Archives

துன்பமே வெற்றிக்கு வழிகாட்டி

நீதி – நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி – நம்பிக்கை, விசுவாசம் 

பெயர் தெரியாத கதாசிரியர்

ஓர் அரசருக்கு அழகான இரண்டு வல்லூறுகள் பரிசாகக் கிடைத்தன. அவை இரண்டும் அரசன் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் அழகான பைரி வல்லூறுகளாக இருந்தன. அவர் தனது தலைமை பறவை வளர்ப்பவனிடம், அவைகளுக்குப் பயிற்சி அளிக்க ஒப்படைத்தார்.

மாதங்கள் கடந்தன. பறவை பயிற்சியாளன் மன்னனிடம், இரண்டு பறவைகளில் ஒன்று கம்பீரமாக வானத்தில் மிக உயரத்தில் பறப்பதாகவும், மற்றொன்று வந்த நாளிலிருந்தே தான் அமர்ந்த கிளையை விட்டு நகராமல் அங்கேயே உட்காரந்திருப்பதாகவும் கூறினான்.

நாட்டிலுள்ள மருத்துவர்கள், மந்திரவாதிகள் அனைவரையும் அரசர் அழைத்து, பறவையை பறக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் எவராலும் பறவையைப் பறக்க வைக்க முடியவில்லை.

அரசர் இந்தக் கடினமான வேலையை தன் அரசவையிலுள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தார். மறுநாள் காலை அரண்மனை ஜன்னல் வழியாக அரசர் பார்த்த போது,  பறவை இன்னமும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கிளையிலேயே உட்கார்ந்திருந்தது.

அரசர் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும் பலன் இல்லை. இது போன்ற பறவைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் அனுபவம் பெற்றிருப்பார்கள் என்று அரசர் நினைத்தார். ஆகையால் ஒரு விவசாயியை அழைத்து வருமாறு அரசவைக்குக் கட்டளையிட்டார்.

மறுநாள் காலை அந்தப் பறவை அரண்மனை நந்தவனத்தின் மேல் உயரப் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு அரசர் ஆச்சரியமுற்றார். “இந்த அதிசயத்தை நடத்திக் காட்டிய மனிதனை இங்கு அழைத்து வாருங்கள்” என்று அவர் ஆணையிட்டார்.

அந்த விவசாயியும் சற்று நேரத்தில் அரசர் முன் வந்து நின்றான். அரசர் அவனிடம் “இந்த வல்லூறுவைப் பறக்க வைக்க என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் மரியாதையுடன் நின்றிருந்த விவசாயி, “இது மிகவும் சுலபம் மஹாராஜா. பறவை உட்காரந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். அவ்வளவுதான்” என்றான்.

நீதி:

வாழ்க்கை பல தடைகளையும், துன்பங்களையும் நமக்குக் கொடுக்கிறது. அவை நமது வளர்ச்சியை நிறுத்துவதற்கோ துன்பங்கள் கொடுப்பதற்கோ அல்ல; நிறைய அனுபவத்துடன் நாம் முன்னேறுவதற்கு உரிய உதவியையும், சக்தியையும் கொடுப்பதற்கே ஆகும். இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். புரிந்து கொள்வது என்பது துன்பங்களுக்கு தீர்வு காண்பது அல்ல. அந்தத் தடைகளைப் பின் தள்ளி, நாம் முன்னேறிக் கொண்டு இருந்தால் போதுமானது. அச்சம் எனும் கிளையை முறித்து, வெற்றி என்ற வானவெளியில் பறக்க நாம் கற்றுக்கொள்வோமாக. சரியான பாதையில் சுய நம்பிக்கையுடன் சென்றால், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.

“நீங்கள் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் பறவை அல்ல; வானில் பறக்க வேண்டிய பறவை”.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

துணிவே பலன் தரும்

நீதி: நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி: மன உறுதி,  திட நம்பிக்கை

தந்தையும், மகனுமாக இரு குரங்குகள் ஒரு பெரிய மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தன.

மகன் தந்தையிடம் “எனக்குப் பசிக்கிறது; சாப்பிடுவதற்கு சில இலைகளை கொண்டு வர முடியுமா” என்று கேட்டது.

தந்தை மகனைப் பார்த்து புன்சிரிப்புடன், “உனக்கு வேண்டுமென்றால் நீயே போய் எடுத்துக் கொள்” என்று சொன்னது.

அதற்கு மகன் “எனக்கு எப்படி என்று தெரியாது” என்று மறுப்பு தெரிவித்தது.

அதற்குத் தந்தை, “அடிமரம் அருகில் உள்ள காய்ந்த, சுவையில்லாத இலைகளையோ அல்லது கிளையின் நுனிக்குச் சென்று, அங்குள்ள பசுமையான, புதிய இலைகளையோ பறித்து உண்ணலாம்; நீயே தேர்வு செய்து கொள்” என்று சொன்னது.

மகன் “இது முறையல்ல. சுவையான பசும் இலைகள், எல்லோரும் எளிதில் பறிக்கும் இடத்தில் ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டது.

அதற்குத் தந்தை, “அது தான் விஷயம். எல்லோரும் எளிதில் எடுக்கக் கூடியதாக இருந்தால், அந்த இலைகள் இவ்வளவு பசுமையாக இருக்காது” என்றது.

உடனே மகன், “சிறிய கிளைகளுக்கு போவது மிகவும் ஆபத்தானது அல்லவா? கிளைகள் முறியலாம் அல்லது நான் பிடியைத் தவறவிட்டுக் கீழே விழலாம்” என்றது.

அதற்குத் தந்தை “மகனே! நன்கு கவனி. இதை நீ நினைவில் கொண்டால், நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் வெற்றி அடைவாய். மேலும் உனக்கு எப்பொழுதுமே சுவையான இலைகள் உண்ணக் கிடைக்கும். நீ துணிந்து சிறு கிளையில் இறங்கினால், நீ நினைக்கும் அளவிற்கு மோசமாகக் கீழே விழ மாட்டாய்” என்று கூறியது.

மகன் “எல்லாக் குரங்குகளும் மரக்கிளையின் நுனியில் போய் பசுமையான இலைகளை ஏன் எடுப்பதில்லை?” என்று கேட்டது.

அதற்குத் தந்தை “பல குரங்குகள் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, தனக்குப் பிடித்ததை முயற்சி செய்து சாப்பிடாமல், அருகில் கிடைக்கும் மோசமான இலைகளை சாப்பிட்டுக் குறை கூறுகின்றன. மகனே! சவால்கள் நமக்கு முன் உள்ளன. அவைகளை தைரியமாக எதிர்கொள்!” என்று கூறியது.

நீதி:

நம் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகள் நம்முள் இருக்கும் அளவற்ற ஆற்றல்களையும், திறமைகளையும் வெளியே கொண்டு வருகின்றன.  நல்லதையே நினைத்து நாம் முன்னேறிச் செல்வோம். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியோ, தோல்வியோ ஒரு முடிவைக் காண முடியும். அப்போது நம் தவறுகளை அறிந்து, நம்மை மேம்படுத்திக் கொண்டு, இலக்கை அடைய முடியும். சோதனைகள் இல்லாமல் நமக்கு பலன் கிடைக்காது. அதனால் நாம் சவால்களை உறுதியுடனும், சரியான மனப்பான்மையுடனும் எதிர் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்.

சவால்கள் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.

சவால்களை சமாளிப்பதில் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நம்பிக்கையாளரும் அவநம்பிக்கையாளரும்

நீதி: நன்னம்பிக்கை / மாறுதலான சிந்தனை

உப நீதி : சரியான சிந்தனை / சீரான அணுகுமுறை

ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். இருவருக்கும் தோற்றத்தில் மட்டுமே ஒற்றுமை இருந்தது. ஒருவனுக்கு வெப்பம் அதிகமாக இருந்தால் மற்றவனுக்கு குளிர் அதிகமாக இருக்கும். தொலைக்காட்சி மிகவும் சத்தமாக இருப்பதாக ஒருவன் சொன்னால், மற்றொருவன் ஒலியின் அளவை அதிகரிக்கும்படி கூறுவான். எல்லா வகையிலும் நேர் எதிராகவே இருந்தனர். ஒருவன் எச்சமயமும் நம்பிக்கை மனப்பான்மையுடன் இருந்தான், மற்றவன் சிடுசிடுப்பாகவும், அவநம்பிக்கையுடனும் இருந்தான்.

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று, இவர்களின் குணங்களின் வரைமுறையை அறிய எண்ணி, அவர்களின் தந்தை இருவருக்கும் வெவ்வேறு பரிசுகளை தந்தார். கற்பனைக்கு எட்டிய அனைத்து வகையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு சாதனங்களால் அவநம்பிக்கையுடைய மகனின் அறையை நிரப்பினார். நம்பிக்கையுடைய மகனின் அறையை குதிரை உரத்துடன் நிரப்பினார்.

அன்று இரவு தந்தை அவநம்பிக்கையுள்ள மகனின் அறையை கடந்து சென்றார். அவன் தனது புதிய பரிசுகளுக்கு நடுவில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதை அவர் கண்டார்.

தந்தை “ஏன் அழுகிறாய்?” என்று விசாரித்தார்.

அதற்கு அவன் “எனக்கு இவ்வளவு பரிசுகள் கிடைத்ததை அறிந்தால் என் நண்பர்கள் பொறாமைப்படுவார்கள். இந்த சாதனங்கள் எல்லாவற்றையும் உபயோகிக்கும் முன்னர் அத்தனை வழிமுறைகளையும் படிக்க வேண்டி வரும். எனக்கு தொடர்ந்து பேட்டரிகள் தேவைப்படும். இந்த பொம்மைகள் அனைத்தும் இறுதியில் உடைந்து விடும்” என்று பதிலளித்தான்.

நம்பிக்கையுள்ள இரட்டையன் என்ன நினைக்கிறான் என்ற தயக்கத்துடன் தந்தை அவன் அறையை நோக்கிச் சென்றார். அவன் எருக் குவியலின் நடுவில் மகிழ்ச்சியாக நடனமாடுவதை அவர் கண்டார்.

தந்தை “நீ எதை எண்ணி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு அவன், “இங்கு எங்கேயோ மட்டக்குதிரை இருக்க வேண்டும்!” என்று உற்சாகமாக குதித்தான்.

நீதி:

நாம் விரும்புவதை அடைவதற்காக கவனம் செலுத்துவதை விட, வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் நேர்மறையான வாய்ப்புகளைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் நம்மிடம் இருக்கும் மேலான குணங்களையும் திறமைகளையும் கொண்டு வெளிப்படுத்த முடிகின்ற வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடும். நாம் எப்போதும் நம் பாக்கியங்களை எண்ணி, நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

யதார்த்தத்தின் இரட்டை நிலை

நீதி நன்னம்பிக்கை / உண்மை

உபநீதி மற்றவர்களுக்கு மரியாதை, ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை

ஸ்பானிஷ்  கட்டுக்கதை

ஒரு முறை, சுத்தி, திருகாணி, அரத்தாள், நாடா மற்றும் ரம்பம் என எல்லாக் கருவிகளும் தங்கள் வேறுபாடுகளை சீர்படுத்த சந்தித்தன.

அந்த சந்திப்பின் தலைவராக சுத்தி திகழ்ந்தது. குழுவிலிருந்த மற்ற கருவிகள் சுத்தி ராஜினாமா செய்ய வேண்டும் என நினைத்தன. காரணம்? எச்சமயமும் சுத்தி சத்தமாக செயற்படுவதால், தலையே வெடித்து விடும் போல உணர்வு இருப்பதாக மற்ற கருவிகள் நினைத்தன. எல்லோரும் திருகாணியை தலைவராக தேர்ந்தெடுக்க விரும்பின.

சுத்தி, தன்னைப் பற்றிய தீர்ப்பை ஒப்புக் கொண்டது; ஆனால், திருகாணி ராஜினாமா செய்ய வேண்டும் என நினைத்தது. காரணம்? திருகாணி ஒரு செயலை செய்வதற்காக, பல முறை அதை திருக வேண்டியிருக்கிறது. அதனால், அரத்தாளை தலைவராக நியமிக்க வேண்டும் என்று விரும்பியது.

திருகாணி தன்னைப் பற்றிய தீர்ப்பை ஒப்புக் கொண்டது; ஆனால் அரத்தாளும் ராஜினாமா செய்ய வேண்டும் என நினைத்தது. ஏன்? அரத்தாள் நடந்து கொள்ளும் விதம் சற்று கரடுமுரடாக இருப்பதே காரணம் என்றது. திருகாணி சந்திப்பின் தலைவராக, நாடாவை நியமிக்க வேண்டும் என்று கூறிற்று.

அரத்தாள் தன்னைப் பற்றிய தீர்ப்பை ஒப்புக் கண்டது; ஆனால் நாடாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என நினைத்தது. ஏன்? நாடா தன்னை குறைபாடற்றதாகக் நினைத்து, தன்னை மதிப்பளவாக வைத்து எல்லோரையும் அளவு பார்க்கின்றது என அரத்தாள் நினைத்தது.

அச்சமயம், தச்சன் தன் வேலையை ஆரம்பித்து, எல்லாக் கருவிகளையும் பயன்படுத்தி, நாட்டு மரத்திலிருந்து அழகான மரச்சாமானை உருவாகினான்.

தச்சன் தன் வேலையை முடித்ததும், சபை மறுபடியும் கருத்துகளை கலந்தாலோசித்தது. அச்சமயம் ரம்பம், “நம்மிடம் இருக்கும் குறைபாடுகளைப் பற்றி பேசினீர்கள். தச்சனோ நம்மிடம் இருக்கும் நிறைவுகளை பயன்படுத்தினார். அது தான் நம்மை சிறந்தவர்களாக மாற்றியது. அதனால் நம் குறைகளை நினைக்காமல், ஒருமுகச் சிந்தனையோடு நிறைவுகளைப் பற்றியே பேசுவோம்” என்றது.

அப்போது எல்லோருமே உணர்ந்த சில விஷயங்கள்:

சுத்தி திடமாக இருக்கிறது.

திருகாணி சேர்ந்து அதிக வலிமையூட்டுகிறது.

அரத்தாள் பாலிஷ் செய்து கரடுமுரடான மேற்பரப்பை குறைக்கிறது.

நாடா துல்லியமாகவும், சரியாகவும் இருக்க உதவுகிறது.

நாம் ஒரு யதார்த்தமான வாழ்க்கை மட்டுமல்லாமல் இரட்டை நிலைமையான சூழ்நிலையில் வாழ்கிறோம். “யின் மற்றும் யாங்”, “பகல் மற்றும் இரவு” என்று இவ்வுலகில் எல்லாமே இரண்டு நிலைமைகளில் உள்ளன என்பதை நமக்கு உணர்த்துகிறது. இன்பம் மற்றும் துன்பம், வெற்றி மற்றும் தோல்வி, உத்வேகம் மற்றும் மனச்சோர்வு, விருப்புகள் மற்றும் வெறுப்புகள் என நம்மிடமும் இவ்வகையான இரட்டை நிலை நிலவுகின்றன.

இந்த இரட்டை நிலைமையான சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நினைத்தபடி சுமூகமாக கடந்து செல்ல, நேர்மறை மற்றும் எதிர்மறையான விஷயங்களை எதிர்கொண்டு ஆய்வு செய்வதில் மட்டுமே நம் அறிவு உள்ளது.

ஒருவரின் இரட்டை நிலைமை இருவரின் ஒற்றுமை.

நீதி:

நாம் நன்னம்பிக்கை என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, மற்றவர்களிடம் இருக்கும் எந்த பண்புகளாக இருந்தாலும், அவற்றை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருமையே பூரணமான உண்மை; இரட்டைத்தன்மை மாயையே” – ஷ்ரத்தா ஷுக்லா

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

குறி அம்புகள்

நீதி: நன்னம்பிக்கை / அன்பு / அனைத்திலும் இறைவனைக் காண்பது

உப நீதி: ஏற்புத் தன்மை / தெளிவான எண்ணம்

ஒரு இளம் பெண், தன் ஆசிரியரின் வகுப்பில் கிடைத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறாள். அந்த ஆசிரியர், ஒவ்வொரு பாடத்தையும் நுட்பமாக விளக்குவதில் பெயர் பெற்றவர். ஒரு குறிப்பிட்ட நாள் அந்த இளம் பெண், வகுப்பறைக்குள் நுழையும் போதே, அன்று ஏதோ நகைச்சுவையான நிகழ்வு நடக்கும் என எண்ணினாள். மேஜையில் பல குறி அம்புகளும், சுவற்றில் அவைகளை வீசுவதற்கான ஒரு பலகையும் காணப் பட்டன.

ஆசிரியர், வகுப்பில் உள்ள ஒவ்வொருவரையும், அவர்களால் மிகவும் வெறுக்கப்படும் அல்லது அவர்களைக் கோபப்படுத்திய ஒரு நபரின் படத்தை வரையச் சொல்லி, அந்த படத்தின் மேல் குறி அம்பை வீச அனுமதி தந்தார்.  அவளுடைய ஒரு தோழி, தன் நண்பனை தன்னிடமிருந்து பிரித்த ஒரு பெண்ணின் படத்தை வரைந்தாள். மற்றொரு தோழி, தன் இளைய சகோதரனின் படத்தை வரைந்தாள். இளம் பெண், தன் முந்தைய தோழியின் படத்தை வரைந்தாள்; அதுவும் மிகத் துல்லியமாக, முகப் பருக்களைக் கூட விட்டு விடாமல், புள்ளி விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிறகு, தான் வரைந்த ஓவியத்தைப் பார்த்து பெருமிதம் அடைந்தாள். அடுத்து, வகுப்பிலுள்ள அனைவரும் வரிசையில் நின்று, ஒவ்வொருவராக தாங்கள் வரைந்த படத்தின் மேல் நகைச்சுவையாகவும், உரக்க சிரித்துக் கொண்டும் குறி அம்புகளை வீசினர். அவர்கள் வீசிய வேகத்தில், அந்தப் படமே கிழிந்து விட்டது. இந்த இளம் பெண் தன் முறைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்; ஆனால், நேரமின்மை காரணமாக, ஆசிரியர் இந்தச் செயலை நிறுத்திவிட்டு, மாணவர்களை அவரவர் இருக்கையில் அமரச் சொன்னார். தன்னால் மட்டும் அம்பு வீச முடியவில்லையே என்று அவள் மிகவும் கோபமாக அமர்ந்திருந்த போது, ஆசிரியர் மெதுவாக குறி வட்டத்தை சுவற்றிலிருந்து அகற்றினார்.

அப்படங்களுக்குக் கீழே, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் படத்தை கண்டனர். வகுப்பறையே அமைதியானது. இயேசுவின் படம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது; கண்களில் துளைகளும் மற்றும் முகமும் துண்டிக்கப் பட்டிருந்தது.

ஆசிரியர் கீழ்கண்ட வார்த்தைகளைக் கூறினார்…….

“என் உடன் பிறந்தவர்கள் மேல் வெளிப்படுத்திய வெறுப்பு, என்னையே தாக்கியது”.

வேறெந்த வார்த்தைகளும் அங்கு அவசியமாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாணவனும், கண்களில் கண்ணீர் ததும்ப, கடவுளின் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீதி:

கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, எல்லாமே ஒரு காரணத்திற்காக மட்டுமே நடக்கிறது என்ற ஏற்புத் தன்மையோடு, எல்லாவற்றையும் நாம் அங்கேயே விட்டு விட வேண்டும். இந்தத் தெளிவான மனப்பான்மை இருந்தால், வாழ்வது சுலபமாக இருக்கும்.

திருக்குறள்:

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ்சிறப்பு.

(எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி வாழும் வாழ்க்கையே, உலகத்தில் இன்புற்று வாழும் சிறந்த வாழ்வாகும்)

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

சீப்பு விற்பவர்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி – சாமர்த்தியம் / புத்திசாலித்தனம்

பல வருடங்களுக்கு முன், சீப்புகளை விற்கும் ஒரு பெரிய வணிகர் சீனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகிய பிறகு, தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று, அந்தத் தொழிலை அறிவு மற்றும் தகுதியுள்ள ஒருவனுக்கு கொடுக்க ஆசைப் பட்டார்.

வணிகர் தன் மூன்று மகன்களையும் அழைத்து, புத்தத் துறவிகள் வாழுமிடத்தில் சீப்புகளை விற்கும் பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். மகன்கள் அதிர்ச்சியடைந்தனர்; ஏனெனில் அங்கு வாழ்ந்த துறவிகள் அனைவருக்குமே தலை வழுக்கையாக இருந்தது. எனினும், தங்களுக்குக் கொடுத்த பணியை அவர்கள் செயலாற்றினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலாவது மகன் இரண்டு சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை எவ்வாறு முடிந்தது என்று கேட்ட போது, முதுகை சொறிந்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறி, அவற்றை விற்றதாகக் கூறினான்.

துறவிகள் வசிக்கும் இடத்திற்கு புனித யாத்திரை செய்யும் பயணிகள் மற்றும் விருந்தாளிகள் வரும் போது, பயணத்தின் காரணமாக தலை முடி சற்று கலைந்திருக்கும். அந்த சமயத்தில் சரி செய்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என, இரண்டாவது மகன் பத்து சீப்புகளை விற்றதாகக் கூறினான்.

மூன்றாவது மகன் ஆச்சரியப்படும் வகையில் ஆயிரம் சீப்புகளை விற்றதாகக் கூறினான். தந்தை பேரின்பத்துடனும், பதற்றத்துடனும் எப்படி முடிந்தது என்று கேட்டார்.

அதற்கு மகன் “புத்தரின் போதனைகளை சீப்பின் மேல் அச்சடித்து, அதை பரிசாக வருபவர்களுக்குக் கொடுத்தால், தினமும் அவர்கள் தலை முடியை சீவும் போது அதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்” என்ற எண்ணத்தை துறவிகளுக்கு கொடுத்ததாகக் கூறினான்.

இந்த ஆக்கப்பூர்வமான யோசனை வெற்றிகரமாக முடிந்தது!

நீதி:

மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. ஒரு வாய்ப்பை நிராகரித்து, நம்மால் முடிந்ததைக் கூட செய்யாமல் இருக்கலாம். ஆனால், நாம் சிறப்பாக, ஆத்மார்த்தமாக மற்றும் ஆக்கப்பூர்வமாக முயற்சித்தால், வெற்றி நமக்கே.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

மன வேதனை – நமது விருப்பம்

நீதி – நன்னம்பிக்கை / சரியான மனப்பான்மை

உபநீதி – முதிர்வு / சமயோஜித புத்தி / தன்னம்பிக்கை

குடியரசுத்தலைவராக பதவியேற்ற ஆபிரகாம் லிங்கன், முதல் நாளன்று தன் தொடக்க உரையை அளிக்க இருக்கும் போது, பணக்கார ஆட்சி வகுப்பினர் ஒருவர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.

அவர், “லிங்கன் அவர்களே, உங்கள் தந்தை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காலணிகள் செய்து கொடுத்ததை மறந்து விடாதீர்கள்” என்று கூறினார். சபையில் இருந்த அனைவரும் ஆபிரகாம் லிங்கனை கேலி செய்ததாக நினைத்து சிரித்தனர்.

ஆனால் லிங்கன் போன்ற சிலர், உற்சாகமளிக்கின்ற மன திடத்தோடு திகழ்ந்தனர். அந்த மனிதரை உற்றுப்பார்த்த லிங்கன், “உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் தந்தை காலணிகள் செய்ததும் தெரியும், அது போல இங்கு இருக்கும் மற்ற பலருக்கும் என் தந்தை செய்திருக்கக் கூடும் என்றும் நான் அறிவேன்; ஏனெனில் அவர் போல சிறப்பாக காலணிகள் செய்ய வேறு எவரும் இல்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் செய்த வேலையை முழு மனதோடு செய்தார். அவர் செய்த வேலையில் ஏதாவது குறை உண்டா? எனக்கும் காலணிகள் செய்ய தெரியும்; ஏதாவது குறை இருந்தால், நான் உங்களுக்கு மற்றொரு ஜோடி காலணிகளை செய்து கொடுக்கலாம். எனக்குத் தெரிந்த வரை அவர் செய்த காலணிகள் குறித்து ஒரு புகாரும் வந்ததில்லை. அவர் ஒரு மேதை மற்றும் சிறந்த படைப்பாளர் கூட. என் தந்தையை பார்த்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன்” என விவரித்தார்.

சபையில் இருந்த அனைவரும் வாயடைந்து பார்த்தனர். ஆபிரகாம் லிங்கன் எவ்விதமான மனிதர் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. லிங்கன் காலணிகள் செய்வதை ஒரு கலை மற்றும் படைப்பாற்றலாக மாற்றினார். தந்தையின் மீது ஒரு புகார் கூட வராததால், லிங்கன் அவரைப் பார்த்து மிகவும் பெருமைப் பட்டார்.

நீதி:

மனது வேதனைப் படுவதும், படாததும் நம் கையில் மட்டுமே இருக்கிறது. பல மனிதர்கள் அவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களால் நம்மை புண்படுத்துகின்றனர். நமக்கு தன்னம்பிக்கையும், முதிர்ச்சியும் இருந்தால், எதிர்மறையான செயலுக்குப் பதிலாக நாம் ஒரு சூழ்நிலையை சரிவர கையாளுவோம். நாம் வேதனைப் பட வேண்டும் என்று நினைத்தாலே தவிர, எவருமே நம் உணர்வுகளை புண்படுத்த முடியாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அன்பின் மதிப்பு

நீதி – அன்பு / நன்னம்பிக்கை

உபநீதி – தியாகம், பொறுப்புணர்ச்சி

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையுடன் அங்காடிக்குச் சென்றான்…..திடீரென அவள் சற்று தாமதமாக வருவதை கவனித்து, அவன் திரும்பிப் பார்த்தான். அவள் ஒரு பொம்மைக் கடைக்கு முன் நின்றுக் கொண்டு, எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அச்சிறுவன் அவளிடம் சென்று, “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்ட போது, அவள் ஒரு பொம்மையைக் காண்பித்தாள். அவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு பொறுப்பான அண்ணனைப் போல, அந்த பொம்மையை எடுத்து அவளிடம் கொடுத்தான்; தங்கையும் சந்தோஷமாக இருந்தாள்.

கடைக்காரர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, சிறுவனின் பண்பட்ட நடத்தையைப் பார்த்து மகிழ்ச்சியுற்றார்.

அச்சிறுவன் பணம் செலுத்துமிடத்திற்கு வந்து கடைக்காரரிடம், “ஐயா, பொம்மையின் விலை என்ன?” என்று கேட்டான்.

கடைக்காரர் பல துயரங்களை அனுபவித்ததால், விவரமுள்ளவராகவும், புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவராகவும் இருந்தார்; மிகுந்த அக்கறை மற்றும் அன்போடு அவர், “உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்? என்று கேட்டார்.

கடற்கரையிலிருந்து சேகரித்த கிளிஞ்சல்கள் எல்லாவற்றையும் பாக்கெட்டிலிருந்து எடுத்து அவன் கடைக்காரரிடம் கொடுத்தான். அவர் பணத்தை எண்ணுவது போல கிளிஞ்சல்களை எண்ணி விட்டு, சிறுவனைப் பார்த்தார். அச்சிறுவன் கவலையோடு, “குறைவாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “இல்லை, இல்லை…பொம்மையின் விலையை விட அதிகமாக இருக்கிறது. அதனால், மீதியை உன்னிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். அதைக் கூறி விட்டு, நான்கு கிளிஞ்சல்களை மட்டுமே வைத்துக் கொண்டு மீதியை கொடுத்து விட்டார். அவனும் அதை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தங்கையுடன் சென்று விட்டான்.

கடையில் இருக்கும் வேலையாள் ஒருவன் ஆச்சரியமாக இதை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கடைக்காரரிடம், “ஐயா, விலையுயர்ந்த இந்த பொம்மையை நான்கு கிளிஞ்சல்களுக்கு கொடுத்து விட்டீர்களே???” என்றான்.

புன்சிரிப்புடன் கடைக்காரர், “நமக்கு அவை சாதாரண கிளிஞ்சல்கள்; ஆனால், அச்சிறுவனுக்கு அவை மிகவும் விலையுயர்ந்தவை. இந்த வயதில் பணம் என்றால் என்னவென்று அவனுக்கு புரியவில்லை; ஆனால், அவன் வளர்ந்த பிறகு, அவனுக்கு கட்டாயமாக புரியும். அப்படி புரியும் போது, ஒரு பொம்மையை பணத்திற்குப் பதிலாக, கிளிஞ்சல்கள் கொடுத்து வாங்கினான் என்று அவனுக்கு ஞாபகம் வரும். அப்போது என்னை நினைவுப் படுத்திக் கொண்டு, உலகத்தில் பல நல்லவர்கள் இருக்கின்றனர் என்று புரிந்து கொள்வான்.

நீதி:

தியாகத்தில் உண்மையான அன்பின் வெளிப்பாடு தெரியும். அக்கறையும், அன்பும் உள்ளவர்கள் மற்றவர்கள் அவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுமாறு, அன்பான செயல்களை செய்கின்றனர். நம்மால் முடிந்த வரை நல்ல விஷயங்களையே செய்து, மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

பிரச்சனைகளை சமாளிப்போம்

நீதி – நன்னம்பிக்கை

உபநீதி: சமாளிக்கும் மனப்பான்மை

ஒரு முறை, பொருட்காட்சிச்சாலை மற்றும் கலைக்கூடங்களின் அடித்தளத்தில் வாழ்கின்ற சிலந்தி வகைகளில், கலைச்சுவையுள்ள சிலந்தி ஒன்று வாழ்ந்து வந்தது. அழகான ஓவியங்களை வரைந்து, அதைப் பற்றி பல வருடங்கள் மறந்தே போகின்ற இடங்களில் இச்சிலந்தி வகைகள் வாழ்கின்றன. அது சிலந்தி வலைகளை உருவாக்க பொருத்தமான இடம்; ஏனெனில், மனதைக் கவரும் வகையில் அவை இருக்கின்றன. பொருட்காட்சிச்சாலையில் இச்சிலந்தி மிக அற்புதமான சிலந்தி வலைகளை உருவாக்கியிருந்தது. வலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததனால், சிலந்தியின் முழு முயற்சியும் அதை பாதுகாப்பதிலேயே சென்றது.

எனினும், சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பொருட்காட்சிச்சாலை, தனது எல்லா ஓவியங்களையும் சற்று ஒழுங்குப்படுத்தி அமைக்க முன் வந்தது. அடித்தளத்தில் உள்ள சில ஓவியங்களை மாடியில் காட்சிக்கு வைக்க இருந்தது. கீழே வசித்து வந்த பல சிலந்திகளுக்கு இந்த விஷயம் புரிந்ததால் எச்சரிக்கையாக இருந்தன; ஆனால், இந்த ஒரு சிலந்தி இதைப் பற்றி கவலைப்படவில்லை.

இச்சிலந்தி, “சில ஓவியங்களை மட்டுமே காட்சியில் வைப்பதால், கவலைப்பட ஒன்றுமில்லை” என்று நினைத்தது.

இன்னும் பல ஓவியங்களை அடித்தளத்திலிருந்து மாடிக்கு நகர்த்திய பின்பும், இச்சிலந்தி தன் வலையைப் பெருமையாகப் பார்த்து விட்டு, “இந்த இடத்தை விட வேறு எங்கு சிறப்பாக இருக்க முடியும்?” என்று நினைத்தது.

ஒரு நாள் அதிகாலையில், சிலந்தி எதிர்பாராத விதத்தில் அதன் ஓவியம் மற்றும் வலையுடன் அவர்கள் இடமாற்றம் செய்தனர். சிலந்தி தன் வலையை இழக்க விரும்பாததால், காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மற்ற ஓவியங்களுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை புரிந்து கொண்டது.

இச்சிலந்தி, தைரியமாகவும், உறுதியாகவும், வாழ்க்கை முழுவதும் இந்த வலையை கட்டுவதற்காக தான் பாடுபட்ட முயற்சியை கைவிடத் தயாராக இருந்தது. இப்படி செய்ததனால், கண்காட்சியில் வைத்திருந்த ஓவியங்களின் மேல் அடித்த பூச்சி மருந்திலிருந்து அது தப்பித்தது.

அந்த இடத்திலிருந்து தப்பித்து, பல கஷ்டங்களை சமாளித்து, சிலந்தி ஒரு நிசப்தமான பூந்தோட்டத்திற்கு சென்றது. அங்கு ஒரு ஓரத்தில், இன்னும் சிறப்பான வலையை அமைத்து அது சந்தோஷமாக வாழ்ந்தது.

நீதி:

திட நம்பிக்கை மற்றும் தொடர்ந்த கடுமையான உழைப்பு மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வார்த்தைகளை விட பாத்திரமே முக்கியமானது

நீதி: நன்னம்பிக்கை

உபநீதி: சரியாக தேர்ந்தெடுப்பது

who you are speaks to me than anything you can say pictureநான் வேலை செய்து கொண்டிருந்த லாஸ் வேகாஸ், நெவாடா பல்கலைக்கழகத்தில், வகுப்பின் துவக்கத்திற்கு முன்பு, திங்கட் கிழமையன்று, சுமார் 8 மணிக்கு, “வார இறுதி எப்படி இருந்தது?” என என் மாணவர்களிடம் இன்முகமாக கேட்டேன். ஒரு இளம் மாணவன், தன் கடைவாய்ப் பல்லை பிடுங்கியதால், வாரயிறுதி நன்றாக இருக்கவில்லை என்றான். தொடர்ந்து எச்சமயமும் நான் இன்பமாக எப்படி இருக்கிறேன் என்று கேட்டான். அவன் இந்த கேள்வியைக் கேட்டவுடன், நான் எங்கேயோ படித்தது எனக்கு ஞாபகம் வந்தது: “ஒவ்வொரு நாளும், இந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்பது நம் கையில் இருக்கிறது”. மேலும் அவனிடம், “நான் இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறி, ஒரு உதாரணத்தை அவனிடம் விவரித்தேன். பேசிக் கொண்டிருந்த மற்ற 6௦ மாணவர்களும் எங்கள் உரையாடலை கேட்க ஆரம்பித்தனர். நான் மோட்டார் வண்டி நிறுவனத்திற்குச் சென்றவுடன், கட்டிழுப்பு வண்டியை அனுப்பச் சொன்னேன். நகர அலுவலகத்திலுள்ள செயலாளர் நடந்த விஷயத்தைக் கேட்டார். நான் “இன்று எனக்கு அதிர்ஷ்டவசமான நாள்” என்றேன். அதற்கு அவர், “உன் வண்டிக்கு சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது; ஆனால் நீ அற்புதமான நாள் என்று சொல்கிறாயே? என்று குழப்பத்துடன் கேட்டார்.

அதற்கு நான், “இந்த இடத்திலிருந்து நான் வசிக்கும் இடம் 17 மைல் தூரத்தில் இருக்கிறது. நடு வழியில், ஏதாவது ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து இருக்கலாம்; ஆனால், அது போல நடக்காமல், சுற்றுப்புறத்தில் வசதிகள் இருக்கும் இடத்தில் இப்படி ஆனதால், வண்டியை செப்பனிடுவதற்கு தகுந்தவாறு உள்ளது. இன்று நான் வகுப்பில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்த பிறகு, கட்டிழுப்பு வண்டியை ஏற்பாடு செய்வதற்கும் என்னால் முடிந்தது. இன்று என் வண்டிக்கு பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று இருந்திருந்தால், அது எப்படியும் ஏற்பட்டிருக்கும்” என்றேன். செயலாளர் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்தாள். நானும் பதிலுக்கு புன்சிரிப்போடு வகுப்பிற்குள் சென்றேன். லாஸ் வேகாஸ், நெவாடா பல்கலைக்கழகத்தில், பொருளாதார வகுப்பில் நான் மாணவர்களுக்கு சொன்ன கதை இவ்வாறு முடிவடைந்தது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த 60 முகங்களையும் கவனித்தேன். அதிகாலை வேளையாக இருந்தும், ஒருவரும் தூங்காமல் நன்றாக விழித்துக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு விதத்தில், இந்த கதை அவர்களின் மனதில் பதிந்திருந்தது. நான் கலகலப்பாக இருந்ததை கவனித்த ஒரு மாணவனால் நடைப்பெற்ற சம்பவம் என்று இதைக் கூறலாம்.

ஒரு முறை, அறிவாளி ஒருவர், “உன் பேச்சை விட நீ யார் என்பது இன்னும் முக்கியம்” என்றார். அது உண்மை தான் போல இருக்கிறது.

நீதி:

எந்த ஒரு சூழ்நிலையிலும், நல்ல விஷயங்களைப் பார்ப்பது, நம்மை கலகலப்பாகவும், இன்பமாகவும் இருக்க வைக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com