தழும்புகளை விட அழகானவை எவை

நீதி: உண்மை

உப நீதி: ஏற்புத் தன்மை, குற்றம் காணாதிருத்தல்

ஒரு வயதான பெண்மணியும், அவள் பேரனும் ஒரு மிருகக்காட்சி சாலைக்குச் சென்றனர். அந்தப் பேரனின் முகத்தில் தழும்புகள் நிரம்பி இருந்தன.

அங்கே பல குழந்தைகள் தங்கள் முகங்களை ஓவியத்தால் அழகுபடுத்திக் கொள்வதற்காக காத்திருந்தனர். அங்கிருந்த ஓவியர், புலியின் உள்ளங்கால்களை எல்லோர் முகங்களிலும் வரைந்துக் கொண்டிருந்தார்.

அப்போது அஙகே வரிசையில் காத்திருந்த ஒரு சிறுமி அச்சிறுவனிடம்,  “உனது முகம் முழுவதும் தழும்புகளால் நிரம்பி இருக்கின்றது. ஓவியம் தீட்ட இடமே இல்லையே”, என்றாள்.

அந்தச் சிறுவன் சங்கடத்துடன் தலைகுனிந்தான்.

உடனே அவனது பாட்டி சிறுவன் அருகில் அமர்ந்து, “உனது தழும்புகளை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் எனக்கும் அவ்வாறு தழும்புகள் வேண்டும் என விரும்பினேன்”, என்று கூறிக் கொண்டே அவனது தழும்புகளை வருடினாள். மேலும் “தழும்புகள் அழகானவை” என்றாள்.

பேரன் “அப்படியா” என்றான்.

“ஆம்” என்று சொன்ன பாட்டி “தழும்புகளை விட அழகான ஏதாவது ஒன்றை உன்னால் கூற முடியுமா”, என்று கேட்டாள்.

அச்சிறுவன் ஒரு நிமிடம் யோசித்து, அவனது பாட்டியின் முகத்தை ஆழமாகப் பார்த்துக் கொண்டு அமைதியாக, “சுருக்கங்கள்” என்று கூறினான்.

நீதி:

நமக்கு அளிக்கப்பட்ட நல்ல விஷயங்களை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். நாம் மனதாலும், உள்ளுணர்வினாலும் சிந்திக்க வேண்டும். நமது புற அழகை வைத்து அல்ல. அப்படிச் செய்தால் நாம் மற்றவர்களைத் தவறாக எடை போட்டு விடுவோம். நாம் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்க வேண்டும். நாம் மற்றவர்களை எடை போடுவதை விட்டுவிட்டு,  நமது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, நேர்மறை விமர்சனங்களை சொல்லலாம். சில விமர்சனங்கள் நன்மை தரும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் அடுத்தவர் மீது கருணையுடனும், அவர்களது உணர்வுகளை மதித்தும் நடந்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி வெங்கடேசன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment