உலகம் ஒரு கண்ணாடி போன்றது

நீதி: நன்னடத்தை, சுய உணர்தல்

உப நீதி: உள்ளார்ந்து நோக்குதல், மன நிறைவு

மூன்று வெவ்வேறு கதைகள்; ஆனால் ஒரே கோணத்தில் நமக்கு பாடங்களை கற்பிக்கின்றன. நாம் காணும் உலகம் நம் உள் மனதின் பிரதிபலிப்பே.

ஒரு நாள், ஒரு வகுப்பு ஆசிரியை தன் மாணவர்களிடம் அவர்களுக்கு மிகவும் பிடிக்காத நபரின் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதும்படி கூறினார்.

உடனே மாணவர்கள் சுறுசுறுப்பாக செயற்பட்டனர். ஒரு மாணவன் “நான் எவரையுமே வெறுக்காத போது யார் பெயரை எழுத முடியும்?” என்று கேட்டான்.

அதற்குள் மற்ற மாணவர்கள் எழுதி முடித்து விட்டதால், ஆசிரியை பெயர்களை நோட்டம் விட்டார்.

ஆசிரியை அனைத்து பெயர்களையும் சரி பார்த்த போது, எந்தத் தாளிலும் இந்த மாணவனின் பெயர் இல்லாததைக் கண்டு அதிசயித்தார்.

———————————-

ஒரு நாள், பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம், நாட்டிலுள்ள தீயவர்களை கணக்கெடுக்கக் கூறினார். அது போல், துரியோதனனிடம், நல்லவர்களின் கணக்கெடுப்பை எடுக்கக் கோரினார்.

துரியோதனன் திரும்பி வந்து, நாட்டில் ஒருவர் கூட நல்லவரில்லை என்று அறிவித்தான். அவனைப் பொருத்தவரையில் சாதுக்கள் முனிவர்கள் மற்றும் நல்ல மனிதர்களில் கூட தீமை நிரம்பியிருந்தது.

யுதிஷ்டிரர் திரும்பி வந்து ஒரு தீயவர் கூட இந்த நாட்டில் இல்லை என்று கூறினார். அவரைப் பொருத்தவரையில், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் கூட நல்லவர்கள் தான்.

————————–

மலைப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு அறிவார்ந்த பெண்மணி, நீரோடையில் ஒரு மதிப்புமிக்க நவரத்தினக் கல்லைக் கண்டார். ஒரே பார்வையில், அதன் மதிப்பை அறிந்து கொண்டார். மறுநாள் மற்றொரு பயணியை சந்தித்தார். அவர் பசியாக இருப்பதைக் கண்டு தன் உணவைப் பகிர்ந்தளிக்க பையைத் திறந்தார். அப்போது அந்தக் கல்லைப் பார்த்த பயணி, அதனை தருமாறு கேட்டான். எவ்வித தயக்கமுமின்றி அவர் உடனே கொடுத்து விட்டார்.

பயணி தன் நல்ல அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து சென்றான். அவன் வாழ்நாள் முழுவதும், அவனை பாதுகாக்கும் அளவிற்கு மதிப்பு வாய்ந்த கல் அன்று கிட்டியது என்று அவன் எண்ணினான். எனினும் சில நாட்கள் கழித்து திரும்பச் சென்று அந்தக் கல்லை அப்பெண்மணியிடம் திருப்பி கொடுத்து விட்டான்.

பயணி “இது விலை மதிப்புள்ள கல் என எனக்குத் தெரியும். இதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்; இருப்பினும் நான் இதை திரும்பக் கொடுப்பதின் காரணம், இதை விட மேலானதை தருவீர்கள் என்ற நம்பிக்கை தான். இந்தக் கல்லை என்னிடம் கொடுப்பதற்கு காரணமாக இருந்த நற்பண்பை எனக்கு தாருங்கள்” என்றான்.

நாம் பிறரிடம் நல்லவிதமாக இருந்தால் அவர்களும் அவ்வாறே நம்மிடம் நடந்துக் கொள்வர்.

மற்றவர்களில் எப்பொழுதும் நற்பண்புகளை காண்பவராக இருங்கள்.

நீதி:

நாம் மற்றவர்களுக்கு எதை கொடுக்கிறோமோ அதே நமக்கு வருகிறது. எண்ணம், சொல், செயல் – இவற்றின் ஒருங்கிணைப்பு தேவை. மனஸ் ஏகம், வசஸ் ஏகம், கர்மண் ஏகம் மகாத்மன: என்று சொல்லப்படுகிறது. (எவருடைய எண்ணம், சொல் செயல் இணைந்து இருக்கிறதோ அவர்கள் மகான்கள் என்று கூறப்படுகிறது) இந்த நற்பண்புகள் கண்ணுக்கு புலப்படாதெனினும், மற்றவர்களின் இதயத்தில் அடிச்சுவடுகளை விட்டுச் செல்லும். ஆகவே இந்த நேர்மறை குணங்களை வளர்த்து மற்றவர் வாழ்வில் பயன்தரும் விளைவுகளை ஏற்படுத்துவோமாக!

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment