Tag Archive | Moral value stories in Tamil, Human value stories in Tamil

புதிய வாய்ப்புகளை எப்படி கண்டு பிடிப்பது – அருண்புரங்

நீதி: சாந்தம், உண்மை

உப நீதி: அமைதி  

எம். பி. ஏ படிப்பில் முதன்மை இடம் வகித்த ஒருவர், ஒருமுறை தனது அலுவலக வேலையில் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேலையை செய்வதற்கு அவர் பல புதிய யோசனைகளை கையாள வேண்டியிருந்தது. ஆனாலும், அவரால் ஒன்றும் முடியவில்லை. அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் புதிய யோசனைகளைக் கண்டறிந்து தங்கள் வேலைகளில் வெற்றி பெற்றனர். அவர் தனது சக தொழிலாளர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த போது கோபமடைந்தார். கலங்கிய மனதுடன் புதிய யோசனைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மிகவும் விரக்தியடைந்த அவர், ஒரு ஜென் குருவிடம் சென்று, “கடவுள் எனக்கு முற்றிலும் அநியாயம் செய்துவிட்டார். எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் சிறந்த யோசனைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற அவர் எனக்கு எந்த யோசனையையும் கொடுக்கவில்லை” என்றார்.

துறவி அந்த மனிதரை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு 5 டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் வீசினார்.  பின்னர் அவர், அனைத்தையும் சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார்.  சில நிமிடங்களில் அந்த மனிதர் அனைத்து பந்துகளையும் சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதற்குப் பிறகு, அவரை அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் 5 பந்துகளையும் காட்டில் எறிந்து, அவைகளை சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நொடிகளில் பந்துகள் காட்டில் தொலைந்து போனது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதர் துறவியிடம் வந்து அனைத்து பந்துகளையும் இழந்து விட்டதாகக் கூறினார்.

ஜென் மாஸ்டர் சிரித்துக் கொண்டே, “இந்த பந்துகள் வாய்ப்புகள் போலவும், நிலப்பரப்பு நம் மனதைப் போலவும் இருக்கிறது. நம் மனதில் வேண்டாத விஷயங்களை போட்டுக் கொள்ளும் போது, வாய்ப்புகளை இழக்கிறோம்.  கால்பந்து மைதானம் போல் நம் மனம் தெளிவாக இருக்கும் போது, எல்லா வாய்ப்புகளையும் தெளிவாகப் பார்க்கலாம். அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அவைகளை அறிய விரும்பினால், உங்கள் மூளையில் இருக்கும் தகாத விஷயங்களை அகற்றவும்” என்று கூறினார்.  

நீதி:

வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் வரும் ஒரு சாதகமான நேரம் அல்லது சந்தர்ப்பம்; ஆனால் அதை அடையாளம் காணும் அளவுக்கு ஒருவர் அமைதியாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். நாம் உட்கார்ந்து சிந்தித்தால், கடவுள் நம் வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம்; இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில் உள்ளது. சில வாய்ப்புகள் பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிகிறது; ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய சாதனைகளின் தொடக்கமாகும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்

நீதி: உண்மை

உபநீதி: நேர்மறையான அணுகுமுறை / தன்னம்பிக்கை

ஒரு உணவகத்தில் பியானோ வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒருவர்  இருந்தார். அவர் வாசிப்பதை கேட்பதற்காக பலர் அங்கு வந்தனர். ஆனால் ஒரு இரவு, ஒரு ரசிகர் அவரிடம் பியானோ வாசிப்பதற்கு பதிலாக  பாடல் பாட வேண்டும் என்று விரும்பி கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “நான் பாடுவதில்லை” என்று கூறினார்.

ஆனால் வாடிக்கையாளர் விடாப்பிடியாக இருந்தார். அவர் உணவக உரிமையாளரிடம், “அவர் பியானோ வாசிப்பதை தொடர்ந்து கேட்டு அலுப்பாகி விட்டது. அவர் பாட வேண்டும்!” என்று கூறினார்.

உணவக உரிமையாளர் உரக்கக் குரலில் வாசிப்பாளரிடம், “நண்பா! உனக்குச் சம்பளம் வேண்டுமானால் ஒரு பாடலைப் பாடு. ரசிகர் உன்னைப் பாடச் சொல்கிறார்!” என்றார்.

அதனால் அவர் ஒரு பாடலைப் பாடினார். இதுவரை பொது இடங்களில் பாடாத பியானோ வாசிப்பவர், முதல் முறையாக பாடினார். அன்றிரவு நாட்கிங் கோல், மோனாலிசா என்ற பாட்டை அவ்வளவு அற்புதமாக பாடினார். இதுவரை எவரும் இப்படி ஒரு பாட்டை கேட்டதில்லை.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெயர் இல்லாத உணவகத்தில் பெயர் இல்லாத பியானோ வாசிப்பவராக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் பாட வேண்டியிருந்ததால், அவர் அமெரிக்காவில் எல்லோரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த நபராக மாறினார்.

நீதி:

திறமை என்பது ஒரு நபரின் இயல்பான திறன், கற்பிக்கப்படாமலேயே ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்கும். உங்கள் திறமையை கண்டறிந்து, முழு திறனையும் வெளிக்கொணருங்கள். மகத்துவத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாகும்.

நம் அனைவருக்கும் சமமான திறமைகள் இல்லை, இருப்பினும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது” – ரத்தன் டாடா

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுள் எதிர்பார்ப்பு இல்லாமல் அளிப்பார்

நீதி: அன்பு / இரக்கம்

உபநீதி: நிபந்தனையற்ற அன்பு, பச்சாதாபம்

சி. எஸ். லெவிஸ், தன் புத்தகமான  “ஃபோர் லவ்ஸ்” ல் கிரேக்கிய மொழியில் அன்புக்கு கொடுத்திருக்கும் விளக்கத்தை நான்கு வகைகளாக பிரிக்கிறார் – பாசம், நட்பு, தெய்வீக அன்பு மற்றும் தர்மம் அல்லது கருணை. இறுதியாக வரும் தர்மம் அல்லது கருணை தான் மிகச் சிறப்பானது, மற்றும் நிபந்தனையற்ற அன்பு எனக் கூறலாம். அதை கடவுளின் மேல் பற்று அல்லது அளவில்லா அன்பு என்றும் எல்லையற்ற முடிவிலா அன்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். அளவில்லா அன்புக்கு சிறந்த உதாரணம் “தாயின் அன்பு”. அது கொடுப்பதற்கு மட்டுமே, பெறுவதற்கு அல்ல.

“தி ராக்” என்ற இதயபூர்வமான கதையில் நிபந்தனையற்ற அன்பைப் பற்றி ஸ்டீவ் குடியர் விவரிக்கிறார் .

http://stevegoodier.blogspot.com/

“பருவ வயதில் இருந்த ஒரு பெண்ணை  கையாள முடியாத அளவிற்கு, நிலைமை மோசமாகி விட்டது. சூழ்நிலை  உச்சநிலைக்கு வந்த பிறகு, திடீரென ஒரு நாள், அந்த பெண் குடித்து விட்டு வண்டியை  ஓட்டியதால், அவளை காவல்காரர்கள் கைது செய்தனர். அங்கிருந்து அவளை அழைத்து வருவதற்காக, அவள் தாய் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. 

மறு நாள் மத்தியானம் வரை, அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.

அந்தப் பதற்றத்தை தாய் மிகவும் அழகாக சமாளித்தார். தாய் அவளுக்கு  போர்த்தப்பட்ட ஒரு பரிசு பெட்டியைக் கொடுத்தார்.

அவள் சளைக்காமல் பரிசை திறந்த போது, உள்ளே ஒரு சிறிய பாறை இருந்தது.

அவள் கண்களை உருட்டிக் கொண்டு, “இது என்ன அம்மா?” என்று கேட்டாள். 

அதற்கு தாய், “குறிப்புகளை படித்து பார்” என்றார்.

அவள் அட்டையை மேலுறையிலிருந்து வெளியே எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

அட்டையின் மேல் இவ்வரிகள் இருந்தன: “இந்த பாறை 200,000,000 வயதிற்கு மேற்பட்டது. நானும் உன்னை அப்படி விட்டு விட மாட்டேன். இந்த பாறையின் வயது எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு சமயம் நானும் உன்னுடன் இருப்பேன்” என்று கூறினார். 

தாய், “நீ இவ்வாறு செய்தால் நான் உன்னை விரும்புவேன்……. என்று கூறாமல், எச்சமயமும் நான் உன்னை நேசிப்பேன். அதில் மாற்றம் எதுவும் இருக்காது” என்று கூறுகிறார்.

உன்னதமான  உதாரணம் என்னவென்றால், நிபந்தனையற்ற அன்பு ஒரு நபரையும், அவன் நடவடிக்கையையும் பிரித்து பார்க்கிறது. அவள் பெண்ணின் நடவடிக்கையை தான் கவனிக்க வேண்டும்; அவளை அல்ல என்று தாய் புரிந்து கொண்டார்.

நிபந்தனையற்ற அன்பு மிகவும் முக்கியம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவும், காற்றும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நிபந்தனையற்ற அன்பு. உறவுமுறைகள், குடும்பங்கள்……….நாம் எங்கு சென்றாலும் நமக்கும் வேண்டும். ஏன்? நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நம்மை பாதிக்கும்; நாம் வாழும் கிரகத்தையும் பாதிக்கும். அன்பில்லாமல் இருப்பதால் தான், தற்சமயம் நிலவிக் கொண்டிருக்கும் அமைதியின்மை, வன்முறை, மது அருந்துதல் அதிகரிக்கும் நிகழ்வுகள், போதைக்கு அடிமையாதல், நிரம்பி வழியும் சிறைகள் எல்லாமே இருக்கின்றன.

நிபந்தனையற்ற அன்புடன் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பான மனப்பான்மை, மன்னிக்கும் குணம், மரியாதை போன்ற நற்பண்புகள் மூலம் நாம் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தலாம். அதற்கு வாழ்க்கை நமக்கு பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. உலகை மாற்றுவதற்கு நம்மிடம் அளவில்லா சக்திகள் உள்ளன. நம்மைச் சுற்றி சந்தோஷத்தை பரப்ப நம்மிடம் அற்புதமான வாய்ப்புகள் உள்ளன. நாம் தங்கும் கிரகத்தையும் மற்றும் நம்மையும் மாற்றிக் கொள்ள நம்மால் முடியும். இரக்கம், பொருட்படுத்தாமல் விட்டுவிடும் மனப்பான்மை போன்ற கருவிகளை பயன்படுத்தி , தினமும் நாம் எதிர்கொள்கின்ற எதிர்மறையான விஷயங்களை சுலபமாக சந்திக்கலாம்.

நீதி:

ஈர்ப்பு விதி இங்கே ஒரு பெரிய அளவில் செயல்படுகிறது. நாம் அன்பை பகிர்ந்து கொண்டால், சுற்றுப்புறத்திலிருந்து நமக்கு அதிக அளவில் அது திரும்ப கிடைக்கும்.

அன்பு எதுவுமே எதிர்பார்ப்பதில்லை. அதற்கு பயமும் தெரியாது. கடவுள் எதுவுமே எதிர்பார்க்காமல் அளித்துக் கொண்டே இருப்பார் . அன்பு கெடுதலை நினைக்காது; அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அன்போடு இருப்பதின் அர்த்தம், பகிர்ந்து கொள்வதும் சேவை செய்வதும் மட்டுமே – ஸ்வாமி சிவானந்தா

ஜாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல், நம் ஆழ்ந்த மனதில் அதிக அளவு அன்பு இருக்கிறது. நாம் தான் அதை ஆராய்ந்து, புரிந்து கொண்டு, உள் மனதில் இருக்கும் அன்பை வெளியே கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால், இந்த கிரகத்தில் வாழ்வதற்கு அர்த்தம் இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஒருவரின் வலிமையை வெளிப்படுத்தும் வழிகள்

நீதி – நன்னடத்தை, உண்மை

உபநீதி – விசுவாசம், சுய நம்பிக்கை, நேர்முறையான அணுகுமுறை, ஏற்புத் தன்மை, மன்னித்தல்

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீ யுக்தேஸ்வரர், “சில மனிதர்கள், மற்றவர்களை தாழ்வுபடுத்தி, தங்களை உயர்ந்த நிலையில் காண்பித்து கொள்ள விருப்பப் படுவார்கள்” என்று கூறினார்.

கல்வி பயிற்சியாளரான டி. வாஷிங்டனின் பார்வையில், “ஒருவரின் வலிமையை வெளிப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று,மற்றவர்களை  தாழ்வு படுத்துவது; மற்றொன்று அவர்களை உயர்ந்த நிலையில் காண்பிப்பது”. தினசரி வாழ்க்கையில் இவ்விரண்டு வகை மனிதர்களோடு நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

யார் நம்மை உயர்ந்த நிலையில் காண்பித்து, நம் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கிறார்களோ, அவர்கள் நேர்முறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

யார் நம் மன நிலையை புண்படுத்தி, நம்மை தாழ்வு படுத்துகிறார்களோ, அவர்கள் எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்கள்.

தெளிவாக, நாம் முதல் வகையான மனிதர்களை மட்டுமே விரும்புவோம். எல்லோருக்கும் உற்சாகம் தேவை. உலர்ந்த தொண்டைக்கு குளிர்ந்த நீர் எப்படி அவசியமோ, அது போல உற்சாகம் நம் வாழ்க்கைக்கு தேவை.

துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கின்றார்கள். உலகம் இயங்குவதற்கு, எல்லாமே தேவையாக இருக்கிறது.  நேர்மறையான மனிதர்களோடு பழகுவது நமக்கு நன்மை பயக்கும். அவர்களை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மறையான அணுகுமுறை கொண்ட மனிதர்களிடம் ஓர் ஈர்ப்பு இருக்கின்றது. எதிர்மறையான மனப்பான்மை கொண்ட மனிதர்களிடம் பழகுவது தான் சற்று கடினமாக இருக்கிறது. அவர்களின் சகவாசம் நமக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுக்கிறது. அதனால் நம் சுய நம்பிக்கை குறைவாகி, நாமே நம்மை சந்தேகப் படும் நிலை வருகிறது.  

இவ்வகையான மக்களை எப்படி சமாளிப்பது? பெரிய விஷயம் இல்லை.

நாம் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்; இல்லையெனில் அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். பொறாமையால் ஒருவன் மற்றவனை தாழ்த்தும் போது, அவனை பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். பாரபட்சம் இல்லாமல், உண்மைகள் சார்ந்த திறனாய்வு கொண்ட மனிதர்களை ஏற்றுக் கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும், மற்றவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, ஏன் அப்படி செய்தார்கள் என்று யோசித்து, தீர்வு காண வேண்டும். 

இன்னொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். மற்றவர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும். அவர்களை மாற்றுவது நம் வேலை அல்ல; நம்மை நாமே மாற்றிக் கொண்டு, நம் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மற்றொறு வழி என்னவென்றால், இவ்வகையான மக்களை விட்டு விட்டு, நாம் முன்னேற்றத்திற்கான வழியை பார்க்க வேண்டும்.

இறுதியில் நாம் ஓர் உயர்ந்த வழியை மேற்கொள்ளலாம். இவ்வகையான மக்களிடம் உங்களின் அன்பை செலுத்துங்கள். மிகக் கடுமையான வழி, ஆனால் அப்படி செய்ய முடிந்தால், நன்மை பயக்கும். மற்றவர்களிடம் இல்லாததை நாம் அவர்களுக்கு அளிக்கலாமே. நம் மனதை புண்படுத்துபவர்களுக்கு அன்பு கொடுக்கலாமே! எந்த பண்பு அவர்களிடம் இல்லையோ அதை நாம் கொடுக்கலாமே.

வாழ்க்கை  பெரிய சவால் அல்ல. சில மனிதர்கள் நம்மை தாழ்த்தினாலும், நம்மை உயர்த்துவதற்கு பல மனிதர்கள் இருக்கின்றனர். நாம் உயர்ந்த மனிதர்கள் ஆவதற்கு வாழ்க்கை நமக்கு வாய்ப்பு அளிக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், நன்றி உணர்வோடு இருப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீதி:

அன்பான மனப்பான்மையை மேம்படுத்துவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அன்புடன், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மற்றும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொண்டால், சூழ்நிலைகளை சுமூகமாக சமாளிக்கலாம். முயற்சிகள் எடுத்தும், மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களை விட்டு விட்டு முன் செல்ல வேண்டும். பச்சாதாபம், புரிதலை மேம்படுத்தி மதிப்பீடு செய்யும் குணத்தை தவிர்க்க வழி வகுக்கிறது. மற்றவர்களை மாற்றுவதற்கு பதிலாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் மன்னிக்கும் மனப்பான்மையை தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். மற்றவர்களை மன்னிக்கும் போது, சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். மேலும் குழப்பமான எண்ணங்கள் இருக்கும் போது, உடல் மற்றும் மன ஆற்றல் பலவீனமாகிறது.  மன்னித்தல்  அந்த சூழ்நிலையை சரி செய்து, நம் நலனை மேம்படுத்துகிறது. ஏற்புத் தன்மை மற்றும் மன்னித்தல்  வாழ்க்கையின் இரு தூண்கள்; நம்மை மன அமைதியுடன் இருக்க வழி வகுக்கிறது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் அர்த்தம்

நீதி: உண்மை

உப நீதி: உள்நோக்கம், ஏற்புத் தன்மை  

ஒரு பெரும் பணக்கார இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதற்காக ஒரு குருவைப் பார்க்கச் சென்றான்.

குரு அவனை ஜன்னலுக்கு அழைத்துச் சென்று, “கண்ணாடி வழியாக என்ன பார்க்க முடிகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ஆண்கள் வந்து போவதையும், பார்வையற்ற ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதையும் பார்க்கிறேன்” என்றான்.

அப்போது குரு, ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி அவனிடம், “இந்தக் கண்ணாடியைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று சொல்” என்றார்.

அதற்கு அவன், “என்னால் என்னைப் பார்க்க முடிகிறது” என்றான்.

குரு, “ஆம். ஆனால், மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டும் ஒரே அடிப்படைப் பொருளான கண்ணாடியால் ஆனது என்பதைக் கவனி; ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில், கண்ணாடிக்குப் பின்னால் மெல்லிய வெள்ளி முலாம் பூசப்பட்டிருப்பதால், நீ பார்க்கக் கூடியது உன்னை மட்டுமே.

இந்த இரண்டு வகையான கண்ணாடிகளுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஏழை – நீ மற்றவர்களைப் பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்கிறாய்.

பணக்காரர் – வெள்ளி முலாம் பூசப்பட்ட நீ, உன்னை மட்டுமே பார்க்கிறாய்.

உன் கண்களை மூடும் வெள்ளித் திரையைக் கிழித்தெறியும் தைரியம் உனக்கு இருந்தால் தான், உன்னால் சக மனிதர்களை நேசிக்க முடியும். மேலும், நீயும் மதிக்கத் தக்கவனாவாய்” என்று கூறினார்.

நீதி:

நாம் ஒருபோதும் பிறரைப் பற்றித் தீர்ப்பளிக்கக் கூடாது, ஏனெனில், நாம் அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கிறோம். இவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள், வெளித்தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நல்லதைக் காண்பதையும் தடுக்கிறது. எனவே, மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றித் தீர்மானிக்கும் முன், நம்மைப் பற்றிய ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடங்க வேண்டும்; பின்னர், நம் கண்ணோட்டமும் மாறும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரார்த்தனையின் மகிமை

நீதி: அன்பு, உண்மை

உப நீதி: திட நம்பிக்கை

சத்ய சாயி பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகள் – மே 16, 1964.

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர் வேலை விஷயமாக மும்பை போக வேண்டியிருந்தது. அங்கிருந்து, நான்கு மனைவிகளுக்கும் என்ன  வேண்டுமோ கொண்டு வருவதாக கடிதம் எழுதியிருந்தார்.

முதல் மனைவி, உடல் ஆரோக்கியத்திற்காக மருந்துகளும், உடல் நலம் சரியில்லாத போது பயன்படுத்துவதற்காக விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகள் கேட்டிருந்தாள்.

இரண்டாவது மனைவி, சமீபத்தில் வெளிவந்த அழகான புடவைகள், நகைகள் மற்றும் பற்பல அலங்கார பொருட்கள் கேட்டிருந்தாள்.

மூன்றாவது மனைவி,  ஞானேஸ்வரி போன்ற தெய்வீக புத்தகங்கள், கவிதைகள் வடிவத்தில் அபங் பாடல்கள்  மற்றும் பண்டரிநாத், பவானி மற்றும் சாயி பாபா இவர்களின் படங்களைக் கேட்டிருந்தாள்.

நான்காவது மனைவி, “நீங்கள் ஜாக்கிரதையாக திரும்பி வந்தால், அதுவே எனக்கு போதுமானது” என்றாள்.

மற்றவர்கள் எல்லோருக்கும் பெரிய பெட்டிகள் நிறைய சாமான்கள் கிடைத்தன; ஆனால் நான்காவது மனைவிக்கு அன்பு கிடைத்தது.

கடவுள்,  நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அளிப்பார்; அதனால், எதைக் கேட்க வேண்டும் என்று நன்றாக யோசித்த பிறகு, கேளுங்கள்.

நீதி:

நம்மைச் சுற்றி பல அன்பானவர்கள் சூழ்ந்திருக்கும் போது, நமக்கு ஆறுதலாக இருக்கும். அன்பு இருந்தால், எதை செய்ய வேண்டுமானாலும் நன்றாக செய்யலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்பை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. அன்பு, வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறது.

ஆழ்ந்த அன்பை பெறும் போது, சக்தி கிடைக்கிறது; ஆழ்ந்த அன்பை அளிக்கும் போது, தைரியம் கிடைக்கிறது – லாவோ சு

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

ஊசியா கத்தரிக்கோலா

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: ஒற்றுமை

ஒரு உன்னதமான தையற்காரர் பெரிய ரிஷியாக மாறினார்.

அரசர் அவரிடம் தலை வணங்கி, வைரங்களால் பொறிக்கப்பட்ட தங்க கத்தரிக்கோலை அளிக்க வந்தார்.

ரிஷி அதை ஏற்க மறுத்து விட்டார். அவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அரசர் வருத்தமுற்றார்.

அதனால் அரசர் அவரிடம், “நீங்கள் உபயோகிக்கும் வகையில் நான் உங்களுக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார்.

அதற்கு ரிஷி, “எனக்கு ஒரு ஊசி வேண்டும்” என்றார்.

உடனடியாக அரசர் ஒரு ஊசியை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுத்தார். பிறகு, ரிஷியின் பதிலுக்காக பொறுமையுடன் அரசர் காத்துக் கொண்டிருந்தார்.

ரிஷி, “நான் கத்தரிக்கோலை ஏற்றுக் கொள்ளாத காரணம், அது வெட்டி, பிரிவை ஏற்படுத்துகிறது. நம் மனமும் அப்படிதான்; கத்தரிக்கோலை போன்றது. ஆனால் ஊசி சேர்த்து தைத்து, ஒன்றாக்குகிறது. நம் இருதயம் ஊசியைப் போன்று உறவுகளை சேர்த்து ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

இன்றைய சமுதாயத்திற்கு ஊசி தான் தேவைப்படுகிறது; கத்தரிகோல் அல்ல!

நீதி:

ஒற்றுமையின் அடித்தளம் நம்பிக்கை; அதனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், ஒற்றுமையாக செயற்பட முடியும். ஒற்றுமையாக இருந்தால் செயற்படுவது சுலபமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில், நாம் தனியாக ஒரு வேலையை செய்ய முடியாது; மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. ஒற்றுமை என்ற ஒழுக்கமான நடத்தை நமக்கு சக்தி கொடுக்கிறது. நமக்கு மன வலிமை இருந்தால், எந்த ஒரு சூழ்நிலையையும் ஒற்றுமையாக எதிர்கொண்டு, வெற்றிகரமாகத் திகழலாம்.

பணிவு ஒற்றுமைக்கு வழி வகுக்கும்; ஒற்றுமை நிம்மதியை அளிக்கும் – மதர் தெரேசா

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கை ஒரு யதார்த்தம், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்

நீதி: உண்மை

உப நீதி : ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை  / நம்பிக்கை

ஒரு தாயின் வயிற்றில் இரண்டு சிசுக்கள் இருந்தன.

ஒன்று மற்றொன்றிடம்,  “பிரசவத்திற்குப் பிறகு கூட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டது.

அதற்கு இரண்டாவது சிசு, “ஏன் அப்படி கேட்கிறாய்? கண்டிப்பாக இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு ஏதாவது இருக்க வேண்டும். ஒருவேளை நாம் பிற்காலத்தில் என்னவாக இருப்போம் என்பதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள, இங்கே தற்காலிகமாக இருக்கக் கூடும்” என்று கூறியது.

முதல் சிசு அவநம்பிக்கையுடன் ,”முட்டாள்தனம் – பிரசவத்திற்குப் பிறகு வாழ்க்கை நிச்சயம் இல்லை. அப்படி இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கேட்டது.

அதற்கு இரண்டாவது சிசு “தெரியாது, ஆனால் இங்கு இருப்பதை விட வெளிச்சமாக இருக்கும். மேலும் கால்களின் உதவியால் நம்மால் நடக்க இயலும், வாயினால் உண்ண இயலும் என தோன்றுகிறது” என்றது.

“இது முட்டாள்தனமானது! நடப்பது சாத்தியமற்றது. வாயால் சாப்பிடுவதா? அபத்தமான எண்ணம். தொப்புள் கொடி ஊட்டச்சத்தை அளிக்கிறது. தொப்புள் கொடி மிகவும் சிறியது அதனால் வாழ்க்கை என்பது பிரசவத்திற்குப் பிறகு விலக்கப்படும்.” என்று முதல் சிசு ஆணித்தரமாக கூறியது.

அதற்கு மற்றொன்று, “ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், இங்கே இருப்பதை விட அங்கு வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது” என்று பதில் அளித்தது.

“வெளியே சென்றவர் எவரும் அங்கிருந்து திரும்பி வந்ததில்லை. பிரசவம் என்பது வாழ்க்கையின் முடிவு, பிரசவத்திற்குப் பிறகு இருளும் பதற்றமும் தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. அது நம்மை எங்கும் அழைத்துச் செல்ல போவதில்லை.” என்று முதல் சிசு மீண்டும் கூறியது.

“எனக்கு சரியாகத் தெரியாது எனினும் நிச்சயமாக நாம் நம் தாயாரை பார்ப்போம், அவர் நம்மை நன்கு கவனித்து கொள்வார்” என்று இரண்டாவது சிசு கூறிற்று.

“தாயாரா??” அம்மா இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று முதல் சிசு கேட்டது.

“அவள் நம்மைச் சுற்றி இருக்கிறாள். அவளில் தான் நாம் வாழ்கிறோம். அவள் இல்லாமல் இந்த உலகமே இல்லை.” என்றது இரண்டாவது சிசு.

“நான் அவளைப் பார்த்ததில்லை. அதனால் தர்க்கரீதியாக பார்த்தால் தாய் என்றவள் இல்லை என்பதே உண்மை.” என்று முதல் சிசு விவாதித்தது .

அதற்கு இரண்டாவது சிசு, “சில நேரங்களில் நீ அமைதியாக இருக்கும்போது அவளின் குரலை கேட்கலாம், அவளை உணரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஒரு உண்மை இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அந்த யதார்த்தத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவே  நாம் இங்கே இருக்கிறோம்.” என்று கூறியது.

நீதி:

வாழ்க்கை என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சையான தொடர் மாற்றங்களின் தொகுப்பாகும். அந்த மாற்றங்களை எதிர்க்காதீர்கள், அது துக்கத்தையே உருவாக்கும். யதார்த்தம் எதுவோ அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலைகளால் நமது புலனுணர்வு திறனில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, மெய்ப்பொருளை முழுமையாக உணர முடியாமல் போகலாம். அதனால் மெய்ப்பொருள் கற்பனையானது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பக்தி /விசுவாசம் என்பது நம்பிக்கையில் அடங்கியுள்ளது; நம்பிக்கையே ஒருவரை பலப்படுத்துகிறது.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

மனம் ஒரு குரங்கு

நீதி : உண்மை

உப நீதி : பற்றின்மை / ஞானம்

சூஃபி கதை

ஜுனைத் என்று ஒரு ஆன்மீகவாதி இருந்தார்.

ஒரு நாள் அவர் தனது சீடர்களுடன் நகரத்தின் சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் எந்த ஒரு சூழ்நிலையையும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அதைப் பயன்படுத்தி கற்பிப்பது அவருடைய சிறப்பு.

அப்போது ஒரு மனிதன் தனது பசுவை ஒரு கயிற்றால் இழுத்து சென்று கொண்டிருந்தான். ஜுனைத், அந்த மனிதனிடம் “சற்று பொறுங்கள்” என்று கூறி, தனது சீடர்களிடம், ‘இந்த மனிதனையும் பசுவையும் சுற்றி நில்லுங்கள், நான் உங்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பிக்கப் போகிறேன்’ என்றார்.

அந்த மனிதனும், ஜுனைத் இந்த சீடர்களுக்கு, தன்னையும் பசுவையும் எப்படிப் பயன்படுத்தி, சீடர்களுக்கு என்ன பாடம் கற்பிக்கப் போகிறார் என்ற ஆர்வத்தில் காத்திருந்தான்.

ஜுனைத் தனது சீடர்களை நோக்கி, ‘நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். இங்கு யார் யாருக்குக் கட்டுப்பட்டவர்கள்? மாடு இந்த மனிதனுக்கு கட்டுப்பட்டதா அல்லது இந்த மனிதன் இந்த மாட்டுக்கு கட்டுப்பட்டவரா?’ என்று கேட்டார்.

அதற்கு சீடர்கள், “சந்தேகமென்ன! பசுதான் மனிதனுக்குக் கட்டுப்பட்டது. இம்மனிதன் எஜமானன்; அவன் கயிற்றைப் பிடித்திருக்கிறான், அவன் எங்கு சென்றாலும் பசு அவனைப் பின்தொடர வேண்டும். அவன் எஜமானன், பசு அடிமை’ என்று பதில் அளித்தனர்.

இதற்கு ஜுனைத், ‘இப்போது பாருங்கள்’ என்றபடி தனது கத்தரிக்கோலை எடுத்து கயிற்றை அறுத்தார். மாடு தப்பி ஓடியது. அந்த மனிதன் பசுவின் பின்னால் அதை பிடிக்க ஓடினான். ஜுனைத் தொடர்ந்து, “இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா. எஜமானர் யார் என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்கள்? மாடு இந்த மனிதனில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை – உண்மையில், அது தப்பிக்க எண்ணுகிறது” என்று கூறினார்.

அந்த மனிதன் மிகவும் கோபமடைந்தான். ‘இது என்ன மாதிரியான பரிசோதனை?’ என்றான்.

ஜுனைத் தன் சீடர்களிடம், “நம் மனதின் நிலையும் இப்படிதான். நாம் சுமக்கும் அனைத்து முட்டாள்தனமான எண்ணங்களுக்கு நம் மீது ஆர்வம் இல்லை. நாம் தான் அதில் ஆர்வம் காட்டுகிறோம். அந்த எண்ணங்களை சேகரித்து வைத்து கொண்டு நாம் பைத்தியமாகி விடுகிறோம். நாம் அவற்றில் ஆர்வத்தை இழக்கும் தருணம், அதன் பயனற்ற தன்மையை புரிந்து கொள்ளும் நொடி, அந்த தேவையற்ற எண்ணங்கள் தாமாகவே மறைந்துவிடும்; பசுவைப் போல் தப்பித்துவிடும்” என்று கூறினார்.

நீதி:

மனிதன் தன் விருப்பு வெறுப்புகளைப் பற்றிக் கொண்டு அவற்றிற்குக் கட்டுப்படுகிறான். விருப்பு / வெறுப்பு போன்ற உணர்ச்சிகளில் சிக்கி கொள்வதும் மேலும் பற்று என்ற ‘கயிற்றால்’ பிணைக்கப்படுவதும் ஒரு கொடிய சுழற்சியாகும், இதன் மூலம் பற்றுதலின் எண்ணிக்கை அதிகரிக்கும், கயிறு மேலும் மேலும் இறுகும். இதிலிருந்து தப்பித்து சுதந்திரம் அடைய ஒரே வழி, பற்றுதல் என்ற ‘கயிற்றை’ விடுவதுதான்.

பகவத் கீதையின் (அத்தியாயம் 2 செய்யுள்கள் 62 மற்றும் 63) இரண்டு செய்யுள்களில் மேற்கூறியவற்றை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார். “ஒருவர் தனது கவனத்தை ஒரு பொருளின் மீது செலுத்தும் போது, பற்றுதல் ஏற்படுகிறது. அத்தகைய பற்றுதலில் இருந்து ஆசை அதிகமாகிறது, அது நிறைவேறினால் பேராசைக்கும், நிறைவேறாவிட்டால் / திருப்தியடையாவிட்டால் கோபத்திற்கும் வழி வகுக்கிறது (பாகவதம் 9.19.13). இந்த உணர்ச்சிகள் மதி மயக்கத்திற்கு வழி வகுக்கிறது, இதன் விளைவாக மனம் குழப்பமடைகிறது. அவ்வாறு குழப்பமான நிலையில் இருந்தால், மூளை சரியாக வேலை செய்ய முடியாமல் புத்தி அழிந்துவிடும்; மேலும் புத்தி அழிந்தால் ஒருவனது நிலை தவறி நினைவும் தவறி வாழ்க்கை பாழாகிறது. ஆக, உலகில் மனிதனின் துயரங்களுக்கு மூல காரணம் பற்றுதல்தான்”.

பகவத் கீதையில் (அத்தியாயம் 2 செய்யுள் 64) விளக்கப்பட்டுள்ளது போல, ஐம்புலன்களை உபயோகிக்கும் பொழுதும் எவர் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்தி, விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு செயல்படுகிறாரோ அவர் கடவுளின் அருளைப் பெறுவார்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நீதி நிலைக்க வேண்டும்

நீதி: உண்மை

உப நீதி : நியாயம்

விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதை

முன்பொரு காலத்தில் ஒரு வயதானவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த பக்திமான் மட்டுமல்லாமல் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.

அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு பணக்கார வணிகர். ஒருமுறை வியாபார விஷயமாக அவருக்கு பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. அதனால் முதியவரிடம் தான் திரும்பி வரும் வரை தனது செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதியவரும் ஒப்புக் கொண்டார். மேலும் கடவுளை சாட்சியாகக் கொண்டு, வணிகரின் செல்வத்தைக் காப்பாற்றி, பாதுகாப்பதாகவும் உறுதியளித்தார்.

வணிகரின் செல்வத்தை பாதுகாக்கும் பொறுப்பை முதியவர் தனது மகனிடம் ஒப்படைத்தார். அவனிடம் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைப்பிடிக்குமாறு, அவர் உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.

ஆனால் மெதுவாக மகன் அந்த வியாபாரியின் செல்வத்தில் கை வைக்கத் தொடங்கினான். இதைக் கவனித்த மக்கள், மகனின் தவறான போக்கைப் பற்றி, முதியவரிடம் எச்சரித்தனர்.

தனது மகனை அழைத்த முதியவர் அவனிடம் விளக்கம் கேட்டார். மேலும் அவன் சரியான பாதையில் செல்வதாக  தமக்கு அளித்த உறுதிமொழியை, அவனுக்கு நினைவூட்டினார். மகன் அந்த குற்றச்சாட்டுகளை வீண்பேச்சு என்றும், தன்னுடைய முன்னேற்றத்தை கண்டு சகிக்க முடியாமல் பொறாமை கொண்டவர்கள் பரப்பும் வதந்திகள் என்றும் கூறி, புறக்கணித்தான். மகனின் விளக்கத்தை முதியவர் ஏற்றுக் கொண்டார். மகனும் பழையபடியே தன் போக்கில் சென்று கொண்டிருந்தான்.

வணிகர் திரும்பி வந்ததும் தனது செல்வத்தைக் கோரினார். முதியவர் தன் மகனை அழைத்தார். வியாபாரியின் செல்வத்தில் கால் பங்கை மட்டுமே மகன் ஒப்படைத்தான். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வணிகன் அரசரை அணுகினான். அரசர் வணிகரின் புகாரைக் கேட்டு முதியவரை அழைத்தார்.

முதியவர், நீதிமன்றத்திற்கு தனது மகனுடன் வந்து, அவனை அரசரிடம் ஒப்படைத்து விட்டு, “அரசரே, வணிகர் சொல்வது சரிதான். என் மகன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். தயவு செய்து அவனை தண்டிக்கவும்” என்று கூறினார்.

அரசர் அவனுக்கு கசையடி தண்டனை கொடுத்து சிறையிலும் அடைத்தார்; பின்னர் அந்த முதியவரின் நேர்மையைப் பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஆனால் வணிகர் அந்த முதியவருக்கும் தண்டனை வழங்குமாறு கோரினார், மேலும் வணிகர்,  “எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நான் என் செல்வத்தை முதியவரிடம் தான் ஒப்படைத்தேன், அவர் பாதுகாப்பதாக கடவுள் மீது சத்தியம் செய்தார். முதியவரின் நேர்மை அப்படியே இருக்கிறது, ஆனால் என் நிலை என்ன? நான் என் வாழ்நாள் சேமிப்பை இழந்து ஏழையாகிவிட்டேனே. அதற்கு காரணம், எனது செல்வத்தை பார்த்துக் கொள்ளுமாறு தன் மகனிடம் ஒப்படைத்த அந்த முதியவர் எடுத்த முடிவு தானே. என்னைப் பொறுத்த வரையில் அந்த முதியவர்தான் குற்றவாளி, அவரும் தண்டிக்கப்பட வேண்டும்”  என்று கோரினார்.

அந்த முதியவர் திருடவும் இல்லை, அதன் பலனை அனுபவிக்கவும் இல்லை. உண்மையில், அவர் தனது மகனை சிறைக்கு அனுப்பினார். ஆனாலும், வியாபாரி அந்த முதியவரைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

வேதாளம் விக்ரமாதித்தனிடம், “ராஜாவின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?” என்று கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன், “முதியவர் உண்மையாக திருட்டில் ஈடுபடவில்லை என்றாலும், அவர் கடமை தவறிய குற்றவாளி. மகனின் குற்றம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருந்தது ஆனாலும், வணிகரின் செல்வத்தைப் பாதுகாக்க அவர் எதுவும் செய்யவில்லை. முதியவரின் குற்றம் ஒரு பெரிய குற்றம். மேலும் அவர் தனது மகனின் தவறான செயல்கள் குறித்து எச்சரிக்கைகள் வந்த பொழுதும், விழிப்புடன் இருப்பதற்குப் பதிலாக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டார். மகனை கண்டிக்காமல் விட்ட அவரது அலட்சியத்தின் காரணமாக, வணிகர் வாழ்நாள் முழுவதும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். நிச்சயம் முதியவர் தண்டனைக்குரியவரே” என்று பதிலளித்தார்.

நீதி:

தற்போதைய காலக்கட்டத்தில், தர்மத்தை விட நீதியே மிக அவசியமாக தேவைப்படுகிறது. அனைத்து தர மக்களின் ஒருங்கிணைந்த மனிதாபிமானம் மற்றும் மனசாட்சியே நீதி ஆகும். உண்மையில், நடைமுறை செயல்பாட்டு யதார்த்தங்களே நீதி ஆகும். எங்கே நீதி அமல்படுகிறதோ அங்கே அமைதி நிலவுகிறது. அது தர்மத்தை நிலைநாட்டி, எவ்வித முரண்பாடுகளுக்கும் எதிராக அதை நிலைநிறுத்துவதினால் மட்டுமே சாத்தியப்படும்.

“நியாயத்தைக் காத்து, எப்பொழுதும் தர்மத்தை பின்பற்றுபவர்கள் பாக்கியவான்கள்.” என்கிறது தெய்வகீதம் 106:3

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE