தாயின் அன்பு

நீதி: நிபந்தனையற்ற அன்பு

உப நீதி: நன்றி உணர்வு

 உனக்கு 1 வயது, அப்போது அவள் உனக்கு உணவளித்தாள், குளிப்பாட்டினாள்.

-உனது நன்றியை இரவு முழுவதும் அழுது தெரிவித்தாய்.

உனக்கு 2 வயது, அவள் நடக்கக் கற்றுக் கொடுத்தாள்.

-உனது நன்றியை தெரிவிக்க அவள் அழைக்கும் போது நீ ஓடி விடுவாய்.

உனக்கு 3 வயது, அவள் உனது உணவை மிகவும் அன்புடன் சமைத்தாள்.

-தட்டினை கீழே கவிழ்த்து உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு 4 வயது , அவள் உனக்கு சில வண்ணத்தீட்டுக் கோல்களைக் கொடுத்தாள்.

-சாப்பாட்டு மேஜை முழுவதும் கிறுக்கல்களால் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 5 வயது, விடுமுறை காலத்தில் உனக்கு அழகான உடைகளை உடுத்தினாள்.

-சேற்றில் விழுந்து எழுந்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 6 வயது , உன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்.

-“நான் போக மாட்டேன்”, என்று அடம் பிடித்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 7 வயது, உனக்கு ஒரு மட்டைப் பந்து பரிசளித்தாள்.

-அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 8 வயது, உனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாள்.

-அதை உன் மேலே வழியவிட்டு உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு 9 வயது, உனது பியானோ வகுப்புக்கு பணம் கட்டினாள்.

-அதை வாசிக்க முயற்சி கூட எடுக்காமல் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 10 வயது, உன்னை விளையாட்டு, உடற்பயிற்சி, பிறந்தநாள் விழாக்கள் என்று ஒவ்வொரு இடமாக காரில் அழைத்துச் சென்றாள்.

-நீ காரிலிருந்து இறங்கி, திரும்பிக்கூட பார்க்காமல் சென்று உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 11 வயது, உன்னையும் உனது நண்பர்களையும் சினிமாவுக்கு அழைத்துச் சென்றாள்.

-அவளை வேறு வரிசையில் அமரச் சொல்லி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 12 வயது, தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தாள்.

-அவள் வெளியே செல்லும் வரை காத்திருந்து விட்டு பிறகு பார்த்து, உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 13 வயது, உனது தலை முடியை திருத்திக் கொள்ள சொன்னாள்.

-அவளுக்கு பாராட்ட தெரியவில்லை என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 14 வயது, உனது கோடைகால சுற்றுலாவுக்கு பணம் செலுத்தினாள்.

-அவளுக்கு ஒரு கடிதம் கூட எழுதாமல் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 15 வயது, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உன்னை அன்புடன் தழுவி, கட்டி அணைக்க  நினைத்தாள்.

-உனது அறைக் கதவை பூட்டி வைத்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 16 , உனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தாள்.

– நினைத்த போதெல்லாம் நீ காரை எடுத்துச் சென்று உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு வயது 17, ஒரு முக்கியமான அழைப்புக்காக காத்திருந்தாள்.

-இரவு முழுவதும் தொலைப்பேசியை கீழே வைக்காமல் பேசி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 18, உனது பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கண்கலங்கினாள்.

-இரவு முழுவதும் நண்பர்களுடன் கொண்டாடி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 19, உனது கல்லூரி படிப்புக்காக பணம் செலுத்தி, உன்னை காரில் அழைத்துச் சென்று உனது உடைமையை சுமந்து வந்தாள்.

-நண்பர்களிடம் அவளை அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு அவளை வெளியிலேயே நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 20, நீ யாரையாவது நேசிக்கிறாயா என்று கேட்டாள்.

-“அது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்” என்று கூறி உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு வயது 21, உனது எதிர்காலத்திற்கான சில யோசனைகளைச் சொன்னாள்.

-“உன்னைப் போல் ஆக விரும்பவில்லை” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 22, பட்டமளிப்பு விழாவில் கட்டியணைத்து ஆனந்தப்பட்டாள்.

-வெளிநாட்டு சுற்றுலாவிற்கு பணம் கொடுக்க முடியுமா எனக் கேட்டு நீ உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 23, உனது முதல் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்கித் தந்தாள்.

-அவை மிகவும் அசிங்கமாக இருப்பதாக நண்பரிடம் கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 24, உன் வாழ்க்கை துணையை சந்தித்து உங்களின் வருங்காலத்தைப் பற்றி வினவினாள்.

-அவளை முறைத்து, கடுமையாகப் பேசி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 25, உனது திருமணத்திற்கு செலவு செய்து உனக்காக அழுது, உன் மேல் மிகுந்த அன்பு வைத்திருப்பதை கூறினாள்.

-அவளிடம் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 30, குழந்தைக்கு தேவையான சில அறிவுரைகளைச் சொன்னாள்.

-“காலம் மாறிவிட்டது” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 40, உறவினர் ஒருவரின் பிறந்த நாளை ஞாபகப்படுத்தினாள்.

-“மிகுந்த வேலைப் பளுவில் இருக்கிறேன்” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 50, அவள் உடல் நலிவுற்று உனது உதவியை எதிர் நோக்கினாள்.

-பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு சுமையாக இருக்கிறார்கள் என்பதை படித்துக் காண்பித்து உனது நன்றியை தெரிவித்தாய்.

பிறகு ஒரு நாள் அவள் அமைதியாக மரணம் அடைந்தாள்.

அவளுக்கு நீ செய்ய மறந்த அத்தனை விஷயங்களும் உன் இதயத்தில் இடியாக வந்து இறங்கின.

தாய் உயிருடன் இருந்தால் அவளிடம் எப்போதும் அன்பு காட்ட மறவாதீர்கள். அவள் இல்லை என்றால் அவளது நிபந்தனையற்ற அன்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீதி:

இவ்வுலகில் சுயநலமற்றவள் தாய் மட்டுமே. தன் குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்தே அதன் மீது அன்பு செலுத்துபவள். தாயின் தூய்மையான அன்புக்கு முன்னால் இந்த உலகில் எதுவும் ஈடாகாது. தன் குழந்தைக்காக எதையும் செய்யத் துணிபவள் தாய். தன் குழந்தையின் முதன்மையான முழுமையான ஆதரவு தாய் மட்டுமே.

தாய் தன் குழந்தைகளை சிறிது காலம் கையில் சுமக்கிறாள். பிறகு தன் இதயத்தில் என்றென்றும் சுமக்கிறாள்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment