உறவுகளில் அரவணைப்பு

நீதி: நன்னடத்தை, அன்பு, அக்கறை, உண்மை

உப நீதி: ஆதரவு, பச்சாதாபம்

மனித உறவுகளில், ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்றாலும் சில சமயங்களில் அரவணைப்புகளை இழக்க நேரிடும். சில நிகழ்வுகள் தவறாக முடியும் போது, உறவு, வேலை அல்லது குடும்பம் போன்றவற்றில் நாம் பொறுப்புகளை தட்டிக் கழிப்போம் அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவோம்.

நாம் நேசிக்கும் ஒருவரை மன்னிப்பது உலகிலேயே கடினமான காரியம், ஏனெனில் நமக்கு உரிமை இருக்கும் இடத்தில் நம் சினத்தை காட்டுவது எளிது; ஆனால் பின்வரும் சம்பவம் அப்படி இல்லை. ஒவ்வொருவரும், கீழ்வரும் கதையின் கண்ணோட்டத்துடன் வாழ்க்கையைப் பார்க்க முடிந்தால், உலகில் பிரச்சனைகள் மிகக் குறைவாக இருக்கும்.

திருமணமாகி பதினோரு வருடங்கள் கழித்து ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அச்சிறுவன் அந்த அன்பான தம்பதிகளின் கண்ணின் மணியாக இருந்தான். பிள்ளைக்கு இரண்டு வயது இருக்கும் போது, ஒரு நாள் காலை கணவர் ஒரு மருந்து பாட்டில்  திறந்து இருப்பதை பார்த்தார். வேலைக்கு செல்ல தாமதமாவதால் பாட்டிலை மூடி அலமாரியில் வைக்குமாறு மனைவியிடம் கூறி சென்று விட்டார். சமையலறை வேலைகளில் மும்மரமாக பணி செய்து கொண்டிருந்த தாய், மருந்தை பற்றிய விஷயத்தை முற்றிலும் மறந்து விட்டார்.

சிறுவன் பாட்டிலை பார்த்தான்; விளையாட்டுத்தனமாக அதனருகில் சென்று, அதன் நிறத்தை பார்த்து வியந்து, அனைத்தையும் அருந்தினான். இது பெரியவர்களுக்கு சிறிய அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டிய நச்சுதன்மை உள்ள ஒரு மருந்து. சிறிது நேரத்தில் குழந்தை விழுந்ததை கண்ட தாய் மருத்துவமனைக்கு விரைந்தார்; ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துவிட்டது.

தாய் திகைத்து நின்றாள். கணவனை எவ்வாறு எதிர்கொள்வது, சமாதானம் சொல்வது என்று பயந்தாள்.

விஷயத்தை கேட்டு கலங்கி பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த தந்தை, இறந்து கிடந்த குழந்தையைப் பார்த்த பின், மனைவியிடம் திரும்பி நான்கு வார்த்தைகள் மட்டுமே கூறினார்.

அந்த நான்கு வார்த்தைகள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

“நான் உன்னை நேசிக்கிறேன், அன்பே” என்று கணவன் சொன்னார்.

கணவனின் முற்றிலும் எதிர்பாராத நடத்தை, நேர்வினை கொண்ட செயல். அவர் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை பற்றி யோசித்திருந்தார். குழந்தை இறந்து விட்டது, அவனை இனி உயிர்ப்பிக்க முடியாது. மனைவியிடம் குறை கண்டு பிடிப்பதால் ஒன்றும் மாறப்போவதில்லை. ஏற்கனவே அவள் குற்ற உணர்ச்சியில் இருக்கிறாள். அதுமட்டுமல்ல, பாட்டிலை ஒதுக்கி வைப்பதற்கு தானும் நேரம் எடுத்திருந்தால், இப்படி நடந்திருக்காது என்ற எண்ணமும் அவருக்கு தோன்றியது. பழி சுமத்துவதிலும் அர்த்தமில்லை. அவளும் தன் ஒரே குழந்தையை இழந்திருந்தாள். கணவனின் ஆறுதலும் அனுதாபமும் அவளுக்கு அந்த நேரத்தில் தேவைப்பட்டது. அதைத்தான் அவர் அவளுக்குக் அளித்தார்.

நீதி:

மன்னித்தல் கடந்த வாழ்க்கையை மாற்றி விடாது; ஆனால் எதிர் காலத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். எவர் என்ன செய்தார்கள் என்பது நமக்கு புரியாமல் இருக்கலாம்; ஆனால் மன்னித்தல், உங்கள் கோபதாபம் மற்றும் வலியை விட்டு விட உதவுகிறது. பச்சாதாபம் மற்றும் அன்பில்லாமல் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது ஒரு ஆரம்பம் தான்; அப்படி செய்யும் போது, மன வேதனைகள் அவ்வப்போது தலைதூக்கும். மன்னித்தல் மற்றவர்களுக்காக அல்ல; நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ளும் உதவி.

மன்னித்தல் என்பது……..மலர்களை கசக்கும் போது, அதிலிருந்து வரும் நறுமணம் தான்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment