தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய வார்த்தை

நீதி: சரியான நடத்தை, உண்மை

உப நீதி: அமைதி, நல்லிணக்கம்

ஒரு அலுவலகத்தில் உள்ள தொலைபேசியின் பதிவு இயந்திரம், அழைப்பவர்களின் பெயர், விலாசம் இவற்றைப் பதிவிடச் சொல்வதுடன் ஒரு கடினமான வார்த்தையையும் கூறும்படிச் சொல்லும்.

ஒரு திங்கட்கிழமை காலை, உதவியாளர் ஒருவர் வார இறுதியில் வந்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அதில் உற்சாகமான ஒரு பெண்மணி தனது பெயர் மற்றும் முகவரியை கூறிவிட்டு, “எனக்குக் கடினமான வார்த்தை என்பது நல்லிணக்கம்”, என்று பதிவிட்டிருந்தார்.

எல்லோரும் நகைச்சுவையானவர்கள் (அது எனக்குப் பிடித்தமானதும் கூட). நல்லிணக்கம் என்பது கடினமான வார்த்தை தான். கூறுவதற்கு கடினமாக இல்லாவிட்டாலும் கடைப்பிடிப்பதற்கு கடினம்தான்; ஆனால் மிகவும் முக்கியமான வார்த்தை.

என் மகனுக்கு 11 வயதாக இருக்கும் போது அவன் ஒரு நாள், பள்ளியிலிருந்து அழுது கொண்டே வந்தான். அவனை விட அதிக வயது சிறுவர்கள் பேருந்து நிறுத்தத்தில் அவனைக் கேலி செய்து பயமுறுத்தி இருந்தனர்.

சிறிது காலமாகவே இந்தப் பிரச்சனை இருந்திருக்கிறது. பல சமயங்களில் இழிவுபடுத்துதல், தள்ளி விடுதல் போன்றவை நிகழ்ந்திருக்கிறது. இப்போது அடிதடியில் வந்து முடிந்திருக்கிறது. என் மகன் ராம், அவர்களுடன் சண்டை போடுவதை தவிர்ப்பதற்காக பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை.

நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போது, அவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். “நாங்கள் அந்த சிறுவர்களின் பெற்றோர்களை அழைக்கிறோம். நீங்கள் காவல் துறையை அணுகலாம்”, என்று கூறினர்.

நாங்கள் என்ன செய்வது என்று முடிவு செய்யவில்லை. காவல்துறையை அணுகுவது என்பது இறுதியான நடவடிக்கையாக இருக்கலாம். வேறு எப்படி இதை கையாளலாம் என்பதை நான் யோசித்தேன். மாணவர்களின் பெற்றோரை அழைப்பதைத் தள்ளிப் போடுமாறு அவர்களிடம் கூறினேன்.

அடுத்த நாள் சனிக்கிழமை. ராம் திடீரென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு, “அவர்கள் தான் என்னை அடித்தவர்கள்”, என்று கத்தினான். ராமை விட வயதில் மூத்த இருவர் அங்கே நின்று கொண்டிருந்தனர். ராம் வெளியே வருவதற்காக காத்திருந்தது போல தெரிந்தது.

நான் உடனே அவர்களிடம் சென்று பேச நினைத்தேன்; ஆனால், இயற்கையிலேயே சமாதான குணமுடைய என் மனைவி முதலில் செயற்பட்டாள். அவள் கதவைத் திறந்து அவர்களிடம், “பசங்களா! உள்ளே வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுங்களேன்” என்று அழைத்தாள்.

அவர்கள் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களும் இளவயதினர் தானே! தோளை குலுக்கிக் கொண்டு, “நிச்சயமாக”, என்றனர்.

உள்ளே வந்தவுடன், சிறுவனின் தாய் ராமின் தம்பிகள், என்னை மற்றும் எங்களது வளர்ப்பு நாய் உட்பட அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். மேலும்,”உங்களுக்கு ராமை தெரியும் தானே”, என்றாள். அவள் அங்கே உணர்த்த நினைத்தது ராம் ஒரு மனிதன்; பொருள் அல்ல என்பதைத் தான். அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, ஒரு சமூகத்தில் இருக்கிறான், வளர்ப்புப் பிராணி கூட உண்டு என்பதை உணர்த்தினாள்.

அவள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே அவர்களையும் பேச வைத்தாள். சிறிது நேரம் கழித்து, “பேருந்து நிறுத்தத்தில் ஏதோ பிரச்சனை என்பது எனக்குத் தெரியும். ஏதாவது தவறு நடந்திருக்கலாம். நாம் அதைப் பேசி சரி செய்து விட்டால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கலாம்”, என்றாள்.

அவர்கள் சரி எனத் தலையசைத்தனர்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் இனிமேல் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று கூறி விட்டு அவர்கள் சென்றனர். அப்படியே நடந்தது.

பள்ளியிலிருந்து துணை முதல்வர் அழைத்து, “காவல்துறையினரிடம் பேசினீர்களா?” என்று கேட்டார்.

“இல்லை. ஆனால் நாங்கள் பிரச்சனையை சரி செய்து விட்டோம்”, என்றேன்.

“என்ன செய்தீர்கள்”, என்றார்.

“அவர்களுக்கு ஐஸ்க்ரீம் கொடுத்தோம்”, என்றேன்.

நல்லிணக்கம் என்பது கடினமான வார்த்தை மட்டுமல்ல, கடினமான வேலையும் தான்; ஆனால் அது மிக முக்கியமானது. ஒரு வன்முறையை விடாமுயற்சியுடன், அமைதியாக கூட்டு முயற்சியுடன் அணுகுவதை விட, அடக்குமுறையால் எளிதாக வெல்லலாம். ஆனால் அது அப்போதைக்கு பிரச்சினையை சமாளிக்கும். அவ்வளவுதான். ஆனால் நல்லிணக்கம் என்பது சமாதானத்தைக் கொடுக்கும். அதுவே சிறந்தது. சமரசம் செய்பவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களால் எவ்வளவு ஐஸ்கிரீம்கள் சாப்பிட முடியுமோ அவ்வளவு கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

நீதி:

நாம் வாழ்வில் பல கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றை நாம் வெற்றி கொள்வது என்பது நாம் எவ்வாறு அதனை பொறுமையுடன் அணுகுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. எதிர்வினை புரிவதில் இல்லை. நமது எண்ணங்கள் அனைத்தையும் குற்றம் காணாமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் அது நமது மனதை சாந்தமாக வைத்திருக்கும். பிரச்சனைகள் வரும்போது அதனால் கோபமும் வருத்தமும் எழத்தான் செய்யும். பிரச்சனைகளை சரிசெய்யும் முன்பு இந்த கோபதாபங்களை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தி அதைத் திறமையாகக் கையாள வேண்டும். பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது யார் சரியானவர் அல்லது தவறானவர் என்பதல்ல; எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு நல்ல தீர்வை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு,

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment