சுய நம்பிக்கை கொள்ளுங்கள்

நீதி: உண்மை

உப நீதி: நம்பிக்கை, சுய பரிசோதனை

ஒரு மனிதன் தன் கனவை நனவாக்க முடிவு செய்தான்; ஆனால் அதை செய்வதற்கு அவனிடம் போதுமான வலிமை இல்லை.

அதனால் அவன் தன் தாயிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டான்.

அதற்கு தாய், “கண்ணே! உனக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வேன்; ஆனால் என்னிடம் ஒன்றுமில்லை. என்னிடம் இருந்த அனைத்தையும் உன்னிடம் முன்பே கொடுத்து விட்டேன்” என்றார்.

அவன் ஒரு அறிவாளியிடம் சென்று, “ஆசிரியரே! சொல்லுங்கள்! வலிமையை நான் எங்கிருந்து பெற முடியும்?” என்று கேட்டான்.

அவர் “அது எவரெஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது; ஆனால் பனிக் காற்றைத் தவிர வேறு ஒன்றையும் என்னால் அங்கு காண முடியவில்லை. நான் திரும்பி வரும் போது என் நேரத்தை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு வீணாகி விட்டது” என்று கூறினார்.

அவன் ஒரு முனிவரிடம் சென்று,  “என் கனவை நனவாக்குவதற்கான வலிமையை நான் எங்கே பெற முடியும்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “உன்னுடைய பிரார்த்தனையில் மகனே. உன் கனவு போலியாக இருந்தால், நீ அதை புரிந்து கொண்டு உன் பிரார்த்தனையில் அமைதி காண்பாய்” என்று கூறினார்.

அவன் மேலும் பலரைக் கேட்ட போது, வந்த பதில்கள் அவனை மிகவும் குழப்பம் அடையச் செய்தன.

அவன் குழம்பியிருப்பதை பார்த்து வழியில் சென்ற ஒரு முதியவர் “நீ ஏன் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கிறாய்?”  என்று கேட்டார்.

அவன் “ஆம் பெரியவரே! எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்குவதற்கான வலிமையை எங்கே காண்பதென்று எனக்குத் தெரியவில்லை. எவரெஸ்ட்டிலிருந்து நரகம் வரை எல்லோரையும் கேட்டு விட்டேன்; ஆனால் எனக்கு உதவக் கூடியவர் எவருமில்லை” என்றான்.

அந்த முதியவரின் கண்களில் ஒளி தெரிந்தது. அவர் “நீ அனைவரையும் கேட்கவில்லை” உன்னையே நீ கேட்டாயா?” என்று கூறி, “நீ உன் கனவை நம்புகிறாயா? அதை நீ நம்புவது என்பது 100% உன் மீது நம்பிக்கை வைப்பதாகும். பிறர் என்ன சொல்வாரோ, என்ன நினைப்பாரோ என்று சந்தேகப்படக் கூடாது. உன்னைப் பற்றிய இரணடாம் கணிப்பு இருக்கக் கூடாது. உன்னால் செய்ய முடியும் என்று நீ நினைப்பதைவிட, அதிகமாக உன்னால் செய்ய முடியும். உன்னையே நீ முழுவதும் நம்பாவிட்டால் வேறு எவர் நம்புவார்” என்று அறிவுரை கூறினார்.

நீதி:

ஒவ்வொருவரும் தங்களின் மேல் நம்பிக்கை வைப்பது என்பது வாழ்க்கையில் இருக்கக் கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. அது உங்கள் நம்பிக்கையை அதிகரித்து, பிறர் உங்களை அதிகம் நம்புவதற்கு வழி செய்து, உங்களின் முடிவு எடுக்கும் திறமையை மிக எளிதாக்கும். உங்களை நம்புவதற்கு உங்களுக்குத் தேவை சிறிது முயற்சியும், சுயபற்றை உண்டாக்கி உள்முகமாகப் பார்க்கும் திறமையைக் கண்டறிவதும் ஆகும். சுய பரிசோதனை, சுயபற்று மற்றும் நம்பிக்கை மட்டுமே அறியாமையிலிருந்து வெளியே வருவதற்கான வழியாகும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளுதல், உங்களின் முடிவு எடுக்கும் திறமையையும், தன்னம்பிக்கையையும் அதிகமாக்க உதவும்.

துன்பங்கள்தான் விவேகம் அடைவதற்கான வாய்ப்புகளை அளிக்கும்”. – டாக்டர் அப்துல் கலாம்.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை கிளை முறிந்துவிடுமோ என்று எப்போதும் பயந்ததில்லை. ஏனென்றால் அதன் நம்பிக்கை கிளையின் மீது இல்லை; மாறாக அதன் இறக்கைகளின் மீது உள்ளது.

எப்போதும் உங்களை நம்புங்கள்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment