சோதனைகள் நம்மை வலிமைப் படுத்துவதற்காகவே

நீதி: பக்தி

உபநீதி: தன்னலமற்ற அன்பு, இரக்கம்

ஸத்ய ஸாயி பாபாவின் ‘எனது அருமை மாணவர்களே’ பாகம் 3, அத்தியாயம் 3, ஜூன் 30, 1996.

ஒரு சங்கராந்தி நாளன்று ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, திரௌபதி மற்றும் பல கோபியர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து சந்தோஷமாகக் கரும்பை சுவைத்துக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணர் அவர்களை சோதிப்பதற்காகத் தன் விரலில் காயம் பட்டதாக பாவனை செய்தார். கடவுள் எப்போதுமே தன் பக்தர்களை சோதிப்பார். சோதனை செய்வது கடவுளுக்கு விருப்பமானது. பக்தன் அந்த சோதனையில் தேறினால், கடவுளின் அளவற்ற கருணை கிடைக்கும்.

வெறுப்பையோ, பகை உணர்வையோ காட்டுவதற்காக கடவுள் எந்த சோதனைகளையும் செய்வதில்லை. அவர் அதை எப்போதும் ஆழ்ந்த அன்பு மற்றும் கருணையால் செய்கிறார்.

கிருஷ்ணரின் விரலில் காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சத்யபாமா வேலையாளிடம் ஒரு துண்டுத் துணியை உடனே கொண்டு வருமாறு கேட்டாள். ருக்மிணி தானே ஓடினாள்.

இதைக் கண்ட திரௌபதி உடனடியாகத் தன் புடவையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, கிருஷ்ணரின் கட்டை விரலில் ரத்தம் நிற்பதற்காகக் கட்டினாள்.

இதைப் பார்த்த ருக்மிணியும், சத்யபாமாவும் தங்களின் அன்பும் செய்கைகளும்,  திரௌபதியின் அன்பிற்கு ஈடாகாது என்று எண்ணி வெட்கமடைந்தனர்.

பின்னர் பகவான் கிருஷ்ணர் அளவற்ற கருணையை மிகவும்  தேவைப்பட்ட போது திரௌபதிக்கு பொழிந்தார்.

நீதி:

பக்தியே அன்பாகும்; கடவுளிடம் அன்பு செலுத்துவது என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் நம்மை நாமே நேசிப்பதும்,  நம்மைச் சுற்றி உள்ள அனைத்து உயிர்களையும் நேசிப்பதாகும். இந்த அன்பு வளர்ந்து, எல்லாப் பக்கங்களிலும் பரவி, இறுதியாக நாம் காணும் அனைத்து உயிரினங்களிலும் கடவுளைக் காணச் செய்யும். மேலும் அவை அனுபவிக்கும் இன்ப, துன்பங்களையும் நம்மை உணரச் செய்யும். இந்த பக்தி மனப்பான்மையுடன் இருக்கும் அணுகுமுறை நம்மை அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு உதவும். பச்சாதாபத்துடன் இருப்பது என்பது பிறர் என்ன நினைக்கிறார்களோ, பார்க்கிறார்களோ, அதை அவர்கள் பார்வையிலேயே உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல் ஆகும். மேலும் அவர்களிடத்தில் நம்மை நினைத்துப் பார்த்து செயற்படுவதாகும். அடிப்படையில் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்திப் பார்த்து, அவர்கள் என்ன உணர்கிறார்களோ, அதையே நாமும் உணர்கிறோம்.

நம் நலத்தைவிட பிறர் நலத்தை உயர்த்திப் பார்ப்பதே பக்தியாகும்.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment