நம்பிக்கையிருந்தால் மலையைக் கூட நகர்த்தலாம்

நீதி: உண்மை, அன்பு

உப நீதி: நம்பிக்கை, பிரார்த்தனை

பக்தர்கள் சிலர் கூடி தங்களுள் ஒருவர் அளித்த நிலத்தில், ஒரு புதிய ஆலயம் ஒன்றை எழுப்பி, இறைவனுக்கு அர்ப்பணிக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள்.

புதிய வழிபாட்டு ஆலயம் திறக்கப்படுவதற்கு பத்து நாட்கள் இருந்தன. அப்போது கண்காணிப்பு ஆய்வாளர், ஆலயத்தின் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் போதுமானதாக இல்லை என்று ஆலயத்தின் தலைமை நிர்வாகியிடம் தெரிவித்தார். ஆலய வாகன நிறுத்துமிடத்தின் அளவை இரட்டிப்பாக்கும் வரை, அவர்களால் புதிய ஆலயத்தை திறக்க முடியாது என்றும் கூறப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, ஆலயத்தின் பின்புறம் இருந்த மலையை தவிர்த்து அவர்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பயன்படுத்தி விட்டிருந்தனர். மலையை பின்புற முற்றத்தில் இருந்து நகர்த்தினால் மட்டுமே அதிக வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க முடியும் என்ற நிலைமை நிலவியது .

அடுத்து வந்த வழிபாட்டு கூட்டத்தில், மனம் தளராத அந்த தலைமை நிர்வாகி “மலையை நகர்த்தும் நம்பிக்கை” கொண்ட அனைத்து பக்தர்களையும் அன்று மாலை கூட்டு பிரார்த்தனை செய்வதற்காக அழைத்தார். அடுத்த வாரம், திட்டமிட்டபடியே, தொடங்கவிருக்கும் வழிபாட்டு சேவைக்கு முன் எப்படியாவது பின்புறத்தில் இருந்து மலையை அகற்றி, மேலும் அங்கு நடைபாதை கட்டுவதற்கும், வர்ணம் பூசுவதற்கும் போதுமான பணம் கிடைக்க வழி வகுக்குமாறு, கடவுளிடம் கேட்டு விசேஷ பிரார்த்தனையை செய்யப் போவதாக அறிவித்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் 300 பக்தர்களில் 24 பேர் மட்டுமே பிரார்த்தனைக்காக கூடினர். அவர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிரார்த்தனை செய்தனர். இறுதியில் இறைவனின் துதி பாடி வணங்கினர்.

“திட்டமிட்டபடி அடுத்த வாரம் திறப்போம், கடவுள் இதற்கு முன் ஒருபோதும் நம்மை கைவிட்டதில்லை, இந்த முறையும் அவர் நம்முடன் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று தலைமை நிர்வாகி அனைவருக்கும் உறுதியுடன் நம்பிக்கை அளித்தார்.

மறுநாள் காலை நிர்வாகி தனது வரவேற்பறையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவரது வீட்டுக் கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் “உள்ளே வரலாம்” என்று அழைத்த போது, ஒரு கடினமான தோற்றமுடைய கட்டுமானப் பணியாளர் உள்ளே நுழைந்து, தனது தொப்பியைக் கழற்றி விட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் அடுத்த ஊரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவன். நாங்கள் அங்கே ஒரு பெரிய புதிய வணிக வளாகத்தைக் கட்டுகிறோம், எங்களுக்கு கொஞ்சம் மண் தேவைபடுகிறது. தங்கள் ஆலயத்தின் பின்புறமுள்ள மலையின் ஒரு பகுதியை எங்களுக்கு விற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நாங்கள் அகற்றும் புழுதிக்கு நிகரான பணத்தை உங்களுக்குக் கொடுப்போம். புழுதியை எடுத்து அவ்விடத்தை சரியான முறையில் அமைக்கும் வரை எங்களால் வேறு எந்த கட்டுமான பணியையும் அவ்விடத்தில் தொடங்க முடியாது. ஆகையால் உங்கள் அனுமதி உடனே பெற முடிந்தால், மலையைத் தோண்டி வெளிப்படும் நிலப்பரப்பு பகுதிகள் அனைத்திலும் இலவசமாக தளவரிசை போட்டு நடைபாதை அமைத்து தருவோம்” என்று கூறினான்.

முதலில் திட்டமிட்டபடியே அந்த சிறிய ஆலயம் அடுத்த வாரமே திறக்கப்பட்டது மற்றும் முந்தைய வாரத்தை விட “மலை நகர்த்தும் நம்பிக்கை” கொண்ட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்!

விசுவாசம் என்பது கடவுளால் முடியும் என்று நினைப்பது அல்ல, அவர் செய்து முடிப்பார் என்று நம்புவது ஆகும்.

‘விசுவாசம் அற்புதங்களில் இருந்து வருகிறதா’ அல்லது ‘அற்புதங்கள் விசுவாசத்திலிருந்து வருகிறதா’?

நீதி:

விசுவாசம் என்பது கடவுளால் முடியும் என்று நினைப்பது அல்ல, அவர் செய்து முடிப்பார் என்று நம்புவது. நம்பிக்கையிருந்தால் மலைகளைக் கூட நகர்த்தலாம். நாம் மனஉறுதியுடன் பிரார்த்தனை செய்தால், இறைவனின் சித்தத்திற்கு நம்மை முற்றிலும் சமர்ப்பித்தால், அவர் நம்முடன் இருப்பதோடு மட்டும் அல்லாமல் நமக்கு அமைதி மற்றும் சமநிலையான மனம் பெற செய்து, எந்த விதமான  முடிவையும் எதிர்கொள்ளும் வலிமையும், மன உறுதியும் அளிப்பார். இறைவனிடம் சரண் அடைவோம், அவர் நம்மை வழிநடத்துவார், நமக்கு நல்லதை மட்டுமே செய்வார் என்று முழு நம்பிக்கை வைப்போம். எப்போதும் நிகழ் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்து இருப்போம். நமது பல பிரச்சனைகளுக்கு மனநிறைவு என்பதே எளிதான தீர்வாகும்.

இருட்டாக இருக்கும்போதும் விடியலின் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை – ரவீந்திரநாத் தாகூர்.

மொழி பெயர்ப்பு,

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment