Archive | June 2019

சகவாசம் மிகவும் முக்கியம்

நீதி – சரியான சிந்தனை

உபநீதி – பாகுபாடு / தேர்வுரிமை  

நாம் அறிவுள்ள மற்றும் விவேகமுள்ள மனிதர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். வாழ்க்கையில் பல சமயங்களில், நமக்கு சரிவு ஏற்படும் போது, யாரோ ஒருவரின் வழிகாட்டுதலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். நாம் எவரை நோக்கி செல்கிறோமோ, அவர் நமக்கு சரியான பாதையில் வழி நடத்த வேண்டும்.

மனித உடல் எப்போதாவது தளர்ச்சி அடைந்து விடும். நாம் விழும் போது, நமக்கு சரியான வழிகாட்டி தேவை. துரியோதனன் விழுந்த போது, அர்ஜுனனும் விழுந்தான். துரியோதனன் விழுந்த போது, சகுனி அவனுக்கு வழிகாட்டியாக இருந்தான்.

மன அழுத்தம் மற்றும் வேதனையுடன் நாம் இருக்கும் போது, யாருடன் பேசுவது என்று புரிவது இல்லை. குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஒருவனிடம் கேட்டால், அவன் குடிப்பது மட்டுமே தீர்வு என்பான். அவனுக்கு தெரிந்தது அது தான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலிருந்து இன்னும் சற்று சரிந்து கீழே விழுவோம். அதே சூழ்நிலையில், மன அழுத்தத்தை தியானத்தின் மூலம் வெற்றியடைந்த ஒருவன், தியானம் மட்டுமே தீர்வு என்பான். இருவருமே உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்; ஆனால், அவர்களுக்கு என்ன தெரியுமோ அதைத் தானே சொல்ல முடியும்.

நீ சகுனியாக இருந்தால், தீய விஷயங்களை சரியாக கையாளாமல், இன்னும் மோசமாக ஆகின்றாய். நீ கிருஷ்ணராக இருந்தால், அதே தீய விஷயங்களை சிறப்பாக சமாளித்து, நல்லவனாக மாறுகின்றாய்.

யாரை சார்ந்து இருக்கிறாய் என்பதைப் பொருத்து தான் நீ சரிவிலிருந்து சிறந்தவராக திகழப் போகிறாயா அல்லது இன்னும் மோசமாக ஆகப் போகிறாயா என்று தெரியும். யார் உன் வழிகாட்டி என்பது மிகவும் முக்கியம்.

நீதி:

பல சமயங்களில், நம் மனோபாவத்தில் சிதைவு ஏற்படும் போது, நமக்கு வாழ்க்கையில் ஒரு சரிவு ஏற்படலாம். நமக்கு எப்போது அந்த சரிவு ஏற்படும் என்பதை விட, அச்சமயத்தில் நாம் யாரை நோக்கி செல்வோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி! அந்த சரிவிலிருந்து நம்மைப் காப்பாற்றி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒருவரிடமா அல்லது இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் ஒருவனிடமா?

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கடவுளா அல்லது அவரது நாமமா – எது சிறந்தது?

நீதி – நம்பிக்கை

உபநீதி – நாமஸ்மரணம்

ஒரு சமயம், காட்டிலிருந்து ராஜ்ஜியத்திற்கு ஸ்ரீ ராமர் திரும்பும் பொழுது, சில ரிஷி முனிவர்கள் கடவுளுக்கு அதிக மகிமை இருக்கிறதா அல்லது அவரது நாமத்திற்கா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். பல அபிப்பிராயங்கள் தெரிவிக்கப் பட்டன; ஆனால், சரியான முடிவுக்கு வர முடியாததால், அவர்கள் நாரதரைக் கேட்க, அவர் பதில் கொடுப்பதற்கு சில நாட்கள் அவகாசம் வேண்டும் என அவர்களை கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

நாரதர் இந்த பிரச்சனையைத் தீர்க்க ஹனுமானிடம் செல்வது தான் சரியான முடிவு என நினைத்தார். இந்த பணியை முடித்துக் கொடுக்க ஹனுமான் ஒத்துக் கொண்டார்.

நாரதர் ஹனுமானிடம், “ராமரின் குரு விஸ்வாமித்திரரை கோபப் படுத்துமாறு ஏதாவது குறும்பு செய்து, அதனால் ராமர் உங்களை தண்டிக்கும் நிலைமையை ஏற்படுத்துங்கள்; மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஹனுமான் உடனடியாக தன்னை அப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். எதிர்பார்த்த மாதிரியே, ஹனுமானைக் கண்டு கோபப்பட்ட விஸ்வாமித்திரர் ராமரிடம், “நகரத்திலுள்ள மக்கள் மற்றும் அனைத்து ரிஷிகளும் பார்க்கும்படி, உன் சக்தி வாய்ந்த அம்புகளை ஹனுமானின் மீது எய்ய வேண்டும்; தன் குருவை துன்புறுத்துகின்ற எவராக இருந்தாலும் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார்.

தனக்காக எச்சமயமும் சேவை செய்கின்ற ஹனுமானின் நடவடிக்கையைப் பார்த்து ராமர் ஆச்சரியப் பட்டார்; ஆனால், தன் குருவின் மேல் இருக்கும் நம்பிக்கை மற்றும் கீழ்படியும் குணத்தை மனதில் நிறுத்திக் கொண்டு, குரு கூறிய அறிவுரையைக் கேட்டு, ராமர் மன வேதனையோடு ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் சென்றார். அதே சமயம் நாரதர், ராமர் அம்புகளை ஹனுமான் மீது எய்யும் போது, ராமரின் நாமத்தை நாமஸ்மரணம் செய்யுமாறு ஹனுமானிடம் கூறினார்.

அடுத்த நாள், ரிஷிகளும் மக்களும் ஹனுமானுக்கு கொடுக்க இருக்கும் தண்டனையைப் பார்க்க குவிந்ததனர். ஸ்ரீ ராமர் மன வேதனையோடு முதல் குறியை ஹனுமான் மீது எய்தினார்; ஆனால், கடைசி நிமிடத்தில் அம்பு திசை மாறி ஹனுமானை தொடாமல் கீழே விழுந்தது.

ஹனுமான் கண்களை மூடிக் கொண்டு ஸ்ரீ ராமரின் பெயரை ஆழ்ந்த பக்தியுடன் நாமஸ்மரணம் செய்து கொண்டிருந்தார். ராமர் குறி வைத்த அனைத்து அம்புகளும் ஹனுமானை ஒன்றுமே செய்யாமல், வெவ்வேறு திசைகளில் சென்றன.

அனைத்து அம்புகளையும் எய்திய பின், ராமர் தன் குருவை பார்த்தார். விஸ்வாமித்திரர் குறி தவறாத தெய்வீக ஆயுதமான பிரம்மாஸ்த்திரத்தை எடுக்குமாறு உத்தரவிட்டார். அச்சமயத்தில் நாரதர் குறுக்கிட்டு குருவிடம், “எல்லோரையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, நீங்கள் மிகச் சிறந்த குருவாக திகழ்கிறீர்கள். ஹனுமானை மன்னித்தால், அன்பான மற்றும் கருணையுள்ள குருவிற்கு அடையாளமாக இருப்பீர்கள்” என்றார். நாரதர் கூறியதை கேட்டு குரு ஹனுமானை மன்னித்தார்.

இந்த நிகழ்வு நடந்த பிறகு, நாரதர் நதிக்கு அருகில் இருந்த அனைத்து ரிஷிகளிடமும் சென்றார். இந்த நிகழ்வின் மூலம் எல்லோருமே ஒருமனதாக கடவுளின் பெயரை நாமஸ்மரணம் செய்வதின் மகிமையை புரிந்து கொண்டனர்.

நீதி:

இந்தக் கதை நாமஸ்மரணத்தின் மகிமையை வலியுறுத்துகிறது. மேலும், ஹனுமான் ஸ்ரீ ராமரிடம் வைத்திருந்த பக்தியையும், கீழ்படியும் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. நாமும் முழு நம்பிக்கையுடன் நாமஸ்மரணம் செய்தால், ஹனுமானைப் போல காப்பாற்றப் படுவோம்.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

மன வேதனை – நமது விருப்பம்

நீதி – நன்னம்பிக்கை / சரியான மனப்பான்மை

உபநீதி – முதிர்வு / சமயோஜித புத்தி / தன்னம்பிக்கை

குடியரசுத்தலைவராக பதவியேற்ற ஆபிரகாம் லிங்கன், முதல் நாளன்று தன் தொடக்க உரையை அளிக்க இருக்கும் போது, பணக்கார ஆட்சி வகுப்பினர் ஒருவர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.

அவர், “லிங்கன் அவர்களே, உங்கள் தந்தை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காலணிகள் செய்து கொடுத்ததை மறந்து விடாதீர்கள்” என்று கூறினார். சபையில் இருந்த அனைவரும் ஆபிரகாம் லிங்கனை கேலி செய்ததாக நினைத்து சிரித்தனர்.

ஆனால் லிங்கன் போன்ற சிலர், உற்சாகமளிக்கின்ற மன திடத்தோடு திகழ்ந்தனர். அந்த மனிதரை உற்றுப்பார்த்த லிங்கன், “உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் தந்தை காலணிகள் செய்ததும் தெரியும், அது போல இங்கு இருக்கும் மற்ற பலருக்கும் என் தந்தை செய்திருக்கக் கூடும் என்றும் நான் அறிவேன்; ஏனெனில் அவர் போல சிறப்பாக காலணிகள் செய்ய வேறு எவரும் இல்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் செய்த வேலையை முழு மனதோடு செய்தார். அவர் செய்த வேலையில் ஏதாவது குறை உண்டா? எனக்கும் காலணிகள் செய்ய தெரியும்; ஏதாவது குறை இருந்தால், நான் உங்களுக்கு மற்றொரு ஜோடி காலணிகளை செய்து கொடுக்கலாம். எனக்குத் தெரிந்த வரை அவர் செய்த காலணிகள் குறித்து ஒரு புகாரும் வந்ததில்லை. அவர் ஒரு மேதை மற்றும் சிறந்த படைப்பாளர் கூட. என் தந்தையை பார்த்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன்” என விவரித்தார்.

சபையில் இருந்த அனைவரும் வாயடைந்து பார்த்தனர். ஆபிரகாம் லிங்கன் எவ்விதமான மனிதர் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. லிங்கன் காலணிகள் செய்வதை ஒரு கலை மற்றும் படைப்பாற்றலாக மாற்றினார். தந்தையின் மீது ஒரு புகார் கூட வராததால், லிங்கன் அவரைப் பார்த்து மிகவும் பெருமைப் பட்டார்.

நீதி:

மனது வேதனைப் படுவதும், படாததும் நம் கையில் மட்டுமே இருக்கிறது. பல மனிதர்கள் அவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களால் நம்மை புண்படுத்துகின்றனர். நமக்கு தன்னம்பிக்கையும், முதிர்ச்சியும் இருந்தால், எதிர்மறையான செயலுக்குப் பதிலாக நாம் ஒரு சூழ்நிலையை சரிவர கையாளுவோம். நாம் வேதனைப் பட வேண்டும் என்று நினைத்தாலே தவிர, எவருமே நம் உணர்வுகளை புண்படுத்த முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

தபால்காரனும் சிறுமியும்

நீதி – அன்பு

உபநீதி – கருணை, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது

தபால்காரன் ஒருவன், ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “தபால்” என்று அறிவித்தான்.

“இதோ வந்து கொண்டிருக்கிறேன்” என்று ஒரு குழந்தைத்தனமான குரல் உள்ளிருந்து கேட்டது; ஆனால் எவருமே வரவில்லை. மூன்று நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, தபால்காரன் கோபத்துடன், “தயவு செய்து சீக்கிரமாக வந்து தபாலை எடுத்துக் கொள்ளவும்” என்றான். அந்தக் குரல் மீண்டும், “தபால்காரரே, கதவுக்குக் கீழே தபாலை போடவும். நான் வந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியது.

அதற்கு தபால்காரன், “இது பதிவுத் தபாலாக இருப்பதால் ஒப்புகை வேண்டும்; அதோடு உங்கள் கையெழுத்தும் தேவை” என்றான். ஏறக்குறைய ஏழு நிமிடங்களுக்குப் பிறகு கதவு திறந்தது. கோபத்துடன் இருந்த தபால்காரன், உரக்கப் பேசி தன் எண்ணங்களை எடுத்துக் கூற வேண்டும் என்று நினைத்த போது, அங்கிருந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். கதவைத் திறந்த அந்த சிறுமிக்கு கால்களே இல்லாததால், முட்டிகளால் தவழ்ந்து வந்து தபாலை எடுக்க வந்தாள். வேதனைப்பட்ட தபால்காரன் தபாலை கொடுத்து விட்டுச் சென்றான். இவ்வாறு பல நாட்கள் சென்றன.

அதற்குப் பிறகு, தபால்காரன் இந்த சிறுமியின் வீட்டுக்கு எப்போது வந்தாலும், பொறுமையாகக் காத்திருந்து தபாலைக் கொடுத்து விட்டுச் சென்றான். ஒவ்வொரு முறையும் தபால்காரன் செருப்பு அணியாமல் வருவதை அப்பெண் கவனித்து வந்தாள். அதனால் ஒரு முறை தபால்காரன் வந்த போது, அவன் காலடி அளவை கீழே பதிந்திருக்கும் கால் தடத்தை வைத்து குறித்துக் கொண்டாள். தீபாவளிக்கு முன்பு, தபால்காரன் வந்த போது அச்சிறுமி, “உங்களுக்காக நான் கொடுக்கும் பரிசு” என்று உறையை நீட்டினாள். அதற்கு அவன், “உன்னை என் பெண்ணாக பார்க்கிறேன். நான் எப்படி இதை வாங்கிக் கொள்வது?” என்றான். ஆனால் அச்சிறுமி மிகவும் வற்புறுத்தியதால் அந்த உறையை வாங்கிக் கொண்டு, வீட்டுக்குச் சென்று அதைப் பிரித்தான்.

தபால்காரன் காலணிகளை பார்த்தவுடன், அவன் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. இப்பணியில் இருந்த இவ்வளவு நாட்களில், ஒருவர் கூட அவன் செருப்பு அணியாததை கவனித்ததில்லை.

நீதி:

மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும் போது, அந்த உணர்வுகளை புரிந்து கொண்டு, வலியை ஏற்று அதை பகிர்ந்து கொள்வது தான் மனிதத் தன்மை; இல்லாவிடில் மனிதனின் வாழ்க்கை முழுமை அடையாது.

நாம் கடவுளிடம் உணர்திறனை அளிக்கும் படி பிரார்த்தனை செய்து கொண்டால், மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும் போது, அவர்கள் அனுபவிக்கும் வலியை சற்று குறைக்க முயற்சிக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com