சமைப்பவரின் எண்ணங்கள் உணவை பாதிக்கும்

நீதி நேர்மை / வாய்மை

உப நீதி உள்ளார்ந்து நோக்குதல் / பழக்கம் / எண்ணங்களில் தூய்மை

ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் “சின்ன கதா” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

மைசூர் மாநிலத்தில், மாலூர் என்ற ஊரில், பக்தியுள்ள பிராமண பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியும் அவருக்கேற்றாற் போல பக்தி உடையவளாகத் திகழ்ந்தாள். பிராமணர் எப்பொழுதும் பூஜை, ஜபம், மற்றும் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார். அவர் நற்குணங்களோடு வாழ்ந்ததால், அவ்வூரில் எல்லோரும் அவரை அறிந்திருந்தனர். ஒரு நாள், நித்யானந்தா என்ற ஒரு சந்நியாசி பிக்ஷைக் கேட்டு இவர் வீட்டிற்கு வந்தார். அதனால், பிராமணர் எல்லையற்ற மகிழ்ச்சியுற்றார். அவருக்குச் சிறந்த முறையில் விருந்தோம்பல் செய்யலாம் என்றெண்ணி, அந்தத் துறவியை அடுத்த நாள் இரவு உணவிற்குத் தம் வீட்டிற்கு வருமாறு பிராமணர் அழைத்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-2.png

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, துறவியை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தார்; ஆனால், கடைசி நேரத்தில், பிராமணரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது; பக்கத்து வீட்டுப் பெண்மணி சமைத்துக் கொடுப்பதாக விருப்பம் தெரிவித்து சமையலறைக்கு வந்தார். எல்லாமே நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது.

அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அந்த சூழ்நிலையில் துறவி மட்டும் சரியான மனோபாவத்தில் இருக்கவில்லை. அவருடைய தட்டிற்கு அருகில் இருந்த வெள்ளிக் கோப்பையை எப்படியாவது திருட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், அவரால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துறவி அந்தக் கோப்பையைத் தன் அங்கியின் மடிப்பில் மறைத்துக் கொண்டு, அவசர அவசரமாகத் தன் குடிலுக்குச் சென்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை; மனசாட்சி உறுத்தியது. தன் குருவிற்கும், மந்திரங்களை உச்சரித்து தன் முன் வரவழைத்த ரிஷிகள் அனைவருக்கும் அவமானத்தை உண்டு பண்ணியதாக அவர் எண்ணினார். உடனே அந்தப் பிராமணரின் வீட்டிற்கு ஓடிச் சென்று, அவர் காலில் விழுந்து,  கண்களில் நீர் வழிய மன்னிப்புக் கோரி, அந்தப் பொருளை அவரிடம் ஒப்படைத்தார். அதுவரை துறவியின் மனம் அமைதி அடையவில்லை.

ஒரு துறவி கீழ்த்தரமான செயலை எவ்வாறு செய்திருப்பார் என்று அனைவரும் வியந்தனர். பின்னர் ஒருவர், “இந்தத் தவறான குணம், துறவிக்கு சமையல் செய்தவரிடமிருந்து உணவு மூலம் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார். பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கதையைக் கேட்ட போது, அவளுக்கு கட்டுப்படுத்த முடியாத திருடும் குணம் இருந்தது என்று தெரிய வந்தது. அந்தத் திருட்டு குணம் அவள் சமைத்த உணவையும் பாதித்தது. இந்தக் காரணத்தினால் தான், துறவிகள் ஆன்மீகச் சாதனையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன், பழம் மற்றும் கிழங்கு வகைகளையே சாப்பிட்டு வாழ வேண்டும் என்று கூறப்படுகிறது.

நம் மனதும், மதியும் புனிதமாக இருந்து, நம்முள் இருக்கும் ஆத்மாவை பிரதிபலிப்பதற்காக, உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். உணவின் மீது கவனம் செலுத்துவது எல்லோருக்கும் அத்தியாவசியம்.

நீதி:

நாம் உண்ணும் உணவு நமது எண்ணங்களை பாதித்து, மனதையும், மதியையும் உருமாற்றம் செய்கிறது. அதனால், நாம் என்ன உண்ணுகிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு முறையும் உண்ணுவதற்கு முன்னால் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளிடம் பிரார்த்தனை செய்து, நம் முன் இருக்கும் உணவுக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறினால், உணவு புனிதமாகிறது. அதற்கு பின், அதை உண்ணும் போது, உணவு நன்றாக ஜீரணமாகி, நல்ல எண்ணங்கள் ஏற்படுகின்றன. இந்த நல்ல எண்ணங்களினால், நம் மனது மற்றும் உடலில் மாறுபாடு ஏற்பட்டு, நற்பண்புகளோடு செயற்படும் வகையில் மாற்றம் தெரிகிறது.

அன்புடனும் நல்லெண்ணங்களுடனும் சமைக்கப்படும் உணவு எப்பொழுதும் அதிக ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

எல்லா உணவும் கடவுளிடமிருந்து வருகிறது. அவரிடமிருந்து வரும் உணவை முதலில் அவருக்கே அர்ப்பணித்து விட்டு, பிறகு தான் நாம் உண்ண வேண்டும். அப்போது தான் அது சாத்வீக உணவாக மாறுகிறது. நாம் வாங்கும் தானியங்கள் மற்றும் காய்கறிகளில் தூய்மைக்கேடுகள் இருக்கின்றன. இவை உண்ணும் போது நம் உடலுக்குள் செல்கின்றன. உணவு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்க, நாம் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, பிறகு பிரஸாதமாக உட்கொள்ள வேண்டும். அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் போது (நைவேத்தியம்) குறைபாடுகள் நீக்கப்படுகின்றன – ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா (தெய்வீக சொற்பொழிவுகள் – மை டியர் ஸ்டூடன்ட்ஸ் – தொகுதி 2, அத்தியாயம் 2

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment