முதியவரும் கடவுளும்

old man and his god - picture 1

நீதி – உண்மை / நேர்மை 

உபநீதி –  நம்பிக்கை / மன நிறைவு

சில வருடங்களுக்கு முன்பு, நான் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வங்காள விரிகுடாவில் தீவிரமான காற்றழுத்தத்தினால், இருண்ட மேகங்களுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. சாலைகள் அனைத்தும் நீர் நிரம்பி வழிந்தன. ஓட்டுநர் வண்டியை ஒரு கிராமத்திற்கு அருகில் நிறுத்தி, “வண்டியைத் தொடர்ந்து ஓட்ட கடினமாக இருக்கும். வண்டியில் உட்கார்ந்துக் கொள்வதை விட, நீங்கள் விருப்பப்பட்டால், அருகில் பாதுகாப்பாக எங்கேயாவது சென்று வாருங்கள்” என்றார்.

யாரையும் தெரியாத புது இடம், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று கவலையாக இருந்தது.  ஆனால், அதை பொருட்படுத்தாமல் குடையை எடுத்துக் கொண்டு பலத்த மழையில் அந்த சிறு கிராமத்தை நோக்கி நடந்தேன். (தற்சமயம் கிராமத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை) கும்மிருட்டில், மின்சாரமும் இல்லாமல் மழையில் நடப்பது சற்று கடினமாகத் தான் இருந்தது.

old man and his god picture 2கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு கோவில் தெரிந்தது. அங்கு பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி, கோவிலை நோக்கிச் சென்றேன். பாதி வழியில், பலத்த காற்று வீசியதால், குடை பறந்து சென்று, நான் நன்றாக நனைந்து விட்டேன். கோவிலுக்குள் காலடி வைத்தவுடன் ஒரு வயதானவர் கூப்பிடும் ஒலி காதில் விழுந்தது. எனக்கு தமிழ் அறியாத மொழி என்ற போதிலும், அந்தக் குரலில் அக்கறை தெரிந்தது. பல இடங்களுக்கு பயணம் செய்திருந்ததால், ஒவ்வொரு குரலிலும் வெளிப்படும் உணர்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

யார் என்று எட்டிப் பார்த்தேன்; என் அபிப்பிராயத்தில் அவருக்கு 80 வயது இருந்திருக்கும். அவர் அருகில், ஒரு வயதான பெண்மணி நம் பாரம்பரிய 9 கஜ புடவையை அணிந்திருந்தார். அந்த பெண்மணியிடம் ஏதோ சொல்லிவிட்டு, என்னிடம் ஒரு கறை படியாத துண்டை வயதானவர் நீட்டினார். துடைக்கும் போது தான் அந்த வயதானவருக்கு கண் சரியாக தெரியாது என்று உணர்ந்தேன். சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து, அவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்து கொண்டேன். இது, ஆரவாரம் அதிகமில்லாமல் அலங்கரிக்கப்பட்ட ஒரு எளிமையான சிவன் கோவிலாகத் தெரிந்தது. சிவலிங்கம் மேல் ஒரு வில்வ இலை மட்டுமே இருந்தது. கோவில் சற்று பிரகாசமாக இருந்த காரணம், ஒரு சிறிய விளக்கிலிருந்து வந்த வெளிச்சம். மினுக்குமினுக்கென அந்த வெளிச்சம் எனக்கு மன அமைதியை தந்து, கடவுளுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு அனுபவமும் கிடைத்தது.

எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், வயதானவரை மங்கள ஆரத்தி எடுக்க வேண்டிக் கொண்டேன். அன்புடனும், பக்தியுடனும் அவர் எடுத்த பிறகு 100 ரூபாய் தட்டில் வைத்தேன்.

சங்கடமான உணர்வுடன், அந்த ரூபாயை தொட்டு விட்டு, கையை நகர்த்தினார். “நாங்கள் அதிகபட்சமாக 10 ரூபாய் தான் தட்டில் போட்டு பார்த்திருக்கின்றோம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பக்தி தான் முக்கியம், பணம் அல்ல என்று எடுத்துரைத்தார். எங்கள் மூதாதியர் காலத்திலிருந்து பழக்கம் என்னவென்றால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களுக்கு முடிந்த அளவே தட்டில் வைப்பார்கள். எங்களைப் பொருத்த வரை, மற்றவர்கள் போல நீங்களும் ஒரு சிவ பக்தர். இந்த அதிகமான பணத்தை தயவு செய்து எடுத்துக் கொள்ளவும்” என்று வயதானவர் கூறினார்.

ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. வயதானவரின் மனைவி ஏதாவது சொல்வாரோ என்று பார்த்தேன்; ஆனால் நிசப்தமாக நின்று கொண்டிருந்தார். பல இல்லங்களில், மனைவி கணவனின் பேராசையை தூண்டுவதைப் பார்த்திருக்கிறேன். இங்கு, நேர் எதிராக இருந்தது. கணவர் சரியான காரியத்தை தான் செய்கிறார் என்று வலியுறுத்தினார். மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த இடத்திலிருந்து நகர முடியவில்லை. நாங்கள் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள், வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக யார் இருக்கிறார் என விசாரித்துக் கொண்டிருந்தேன்.

இறுதியாக, நான் அவர்களிடம், “நீங்கள் இருவரும் வயதானவர்கள். தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்ய குழந்தைகளும் இல்லை. வயதான காலத்தில், மளிகைப் பொருட்களை விட மருந்துகள் தான் அதிகமாக தேவைப்படும். இந்த கிராமம் நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கின்றது. நான் ஒன்று கூறலாமா?” எனக் கேட்டேன்.

தற்சமயம், நாங்கள் ஓய்வு ஊதிய திட்டம் தொடங்கியிருந்தோம். தக்க சமயத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைத்தேன்.

இந்த முறை, அந்த வயதான பெண்மணி, “சொல் குழந்தாய்” என்றார்.

“நான் பணம் அனுப்புகிறேன். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிக்கவும். அதிலிருந்து வரும் வட்டியை உங்கள் மாத செலவிற்கு உபயோகிக்கலாம். அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், முதலீடு பணத்தை உபயோகிக்கலாம்” என்றேன்.

இப்போது அந்த வயதானவரின் முகம் புன்சிரிப்புடன் பிரகாசித்தது.

“நீ எங்களை விட இளமையாக இருந்தாலும், முட்டாள்தனமாக யோசிப்பது ஏன்? இந்த வயதானக் காலத்தில் எங்களுக்கு எதற்கு பணம்? பரமசிவனை வைத்தியநாதன் என்றும் அழைப்பார்கள். அவர் மஹா வைத்தியர். இந்த கிராமத்தில் பல அன்பான மக்கள் இருகின்றனர். நான் செய்யும் பூஜைக்கு அரிசி கொடுக்கின்றார்கள். எங்களுக்கு உடல் நலம் சரியில்லாத பொழுது, மருத்துவர் மருந்து கொடுக்கின்றார். எங்கள் தேவைகள் அதிகமில்லை. தெரியாத ஒருவரிடம் நான் எப்படி பணத்தை வாங்கிக் கொள்வது?  இந்த பணத்தை வங்கியில் சேமித்தால், யாருக்காவது தெரிய வந்து எங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த கவலைகளை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? நீ அன்பாக கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம்” என்றார்.

நீதி

கடவுளை முழுமையாக நம்பி சந்தோஷமாக இருந்தால் பேரின்பம் கிடைக்கும். நம் ஆசைகளுக்கு அளவே இல்லை. எதிர்பார்ப்பு இருந்தால், துக்கம் தான் ஏற்படும். குறைவான ஆசைகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்.

Story by Sudha Murthy from ‘The old man and his God’

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Leave a comment