அசாதாரணமான ஆசிரியை

நீதி : அன்பு

உப நீதி: தொடர்பு

பிட்ஸ் & பீசஸ் – ஜூன் 1995, எகனாமிக்ஸ் பிரஸ்

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், பட்டதாரி மாணவ குழுவிற்கு கீழ்வரும் பணியை ஒப்படைத்தார்: சேரிகளை நோக்கி சென்று, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 200 சிறுவர் / சிறுமியர்களை அழைத்து, அவர்களின் பின்னணி மற்றும் சூழல் பற்றி விசாரித்து, விவரங்களை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் . பின்னர் எதிர்காலத்தில் அவர்களது வாய்ப்புகளை கணிக்க வேண்டும்.

மாணவர்களும் சிறுவர் / சிறுமியர்களுடன் பேசி பல புள்ளி விவரங்களையம் சேகரித்து, தொகுத்து கலந்தாலோசித்தனர். பிறகு அவர்களுள் 90 சதவீத சிறுவர்கள் கண்டிப்பாக சிறையில் சில காலம் கழிப்பார்கள் என்ற முடிவிற்கு வந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு பட்டதாரி மாணவ குழுவிற்கு மேற்கண்ட ஆய்வின் கணிப்பையும், தற்போது வாலிப பருவத்தில் உள்ள அதே குழந்தைகளின் நிலையையும் ஒப்பீடு செய்யும் பணி வழங்கப்பட்டது.

மீண்டும் அதே பகுதிக்கு சென்றனர். அங்கே இன்னும் சில சிறுவர் / சிறுமியர்கள் வாலிப பருவத்தில்  இருந்தனர். ஒரு சிலர் இறந்து விட்டிருந்தனர், மேலும் சிலர் அங்கிருந்து சென்றிருந்தனர். ஆனால் அங்கு முதலில் தொடர்பு கொள்ளப்பட்ட 200 நபர்களுள் 180 பேருடன் மறுபடி தொடர்பு கொள்ள இயன்றது. அவர்களுள் நான்கு பேர் மட்டுமே சிறைக்கு சென்றதாக குழுவினர் கண்டறிந்தனர்.

குற்றச் செயல்கள் பெருகி இருந்த கடினமான சூழ்நிலையில் வாழ்ந்த அந்த சிறுவர் / சிறுமியர்களால் எவ்வாறு இத்தகைய வியக்கத்தக்க ஒழுக்கமான நடத்தையை பின்பற்ற முடிந்தது? இந்தக் கேள்வி எழுந்தபோதெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து கூறப்பட்டது ஒரே விதமான பதில் தான்: “உண்மை தான். அதற்கு காரணம் ஒரு ஆசிரியை / ஆசிரியர்.”

அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்து விசாரிக்க, அவற்றுள் 75 சதவீத வழக்குகளில், அது ஒரே ஆசிரியையாக இருப்பதை கண்டறிந்தனர். ஆராய்ச்சி குழு குறிப்பிட்ட அந்த ஆசிரியையிடம் சென்றனர். தற்போது அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு இல்லத்தில் வசித்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பிள்ளைகள் மீது அவரால் எப்படி இத்தகைய குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த முடிந்தது? மேலும் அச்சிறுவர்கள் அவரை எந்த காரணத்திற்காக நினைவு கூர்ந்திருக்கக் கூடும் என்பதற்கான பதிலை அவர் அறிந்திருந்தாரா?

இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்ட போது – “இல்லை. எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெரியாது.” என்று அவர் பதிலளித்தார். பின்னர் சிறிது யோசனையோடு, “பல வருடங்கள் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறேன் – நான் அந்த சிறுவர்களை மிக நேசித்தேன்…. அவர்களுக்கு கற்பிக்கும்போதும் அல்லது உரையாடும்போதும் சரி, மூளையைவிட இதயத்திலிருந்து எனது எண்ணங்களை பரிமாறினேன்” என்று அவர் கேள்வி எழுப்பியவர்களை விட தனக்கு தானே உரக்க சொல்லிக் கொண்டார்.

நீதி:

குழந்தைகளை உருவாக்குவதில் கருத்து தொடர்பு மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இது அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் அமைதியான ஆனால் பயனுள்ள வழியில், அது அவர்களின் இதயத்தைத் தொட்டு, நீடித்த பதிவுகளை விட்டுச் செல்கிறது. தரமான கருத்துக்களை நேர்மறையான முறையில் போதித்தால், குழந்தைகள் சிறப்பாக வடிவமைக்கபட்டு, பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment