பிறருள் உங்களை காணுங்கள்

நீதி: உண்மை, சரியான நடத்தை

உப நீதி: கருணை, சகிப்புத் தன்மை, இரக்கம்

குரு “நீங்கள் சகமனிதர்களை காணும் போது, அவர்களில் உங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.

அதற்கு ஒரு சீடன் “அது ஒரு மோசமான சுயநல மனப்பான்மை அல்லவா? நம்மைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தனை செய்து கொண்டிருந்தால், பிறர் நமக்கு அளிக்கக் கூடிய நல்ல விஷயங்களை நாம் ஒருபோதும் பார்க்க மாட்டோம்” என்று கூறினான்.

அதற்கு குரு “மற்றவர்களில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே நாம் எப்போதும் கவனித்தால், நீ கூறுவது சாத்தியமாகும்” என்று கூறி மேலும், “உண்மை என்னவென்றால், நாம் வேறொரு மனிதரை பார்க்கும் போது, குறைபாடுகளை மட்டுமே கண்டுபிடிக்கிறோம். அவர்கள் நம்மை விட மோசமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதால், அவர்களின் தவறுகளை தேட முயற்சிக்கிறோம்.

அவர்கள் நம்மை காயப்படுத்தும் போது நாம் அவர்களை மன்னிக்க மறுக்கிறோம், ஏனென்றால் நாம் மன்னிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நம்புவதில்லை.

உண்மையை சொல்கிறோம் என்ற போர்வையில், கடுமையான வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தி, உண்மையை நம்மிடமிருந்து மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

நமது பலவீனம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போல பாசாங்கு செய்கிறோம்.

ஆதலால், “சகமனிதர்களை மதிப்பீடு செய்யும் போதெல்லாம், நம்மை நாமே பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்” என்று விளக்கமளித்தார்.

நீதி:

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அது போலவே மற்றவர்களையும் நாம் நடத்த வேண்டும். கோபம், புண்படுத்துதல், வெறுப்பு, மனக்கசப்பு போன்ற எதிர்மறை குணங்களிலிருந்து விலகி, அவர்களை மன்னித்து விட்டு, முன்னோக்கி நகர வேண்டும். உண்மை என்னவென்றால், யாரோ ஒருவர் செய்த அல்லது சொன்னதை மன்னிப்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்தினால் நம் மனச்சுமை குறையும். இது நேர்மறை எண்ணத்தை மேம்படுத்த நமக்கு உதவும், மேலும் வாழ்க்கையில் நமது அணுகுமுறை அர்த்தமுள்ளதாக இருக்கும். மன்னிப்பு என்பது வலிமையின் அடையாளம்.

மற்றவர்களில் நம்மைக் காணும் போது, நாம் யாருக்கு தீங்கு செய்ய இயலும்?

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment