பூரண சரணாகதி

நீதி: உண்மை, நம்பிக்கை

உப நீதி: விசுவாசம், சரணாகதி

ஒரு தம்பதியினர் படகில் சென்று கொண்டிருந்தனர். தீடீரென ஒரு பெரும் சூறாவளி ஏற்பட்டதனால் படகு தத்தளிக்க ஆரம்பித்தது.

மனைவி தன் கணவனிடம் “ஏதாவது செய்யுங்கள், நாம் இறந்து விடப் போகிறோம்” என்று பதட்டத்துடன் அலறினாள்.

கணவன் நிதானத்துடனும் அமைதியுடனும் காணபட்டான். சூறாவளி மேலும் சீற்றமடைந்தது. மனைவி பயத்தில் மேலும் கதற ஆரம்பித்தாள்.

கணவன் சட்டென்று கையில் ஒரு கத்தியை எடுத்து, அதை மனைவியின் கழுத்தில் வைத்தான்.

மனைவி கணவனைப் பார்த்து, “இது விளையாடும் தருணமா? இந்த சூறாவளியிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது விளையாட்டு வேண்டாம்” என்று கூறினாள்.

கணவன், “நான் உனக்கு எதிராக கத்தியை நீட்டும் போது கூட நீ என்னிடம் ‘விளையாட வேண்டாம் இது நேரம் அல்ல’ என்று சொல்கிறாய். நான் விளையாட்டாகத் தான் கத்தியை காண்பிக்கிறேன் என்று உனக்கு என்மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது, நாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து அவரது நாடகத்தில் இதுவும் ஒன்று என ஏன் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது?

உடனே மனைவி, “ஒருவேளை நாம் இறந்துவிட்டால்?” என்று கேட்டாள்.

அதற்கு கணவன், “நம்மைக் காப்பாற்றி கொள்ள அனைத்து முயற்சியையும் செய்ய முனைவோம். ஆனால் இவை அனைத்தையும் மீறி, நாம் மோட்சத்தை அடைய வேண்டும் என்று கடவுள் நினைத்தால், அதை ஏற்றுக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இறைவனிடம் உன்னை முழுமையாக சரணடைந்து விடு” என்று விளக்கம் அளித்தான்.

நம் வாழ்க்கையில் நாம் நினைக்கும் திட்டங்கள் சில நேரங்களில் தோல்வியடைகின்றன. கடவுள் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவ்வாறு நடக்கிறது. அவருடைய திட்டங்களே நமக்கு சரியானவை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கற்பித்தல்:

சரணாகதி என்பது நம்மிடம் உள்ள எல்லா எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடுவது தான். நம் அகக்கண்களுக்கு புலப்படவில்லை என்றாலும், நாம் கடவுள் மீது நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும், அதுவே நம் வேட்கையுடன் இணைக்கும் கருவியாகும். கடவுள் நமக்கு சரியானதை மட்டுமே செய்வார் என்ற நம்பிக்கைதான் பக்தியாகும்.

வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நமக்கு புரியாத போதெல்லாம், கண்களை மூடிக் கொண்டு “கடவுளே, இது உங்கள் திட்டம் என்று எனக்குத் தெரியும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள எனக்கு மனவலிமை அளித்து உதவுங்கள்” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment