இறை அருள்

நீதி: உண்மை

உபநீதி – நன்றி உணர்வு

சொர்க்கத்திற்குப் புதிதாக வந்த ஒரு ஆத்மா, செயின்ட் பீட்டரை சந்தித்தது. அவர் சொர்க்கம் முழுவதையும் அதற்கு சுற்றிக் காண்பித்தார்.

இருவரும் தேவதைகள் நிறைந்த ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தனர்.

செயின்ட் பீட்டர் அந்த ஆத்மாவை முதல் பிரிவிற்கு அழைத்துச் சென்று,”இதுதான் கோரிக்கைகளை பெறும் இடம். பிரார்த்தனைகள் மூலமாக கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்றார். ஆத்மா சுற்றிப் பார்த்தது. தேவதைகள் மிகவும் பரபரப்பாக, உலகம் முழுவதிலுமிருந்து வந்த கோரிக்கைகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.

செயின்ட் பீட்டர் அதனை அடுத்த பிரிவிற்கு அழைத்துச் சென்றார். “இது அனுப்பும் இடம். இங்கிருந்து தான் அருளும், ஆசிகளும், பூமியில் பிரார்த்தனை செய்யும் மனிதர்களுக்கு அனுப்பப் படுகின்றன” என்றார். இந்த இடமும் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. பல தேவதைகள் அங்கே அருளாசிகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

பீட்டர் அந்த ஆத்மாவை கடைசியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதிசயமாக அங்கே ஒரே ஒரு தேவதை, செய்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார்.

ஆத்மா “இங்கே வேலை ஒன்றும் இல்லையா? இது என்ன பகுதி?”, என்றது.

செயின்ட் பீட்டர் “இது பெற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுதலுக்கான  இடம். சோகமான விஷயம் என்னவென்றால் அருளாசி பெறும் வெகு சிலரே அதனை ஒப்புக் கொள்கின்றனர்” என்றார்.

அந்த ஆத்மா “கடவுளின் அருளாசியை எப்படி ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று வியந்து கேட்டது.

பீட்டர் “எளிமையானது. நன்றி கடவுளே என்று சொன்னால் போதும்”, என்றார். நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை நாம் உணர்ந்து கொள்வதற்கு, நன்றியுணர்வு மட்டுமே போதும்.

நீதி:

நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை எண்ணி எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். உலகத்தில் பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காத போது, நாம் விருப்பப்படும் தேவைகளை யோசனை செய்து கவலை படக் கூடாது. நன்றி உணர்வுடன் இருந்தால், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும் மன அழுத்தத்தை அகற்றி, ஆறுதல் கொடுப்பதோடு, நன்றி உணர்வு வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை பெற உதவும். அதனால், நாம் தினமும் நன்றி உணர்வுடன் இருக்க பழக்கிக் கொள்வோம்.

அத்தகையான மனப்பான்மை இருந்தால், நமக்கு கிடைக்க இருக்கும் பாக்கியங்களை நன்று உணர முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment