குரு பக்தியின் பிரதிபலிப்பு

நீதி – அன்பு

உபநீதிபக்தி, மரியாதை

love for ones master - picture 1இக்கதை, ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ என்பவர் தன் குருவிடம் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியின் பிரதிபலிப்பு பற்றியது. ஒரு சமயம் ஒரு ஏழை மனிதன், ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற மகானின் நற்குணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான்;  இந்தியாவிலுள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து தன் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ள பண உதவி பெற நினைத்து, அவரை நாடி தில்லி வந்தான். தற்செயலாக அன்று அம்மகானிடம் அவருடைய பழைய காலணிகள் தவிர வேறொன்றும் இல்லாததால், அதை அந்த ஏழை மனிதனுக்குக் கொடுத்தார். மன நிறைவு அடையாத அம் மனிதன், அவருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து தன் கிராமத்திற்குத் திரும்பினான்

திரும்பி வரும்போது, அன்றைய இரவைக் கழிக்க ஒரு விடுதியில் தங்கினான். அதே இரவு, ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ என்பவரும் தில்லியிலிருந்து வங்கதேசம் திரும்பி வரும் போது,  அதே விடுதியில் வந்து தங்கினார். அமீர் குஸ்ரோ, தங்கம் மற்றும் நவரத்தின கற்களால் செய்த நகைகளை வியாபாரம் செய்பவர்; தில்லியிலுள்ள பெரிய செல்வந்தர்களில் அவரும் ஒருவர். மறு நாள் காலை, அமீர் குஸ்ரோ எழுந்தவுடன், “என் குருநாதரின் நறுமணம் இங்கு வீசுகிறதே” என்று நினைத்தார்.

நறுமணம் வரும் இடத்தை அடைந்தவுடன், அவர் ஏழை மனிதனைப் பார்த்து “தில்லியில் இருந்த போது ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்ற மகானின் இல்லத்திற்கு சென்றிருந்தாயா?” என விசாரித்தார். அவன் அதற்கு “ஆம்” என்று கூறி, அங்கு நடந்த எல்லா விவரங்களையும் கூறினான். அவர் கொடுத்த காலணிகளையும் காண்பித்து, அவை பழையது மற்றும் மதிப்பற்றவை என்றும் கூறினான்.

ஹஜ்ரத் அமீர் குஸ்ரோ அவனுக்கு அந்த காலணிகளுக்குப் பதிலாக, தன்னிடம் இருந்த அத்தனை செல்வங்களையும் தருவதாகக் கூறினார். ஏழை மனிதனும் ஒப்புக் கொண்டு, தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டு, செல்வந்தருக்கு நன்றி கூறிவிட்டு, சந்தோஷமாக வீடு சென்றான்.

அமீர் குஸ்ரோ தில்லியை அடைந்தவுடன், அக் காலணிகளை தன் குருவின் காலடியில் வைத்தார். நடந்தது அனைத்தையும் கூறி,  தன் செல்வங்களுக்குப் பதிலாக அக் காலணிகளை வாங்கியதாகவும் கூறினார். அதற்கு மகான் ஹஜ்ரத் நிஜாமுத்தீன் கூறியது  – குஸ்ரோ, மிகவும் மலிவாக வாங்கி விட்டாய்!

நீதி:

ஒரு சிஷ்யன் தன் குருவிடம் வைத்திருக்கும் அன்புக்கு இது ஒரு உதாரணம் ஆகும். குருவின் பாதுகைகள் ஒரு சிஷ்யனுக்கு மிகவும் புனிதமானது. இது தன் ஆணவங்களை விட்டொழித்து, சரணாகதி அடையக் கற்றுக் கொடுக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Leave a comment