Tag Archive | Human value stories in Tamil

நீங்கள் நீங்களாகவே இருக்கவும்

நீதி – நன் நடத்தை / அன்பு

உப நீதி – கருணை

Be yourselfசெய்தித்தாள் விற்பனையாளர் ஒருவருக்கு, பண்பாடற்ற மற்றும் கோபமுள்ள ஒரு வாடிக்கையாளர் இருந்தான்.

ஒவ்வொரு நாளும், இந்த கோபமுள்ள மனிதன் விற்பனையாளரின் வாழ்த்துகளை நிராகரித்து, அவரிடமிருந்து செய்தித்தாளை எடுத்துக் கொண்டு, பணத்தை வீசி விட்டு செல்வான்.

விற்பனையாளர் அப்பணத்தை எடுத்துக் கொண்டு, பணிவாக புன்சிரிப்புடன் “நன்றி ஐயா” என்று பதிலளிப்பார்.

ஒரு நாள், விற்பனையாளரின் உதவியாளர் அவரிடம், “அவன் சற்று கூட மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் போது, நீங்கள் ஏன் அவனிடம் பணிவாக நடந்து கொள்கிறீர்கள்? அவன் நாளை வரும் போது,  செய்தித்தாளை அவன் முகத்தின் மேல் ஏன் வீசக் கூடாது?” என்று கேட்டான்.

அதற்கு விற்பனையாளர் புன்சிரிப்புடன், “அவனுக்கு கோபமான ஒரு மனப்பான்மையை மட்டுமே வெளிப்படுத்தத் தெரியும்; என்னால் பணிவான மனப்பான்மையை மட்டுமே வெளிப்படுத்த முடியும். அவனது கோபம் என் பணிவை வெல்ல நான் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று கேட்டார்.

நீதி:

சந்தோஷமாக இருப்பதோடு நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களின் நடவடிக்கையை மற்றவர்கள் முடிவெடுக்க விடாதீர்கள். நீங்கள் போலியாக இருப்பதை விட உண்மையாக செயற்பட்டால், அது உங்களுக்கு மிகுந்த இன்பத்தை அளித்து, வார்த்தை, எண்ணம் மற்றும் செயலில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும்.

“ஒவ்வொரு முறையும், நீங்கள் மற்றவர்களை புன்சிரிப்புடன் பார்க்கும் போது, அது அன்பின் வெளிப்பாடு ஆகும். அது அந்த மனிதனுக்கு ஒரு பரிசு மற்றும் மிக அழகான விஷயம் ஆகும்.” மதர் தெரேசா.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பீர்பலின் கிச்சடி

நீதி: நம்பிக்கை / சரியான மனப்பான்மை 

உபநீதி: ஏற்புத் தன்மை / சமயோஜித புத்தி

பனிக்காலத்தில் ஒரு நாள் அக்பரும், பீர்பலும் ஏரிக்கரையில் உலாவச் சென்றனர். அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, மனிதன் பணத்திற்காக எதையும் செய்யத் துணிவான் என்ற தனது எண்ணத்தை பீர்பல், அக்பரின் முன் வைத்தார். அச்சமயம், அரசர் தனது கையை தண்ணீரில் வைத்தவுடனேயே, மிகுந்த குளிர்ச்சியாக இருந்ததால், சட்டென்று எடுத்து விட்டார். அக்பர் பீர்பலைப் பார்த்து “பீர்பல், எந்த ஒரு மனிதனும் இந்த கொடிய குளிரை பொருட்படுத்தாமல் ஒரு இரவு முழுவதும் பணத்திற்காக ஏரியில் நிற்கத் துணிய மாட்டான்” என்றார். அதற்கு பீர்பல், “முயற்சித்தால் அவ்வாறு நிற்கத் துணியும் ஒரு மனிதனை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

அக்பர் பீர்பலிடம் அப்படி ஒருவரை தேடிக் கண்டுபிடிக்குமாறு சவால் விடுத்தார்; மேலும் அம்மனிதனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்குவதாகவும் வாக்களித்தார். பீர்பல், அரசரின் சவாலை துணிந்து செயல்படுத்த எவரேனும் உள்ளனரா என்று நாடெங்கும் தேடினார். இறுதியில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒரு ஏழை மனிதன் சவாலை ஏற்க சம்மதித்து ஏரியில் இறங்கினான். அக்பர் அந்த மனிதனை  கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

Birbals khichri picture 1அந்த ஏழை மனிதன், பரிசாக கிடைக்கப் போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி, இரவு முழுவதும் கண் விழித்து, குளிரைப் பொருட்படுத்தாமல் நின்றான். பொழுது விடிந்ததும் அவனை காவலாளிகள் அக்பரிடம் அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அம்மனிதன் நீருக்குள் நின்றதை காவலாளிகள் கூறினர். அக்பருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அம்மனிதனின் மன உறுதியைப் பாராட்டி,  குளிர்ந்த நீருக்குள் இரவு முழுவதும் எப்படி சமாளித்தான் என்று அக்பர் கேட்டார்.

அம்மனிதன், “ஏரி அருகே எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியைப் பார்த்துக் கொண்டே குளிர் நீரிலிருந்து கவனத்தை திசை திருப்பி, இரவுப் பொழுதை கழித்தேன்” என்றான்.

உடனடியாக அக்பர், தெருவிளக்கின் ஒளியால் கிடைத்த வெப்பத்தினால் மட்டுமே இரவு முழுவதும் அவனால் குளிரை சமாளிக்க முடிந்தது; எனவே ஆயிரம் பொற்காசுகளை கொடுக்க முடியாது என்று அறிவித்தார். பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த ஏழை மனிதன் ஏமாற்றத்துடன் பீர்பலிடம் சென்று உதவி நாடினான். அடுத்த நாள் பீர்பல் அரசவைக்கு செல்லவில்லை; குழப்பமடைந்த அரசர் ஒரு காவலாளியை அனுப்பி பீர்பலை அழைத்து வரச் சொன்னார். காவலாளி திரும்பி வந்து, பீர்பல் கிச்சடி செய்து கொண்டிருப்பதாகவும், அதை செய்து முடித்த பின் வருவதாகவும் அரசரிடம் கூறினார். நீண்ட நேரம் பீர்பலுக்காக அக்பர் காத்திருந்தும் பீர்பல் வரவில்லை. அரசர் மிகவும் கோபமடைந்து, பீர்பலின் வீட்டுக்குச் சென்று, என்ன தான் செய்கிறார் என்று பார்த்து விட்டு வரலாம் எனப் புறப்பட்டார்.

Birbals khichri picture 2பீர்பல் தன் வீட்டின் தரையில் அமர்ந்திருந்தார். அவர் அருகே அடுப்பில் விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. ஐந்தடி உயரத்தில், அரிசியும் தண்ணீரும் நிரப்பி வைக்கப்பட்ட பாத்திரம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அக்பரும், அவர் குழுவினரும் நகைத்தனர்.

அக்பர் “பாத்திரம் அடுப்பிலிருந்து இத்தனை தொலைவில் இருந்தால் அதில் கிச்சடி எப்படி வேகும்?” என்று பீர்பலிடம் கேட்டார்.

பீர்பல் “எப்படி அந்த ஏழை ஃபர்லாங் தூரத்தில் இருந்த தெரு விளக்கிலிருந்து வெப்பத்தை பெற்றானோ அப்படி”  என்றார். அரசர் தனது தவறை உணர்ந்தார். வாக்களித்தபடி அந்த ஏழை மனிதனுக்கு ஆயிரம் பொற்காசுகளை அக்பர் வழங்கினார்.

நீதி:

எத்தகைய நிலைமையிலும் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால், நாம் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக மன உறுதியுடன் எதிர்கொண்டு, அமைதியாகவும், நிதானமாகவும் சமாளிக்கலாம். கஷ்டமான பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்வு கட்டாயமாக உண்டு; சற்று வேறுபட்ட கோணத்தில் அதைப்பற்றி யோசிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமயோஜித புத்தியுடன் எதிர்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்த்து கவலைப்படுவதற்கு பதிலாக, சரியான மனப்பான்மையுடனும், அமைதியான மனதுடனும் சூழ்நிலையை எதிர்கொண்டால், சரியான தீர்வு பெறலாம்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பீர்பலும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியும்

நீதி: உண்மை

உப நீதி: உண்முக நோக்குதல்

ஒரு நாள், செல்வந்தன் ஒருவன், ஹாசன் என்பவனை தண்டிக்க விரும்பினான். அவன் அக்பரிடம், தன் வீட்டிலிருந்த ஒரு அட்டிகையை ஹாசன் திருடிவிட்டதாகப் புகார் கூறினான்.

அக்பர், “ஹாசன் திருடினான் என்று நீ ஏன் நினைக்கிறாய்?” என்று வினவினார்.

அதற்கு செல்வந்தன், “அவன் திருடியதை நான் பார்த்தேன்” என்று பதிலளித்தான்.

உடனே ஹாசன், “இல்லை அரசே! நான் ஒரு அப்பாவி. அந்த அட்டிகையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான். செல்வந்தன், “அரசே! அவன் நிரபராதி என்றால் அவன் அதை நிரூபிக்க வேண்டும்.

நான் ஒரு சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வருகிறேன். அதை அவன் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், அவன் நிரபராதி என்றும் அவன் உண்மை பேசுகிறான் என்றும் நான் நம்புவேன்” என்றான்.

ஹாசன், “உண்மையைப் பேசினால் அந்தச் சூடான இரும்பு என் கையைச் சுடாதா?” என்று வினவினான்.

அதற்கு செல்வந்தன் “ஆமாம். கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்” என்றான். இப்பொழுது ஹாசனுக்குத் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹாசன் அக்பரிடம், “நான் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்க எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு வீடு சென்றான்.

பின்னர், பீர்பலைச் சந்தித்து அவரிடம் அறிவுரை பெற்றான்.

அடுத்த நாள் அரசவையில், ஹாசன், “ சரி. நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த விஷயம் அவனுக்கும் பொருந்துமல்லவா? அவன் உண்மை பேசினால், அந்தச் சூடான இரும்புக்கம்பி அவன் கையையும் சுடாதல்லவா? அதனால், அவன் அதைக் கையில் பிடித்துக் கொண்டு வரட்டும். பின்னர் நானும் என் கையில் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினான். செல்வந்தன் வாயடைத்துப் போனான். அவன் அக்பரிடம், “நான் வீட்டிலேயே எங்கேயாவது தவறுதலாக இடம் மாற்றி வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். உடனே வீடு சென்றுத் திரும்பத் தேடி பார்க்கிறேன்” என்று கூறினான். அக்பர், இதற்குத் தண்டனையாக, செல்வந்தன் அந்த அட்டிகையை ஹாசனுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

நீதி:

உண்முக நோக்குதல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் அவசரப் பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டோம்; தேவையில்லாமல் மற்றவர்களின் மேல் பழியையும் சுமத்த மாட்டோம். நாம் உண்மையாக இருந்து, வார்த்தைகளை பேசுவதற்கு முன்பும், செயல்களை செய்வதற்கு முன்பும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

புத்தி கூர்மை

நீதி – நம்பிக்கை

உபநீதி – சமயோஜித புத்தி

பேரரசர் அக்பர், தன் அரசவையினரிடம் பலவிதமான விடுகதைகளையும், புதிர்களையும் கேட்பார். அவை வினோதமான மற்றும் வேடிக்கையான கேள்விகளாக இருந்தன; அதற்கேற்ற பதில்களை அளிக்க, சமயோஜித புத்தி தேவைப்பட்டது.

ஒரு முறை அவர் ஒரு விசித்திரமான கேள்வியை அரசவையின் முன் வைத்தார். அவரது கேள்வியைக் கேட்டு சபையே அதிர்ச்சியுற்றது.

அக்பர் தனது சபையினரை பார்த்தவுடன், ஒருவர் பின் ஒருவராக தலைக்குனிந்த வண்ணம் விடைத் தேட முயற்சித்தனர்.

அச்சமயம் பீர்பல் தர்பாருக்குள் நுழைந்தார். பேரரசரின் இயல்பை அறிந்த பீர்பல், பதில் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த சபையினரின் நிலைமையை விரைவில் புரிந்து கொண்டார். அவர் மரியாதையுடன், “கேள்வி யாதென்று அறிந்து கொள்ள முடிந்தால், பதில் அளிக்க நானும் முயற்சி செய்வேன்” என்றார்.

பேரரசர், “பீர்பல், இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்று கேட்டார்.

சற்றும் தாமதமின்றி, பீர்பல் எழுந்து நின்று “பேரரசே, இந்நகரத்தில் 50,589 காக்கைகள் இருக்கின்றன” என்று விடையளித்தார்.

அக்பர், “எப்படி இவ்வளவு உறுதியாக அதைக் கூறுகிறாய்?’ என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு பீர்பல், “தங்கள் ஆட்களை அனுப்பி எண்ணி பார்க்க சொல்லுங்கள் அரசே! நான் கூறிய எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், வெளியூர்களிலிருந்து பல காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வந்திருக்கின்றன என்று அர்த்தம். இந்த எண்ணிக்கையை விடக் குறைவாக இருந்தால், இந்த நகரத்திலிருந்து காக்கைகள் விருந்தாளிகளாக வெளியூர் சென்றிருக்கின்றன என்று பொருள்” என்றார்.

பீர்பலின் அறிவு கூர்மையான பதிலால், பேரரசர் அக்பர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

நீதி:

சமயோஜித புத்தி என்ற நற்பண்பை மேம்படுத்திக் கொண்டால், வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் உதவியாக இருக்கும். நாம் செய்யும் செயல்களை விழிப்புணர்வுடன் செய்தால், இந்த மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

ஏற்றங்களும், இறக்கங்களும்

நீதி – அன்பு

உபநீதி – விசுவாசம், கருணை

ஏழு முறை வீழ்ச்சி அடைந்தாலும், எட்டு முறை எழுந்து செயற்படுவது தான் வாழ்க்கையின் ரகசியம் – பவுலோ கோய்லோ (Paul Coelho)

சில சமயம், வாழ்க்கையில் திடுக்கிடும் சம்பவங்கள் ஏற்பட்டு நம்மை கீழே தள்ளுகிறது. எல்லாமே நன்றாக முடிந்து விட்டது என்று நாம் நினைக்கும் போது, மறுபடியும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்; ஆனால், அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவு படுத்திக் கொள்ளும் போது, எப்படி அந்த பிரச்சனையை சமாளித்தோம் என்று புரிவது கடினமாக இருக்கிறது. இந்த நிமிடங்கள் மட்டுமே, அந்த உயர்ந்த சக்தி இருப்பதை நமக்கு தெளிவுப் படுத்துகின்றன.

ஓர் இரவு, ஒரு மனிதன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் அவன் கடவுளுடன் கடற்கரையோரம் நடந்து கொண்டிருக்க, வானத்தில் அவனது வாழ்க்கையின் சில காட்சிகள் மின்னல் போல வந்து சென்றன. ஒவ்வொரு காட்சியிலும், மணலில் இரண்டு ஜோடி காலடி சுவடுகளைக் கவனித்தான். ஒன்று அவனுடையது, மற்றொன்று கடவுளின் காலடிச் சுவடுகள். கனவில் பார்த்த கடைசி காட்சியின் சில நிமிடங்கள் அவன் கண் முன் தோன்றிய போது, மணலில் இருந்த கால் சுவடுகளைத் திரும்பி பார்த்தான். பல சமயங்களில், அவனது வாழ்க்கையின் பாதையில், ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் மட்டுமே இருந்தன. வாழ்க்கையில் மிகுந்த சவால்களும், மன வேதனைகளும் இருந்த சமயங்களில் அவன் ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் மட்டுமே இருந்ததைக் கவனித்தான். அவனுக்கு அது வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி கடவுளிடம் “நான் உங்களை பக்தியுடன் பின்பற்ற தீர்மானித்தால், நீங்கள் என் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என்னை கைவிடாமல் வழிநடத்தி செல்வதாக கூறினீர்கள்; ஆனால் என் வாழ்க்கையில் மிகுந்த பிரச்சனைகள் இருந்த நேரங்களில், ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகளை மட்டுமே நான் பார்த்தேன். எனக்கு உங்களின் ஆதரவு மிகவும் தேவைப்பட்ட நேரங்களில் ஏன் என்னை விட்டு விலகி இருந்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை” என்று கவலையுடன் கேட்டான். அதற்கு கடவுள், “என் விலைமதிப்பற்ற குழந்தாய்! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஒருபோதும் சோதனை அல்லது துன்பம் வரும் காலங்களில் உன்னை கைவிட்டதில்லை. நீ பார்த்த ஒரே ஒரு ஜோடி கால் சுவடுகள் உன்னுடையது அல்ல; அச்சமயங்களில், நான் உன்னை என் கைகளில் சுமந்து கொண்டு சென்றிருக்கிறேன்” என்று விளக்கினார்.

நமது வாழ்க்கையில், சமாளிக்க முடியாத பிரச்சனைகளை கடவுளிடம் அர்ப்பணித்தால், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை நாம் உணரலாம்.

ஒவ்வொரு முறையும் “நான் ஏன் கஷ்டப் பட வேண்டும்” என்ற கேள்வி வரும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் கடவுள் அதை கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவது மட்டுமே, அதற்கு அர்த்தமுள்ள பதிலாக இருக்க முடியும்.

நீதி:

நாம் கடவுளிடம் விசுவாசமும், அன்பும், பக்தியும் வைத்திருக்கும் போது, அவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார். நமது எல்லாக் கஷ்டங்களையும் அவர் நீக்க மாட்டார்; ஆனால், போதுமான ஆதரவும் வலிமையும் கொடுத்து, நிலைமையை எதிர்கொள்ள உதவி செய்வார். சோதனைகள் மூலம் அவர் நம்மை வழிநடத்தி, தேவைப்படும் போது நம்மை தாங்கிக் கொண்டும் செல்வார்.

வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, நம்முள் என்றும் மங்காமல் இருக்கும் ஒளியின் உண்மையான சக்தியை அறிந்து கொள்ளலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

எறும்பும் விழி வில்லையும்

நீதி – விசுவாசம்

உபநீதி – நம்பிக்கை

மலையேறும் பாதையில், மாயா செங்குத்தான கருங்கல் குன்றின் உச்சியை ஏறக்குறைய அடைந்திருந்தாள். முதல் முறையாக அவள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால், பாறையின் விளிம்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டாள். அச்சமயம், பாதுகாப்பிற்காக இருந்த கயிறு, திடீரென மாயாவின் கண்களின் பட்டு முறிந்து விட்டது. இதனால் விழி வில்லை கீழே விழுந்தது. மாயா கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு, “நான் குன்றின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன். குன்றின் உச்சியை அடைய பல நூறு அடிகளும், கீழே பல நூறு அடிகளும் இருக்க, பார்வையும் மங்கலாக இருக்கிறதே” என்று நினைத்தாள்.

விளிம்பில் தான் விழி வில்லை விழுந்திருக்க வேண்டும் என்றெண்ணி மாயா இங்கும் அங்கும் தேடினாள்; ஆனால், அவள் கண்ணுக்கு அது தென்படவில்லை.

மாயா பதட்டத்தில் இருந்ததால், மன அமைதி மற்றும் விழி வில்லை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.

மாயா குன்றின் உச்சிக்கு சென்ற பிறகு அவள் தோழி, மாயாவின் கண்களில் மற்றும் அணிந்திருந்த ஆடைகளில் எங்கேயாவது விழி வில்லை இருக்குமோ என்று பார்த்தாள்; ஆனால், எங்கேயும் கிடைக்கவில்லை. மாயாவின் மனம் சற்று நிம்மதியாக இருந்தாலும், மலைத் தொடரை சரியாக பார்க்க முடியாததால், அவள் வருத்தமடைந்தாள். அவள் கடவுளிடம், “நீங்கள் எல்லாம் அறிந்தவர். மலைத் தொடரை உங்களால் பார்க்க முடியும். ஒவ்வொரு கல்லும், இலையும் உங்கள் கண்களுக்குத் தெரியும். என் விழி வில்லை எங்கே இருக்கிறது என்றும் தெரியும். தயவு செய்து எனக்கு உதவவும்” என வேண்டிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில், அவர்கள் கீழே இறங்கும் போது, மற்ற சிலர் அப்போது தான் குன்றின் மேல் ஏற ஆரம்பித்திருந்தனர். அதில் ஒருவர், “உங்களில் யாராவது விழி வில்லையை தொலைத்து விட்டீர்களா?” என்று உரத்தக் குரலில் கேட்டார்.

அதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், அந்த நிகழ்வை அவர் ஏன் அச்சமயத்தில் பார்த்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு பாறையின் சிறு கிளைக்கு மேல் ஒரு எறும்பு அதை எடுத்துச் சென்று கொண்டிருந்தது.

கதை இங்கு முடியவில்லை. மாயாவின் தந்தை கார்ட்டூனிஸ்டாக இருந்தார். எறும்பு, அவளின் பிரார்த்தனை மற்றும் விழி வில்லைப் பற்றிய நம்பமுடியாத கதையை மாயா அவள் தந்தையிடம் கூறிய போது, அவர் ஒரு எறும்பு, விழி வில்லை தூக்கிச் செல்லும் வகையில் ஒரு கேலி சித்திரம் வரைந்து, அத்தோடு “கடவுளே, நான் ஏன் இந்தப் பொருளை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு அது உணவும் இல்லை; பாரமாகவும் இருக்கிறது. ஆனால், நான் இதைத் தான் செய்ய வேண்டுமென்றால், நான் உங்களுக்காக இதை செய்கிறேன்” என்ற இணைகூற்றுடன் வரைந்தார்.

நீதி:

நாம் எல்லோருமே கடவுளிடம், “நான் ஏன் இந்த பாரத்தை சுமக்க வேண்டும்? இதில் நன்மை ஒன்றும் இருப்பதாகவும் தெரியவில்லையே. ஆனால், நான் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் செய்கிறேன்” என்று கூறுவது நல்லது.

கடவுள் தகுதி உள்ளவர்களை அழைப்பதில்லை; ஒருவரை அழைத்த பிறகு தகுதியுள்ளவராக மாற்றுகிறார்.

நம் வாழ்க்கையின் ஆதாரமும் கடவுளே; நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே. ஒவ்வொரு நாளும் நாம் செயற்படுவதற்குக் காரணமாக இருப்பதும் கடவுளே. நாம் எச்சமயமும், “என்னால் கடவுள் மூலமாக எல்லாமே செய்ய முடியும்; அது மட்டுமே எனக்கு சக்தியையும் அளிக்கிறது” என்று ஞாபகப் படுத்திக் கொண்டால், கடுமையான சமயங்களில் நமக்கு ஏராள தன்னம்பிக்கையை அளிக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

நாமஸ்மரணத்தின் மகிமை

நீதி – விசுவாசம்

உபநீதி – பக்தி, திடநம்பிக்கை

ஒரு நாள், பேரரசர் அக்பரும் அவர் அமைச்சர் பீர்பலும் சில ராணுவ வீரர்களுடன், அருகில் இருந்த மாகாணத்தை பார்க்கச் சென்றனர். அவர்கள் குதிரையின் மீது சென்ற போது, வழியில் பீர்பலின் உதடுகள் தொடர்ந்து ஏதோ உச்சரித்துக் கொண்டிருப்பதை அக்பர் கவனித்தார். பீர்பலை விசாரித்த போது, தெய்வத்தின் நாமமான “ராமா” என்ற வார்த்தையை உச்சரிப்பதாகவும், இந்தப் பழக்கம் தன் பெற்றோர்களிடமிருந்து வந்ததாகவும் கூறினார். பேரரசர் அவரைப் பார்த்து பெருமைப் பட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் இராணுவ வீரர்களிடமிருந்து பிரிந்து, காட்டில் தொலைந்து விட்டதை உணர்ந்தனர். அவர்கள் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் பசியுடன் இருந்தனர். பீர்பல் தன்னுடன் உணவு தேடுவதற்காக வர வேண்டும் என்று அக்பர் ஆசைப்பட்டார். ஆனால், பீர்பலோ ஒரு மரத்தடியில் அமர்ந்து, தன் ஜப மாலையை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரமாவது ராம நாம ஜபம் செய்ய வேண்டும் என்று அக்பரிடம் கோரிக்கை விடுத்தார்.

அக்பர், கோபமும் ஆச்சரியமும் அடைந்தார். அவர், “இந்த ராம நாமம் உணவு தருமா? ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஜபிப்பதை விட, நம்மால் முடிந்த முயற்சியை எடுக்க வேண்டாமா?” என்றார். பீர்பல் மெளனமாக தன் ஜபத்தைத் தொடர்ந்தார். கோபம் கொண்ட பேரரசர் உணவு தேடுவதற்காக சென்று விட்டார்.

சிறிது நேரம் நடந்த பிறகு, அக்பர் ஒரு குடிசையை கவனித்தார். அங்கு குடியிருந்தவர்கள் பேரரசரே வருவதைப் பார்த்து, அவரை வரவேற்து நன்றாக உணவளித்து அவரை உபசரித்தனர். பாராட்டை வெளிப்படுத்துகின்ற வகையில், பேரரசர் சில தங்க நாணயங்களை அவர்களுக்குக் கொடுத்தார். அங்கிருந்து கிளம்புவதற்கு முன், பீர்பலுக்கும் உணவை எடுத்துக் கொண்டார்.

பிறகு அக்பர் வெற்றி உணர்வோடு பீர்பல் ராம நாம ஜபம் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். ஜபத்தை முடித்த பிறகு, மகிழ்ச்சியுடன் அக்பரை வரவேற்த பீர்பல் உணவு ஏதாவது கிடைத்ததா என்று பேரரசரிடம் கேட்டார். அதற்கு அக்பர் பீர்பலிடம் உணவைக் கொடுத்து விட்டு ஏளனமாக, “முயற்சி மட்டுமே இந்த உணவை அளித்தது. ராம நாம ஜபம் செய்யும் பீர்பலால் கிடைத்தது அல்ல” என்றார்.

உணர்ச்சிவசப்பட்ட பீர்பல் மெளனமாக உணவை உண்டார். உணவிற்கு பிறகு, “இன்று தான் நான் ராம நாமத்தின் மகிமையை உண்மையாக உணர்ந்தேன். நீங்கள் சிறந்த பேரரசராக இருந்தாலும், உணவிற்காக அலைய வேண்டியிருந்தது. ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்ததின் பலனாக எனக்கு கிடைத்தது – நான் மரத்தடியில் உட்கார்ந்த போதிலும் பேரரசரே எனக்காக வேண்டிக் கேட்டு உணவை கொண்டு வந்து சேர்த்தார். இது தான் ராம நாமத்தின் மகிமை” என்று பீர்பல் சொன்னார்.

அக்பர் வாயடைத்துப் போனார்!

நீதி:

முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கடவுளின் பெயரை நாமஸ்மரணம் செய்தால், பல அதிசயங்கள் நடக்கலாம். வேலையே செய்யாமல் கடவுளின் நாமத்தை சொல்லலாம் என்று அதற்கு அர்த்தம் இல்லை. நம் முயற்சிகள் எப்பொழுதும் சிறந்த விளைவுகளைத் தரும் என்று கூற முடியாது. தினமும் சிறிது நேரம் நாம் கடவுளை நினைத்து நன்றி உணர்வோடு இருந்தால், அவர் நம்முடன் இருந்து நம் தேவைகளை பூர்த்தி செய்வார். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை மற்றும் பக்தி தேவை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com