அறிவாற்றலை அறிந்து கொள்ளுதல்

நீதி: உண்மை

உப நீதி: ஞானம், சுய பரிசோதனை

ஒரு விவசாயி தனது வயலில் நீர் பாய்ச்சுவதற்கு, கிணறு வெட்டத் தொடங்கினான். அவன், நீர் குறி சொல்பவர்கள் சொன்ன இடத்தில் தோண்டத் தொடங்கினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நீர் வரவில்லை என்று அவன் எரிச்சலுற்றான். 15 அடி ஆழம் மட்டுமே அப்போது தோண்டி இருந்தான்.

அப்போது அங்கே வந்த மற்றொருவன் அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்து விட்டு, வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்கே தோண்டச் சொன்னான். அந்த விவசாயியும் அந்த இடத்திற்குச் சென்று தோண்டத் தொடங்கி, இருபது அடி ஆழம் வரை தோண்டினான். அங்கேயும் நீர் வரவில்லை. களைப்படைந்த அவன் தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு வயதானவரின் அறிவுறுத்தலின்படி, வேறு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கேயும் தோண்டத் தொடங்கினான்.

அங்கும் நீர் கிடைக்காமல் போனவுடன் அதையும் விட்டு விட்டான். அப்போது அங்கே வந்த அவன் மனைவி, “உங்களுக்கு மூளை இருக்கிறதா? இப்படி யாராவது கிணறு தோண்டுவார்களா? ஒரே இடத்தில் நிலைத்து நின்று ஆழமாகத் தோண்டுங்கள்” என்று கூறினாள். ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாள் அந்த விவசாயி, நாள் முழுவதும் ஒரே இடத்தில் நின்று ஆழமாகத் தோண்ட தோண்ட நிறைய நீர் கிடைத்தது.

வாழ்க்கையும் அப்படித்தான். நாம் ஆழமாகச் சிந்தித்து, நம் அறிவாற்றலை அறிந்து கொள்ள வேண்டும்.

நீதி:

மனிதன் தன் ஆழ் மனதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வெளி உலகத்தின் பேச்சைக் கேட்பதை விட, தன் மனசாட்சியின் குரலைக் கேட்க வேண்டும்; ஆனால் அவன் இந்த உலகப் பொருட்களின் மீது பற்று கொண்டு உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு உணராமல் இருக்கிறான். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் தனிமையில் அமர்ந்து நம் ஆழ் மனதில் நிறைந்திருக்கும் அந்த உண்மையான ஆனந்தத்தை உணர வேண்டும். இது நம் ஆத்ம பலத்தை அதிகரித்து, நாம் அமைதியாக வாழ வழி வகுக்கும். காலம், பொறுமை மற்றும் விடாமுயற்சி எல்லாவற்றையும் நமக்குப் பெற்றுத் தரும். நாம் நமது மனதை நம்பாமல் அறிவாற்றலை நம்ப வேண்டும்.

மனது நமது அறிவாற்றலுக்கு கட்டளை இடக்கூடாது; ஏனெனில் மனது விரைவில் சோர்வடைந்து விடும் — பால் கோயல்லோ.

மொழி பெயர்ப்பு,

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment