அசைக்க முடியாத நம்பிக்கை

நீதி: சரியான நடத்தை, நம்பிக்கை

உப நீதி: அமைதி, விசுவாசம்

பிரயாணி ஒருவர், மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஆற்றின் கரைக்கு வந்தார்.

ஆற்றைக் கடக்க எந்த பாலமும் இருக்கவில்லை. குளிர்காலமாக இருந்ததால், ஆற்றின் மேற்பரப்பு பனிக்கட்டியாக உறைந்திருந்தது.

அந்தி சாயும் நேரம் என்பதால் இருள தொடங்கி இருந்தது. பாதை தெரியும் அளவு போதுமான வெளிச்சம் இருக்கும் போதே பிரயாணி மறுகரை சென்று அடைய விரும்பினார். பனிக்கட்டி தனது எடையைத் தாங்குமா என்று அவர் கவலையுடன் ஆலோசித்தார்.

இறுதியில், மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் அவர் முழங்காலிட்டு, தகுந்த எச்சரிக்கையுடன் பனிக்கட்டியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லத் தொடங்கினார். தனது உடலின் எடையை சீராக விநியோகிப்பதன் மூலம், தன் உடற்சுமையினால் பனிக்கட்டி உடையும் வாய்ப்பு குறையும் என்று கணக்கிட்டு அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

இவ்வாறு தாமதமான மற்றும் வலி நிறைந்த பயணத்தை மேற்கொண்ட அவர், ஆற்றின் பாதியளவு கடந்திருந்த பொழுது, திடீரென்று பின்புறத்திலிருந்து பாட்டு சத்தம் கேட்டது. நான்கு வண்டி எடை பொருந்திய நிலக்கரியை சுமந்த குதிரை  வண்டியை, சற்றும் கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் ஒருவர் வழி நடத்திச் சென்றார்.

இதோ இந்த பிரயாணி மெதுவாக தன் கைகளாலும் முழங்கால்களை வைத்துக் கொண்டும் பயத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதோ, மெல்லிய காற்று வருடுவது போல, பெரிய நிலக்கரி சுமையுடன் குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியை ஒரு மனிதன், அதே பனிக்கட்டியினால் மூடிய ஆற்றின் மேல் உல்லாசமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.

இப்படித்தான் நம்மில் பலர் வாழ்கிறோம்.

சிலர் எடுக்க வேண்டிய வழியை தீர்மானிக்க முடியாமல் கரையிலேயே நிற்கிறார்கள். மற்றவர்கள் எடுத்த காரியத்தின் மறுபக்கத்தை அடைய அதாவது எதிர்படும் தடைகளை கடக்க, போதுமான தைரியத்தைத் திரட்ட முயற்சிக்கிறார்கள்.

சில நபர்கள் மெல்லிய பனிக்கு பயந்து வாழ்க்கையில் ஊர்ந்து முன்னேறி செல்கிறார்கள். அவர்களை நிலைநிறுத்தும் அளவுக்கு அவர்களிடம் வலுவான நம்பிக்கை இருப்பதில்லை.

மேலும் சிலர் எந்த சிக்கலையும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையில் வாழ்கிறார்கள். அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிறைந்திருக்கும்.

இன்னல் என்னும் நதியை நாம் எதிர்கொள்ளும் போது, நாம் பயந்து தவழ்ந்து செல்ல வேண்டியதில்லை. இறைவனை நம்புங்கள், அவருடைய உதவியால் நாம் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக மறுபக்கம் செல்லலாம்.

நீதி:

நம்பிக்கை என்பது முதல் அடியை எடுத்து வைத்து அச்சமின்றி முன்னோக்கி செல்வதாகும். எத்தகைய அற்பமான நிலையில் இருந்தாலும் கடவுளிடம் நம்மை அர்ப்பணித்து கொண்டு முன்னே செல்ல வேண்டும். நம்பிக்கையும் அச்சமின்மையும் வெற்றிக்கு முக்கியமான இரு தூண்கள் ஆகும். உண்மையான நம்பிக்கை என்பது இருளில் பயமின்றி பாய்ந்து செல்வது அல்ல; ஒளியை நோக்கி பாயும் பாய்ச்சல் ஆகும். எனவே கடவுளை நம்பி உறுதியுடன் சரியான அடியை எடுத்து வையுங்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment