அஹிம்சையின் சக்தி

the power of non violence

நீதி – அஹிம்சை

உபநீதி – அமைதி / மௌனம் / சிந்தனை, வாக்கு, செயல் இவற்றில் ஒற்றுமை

மகாத்மா  காந்தியின் பேரன் டாக்டர். அருண் காந்தி, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த பிரபலமான நிறுவனம் தான் எம். கே. காந்தி அஹிம்சைவாதி நிறுவனம். ஜூன் ஒன்பதாம் தேதி, புர்டோ ரிகோ பல்கலைக் கழகத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் அஹிம்சையின் முக்கியத்துவத்தை, கீழ்வரும் கதையின் மூலமாக எடுத்துரைத்தார். குழந்தை வளர்ப்பில் அஹிம்சை முறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தான் எடுத்துக்காட்டாக இந்தக் கதையில் சொல்லப்படுகின்றது.

இந்த சம்பவம் நடந்த போது எனக்கு வயது பதினாறு. என் தாத்தா ஆரம்பித்த நிறுவனம் தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் (DURBAN) நகரத்திலிருந்து பதினெட்டு மைல் தூரம் இருந்தது. கரும்பு வயலின் நடுவில் இருந்த இந்த நிறுவனத்தில் தான், என் பெற்றோர்களுடன் வசித்து வந்தேன். நாட்டுப் புறத்தில் இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் எவருமே இல்லை. அதனால், நானும் என் இரண்டு சகோதரிகளும்  நகரத்திற்கு அடிக்கடி சென்று நண்பர்களைப் பார்க்கவும், திரையரங்கத்திற்குச் சென்று சினிமா பார்க்கவும் கிளம்பி விடுவோம். ஒரு நாள் என் தந்தை, கலந்துரையாடல் ஒன்றுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவரை நகரத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக என் தாயார் நான் வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒரு காகித்தத்தில் எழுதிக் கொடுத்தார். வேறு சில வேலைகளை செய்து வைக்கும்படி, தாயார் தந்தையிடம் கட்டளையிட்டிருந்தார். வாகனத்தை சரி செய்வதும் அந்த பட்டியலில் இருந்தது.

அடுத்த நாள் தந்தையை நகரத்தில் விடும் பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், “நீ எல்லா வேலைகளையும் முடித்து வை. சாயங்காலம் ஐந்து மணிக்கு நான் இங்கு வருகிறேன். ஒன்றாக வீட்டிற்கு சென்று விடலாம்.”

அவசர அவசரமாக வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஒரு திரையரங்கிற்குச் சினிமா பார்க்கச் சென்று விட்டேன். ஜான் வேன்(JOHN WAYNE) நடிக்கும் படத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஐந்தரை ஆகும் போது தான் ஞாபகம் வந்தது. உடனடியாக வண்டி சரி செய்யும் இடத்திற்கு சென்று, காரை எடுத்துக் கொண்டு தந்தை இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது மணி ஆறாகி விட்டது.

தந்தை “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கவலையுடன் கேட்டார். சினிமாவிற்குச் சென்றேன் என்று சொல்லக் கூச்சமாக இருந்ததால், வண்டியைப் பழுது பார்க்கும் இடத்தில் தாமதமாகி விட்டது என்று கூறினேன். ஆனால் தந்தை, தொலைபேசி மூலம் வாகனம் கொடுத்த இடத்திலேயே விசாரித்து வைத்திருந்தார். அவருக்கு உண்மையெல்லாம் தெரிந்து விட்டது.

நான் பொய் சொன்னேன் என்று தெரிந்தவுடன், “என்னிடம் உண்மையைச் சொல்ல உனக்கு இவ்வளவு தயக்கம் இருந்திருப்பதால் நான் உன்னை வளர்த்த விதம் சரியில்லை. அதனால் வீட்டிற்கு  நடந்தே செல்கிறேன். பதினெட்டு மைல் தூரம் நடக்கும் போது, நான் செய்த தவறுகளை எண்ணிக் கொண்டே நடக்கின்றேன்” என்று சொன்னார்.

பிறகு, தான் அணிந்திருந்த அலுவலக உடுப்புடன் அந்த இருட்டுச் சாலையில் நடக்க ஆரம்பித்தார். அவரைத் தனியாக விடவும் மனசில்லை. ஐந்தரை மணி நேரம் அவர் நடந்து சென்ற பாதையில் அவருக்குப் பின்னால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றேன். நான் செய்த முட்டாள்தனமான காரியத்திற்காக அப்பா கஷ்டப்படுவதைப் பார்த்து மனதுடைந்தேன். இனிமேல் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தேன்.

இந்த நிகழ்ச்சி எப்பொழுதும் எனக்கு ஞாபகம் வரும். முக்கியமாக நான் பொய் சொல்லவே மாட்டேன் என்று உறுதியாக இருந்த காரணம்  என் தந்தை நடந்து கொண்ட விதம் தான். இந்தக் காலத்தில் கண்டன முறை வேறு. அப்பா எவ்வளவு அழகாக எனக்கு உண்மையை உணர்த்தினார். இது தான் அஹிம்சையின் சக்தி. மறக்கவே முடியாத ஒரு சம்பவம், நேற்று நடந்தது போல் இருக்கிறது.

நீதி:

அஹிம்சை முறைகளைக் கடைப்பிடித்தால் வெற்றியில் முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மகாத்மா காந்தி. நிறைய பிரச்சனைகளுக்குத் தீர்வு அன்பும் அமைதியும் தான். சில சமயங்களில், கண்டனமான நடவடிக்கைகளை விட அமைதியாக இருப்பதே மன நிம்மதியைத் தரும். ஒரு குழந்தைக்குக் கண்டிப்பு தேவையில்லை. அன்புடன் சொன்னாலே போதுமானது. கோபப்படுவதாலோ கத்துவதாலோ மன கசப்பு தான் அதிகமாகும். நற்குணங்களைப் புகட்ட அஹிம்சை தான் சிறந்த வழி.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Leave a comment