Archive | October 2018

மனதின் பிரதிபலிப்பு

நீதி: நிம்மதி

உபநீதி: பொறுமை, அன்பு

reflection of the mind - correct pictureஒரு முறை, பிரபலமான அரசு அதிகாரி ஒருவன், வயதில் சற்று பெரியவராக இருந்த ஒரு சிறந்த துறவியை சந்தித்தான். அவனுக்கு இருந்த அகம்பாவத்தினால், தான் துறவியை விட உயர்ந்தவன் என நிரூபிக்க முயற்சித்தான். அவர்களுக்கு இடையே பேச்சு தொடர்ந்த போது அவன், “வயதான துறவியே, உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றும், நீ கூறிய விஷயங்கள் என்னவென்றும் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

அதற்கு துறவி, “என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்ற கவலை எனக்கு இல்லை. நீ என்னைப் பற்றி எந்த விதமான அபிப்பிராயம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

அரசு அதிகாரி வெறுப்புடன், “நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்கிறேன். என் கண்களுக்கு நீ குப்பை போல் தெரிகின்றாய்!” என்றான்.

துறவி புன்சிரிப்புடன் மெளனமாக இருந்தார்.

அவமானப் படுத்திய பிறகும், துறவி மெளனமாக இருந்ததைப் பார்த்து, அரசு அதிகாரி, “என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று ஆவலுடன் கேட்டான்.

அதற்கு துறவி, “என் கண்களுக்கு, நீ புத்தரை போல இருக்கிறாய்” என்றார்.

இதைக் கேட்டவுடன், பேரின்பத்துடன் அரசு அதிகாரி வீட்டிற்குச் சென்று மனைவியிடம் இந்த நிகழ்வை கூறினான்.

அதற்கு அவன் மனைவி, “தற்பெருமை கொண்ட பைத்தியமே! ஒருவனின் மனதில் குப்பைக்கு மட்டுமே இடம் வைத்திருப்பவன் மற்றவர்கள் எல்லோரையும் அப்படியே எண்ணுகிறான். அந்த வயதான துறவியின் மனது புத்தரைப் போல இருந்ததால், எல்லோரிலும் புத்தரையே பார்க்கிறார்!” என்றாள்.

நீதி:

ஒருவனின் எண்ணங்கள் அவன் செய்யும் செயல்களில் பிரதிபலிக்கின்றன.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

Advertisements

அழிவில்லாத ஆத்மாவைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் கருத்து

நீதி: உண்மை / நேர்மை

உபநீதி: நியாயம் / சமத்துவம் / பகுத்தறிவு

பகவத் கீதையின் முதல் அத்தியாயம், சிறந்த போர் வீரனான அர்ஜுனன் தன் உறவினர்களுடன் போராடுவதற்கு தயங்குவதை விவரிக்கிறது. அர்ஜுனன், பாண்டவ சேனையை வழி நடத்தி, கௌரவர்களுடன் போரிட தயாராக இருந்தான். கௌரவர்களின் படையில் அவனது ஒன்று விட்ட சகோதரர்கள், சித்தப்பா மற்றும் இதர உறவினர்கள்,  ஆசிரியர்கள்,  குரு, மதிப்பிற்குரிய பெரியோர்கள், அரசர்கள் மற்றும் அவனது நெருங்கிய நண்பர் கூட்டம் இருந்தனர். பாண்டவர்கள் படையில் அர்ஜுனன், அவனது சொந்த சகோதரர்கள், சில ஒன்று விட்ட சகோதரர்கள், மாமா மற்றும் சில அரசர்கள் இருந்தனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு தேரோட்டியாக இருந்து, தகுந்த ஆதரவு கொடுத்து வழி நடத்தினார். குருக்ஷேத்திர போர்க்களத்தில் யுத்தம் தொடங்க இருந்தது.

தன்னை எதிர்த்து யுத்தம் புரிபவர்களை ஆய்வு செய்வதற்காக, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ரதத்தை எதிரும் புதிருமாக இருக்கும் படைகளுக்கு மத்தியில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறான். அங்கிருந்த பல முகங்களை அடையாளம் கண்டு கொண்டதும், அர்ஜுனனது உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன; சோகத்தில் மூழ்கிய அர்ஜுனன் உணர்ச்சிவசப்பட்டு குழப்பமடைந்தான்.

அவன் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் போர் புரியும் எண்ணத்தை நிராகரித்து, அவர்கள் தன்னை கொல்ல விரும்பினாலும், தான் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்றான். அர்ஜுனன், போரில் வென்று ராஜ்ஜியத்தின் அரச பதவியைப் பெறுவதால் எந்த ஒரு மதிப்பும் கிடைக்கப் போவதில்லை; இவ்வாறு பெற்ற வெற்றியினால் சொர்க்கமே கிடைத்தாலும் அது அவசியமில்லை என்றான். அர்ஜுனன் குழப்பமடைந்து, தைரியத்தை இழந்து, தான் போர் புரியப் போவதில்லை எனக் கூறி போர்க் கருவிகளை கீழே வைத்தான்.

இவ்வாறு கூறிய அர்ஜுனன், தன் வில்லையும் அம்புகளையும் ரதத்தில், கீழே வைத்து விட்டு மன நிலையை இழந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர், “இது போன்ற ஆபத்தான நேரத்தில் போர்க் கருவிகளை நிராகரிப்பது பொருத்தமாக இல்லை” என்று அர்ஜுனனிடம் கூறினார்; மேலும் இது அவனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தி, அவனுக்கும் அவனது பரம்பரைக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, அவனை எழுந்து போர் புரியும்படிக் கூறுகிறார். தான் போரில் வெற்றியே பெறுவதாக இருந்தாலும், தன் கைகளால் ஏற்படும் உயிர் சேதத்தை அவன் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. மன நிலை இழந்த அர்ஜுனன் மேலும் குழம்பினான்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘ஜனன மரண’த்தைப் பற்றிய போதனை, பகவத் கீதையின் தத்துவத்தின் முக்கியக் கூறுகள் மற்றும் தன் போதனைகளின் மையக் கருத்தையும் கூற ஆரம்பித்தார். உண்மையான அறிவு / மெய்யறிவு என்பதைப் பற்றியும், ஆத்மாவின் தன்மையையும், தவிர்க்க முடியாதவற்றிற்கு வருந்துவது வீண் என்றும் அவர் கூறினார். அவர் அறிவு மற்றும் அனுபவத்தின் வித்தியாசத்தையும், தர்மம் மற்றும் கர்ம யோகத்தின் தத்துவத்தை ஒருவர் கடைப்பிடிப்பதின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அர்ஜுனனுக்கு, பகுத்தறிவை ஒழுங்காக பயன்படுத்தவும், அவனது ஆன்மீக குழப்பத்திலிருந்து வெளிவரும் வழியையும் அவர் கற்றுக் கொடுத்தார். இதை அர்ஜுனன் பரிவு என்று தவறாக எண்ணினான்.

அர்ஜுனனுடைய வார்த்தைகள் அறிவுள்ளது போல் தோன்றினாலும், உண்மையான அறிவாளிகள், இருப்பவர்களுக்கோ, இறந்தவர்களுக்கோ சோகப்படுவதில்லை. உண்மை மற்றும் உண்மை இல்லாததை பகுத்தறிந்து கொள்வதில் மெய்யறிவு இருக்கிறது. வாழ்க்கை தொடர்ச்சியானது – ஆன்மா நிலையானதாக இருப்பதால், அதற்கு அழிவு என்றும் கிடையாது. மனிதர்கள் வாழ்க்கை சுழற்சியில் பிறக்கிறார்கள், வயது முதிர்ந்த பின் மரணம் அடைந்து, வேறு உடலில் பிறவி எடுக்கிறார்கள். இந்தத் தத்துவத்தை புரிந்து கொண்ட மெய்ஞானி இச்சுழலால் ஏமாறுவதில்லை. இரட்டைத் தன்மையால் (துவைதம்) அமைக்கப்பட்ட இவ்வுலகில், மனித வாழ்க்கை எதிர்பதங்களால் விவரிக்கப் படுகிறது; இன்பமும் துன்பமும், உஷ்ணமும் தண்மையும் – இவை நிலையானதல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். உண்மையானதை மறைக்க முடியாது; உண்மையல்லாதது நிலையாக இருக்க முடியாது என்றும் கூறுகிறார். அழிவற்றது ஒவ்வொருவரிலும், ஒவ்வொரு பொருளிலும் பரவி இருக்கிறது. “உண்மையான நான்” அல்லது “ஆத்மா” எல்லா உடல்களிலும் இருக்கும்; ஆனால் உடல் இறக்கும் போது ஆத்மா இறப்பதில்லை. உடல் மாற்றங்களை, ஸ்ரீ கிருஷ்ணர் உடை மாற்றுவதுடன் ஒப்பிடுகிறார். அறிவாளிகள் மரணம் என்ற மாயையால் ஏமாற்றப் படுவதில்லை.

ஆத்மாவிற்கு ஜனனம் மரணம் என்பதே கிடையாது. இது ஆதி காலத்திலிருந்து நிலைத்து நிற்கும் ஒன்றாகும். உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை.

நீதி:

பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போர்க்களம். இது உடலால் செய்யும் போர் அல்ல; வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் சவால்களாகும். மனிதர்கள் தங்களின் ஆக்கப் பூர்வ ஆசைகள் மற்றும் லட்சியங்கள், கடமைகள், சுய வாழ்க்கை, குடும்பம், சமூகம் இவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர். நம் எதிரே சில எதிர்மறை குணாதிசயங்கள் கொண்டவர்கள் மற்றும் ஆசைகளின் தூண்டுதல்கள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளால் நாம் துக்க சாகரத்தில் மூழ்குகிறோம்.

நாம் மனம் குழம்பி, முடிவு எடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறோம். நமது விருப்பங்கள், நாம் விரும்பும் மற்றவர்களின் விருப்பங்கள், கடமைகள், ஆக்கப் பூர்வமான வெளிப்பாடுகள், நமது செயல்கள் மற்றும் நமக்கு பிரச்சனைகளைத் தரும் மற்றவரது செயல்கள் – இவற்றால் நாம் மனம் குழம்பி, முடிவு ஒன்றும் எடுக்க முடியாமல் திகைத்து, தவிக்கிறோம். இத்தகைய தருணங்களில் பிறரது உதவியை எதிர் பார்க்கிறோம். அர்ஜுனனைப் போல, கடவுளின் அருள் இருந்தால், ஒரு மகான் நமக்கு குருவாக வந்து வழிகாட்டி, உண்மை மற்றும் உண்மையல்லாததின் வித்தியாசத்தை நமக்கு புரிய வைக்கிறார்.

பற்று மற்றும் ஆணவம் – இவை இரண்டும் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் உணர்ச்சிகளின் மூல காரணங்கள் ஆகும். இவை நம் புத்தியை மறைக்கின்றன. நம்மால் தெளிவாக யோசனை செய்ய முடிவதில்லை. நாமே மக்களைப் பற்றி ஒரு முடிவெடுத்து, சிலரை நண்பர்களாகவும், சிலரை எதிரிகளாகவும் எண்ணுகிறோம். நாம் சில எதிர்பார்ப்புகளுடன் சில எண்ணங்களை நம் மனதில் நினைக்கிறோம். இதுவே நமக்கு துக்கத்தை அளிக்கிறது. நாம் ஏமாந்து, அதை வாழ்க்கைப் பாதையில் தொடருகிறோம். நம்மை இந்த விதமான தூக்கத்திலிருந்து எழுப்ப, ஸ்ரீ சங்கரர் உலக குறிக்கோள்கள் மற்றும் உறவுகளுக்காக நம் சக்தியை வீணடிக்க வேண்டாம் என்று கூறுகிறார். ஒரு முறை நமது குரு ‘எல்லாம் ஒன்றே’ என்ற அறிவை வழங்கிய பின், நாம் அந்த திசையை நோக்கி நம் பணிகளை செய்ய வேண்டும். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இதை சிறிது சிறிதாகப் புரிந்து கொண்டு, உணர்ந்து, கடைப்பிடித்தால், ஒரு நாள் நம் பிறந்த பயனை அறிந்து கொள்வோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அரசர் ஜனகரும் அஷ்ட வக்கிரரும்

king janaka and astavakkirar.நீதி: நன் நடத்தை

உபநீதி: குருவிடம் மரியாதை / தன்னடக்கம்

ஒரு முறை, அறிவில் தெளிந்தவரான ராஜ ரிஷி ஜனகர், ஞானி அஷ்டவக்கிரரின் பாதங்களில் பணிந்து வணங்கினார். அரசர் அஷ்டவக்கிரரிடம், “எனது ராஜ்ஜியத்தையும், அரண்மனையையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? இவற்றால் இனி எனக்கு எந்தப் பயனும் இல்லை. நான் உங்கள் காலடிகளில் அமர விரும்புகிறேன். தயவு செய்து என்னை, காட்டில் உள்ள உங்கள் ஆசிரமத்தில் இருக்க அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்.

அதற்கு அஷ்டவக்கிரர், “நீ இப்போது உள்ள நிலையில், உன் விருப்பு, வெறுப்புகளைப் பொறுத்து உன் வாழ்க்கை இல்லை. உன் வாழ்வு உன் தேவைகளைப் பொறுத்து இல்லை; ஏனெனில் உனக்கு உண்மையாக எதுவுமே தேவையில்லை. அறிவில் தெளிந்த ஒருவன் அரசனாக இருக்கும் பாக்கியம், உனது மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நீ அவர்களுக்கு அரசனாக இருக்க வேண்டும்” என்று பதிலுரைத்தார்.

மனமின்றி, தயக்கத்துடன் ஜனகர் தன் அரண்மனையில் இருந்து, ராஜ்ஜியத்தை புத்திசாலித்தனத்துடன் ஆண்டு வந்தார். ஜனகர் அவரது நாட்டு மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்; ஏனெனில், அவர் அறிவில் தெளிந்த குருவாக இருந்த போதிலும், ஒரு அரசராக பணி செய்து வந்தார். இந்திய தேசத்தில் பல முனிவர்களும், மஹான்களும் ஆரம்பத்தில் அரசர்களாகவும், பேரரசர்களாகவும் இருந்து,  தன் விருப்பத்துடன் மனமார அதை துறந்துவிட்டு, மிகுந்த கண்ணியத்துடன் துறவிகளாக வாழ்ந்தவர்கள். உதாரணத்திற்கு, கௌதம புத்தர், மகா வீரர், பாஹுபலி போன்ற பலரை நாம் எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் அறிவில் தெளிந்த அரசராக இருப்பது மிக்க அரிது. ஜனகர் அரசராக இருந்த போதிலும், அரசப் பொறுப்புகளிலிருந்து சிறிது அவகாசம் கிடைத்த போதெல்லாம், ஞானி அஷ்டவக்கிரரின் ஆசிரமத்திற்கு சென்று வந்தார்.

ஆசிரமத்தில் சில துறவிகள் இருந்தனர். அவர்களுக்கு அஷ்டவக்கிரர் கற்பித்து வந்தார். ஜனகர் ஆசிரமத்திற்கு வந்த போதெல்லாம், அஷ்டவக்கிரர் அவருக்கு தனி மரியாதை செலுத்தி அவருடன் உரையாடினார். இதனால் துறவிகள் ஜனகர் மீது சீற்றம் கொண்டனர். அஷ்டவக்கிரர் அரசரைக் கண்டவுடன் இருவரின் முகங்களும் பிரகாசம் அடைந்தன. துறவிகளைக் காணும் போது, ஞானியின் முகத்தில் அதே பிரகாசம் இருந்ததில்லை.

துறவிகள் ஒருவருக்கொருவர் ரகசியமான குரலில், “நம் குரு இது போன்ற ஒரு மனிதனிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா என்ன? நம் குரு ஊழலுக்கு ஆட்பட்டதைப் போல் தெரிகிறது. இந்த மனிதன் ஒரு அரசன்; அரண்மனையில் வசிக்கிறான். இவனுக்கு பல மனைவிகளும், குழந்தைகளும் இருக்கின்றனர்; ஏராளமான செல்வமும் இருக்கிறது. நடக்கும் நடையைப் பாருங்கள்! ஒரு அரசனைப் போல் நடக்கிறான்; அணிந்திருக்கும் உடைகளையும், ஆபரணங்களையும் பாருங்கள். இவனிடம் எந்த அளவு ஆன்மிகம் உள்ளது என, நம் குரு அவனிடம் கவனம் செலுத்துகிறார்? நாம் எல்லோரும் குருவிடம் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பூர்ணமாக நம்மை அர்ப்பணித்துள்ளோம். இங்கு நாம் துறவிகளாக வந்துள்ளோம்; ஆனால், குரு நம்மை அலட்சியம் செய்கிறார்” என்று  பேசிக் கொண்டனர்.

துறவிகளின் மனதில் இத்தகைய எண்ணங்கள் வளர்வதை அஷ்டவக்கிரர் புரிந்து கொண்டார். ஒரு நாள், அவர் முன்னறையில் துறவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அரசர் ஜனகரும் அங்கு இருந்தார்.

சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஜனகரின் நாட்டிலிருந்து ஒரு படைவீரன் அங்கு வந்தான். அஷ்டவக்கிரரை வணங்காமல், அரசரை மட்டும் வணங்கி விட்டு அவன், “அரசே, அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு எல்லாம் எரிந்து கொண்டு குளறுபடியாக இருக்கிறது” என்றான்.

ஜனகர் எழுந்து கொண்டு, படை வீரனிடம் கோபமடைந்து, “இங்கிருந்து சென்று விடு. சத்சங்கத்தில் ஏன் குழப்பம் ஏற்படுத்துகிறாய்? உனக்கு என்ன தைரியம்? என் குருவை வணங்காமல், என்னை மட்டும் நீ எவ்வாறு வணங்கலாம்? முதலில் இங்கிருந்து சென்று விடு” என்று கூறினார். படை வீரன் அந்த அறையை விட்டு உடனடியாக சென்று விட்டான். ஜனகர் அமர்ந்ததும், குரு தன் சொற்பொழிவைத் தொடர்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, அஷ்டவக்கிரர் மற்றொரு நிகழ்வை ஏற்படுத்தினார். இந்த முறையும், அனைவரும் முன்னறையில் அமர்ந்து, குருவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன் இடையில், ஆசிரமத்த்தின் வேலையாள் ஒருவன் முன்னறைக்கு ஓடி வந்து, “குரங்குகள் அங்கு கொடியில் காயப் போட்டிருந்த உங்கள் ஆடைகளை எடுத்துச் சென்று விட்டன. அந்த ஆடைகளை அவை நாசப் படுத்திக் கொண்டிருக்கின்றன” என்று கூறினான்.

துறவிகள் அனைவரும் உடனே ஓடிச் சென்று, தன் ஆடைகளைக் காப்பாற்ற முனைந்தனர். குரங்குகள் தன் ஆடைகளை நாசப் படுத்துவதை அவர்கள் விரும்ப வில்லை. அங்கு சென்று அவர்கள் கண்டது யாதெனில்,  குரங்குகள் ஒன்றும் இல்லாமல், ஆடைகள் கொடியில் உலர்ந்து கொண்டிருந்தன. நடந்தவற்றை அவர்கள் புரிந்து கொண்டனர். அவமானத்தால் தலை குனிந்தவாறு, திரும்பி வந்து அமர்ந்தனர்.

சொற்பொழிவின் ஒரு பகுதியாக குரு அஷ்டவக்கிரர் இவ்வாறு கூறினார் – அங்கு பாருங்கள்! இந்த மனிதர் ஒரு அரசர். சில நாட்களுக்கு முன்பு அவரது மாளிகை எரிந்து போனது. அவரது ராஜ்ஜியமே குழப்பமடைந்திருந்தது. அவரது செல்வம் நாசமாகிப் போனது; ஆனால் அவரது கவலை எல்லாம், படை வீரன் சத்சங்கத்தில் தலையீடு செய்ததைப் பற்றி இருந்தது. நீங்களோ துறவிகள். உங்களிடம் இருப்பது நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் மட்டுமே. மாளிகையோ, மனைவியோ, குழந்தைகளோ எதுவும் உங்களுக்கு இல்லை. நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல், அந்த ஆடைகளுக்காக நீங்கள் ஓடினீர்கள். எங்கே உங்கள் துறவு? இந்த மனிதரே சரியான துறவி. அரசராக இருந்த போதிலும், அவர் ஒரு துறவி! நீங்கள் எல்லோரும் துறவிகளா? மற்றவர்கள் புறக்கணித்த பொருட்களை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்; ஆனால் உங்களில் துறவறம் இல்லை. இதுவே நீங்கள் இருக்கும் நிலை. அதுவே அவர் இருக்கும் நிலை!

நீதி:

ஒருவரது உள்ளார்ந்த முன்னேற்றத்திற்கும், வெளி உலகில் அவர் செய்யும் பணிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒருவர் தங்களின்  ஆன்மீக முன்னேற்றத்திற்காக என்ன செய்கிறார்களோ அதுவே முக்கியமானது. வெளி உலகில் நாம் சமூக நோகத்துடன் செயற்படுகிறோம்; நாம் இருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நாம் நடந்து கொள்கிறோம். இதற்கு சமுதாய சம்பந்தம் மட்டுமே உள்ளது; ஆன்மீக அல்லது புறநிலை கோட்பாடோடு சம்பந்தம் எதுவும் கிடையாது. நமக்குள் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது மட்டுமே அத்தியாவசியமாகும்.

நாம் ஒவ்வொருவரும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பல வேடங்களை அணிந்து கொள்கிறோம் – மேலோட்டமான ‘நான்’, தேவையான ‘நான்’, சமுதாய ‘நான்’ மற்றும் ஆன்மீக ‘நான்’. பெரும்பாலான சமயங்களில், உலகளாவிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய உள்ளார்ந்த நோக்கத்தை விட்டு விடுகிறோம். ஆன்மீகப் பாதையில் செல்பவனுக்கு, உண்மையில் “நான் யார்” என்று புரிந்து கொள்தே நோக்கமாக இருக்க வேண்டும்.

அந்த புரிதலை அடைந்து விட்டால், உலகத்தில் எல்லோரையும் சமமாக பார்க்கும் தன்மை ஏற்படுவதால், வித்தியாசங்களும் இருக்காது; குழப்பங்களும் ஏற்படாது. உதாரணத்திற்கு, உடலில் கண்கள், செவிகள், மூக்கு, கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் வெவ்வேறு பணிகளை செய்தாலும், இவை இணைந்து ஒரு உடலையே குறிக்கின்றன; மனிதன் ஒருவனே.

இது மின்சாரத்தின் தன்மை, ஒரே உட்பொருள். அதை நாம் சக்தி என்று குறிப்பிடுகிறோம்; ஆனால், அதுவே குமிழ் விளக்குகளில், மின் விசிறிகளில், குளிர் சாதனப் பெட்டிகளில் வெவ்வேறு பொருட்களில் வெளிப்படுகிறது. அவற்றின் ஆதாரம் மின்சார சக்தியே. நம் அனைவரிலும் உள்ள ஆத்மா ஒன்று என்பதே உண்மை.

பார்ப்பதற்கு தோற்றத்திலும், வடிவமைப்பிலும் இரட்டைத்தனம் போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் இத்தகைய இரட்டைத்தனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டால், ஒருவர் மாயையில் கட்டாயமாக சிக்கிக் கொள்வார்; ஆனால் எல்லோரையும் ஒன்றாக நினைத்தால் விஷ்ணுத்துவத்தின் உண்மையை காண முடியும்.

எனவே, ஒருவன் அறிவாளியாக இருக்க வேண்டுமென்றால், சுய நினைவுடன், எல்லோரும் சமம் என்பதையும், எந்த சூழ்நிலையிலும் மனக்குழப்பம் அடையாமல் எதிர் கொள்வதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு சாதனையும், பயிற்சியும் அதிக அளவில் தேவைப்படும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

 

 

கர்மா என்றால் என்ன?

நீதி – அஹிம்சை  

உபநீதி – தெளிவான மனப்பான்மை, எண்ணங்கள் / வார்த்தைகள் / செயல்களில் ஒருங்கிணைப்பு

WHAT IS KARMA - PICTURE 1புத்தர் தன் சிஷ்யர்களுடன் அமர்ந்திருந்தார். அதில் ஒருவர், “கர்மா என்றால் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு புத்தர், “நான் ஒரு கதை சொல்கிறேன்….” என்று ஆரம்பித்தார்.

ராஜா ஒருவர் தன் யானை மேல் சவாரி செய்து, WHAT IS KARMA - PICTURE 2ராஜ்ஜியத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, ராஜா அங்கிருந்த சந்தையில், ஒரு கடைக்கு முன் நிறுத்தி அமைச்சரிடம், “ஏன் என்று தெரியவில்லை. இந்தக் கடையின் சொந்தக்காரரை தூக்கில் தொங்க விட வேண்டும் போல தோன்றுகிறது” என்றார். இதைக் கேட்ட அமைச்சர் அதிர்ச்சியுற்றார். ராஜாவை காரணம் கேட்பதற்கு முன், அவ்விடத்திலிருந்து ராஜா நகர்ந்து விட்டார்.

what is karma - picture 3அடுத்த நாள், அமைச்சர் அங்கேயே வசிக்கும் உள்ளூர் மனிதர் போல, அந்த கடைக்காரனை பார்க்கச் சென்றார். தற்செயலாக கேட்பது போல, வியாபாரம் எப்படி இருக்கிறது என்று கடைக்காரரை விசாரித்துக் கொண்டிருந்தார். சந்தனக் கட்டை வியாபாரம் செய்து கொண்டிருந்த அவன், கடைக்கு வருபவர்கள் யாருமே இல்லை, வந்தாலும் சந்தனக் கட்டையை முகர்ந்து விட்டு செல்கின்றனர் என்று கூறிக் கொண்டிருந்தான். மேலும், சந்தனக் கட்டையின் தரம் நன்றாக இருந்தாலும், ஒருவரும் அவனிடமிருந்து வாங்குவதில்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டிருந்தான். ராஜா கூடிய விரைவில் இறந்து விட்டால், சந்தனக் கட்டை வியாபாரம் பிரமாதமாக இருக்கும்; ஏனெனில், அவனைத் தவிர அங்கு சந்தனக் கட்டை வியாபாரம் செய்பவர்கள் யாருமே இல்லை என்றும், ராஜாவின் மரணம் அவன் செய்யும் தொழிலுக்கு லாபம் அளிக்கும் என்று தன் எண்ணங்களை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டான்.

அப்போது தான், ராஜா ஏன் இவனைப் பற்றி அப்படி பேசினார் என்பது அமைச்சருக்கு தெளிவாக புரிந்தது. அவன் கடை வாசலுக்கு முன் நின்ற போது, ஏதோ எதிர்மறையான எண்ணங்கள் வியாபாரிக்கு இருந்ததால், ராஜாவிற்கும் ஏதோ ஒரு விதமான தகாத எண்ணம் தோன்றியது.

தெளிவான எண்ணம் கொண்ட அமைச்சர் இந்த விஷயத்தைப் பற்றி யோசித்தார். அமைச்சர், தான் யார் என்று சொல்லிக் கொள்ளாமல், வியாபாரியிடமிருந்து சந்தனக் கட்டைகளை வாங்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். உடனடியாக வியாபாரி, அமைச்சர் கேட்ட சந்தனக் கட்டைகளை ஒரு காகிதத்தில் சுற்றிக் கொடுத்தான்.

what is karma - picture 4அமைச்சர் அரண்மனைக்கு திரும்பி வந்த பிறகு, நேரடியாக ராஜாவிடம் சென்று, சந்தனக் கட்டை விற்கும் வியாபாரி, ராஜாவிற்கு ஒரு பரிசு கொடுத்திருப்பதாகக் கூறினார். ராஜா ஆச்சரியப் பட்டார். பரிசுப் பொட்டலத்தை திறந்த போது, சந்தனக் கட்டையும், அதன் நறுமணமும் ராஜாவிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. பேரின்பத்துடன், சந்தன வியாபாரிக்கு சில தங்க நாணயங்களை ராஜா அனுப்பினார். தவறாக வியாபாரியைப் பற்றி நினைத்தோமே என்று ராஜா மிகவும் வருத்தப் பட்டார்.

வியாபாரி, தங்க நாணயங்களை வாங்கிக் கொண்ட பிறகு, வறுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ராஜாவை நினைத்து அதிர்ச்சியுற்றான். சொந்த இலக்கை அடைவதற்கு, எதிர்மறையான எண்ணங்களோடு ராஜாவை தவறாக நினைத்தோமே என்று வியாபாரி மனம் வருந்தினான்.

மற்றவர்களைப் பற்றி ஒரு சிறந்த மற்றும் பரிவான எண்ணம் இருந்தால், அந்த ஆக்கப் பூர்வமான எண்ணம் நமக்கு நல்ல விதத்தில் வந்து சேரும். தீய எண்ணங்களை மனதில் வளர்த்தால், பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த எண்ணங்கள் நம்மிடமே வந்து சேரும்.

“கர்மா என்றால் என்ன?” என்று புத்தர் கேட்டார்.

இதற்குப் பலர், “நம் வார்த்தைகள், நம் செயல்கள், நம் உணர்வுகள், நம் நடவடிக்கைகள்……..” என்றனர்.

புத்தர் தலையை அசைத்தவாறு, “உங்கள் எண்ணங்களே உங்கள் கர்மா!” என்று கூறினார்.

நீதி:

நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோமோ, அதை மறுபடியும் பெறுவோம். எல்லாமே எதிர் விளைவும், பிரதிபலிப்பும் தான். நல்ல எண்ணங்களும், நற்செயல்களும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

மாணவர்களுக்காக – எளிமையான கதைகள் மற்றும் அனுபவங்கள், தத்துவக் கோட்பாடுகளை சிறப்பாக விவரித்து, சில முக்கியமான கருத்துகளை மக்களிடம் போய் சேர்க்கின்றன; அதனால், நம் எண்ணங்கள், செயல்கள், மற்றும் நடவடிக்கைகளை சரிவர யோசித்து தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பும், உரிமையும் கிடைக்கிறது. சிறு வயதிலிருந்தே, இந்த நற்பண்புகள் மற்றும் கற்பித்தலை வளர்த்துக் கொண்டால், படிப்பு, வேலை மற்றும் வாழ்க்கையின் முக்கியமான காலக் கட்டத்தில் இவை உதவும். இவ்வகையான மனிதர்கள், சமநிலையை அடைந்து, உலகம் சார்ந்த மற்றும் தெய்வீக வாழ்க்கையை தெளிவான புரிதலோடு நடத்திச் செல்வார்கள்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com