நீதி இருதரப்பிற்குமே

நீதி: சத்தியம், நேர்மை

உப நீதி: தீர்ப்பு, கருணை

மார்ஸுகி என்கிற ஒரு இந்தோனேசிய நீதிபதி, ஒரு மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்திலிருந்து கிழங்கு திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தார்.

அந்த மூதாட்டி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர்  தன் வறுமை, உடல் நலம் குன்றிய மகன் மேலும் பசியால் வாடும் பேரக் குழந்தை ஆகியவற்றைக் காரணம் காட்டினார்.

தோட்ட மேலாளரோ, அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதுவே மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

பத்திரங்களைப் பார்த்த நீதிபதி மூதாட்டியிடம், “என்னை மன்னித்து விடுங்கள். சட்டத்தில் விதிவிலக்கு அளிக்க இயலாது. உங்களுக்குத் தண்டனை உறுதி” என்றார்.

மூதாட்டிக்கு பத்து லட்சம் ருபையா அபராதம் விதிக்கப்பட்டது. சட்ட விதிமுறைப்படி, அவள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த இயலாத மூதாட்டி, மிகவும் வருந்திக் கண்ணீர் சிந்தினார்.

நீதிபதி, தலைப்பாகையை எடுத்து, அதில் பத்து லட்சம் ருபையாவை போட்டு விட்டு, “பசியால் வாடிய பேரக் குழந்தைக்காக பாட்டி திருட வேண்டியிருந்ததால், நியாயத்தை அளிப்பதற்கு, நகரவாசிகளாக இந்த நீதிமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் 50000 ருபையா அபராதம் விதிக்கிறேன்” என்று கூறினார்.

அந்த அவையிலிருந்து, 35 லட்சம் ருபையா வசூலானது. அபராதம் செலுத்திய பின், மீதியிருந்த தொகை அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டது. இதில், அந்தத் தோட்ட மேலாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையும் அடங்கும்.

“தீர்ப்பு ஒரு தரப்பிற்கு மட்டும் அல்ல, இருதரப்பிற்கும் தான்”

எலினோர் ரூஸ்வெல்ட்

நீதி:

நாம் வாழ்க்கையில், பல ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கிறோம். ஆனால் நேர்மையான வழியில் வாழ்க்கையை நடத்தினால், அது நம் சுற்றுப்புறத்திலும், சமுதாயத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் மக்கள், அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீதியைக் கடைபிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விழிப்புணர்வுடன் செயல்படுவர். ஏனெனில், அத்தகைய விழிப்புணர்வு தான், நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடித்து, வழிகாட்டியாக அமைகிறது. நாம் நம் குடும்பப் பொறுப்புகள் மட்டுமல்லாது சமூகப் பொறுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தீர்ப்பு என்பது மனசாட்சியே;

ஒரு தனி மனிதனின் மனசாட்சி அல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மனசாட்சி.

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment