான வார்த்தைகளும், நடைமுறையில் செய்யும் அழகான செயல்களும் பல இனிமையான விஷயங்களாக மாறுகின்றன. தற்சமயம் தெரியாவிட்டாலும். பல வருடங்களுக்குப் பிறகு அதன் பலன் தெரியும். சரியான மனப்பான்மையுடன் செயற்பட்டு,  நல்ல எண்ணங்கள் மற்றும் கருணை உள்ளத்தோடு  வாழ்க்கையை வாழ்ந்தால், பல அதிசயங்களைக் கடவுள் செயல்படுத்திக் காண்பிப்பார். வாழ்க்கையில் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது தான், மிகவும் முக்கியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com