கடவுள் தன் வழியில் முடிவு செய்கிறார்

மூன்று மரங்கள்

நீதி: உண்மை

உப நீதி: பொறுமை, நன்னம்பிக்கை, விசுவாசம்

ஒரு காட்டில் இருந்த குன்றின் மேல் மூன்று மரங்கள் இருந்தன. அவை தங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தன. முதல் மரம், “ஒரு நாள் நான் ஒரு புதையல் பெட்டி ஆவேன். தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற ரத்தினங்களால் நிரப்பப் படுவேன். நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப் படுவேன். அனைவரும் அந்த அழகைக் காண்பார்கள்” என்று கூறியது.

பிறகு இரண்டாவது மரம், “ஒரு நாள் நான் வலிமைமிக்க கப்பலாவேன். ராஜாக்களையும், ராணிக்களையும் ஏற்றிக் கொண்டு, கடலைக் கடந்து உலகின் எல்லா மூலைகளுக்கும் செல்வேன். என்னுடைய வலிமையான கட்டமைப்பின் காரணமாக அனைவரும் என்னுடன் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள்” என்று கூறியது.

இறுதியாக மூன்றாவது மரம், “நான் காட்டிலேயே உயரமான மற்றும் நேரான மரமாக வளர விரும்புகிறேன். மக்கள் குன்றின் உச்சியில் என்னையும், என் கிளைகளையும்  கண்டு, நான் சொர்க்கத்துக்கும், கடவுளுக்கும் அருகாமையில் இருக்கிறேன் என்று நினைப்பார்கள். எல்லாக் காலத்திலும் நான்தான் மிகப் பெரிய மரமாக இருப்பேன்; மேலும் மக்கள் என்னை எப்போதும் நினைவில் கொள்வார்கள்” என்று கூறியது.

தங்கள் கனவு நனவாகுவதற்கு, சில வருட பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒரு நாள் மரம் வெட்டுபவர்கள் அவ்விடம் வந்தார்கள்.

ஒருவன் முதல் மரத்தினிடம் வந்து, “இது வலிமையான மரமாகத் தெரிகிறது. நான் இதை ஒரு தச்சரிடம் விற்க முடியுமென்று தோன்றுகிறது” என்று சொல்லியவாறே அதை வெட்டத் துவங்கினான். மரம் மகிழ்ச்சி அடைந்தது; தச்சர் அதை ஒரு புதையல் பெட்டியாகச் செய்து விடுவார் என்பதால் அம்மரம் சந்தோஷமாக இருந்தது.

இரண்டாம் மரத்தினிடம் வந்த மரம் வெட்டுபவர், “இந்த மரம் வலிமையாகத் தெரிகிறது. என்னால் இதை ஒரு கப்பல் கட்டும் தளத்தில் விற்க முடியும்” என்றார். தான் ஒரு வலிமையான கப்பலாக மாறப் போவதை நினைத்து அம்மரம் மகிழ்ச்சியாக இருந்தது.

மரம் வெட்டுபவர்கள் மூன்றாவது மரத்திடம் வந்த போது, தன்னை அவர்கள் வெட்டிவிட்டால் தன் கனவு நிறைவேறாது என்று தெரிந்து அந்த மரம் மிகவும் பயந்து போனது. மரம் வெட்டுபவரில் ஒருவன், “எனக்கு இந்த மரத்திடமிருந்து விசேஷமாக எதுவும் வேண்டாம். அதனால் நான் இதை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி அதை வெட்டினான்.

முதல் மரம் தச்சர்களிடம் சென்ற போது அது விலங்குகளுக்கான ஒரு தீவனப் பெட்டியாகச் செய்யப் பட்டது. பின்னர் அது வைக்கோலால் நிரப்பப்பட்டு ஒரு கொட்டகையில் வைக்கப் பட்டது. இது கண்டிப்பாக அந்த மரம் வேண்டிக் கொண்டது இல்லை.

இரண்டாவது மரம் வெட்டப் பட்டு சிறிய மீன்பிடிக்கும் படகாக ஆக்கப்பட்டது. வலிமையான கப்பலாகி ராஜாக்களை சுமந்து செல்லக்கூடிய அதன் கனவு ஒரு முடிவுக்கு வந்தது.

மூன்றாவது மரம் பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஒரு இருண்ட இடத்தில் தனித்து வைக்கப் பட்டது. வருடங்கள் செல்லச் செல்ல அந்த மரங்கள் தங்கள் கனவுகளை மறந்தன.

பின்னர் ஒரு நாள் ஒரு ஆணும், பெண்ணும் அந்தக் கொட்டகைக்கு வந்தனர். அவள் ஒரு குழந்தையைப் பெற்று, அதை முதல் மரத்திலிருந்து செய்யப்பட்ட தீவனப் பெட்டியிலிருக்கும் வைக்கோலில் வைத்தாள். அந்த மனிதன், குழந்தைக்கு ஒரு தொட்டில் செய்திருக்கலாம் என்று விரும்பினாலும், அந்தத் தீவனப்பெட்டியே அதைச் செய்து விட்டது என்று எண்ணினான். அந்த மரம் இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எக்காலத்திலும் உள்ள மிகப் பெரிய பொக்கிஷத்தைத் தான் சுமந்து கொண்டிருப்பதை அது தெரிந்து கொண்டது

சில வருடங்கள் கழித்துக் கூட்டமாகச் சில ஆண்கள் அந்த இரண்டாம் மரத்தால் செய்யப்பட்ட மீன்பிடிக்கும் படகில் ஏறினர். அவர்களில் ஒருவன் மிகக் களைப்பாக இருந்ததால் தூங்கி விட்டான். அவர்கள் நீரின் நடுவில் இருந்தபோது ஒரு பெரிய புயல் எழுந்தது. அந்த மனிதர்களைக் காப்பாற்றும் அளவுக்குத் தனக்கு வலிமை இருக்கும்  என்று அந்த மரம் நினைக்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவனைப் பிற மனிதர்கள் எழுப்பியவுடன் அவன் “அமைதி” என்று சொன்னான். உடனே புயல் நின்றது. அச்சமயத்தில் மரம், தான் அரசர்களுக்கெல்லாம் அரசரைச் சுமந்திருப்பதை உணர்ந்தது. இறுதியாக ஒருவன் வந்து அந்த மூன்றாம் மரத்தை எடுத்துச் சென்றான். அவன் அதை தெருக்களில் சுமந்து செல்லும் போது மக்கள் அவனைப் பார்த்துக் கேலி செய்தனர். இறுதியில் அவனை அந்த மரத்தில் ஆணியால் அறைந்து அந்த மரத்தை அவன் இறப்பதற்காகக் குன்றின் உச்சியில் வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை வந்ததும் அந்த மரம், தான் குன்றின் உச்சியில் நிற்கும் அளவிற்கு வலிமை உடையதாகவும், கடவுளுக்கு எவ்வளவு அருகில் இருக்க முடியுமோ அவ்வளவு அருகில் இருப்பதாகவும் உணர்ந்தது. ஏனென்றால் ஏசுநாதர் அதன் மீது சிலுவையில் அறையப் பட்டிருந்தார்.

தாங்கள் நினைத்தபடி இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மரமும் தாங்கள் விரும்பியதை அடைந்தன.

நீதி:

நம் ஒவ்வொருவருக்கும் நமக்கேயான கனவுகளும், ஆசைகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்பது நல்லது தான் என்றாலும், அதன் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளப் பொறுமை வேண்டும். ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளும் பொறுமை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை, விளைவுகள் எதுவாக இருந்தாலும், அவனை வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவும். அது அவன் வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும். நீங்கள் எதிர்பார்த்தபடி சம்பவங்கள் நடக்கவில்லையெனில், கடவுள் உங்களுக்காக வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவும். நீங்கள் அவர்மேல் நம்பிக்கை வைத்தால், அவர் உங்களுக்கு பெரிய பரிசுகள் தருவார்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment