துன்பமே வெற்றிக்கு வழிகாட்டி

நீதி – நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி – நம்பிக்கை, விசுவாசம் 

பெயர் தெரியாத கதாசிரியர்

ஓர் அரசருக்கு அழகான இரண்டு வல்லூறுகள் பரிசாகக் கிடைத்தன. அவை இரண்டும் அரசன் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் அழகான பைரி வல்லூறுகளாக இருந்தன. அவர் தனது தலைமை பறவை வளர்ப்பவனிடம், அவைகளுக்குப் பயிற்சி அளிக்க ஒப்படைத்தார்.

மாதங்கள் கடந்தன. பறவை பயிற்சியாளன் மன்னனிடம், இரண்டு பறவைகளில் ஒன்று கம்பீரமாக வானத்தில் மிக உயரத்தில் பறப்பதாகவும், மற்றொன்று வந்த நாளிலிருந்தே தான் அமர்ந்த கிளையை விட்டு நகராமல் அங்கேயே உட்காரந்திருப்பதாகவும் கூறினான்.

நாட்டிலுள்ள மருத்துவர்கள், மந்திரவாதிகள் அனைவரையும் அரசர் அழைத்து, பறவையை பறக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் எவராலும் பறவையைப் பறக்க வைக்க முடியவில்லை.

அரசர் இந்தக் கடினமான வேலையை தன் அரசவையிலுள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தார். மறுநாள் காலை அரண்மனை ஜன்னல் வழியாக அரசர் பார்த்த போது,  பறவை இன்னமும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கிளையிலேயே உட்கார்ந்திருந்தது.

அரசர் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும் பலன் இல்லை. இது போன்ற பறவைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் அனுபவம் பெற்றிருப்பார்கள் என்று அரசர் நினைத்தார். ஆகையால் ஒரு விவசாயியை அழைத்து வருமாறு அரசவைக்குக் கட்டளையிட்டார்.

மறுநாள் காலை அந்தப் பறவை அரண்மனை நந்தவனத்தின் மேல் உயரப் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு அரசர் ஆச்சரியமுற்றார். “இந்த அதிசயத்தை நடத்திக் காட்டிய மனிதனை இங்கு அழைத்து வாருங்கள்” என்று அவர் ஆணையிட்டார்.

அந்த விவசாயியும் சற்று நேரத்தில் அரசர் முன் வந்து நின்றான். அரசர் அவனிடம் “இந்த வல்லூறுவைப் பறக்க வைக்க என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் மரியாதையுடன் நின்றிருந்த விவசாயி, “இது மிகவும் சுலபம் மஹாராஜா. பறவை உட்காரந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். அவ்வளவுதான்” என்றான்.

நீதி:

வாழ்க்கை பல தடைகளையும், துன்பங்களையும் நமக்குக் கொடுக்கிறது. அவை நமது வளர்ச்சியை நிறுத்துவதற்கோ துன்பங்கள் கொடுப்பதற்கோ அல்ல; நிறைய அனுபவத்துடன் நாம் முன்னேறுவதற்கு உரிய உதவியையும், சக்தியையும் கொடுப்பதற்கே ஆகும். இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். புரிந்து கொள்வது என்பது துன்பங்களுக்கு தீர்வு காண்பது அல்ல. அந்தத் தடைகளைப் பின் தள்ளி, நாம் முன்னேறிக் கொண்டு இருந்தால் போதுமானது. அச்சம் எனும் கிளையை முறித்து, வெற்றி என்ற வானவெளியில் பறக்க நாம் கற்றுக்கொள்வோமாக. சரியான பாதையில் சுய நம்பிக்கையுடன் சென்றால், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.

“நீங்கள் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் பறவை அல்ல; வானில் பறக்க வேண்டிய பறவை”.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment