Tag Archive | Moral value stories in Tamil

அக்கறையுடன் பயிரிட்டு அறுவடையை பெறவும்

நீதி – அமைதி

உபநீதி – பொறுமை

ஒரு குரங்கு கூட்டம், மாங்காய் தோட்டம் ஒன்றை பயிரிட்டது. அவை, பயிர்களை நட்டு, சில நாட்கள் நீரை ஊற்றிய பிறகு, எவ்வளவு ஆழமாக வேர்கள் சென்றிருக்கின்றன என்று பார்ப்பதற்கு, பயிரிட்ட இளஞ்செடிகளை நிலத்திலிருந்து பிடுங்கியன! பயிர்கள் வேகமாக வளர்ந்து, பழங்களின் விளைச்சல் சீக்கிரமாக இருக்க வேண்டும் என்று குரங்குகள் ஆசைப்பட்டன; ஆனால், படிப்படியான செயல்முறைக்கு பிறகு தான் விருப்பப் பட்ட பழங்கள் கிடைக்கும் என்று குரங்குகளுக்கு புரியவில்லை.

குரங்குகள், செய்த காரியத்திற்கு உடனடியாக விளைவுகள் வேண்டும் என யோசித்தன. பலன்கள் கிடைப்பதற்கு, கடுமையான உழைப்பு, பொறுமை மற்றும் விடா முயற்சி அவசியம் என்பதை உணரவில்லை.

நீதி:

திட்டங்கள் உருவாகி, முதிர்ந்த நிலைமையை அடைந்து தகுந்த விளைவுகளை அளிக்க சரியான நேரம் அவசியம். விளைவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதை விட, நாம் விடா முயற்சியுடன் பொறுமையாக வேலையை செய்ய வேண்டும். நாம் முழு மனதோடு ஒரு காரியத்தை செய்தால், தகுந்த நேரத்தில் நமக்கு வெகுமதி கிடைக்கும். வெற்றி அடைவதற்கு பொறுமையும், கடுமையான உழைப்பும் மிகவும் அவசியம். அதனால், சிறப்பாக செயலாற்றிய பின் பலன்களை எதிர்பார்க்கவும். அக்கறையுடன் பயிர்களை பயிரிட்டு, அறுவடையை பெறவும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

சிறந்த பக்தன் யார்?

நீதி – பக்தி

உபநீதி – நம்பிக்கை

ஒரு முறை, “நாராயணா நாராயணா” என அனைவரையும் வரவேற்கும் நாரத முனிவர், பரமாத்மா விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று, “யாரை சிறந்த பக்தர் என்று நினைக்கிறீர்கள்?”, என்று கேட்டார்.

மகாவிஷ்ணு சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்த பிறகு,  இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும்  ஒரு ஏழை விவசாயி தான் தன் சிறந்த பக்தன் என்று நாரதரிடம் கூறினார்.

நாரதர் மிகுந்த ஆச்சரியத்துடன், நாராயணரின் மகிமையை தன்னைவிட யாருமே அதிகமாகக் கூற முடியாது என்றவாறு காரணத்தை வினவினார். (நாரத முனிவர் ஒவ்வொரு நொடியும் “நாராயணா நாராயணா” என்று கூறுபவர்)

பகவான் விஷ்ணு புன்முறுவலுடன், தன் பதிலைப் புரிந்து கொள்வதற்கு முன் நாரதருக்கு ஒரு பணி காத்திருப்பதாகக் கூறினார். நாரதரும் அரைமனதுடன் பகவானின் கட்டளையை ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.

பகவான் விஷ்ணு நாரதரிடம் ஒரு கிண்ணம் நிறைய எண்ணெயைக் கொடுத்தார். எண்ணெய், கிண்ணத்தின் விளிம்பு வரை நிரம்பியிருந்தது. மகாவிஷ்ணு நாரதரைப் பார்த்து,  “இந்தக் கிண்ணத்தை எடுத்துச் சென்று, ஒரு துளி எண்ணெய் கூட கீழே சிந்தாமல் உலகத்தை சுற்றி வர வேண்டும்” என்றார். நாரதர் மிகுந்த கவனத்துடன் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு, உலகம் சுற்றும் பயணத்திற்குப் புறப்பட்டார்.

பகவான் கூறிய படியே நாரதர் உலகம் முழுவதும் சுற்றி விட்டு எண்ணெய் கிண்ணத்துடன் திரும்பினார். ஒரு துளி எண்ணெய் கூட சிந்தாமல், தனக்குக் கொடுத்த வேலையை முடித்ததை எண்ணி நாரதர் பெருமிதம் கொண்டார்.

பகவானிடம் கிண்ணத்தைக் கொடுத்தவுடன் அவர், “நாரதா, இந்தப் பணியை முடித்ததற்கு நன்றி. நீ உலகைச் சுற்றி வரும் போது எத்தனை முறை என் நாமத்தை  ஜபித்தாய்?”, என்று கேட்டார்.

நாரதர் ஒன்றுமே பேச முடியாமல் மெளனமாக நின்றார்; ஏனென்றால் கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணைக் கூட கீழே சிந்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததால், பகவான் நாமத்தைக் கூற அவர் மறந்து விட்டார்.

நாரதர் பகவானிடம், “நீங்கள் கொடுத்த பணியைத் தானே செய்து கொண்டிருந்தேன்” என்று வாதாடினார்.

பகவான் விஷ்ணு அதற்கு, “நாரதா…..அந்த விவசாயியும் அவனுக்குக் கொடுத்த பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறான். நான் அவனுக்குக் கொடுக்கும் எல்லா சூழலையும் சமாளித்துக் கொண்டு, அவனுக்குக் கொடுத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் அவனுடைய ஓய்வில்லாத வாழ்க்கையில் என்னை நினைப்பதற்கு நேரத்தை ஒதுக்குகிறான்.  இதனாலேயே அவன் என் உயர்ந்த பக்தன் ஆனான்” என்று கூறினார்.

நீதி:

நாம் நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனின் நாமத்தை சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். நாம் நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேர்மையாக செய்தால், இறைவன் எப்போதும் நமக்காக இருப்பார்.

மொழி பெயர்ப்பு:

சங்கீதா ராஜேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

சினிமா டிக்கெட்

நீதி – உண்மை

உபநீதி – வாய்மை

ஒரு முறை, ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை சினிமாவிற்கு  கூட்டிச் சென்றாள். டிக்கெட் முகப்பிற்கு அருகில் சென்று, “டிக்கெட்டின் விலை என்ன?” என்று விசாரித்தாள். அங்கிருந்த முன்பதிவு பணியாளர், “உனக்கும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஐம்பது ரூபாய். ஐந்து வயதிற்குக் கீழே இருக்கும் குழந்தைகள் சினிமாவை இலவசமாகப் பார்க்கலாம். உங்கள் குழந்தைகளின் வயது என்ன?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “ஒரு குழந்தைக்கு மூன்று வயதும், மற்றொன்றிற்கு ஆறு வயதும் ஆகின்றன. அதனால் எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் வேண்டும்” என்றாள். அதற்கு பணியாளர், “உங்கள் குழந்தைக்கு ஐந்து வயது தான் ஆகிறது என்று சொல்லியிருந்தால், எவருக்கும் தெரிந்திருக்க போவதில்லை. நீங்களும் ஐம்பது ரூபாயை மீதி படுத்தியிருக்கலாமே” என்று கூறினார்.

அப்பெண், “எவருக்கும் தெரிந்திருக்காது; ஆனால், என் குழந்தைகளுக்கு நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்களுக்கு நேர்மையின்மையை கற்றுக் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றார்.

நீதி:

பெற்றோர்கள், முக்கியமாக தாயார் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள். நற்குணங்களைக் கற்றுக் கொள்ள குழந்தைகள் தாயாரை உதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. அதனால் குழந்தைகளுக்கு நல்ல குணங்களை புகட்ட, பெற்றோர்களும் அவ்விதத்தில் நடந்து கொள்வது பிரதானமான பணியாக இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல விதத்தில் வளர்க்க, பெற்றோர்களின் சரியான நடத்தையும், மனப்பான்மையும் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது.

சவால்களை எதிர் கொள்ளும் போது, நன்னெறி கோட்பாடுகள் மிகவும் பிரதானமானக் கருதப்படுவதால், குடும்பத்திலும், பணி செய்யும் இடத்திலும் நாம் நல்ல எதுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

எண்ணங்களுக்கு ஏற்றார் போல வாழ்க்கை

நீதி – நன்னடத்தை

உபநீதி – நேர்மை / சரியான மனப்பான்மை

ஒரு ராஜா, தன் மூன்று மந்திரிகளையும் காட்டுக்குச் சென்று ஒரு பையில் பழங்களை நிரப்பி வருமாறு உத்தரவிட்டார்.

முதல் மந்திரி இந்த உத்தரவை மனதில் நிறுத்திக் கொண்டு, சிறந்த பழங்களாக எடுத்து வருவது மட்டுமே தனது பணி என்று நினைத்தார்.

ராஜாவிற்கு பல வேலைகள் இருப்பதால், நேரமின்மை என்ற காரணத்தால் பையில் உள்ளவற்றை பார்க்க மாட்டார் என்று இரண்டாவது மந்திரி எண்ணினார். அதனால், என்ன கிடைத்ததோ அதை பையில் நிரப்பிக் கொண்டார். இறுதியில், அப்பையில் நல்ல மற்றும் அழுகிய பழங்களும் இருந்தன.

ராஜா, பையின் வெளித் தோற்றம் மற்றும் அதன் பரிமாணத்தையும் மட்டுமே பார்ப்பார், உள்ளே இருப்பதைப் பார்க்க மாட்டார் என்று  நினைத்த மூன்றாவது மந்திரி காய்ந்த இலைகளையும், தூசி துகள்களையும் பையில் நிரப்பினார்.

மூன்று மந்திரிகளும் அரசவைக்கு தங்கள் பைகளை எடுத்து வந்து, ராஜா உத்தரவிட்ட பணியை முடித்து விட்டதாகக் கூறினர்.

ராஜா பைக்குள் இருந்ததைப் பார்க்காமல், மூன்று மந்திரிகளையும் தாங்கள் நிரப்பி வந்த பைகளோடு தனித்தனியாக மூன்று மாதங்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முதல் மந்திரி தான் கொண்டு வந்த நல்ல பழங்களை உண்டு மூன்று மாதங்களை சிறையில் கழித்தார்.

அடுத்த மந்திரி, சில நாட்கள் நல்ல பழங்களை உண்டார்; பிறகு அழுகிய பழங்களை உண்டு, நோய் வாய் பட்டார்.

மூன்றாவது மந்திரிக்கு சாப்பிட ஒன்றுமே இல்லாததால், உயிர் வாழ முடியவில்லை.

நீதி:

ஒவ்வொரு மனிதனும் தாங்கள் செய்யும் நல்ல / தீய காரியங்களுக்கு ஏற்றார் போல விளைவுகளை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு இருக்கிறது.

பண்டைய நூலான மகாபாரதத்தில் (அனுஷாசன பர்வா – ஒழுங்கு முறை என்ற அத்தியாயத்தில்)

“யதா தேனு சஹஸ்ரேஷு,

வத்ஸோ கச்சதி மாதரம்,

யத் ஸ க்ருதம் கர்ம,  

கர்தாரம் அபி கச்சதி” என்று கூறப் பட்டுள்ளது.

பல ஆயிரக் கணக்கான மாடுகளில், கன்று தன் தாயை கண்டுபிடித்து விடும். அதே போல, காலம் காலமாக வருகின்ற நம் கர்ம வினைகள் முதிர்வடைந்த பிறகு, தவறாமல் நம்மை வந்து தாக்கும்.

விதை விதைத்தவன் விதை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வாழ்க்கையின் தத்துவம்

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – தீய குணங்களை கட்டுப்படுத்துதல் / விழிப்புணர்வு

மகாபாரதத்தின் உய்பொருள்…….

வரலாற்று சிறப்புமிக்க மகாபாரத போர் நடந்த புனித இடமான குருக்ஷேத்திரத்தில், சஞ்சயன் இறுதியாக வந்தார்.

இந்தப் போருக்கான உண்மையான நோக்கம் என்ன என்று சஞ்சயன் யோசித்து கொண்டிருந்தார். போர் நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தால் மட்டுமே அதற்கான சரியான விடை கிடைக்கும் என்று உணர்ந்து, சஞ்சயன் அங்கு சென்றார்.

போர் நடந்த 18 நாட்களில், போரில் ஈடுபட்ட 80 சதவிகித ஆண்கள் வீழத்தப்பட்டனர் என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சஞ்சயன் அந்த இடத்தை முழுமையாகப் பார்வையிட்டு,  “உண்மையாகவே  அப்படி ஒரு போர் இங்கு நடந்ததா?  இந்த பூமி இரத்த வெள்ளத்தில் மூழ்கியதா? பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரும் இங்கு தான்  நின்றனரா?” என்றெல்லாம் தனக்குத் தானே வினவிக் கொண்டிருந்தார்.

“உனக்கு ஒரு போதும் அதன் உண்மை தெரியாது” என்று ஒரு வயதான, மென்மையான குரல் கேட்டது. சஞ்சயன் திரும்பி பார்த்தார்.

காவி உடை உடுத்திய ஒரு முதியவர் ஒரு புகை மண்டலத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது.

“குருக்ஷேத்திரப் போரைப் பற்றித் தெரிந்து கொள்ள தான் நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால், போர் என்பது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதை நீ அறியும் வரை உனக்கு அது புரியாது” என்று முதியவர் மறைமுகமாகக் கூறினார்.

தாம் இதுவரை சந்தித்தவர்களிலேயே இவர்தான் இந்தப் போரைப் பற்றி அதிகம் அறிந்தவர் போலும் என்றுணர்ந்த சஞ்சயன், “நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று வினவினார்.

அதற்கு ‍அந்த முதியவர், ” மகாபாரதம் ஒரு காவியம். அது ஒரு உண்மை நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியுள்ளது” என்று கூறினார்.

முதியவர் சஞ்சயனிடமிருந்து மேலும் பல கேள்விகளை எதிர்பார்த்து அவரை உற்று நோக்கினார்.

சஞ்சயன், “அப்படியென்றால் அந்தத் தத்துவத்தை எனக்கு எடுத்துரைக்கவும்” என்று கெஞ்சினார்.

“கண்டிப்பாக” என்று கூறிய முதியவர் தன் உரையை ஆரம்பித்தார்.

“உன்னுடைய ஐம்புலன்கள் அதாவது பார்வை, முகர்வுணர்வு, நாவுணர்வு, தொட்டுணர்வு மற்றும் கேள்விப்புலன் தான் பஞ்சபாண்டவர்கள். கௌரவர்கள் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று வினவினார்.

சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

முதியவர், “அந்த நூறு கௌரவர்கள் தான், அனுதினமும் நம் ஐம்புலன்களை தாக்கிக் கொண்டிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் செயல்கள். உன்னால் அவைகளை ஜெயிக்க முடியும். எவ்வாறு தெரியுமா?” என்றார். மீண்டும் சஞ்சயன் தெரியாது என்று தலையசைத்தார்.

அதற்கு அவர், “கண்ணன் உன் தேரோட்டியாக இருக்கும் பொழுது” என்று கூறி ஒரு குறும்புப் புன்சிரிப்புடன் தென்பட்டார். சஞ்சயனும் அதை கவனிக்கத் தவறவில்லை.

“கிருஷ்ணர் உன் உள்ளுணர்வு, உன் ஆத்மா, மேலும் அவரே உனக்கு வழிகாட்டும் ஒளி. உன் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

சஞ்சயன் உடனே ” பின்னர் ஏன் உத்தமர்களாகிய துரோணாச்சாரியார் மற்றும் பீஷ்மர் ஆகியோர் தீயவர்கள் என்றறிந்தும் கௌரவர்களுக்காக போரிட்டனர்?” என்று கேட்டார்.

முதியவர் வருத்தத்துடன் தலை அசைத்து விட்டு,  “நீ வளரும் பொழுது உனக்கு நல்லவர்களாகத் தெரிந்த சிலர்,  பிற்காலத்தில் அவ்வாறு இல்லை என்பது புலப்படும். அவர்களும் தவறுகள் செய்கின்றனர். அவர்களால் உனக்கு நன்மையா தீமையா என்பதை நீ தான் ஒரு நாள் முடிவு செய்ய வேண்டும். நன்மைக்காக அவர்களுடனேயே நீ சண்டையிட வேண்டியிருக்கும் என்பதைப் பின்னர் புரிந்து கொள்வாய். ஒருவருடைய வளர்ச்சியின் கடினமான கட்டம் இது தான். அதனால் தான் கீதை இன்றியமையாததாகிறது” என்று கூறினார்.

சஞ்சயன் பூமியில் சரிந்தார் – உடல் சோர்வடைந்து அல்ல, நடந்த கொடுமையை எண்ணி மனம் தளர்ந்து சரிந்தார். “அப்படி என்றால் கர்ணன்?” என்று முணுமுணுத்தார்.

முதியவர்,  “ஆஹா! நீ ஒரு சிறந்த கேள்வியை இறுதியில் கேட்டிருக்கிறாய். கர்ணன் தான் உன் ஐம்புலன்களின் சகோதரனாகிய ஆசை. அவன் உன்னைச் சார்ந்து இருந்தாலும், தீமையின் பக்கம் இருப்பான். ஆசைகளைப் போலவே, தவறு செய்ததை உணர்வான்; ஆனால் தீயவர்களுடன் இருப்பதற்குக் காரணம் காட்டுவான். கூறு சஞ்சயா! உன் ஆசைகள் தீமைக்குத் துணை போவதில்லையா? ” என்று கூறி முடித்தார். சஞ்சயன் அமைதியாகத் தலையசைத்தார். அவர் லட்சக் கணக்கான எண்ணங்களை மனதில் ஓடவிட்டு, அனைத்தையும் ஒருங்கிணைத்து சிந்திக்கத் தொடங்கி, நிமிர்ந்து பார்த்தார். அந்த முதியவர் அங்கு தென்படவில்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவத்தை அவருக்கு உணர்த்திவிட்டு முதியவர் மறைந்து விட்டார்.

நீதி:

மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர்.  நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய கண்ணணின் துணையுடன், நாம் நம்மை உயர்த்திக் கொள்ளும் வழியில் உழைக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சீப்பு விற்பவர்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி – சாமர்த்தியம் / புத்திசாலித்தனம்

பல வருடங்களுக்கு முன், சீப்புகளை விற்கும் ஒரு பெரிய வணிகர் சீனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகிய பிறகு, தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று, அந்தத் தொழிலை அறிவு மற்றும் தகுதியுள்ள ஒருவனுக்கு கொடுக்க ஆசைப் பட்டார்.

வணிகர் தன் மூன்று மகன்களையும் அழைத்து, புத்தத் துறவிகள் வாழுமிடத்தில் சீப்புகளை விற்கும் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். மகன்கள் அதிர்ச்சியடைந்தனர்; ஏனெனில் அங்கு வாழ்ந்த துறவிகள் அனைவருக்குமே தலை வழுக்கையாக இருந்தது. எனினும், தங்களுக்குக் கொடுத்த பணியை அவர்கள் செயலாற்றினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலாவது மகன் இரண்டு சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை எவ்வாறு முடிந்தது என்று கேட்ட போது, முதுகை சொறிந்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறி, அவற்றை விற்றதாகக் கூறினான்.

துறவிகள் வசிக்கும் இடத்திற்கு புனித யாத்திரை செய்யும் பயணிகள் மற்றும் விருந்தாளிகள் வரும் போது, பயணத்தின் காரணமாக தலை முடி சற்று கலைந்திருக்கும். அந்த சமயத்தில் சரி செய்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என, இரண்டாவது மகன் பத்து சீப்புகளை விற்றதாகக் கூறினான்.

மூன்றாவது மகன் ஆச்சரியப்படும் வகையில் ஆயிரம் சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை பேரின்பத்துடனும், பதற்றத்துடனும் எப்படி முடிந்தது என்று கேட்டார்.

அதற்கு மகன் “புத்தரின் போதனைகளை சீப்பின் மேல் அச்சடித்து, அதை பரிசாக வருபவர்களுக்குக் கொடுத்தால், தினமும் அவர்கள் தலை முடியை சீவும் போது அதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்” என்ற எண்ணத்தை துறவிகளுக்கு கொடுத்ததாகக் கூறினான்.

இந்த ஆக்கப்பூர்வமான யோசனை வெற்றிகரமாக முடிந்தது!

நீதி:

மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. ஒரு வாய்ப்பை நிராகரித்து, நம்மால் முடிந்ததைக் கூட செய்யாமல் இருக்கலாம். ஆனால், நாம் சிறப்பாக, ஆத்மார்த்தமாக மற்றும் ஆக்கப்பூர்வமாக முயற்சித்தால், வெற்றி நமக்கே.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

பட்டத்தின் கதை

நீதி – வாழ்க்கையின் உண்மை

உபநீதி – மரியாதை / அன்பு

ஒரு சிறுவன், தன் தாய் விடும் பட்டத்தை உன்னிப்பாக கவனித்து வந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு மகன் தாயிடம், “இந்தக் கயிற்றினால் பட்டம் உயரமாகப் பறக்க முடியாமல் இருக்கிறது” என்றான். இதைக் கேட்டவுடன், தாய் புன்சிரிப்புடன் கயிற்றை அறுத்து விடுகிறாள்.

பட்டம் மேலும் சற்று உயரத்தில் பறந்து, சில நொடிகளுக்குப் பிறகு கீழே விழுந்து விடுகிறது.

சிறுவன் மன வேதனையுடன் இருப்பதைக் கண்டு, தாய் பொறுமையாக,

“வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு, வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களால், இன்னும் உயரமான நிலைக்கு செல்ல முடியவில்லையே என்று நினைக்கிறோம். இந்த சில பிரச்சனைகள் தான், நம்மை உயர்ந்த நிலைக்கு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்துகிறது என எண்ணுகிறோம். ஆனால், நம் வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலாச்சாரம் மட்டுமே நம்மை உறுதியான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. நாம் இவற்றிலிருந்து விடுபட நினைத்தால், நம் நிலைமை பட்டம் போல இருக்கும்; விரைவில் விழுந்து விடுவோம்” என்றார்.

நீதி:

எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவு முறைகளை விட்டு விட்டு செல்லாதீர்கள். நாம் உயரத்தில் பறக்கும் போது, நாம் உறுதியாக இருப்பதற்கு இவை மட்டுமே காரணமாக இருக்கின்றன.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com